கிச்சன் டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)
*மசால் வடைக்கு அரைத்த மாவில் அரை மணி நேரம் ஊறிய ஒரு பிடி ஜவ்வரிசி, ஒரு பிடி பயத்தம் பருப்பு சேர்த்து கலந்து வடை செய்தால் சூப்பராக இருக்கும்.
*பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் செய்யும்போது ஒரு பீட்ரூட்டை குக்கரில் தனியாக வேக வைத்து பிரியாணி ரெடியானவுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு கலந்து பாருங்கள். சூப்பராக இருக்கும். பீட்ரூட்டை கடைசியில் பிரியாணியில் சேர்ப்பதால் சுவையும் அழகும் கூடும்.
*ஆப்பத்துக்கு அரைத்த மாவு மிஞ்சினால் அதில் சிறிது கடலை மாவு, உப்பு, காரம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், சோடா உப்பு சேர்த்துப் பிசைந்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தால் சுவையான பக்கோடா தயார்!
*பொன்னிறமாக வெங்காயத்தை வதக்க அதிக எண்ணெய் தேவையில்லை. சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, அத்துடன் தக்காளி சாறு சிறிது சேர்த்து வதக்கினால் நிறமும் அழகாக இருக்கும். சுவையும், மணமும் கூடும்.
– அமுதா அசோக்ராஜா, திருச்சி.
*எந்தவித வடாமாக இருந்தாலும் மாவில் உப்பு, காரம், புளிப்பு சற்று கம்மியாக போட வேண்டும். அப்போதுதான் காய்ந்த பிறகு பொரித்தால், சுவை சரியாக இருக்கும்.
*எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறிட, சுவையாய் இருக்கும்.
*மீன் குழம்பு வைக்கும்போது தேங்காய் அரைத்துச் சேர்ப்பதற்குப் பதில் தேங்காய் பால் சேர்த்தால் அதிக சுவையாய் இருக்கும்.
*மரவள்ளிக்கிழங்கில் சிப்ஸ் போடும்போது, பச்சையாக சீவி போடாமல், 5 நிமிடம் ஆவியில் வேக விட்டு பின் எடுத்து சீவி போட மொறுமொறுப்பாக ருசியாக இருக்கும்.
-மகாலெட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.
*வடை செய்யும் போது உளுத்தம் மாவில் தண்ணீர் சற்று அதிகமாகி விட்டால், மாவின் அளவிற்கு ஏற்ப, ஒருபிடி பாசிப்பருப்பை மாவில் போட்டுக் கலக்கி, வடை செய்தால் வடை சுவையாக இருக்கும்.
*அடைக்கு மாவு அரைக்கும்போது அரிசி, பருப்பு வகைகள் மூன்று பங்கும், பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு ஒரு பங்கும் எடுத்துக்கொள்ள வேண்டும். பருப்பு முக்கால் பாகம் அரைத்ததும், அரிந்த வாழைத்தண்டைச் சேர்த்து சில நிமிடங்கள் அரைத்து அடை வார்த்துச் சாப்பிட அதன் ருசியே தனி.
*சூப் செய்யும்போது ஒரு துண்டு வெங்காயம், சிறிது கடுகை நெய்யில் சேர்த்துக்கொள்ள சூப் வாசனையுடன் இருக்கும்.
*ரவா கேசரி, சேமியா கேசரி, அவல் கேசரி செய்யும்போது, வெள்ளரி விதையைச் சேர்த்தால் சுவை கூடுதலாக கிடைக்கும்.
– சு. இலக்குமணசுவாமி, மதுரை.
*குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
*அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
*ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறு என்றிருக்கும்.
*அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
– பா.கவிதா, சிதம்பரம்.
*வெண் பொங்கல் செய்து இறக்கியதும் குக்கரைத் திறந்து காய்ச்சிய பாலில் ஒரு கரண்டி விட்டுக் கிளறி மூடினால் வெண்பொங்கல் சுவையாக இருக்கும்.
*கோதுமை மாவு அரைக்கும்போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்தி, பூரி எது செய்தாலும் சுவை, மணம், சத்து மூன்றும் மும்மடங்கு கூடுதலாக கிடைக்கும்.
*கோதுமை மாவு அரைக்கும்போது ஒரு கட்டு அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் சப்பாத்தி, பூரி மென்மையாகவும் உப்பலாகவும் வரும்.
*முள்ளங்கி சாம்பார் செய்யும் போது சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கியபின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.
– ச.லெட்சுமி, செங்கோட்டை.
*உப்புச் சீடை பொரிக்கும் போது, வெடித்து, எண்ணெய் சிதறும் என்ற எண்ணம் உண்டு. மாவை வாணலியில் லேசாக வறுத்து, சல்லடையில் சலித்து, பின் பிசைந்து உருண்டையாக உருட்டி ஒரு பேப்பரில் காய வைத்துப் பிறகு எண்ணெயில் பொரித்தால் வெடிக்காது.
*வெல்ல சீடை, கல்லு போல் இருக்கிறதா! இதைத் தடுக்க வெல்லச் சீடைக்கான மாவை நன்றாக சிவக்க வறுத்த பிறகு ஆறியதும் அதில் வெது வெதுப்பான நீரைத் தெளித்துப் பிசிறி வைத்துப் பிறகு வெல்லப் பாகை சேர்த்துத் தயாரித்தால் வெல்லச் சீடை மிருதுவாக இருக்கும்.
– ஜி.இந்திரா, ஸ்ரீரங்கம்.
*மழைக் காலத்தில் இட்லி மாவு சீக்கிரம் புளிக்காது. அந்த சமயத்தில் மாவில் கொஞ்சம் சர்க்கரை அல்லது மோரை சேர்த்தால் மாவு நன்றாகப் புளித்துவிடும்.
*சாதம் குழைந்துவிட்டால், அதில் கொஞ்சம் எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து பின் சாதத்தை வடித்தால் சாதம் பூப்போன்றிருக்கும்.
*மஞ்சள் கிழங்கோடு கொஞ்சம் விபூதியைப் போட்டு வைத்தால், மஞ்சள் கிழங்கை வண்டுகள் தாக்காமல் பல ஆண்டுகள் கெடாமல் இருக்கும்.
*ரவா இட்லி செய்யும்போது கொஞ்சம் சேமியாவை வறுத்து ரவையுடன் தயிரில் ஊற வைத்து செய்தால் ரவா இட்லி சூப்பர் ருசியாக இருக்கும்.
Average Rating