உடைந்த கொலு பொம்மைகளை சரி செய்து தரும் சென்னை ஓவியர்!! (மகளிர் பக்கம்)
பொதுவாக நவராத்திரி என்றாலே கொலு பொம்மைகள்தான் எல்லோரின் ஞாபகத்திற்கு வரும். பலரும் தங்களது வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து நவராத்திரியை சிறப்பாக வழிபடுவார்கள். பத்து நாட்களுக்குப் பிறகு அந்தக் கொலு பொம்மைகளை உடையாமல் ஒரு பெட்டியில் பத்திரப்படுத்தி பரண்களில் போட்டு வைப்பர்.
இதில் ஏதாவது ஒரு கொலு பொம்மை உடைந்துவிட்டாலோ அல்லது பழுதடைந்து போனாலோ அதை தூக்கிப் போட மனமில்லாமல் என்ன செய்வதென்று தயங்கியபடி இருப்பர். ஏனெனில், அந்தக் கொலு பொம்மை அவர்களின் அப்பாவோ, அம்மாவோ, சகோதர, சகோதரிகளோ, உறவினர்களோ, நண்பர்களோ வாங்கிக் கொடுத்ததாக இருக்கும். அது மட்டுமல்ல, கொலு பொம்மைகள் உடைந்துவிட்டால் அதை அபசகுனமாக எண்ணி மனச்சங்கடம் படுபவர்களும் உண்டு.
இப்படியானவர்களுக்கு கடவுள் போல் காட்சியளிக்கிறார் ஓவியர் பரமசிவன். ஆம்! இவர், உடைந்த அல்லது பழுதான கொலு பொம்மைகளை சரி செய்து, வண்ணம் பூசி அவற்றை புதுப்பொலிவுடன் உயிர்ப்பாக தரும் மகத்தான பணியைச் செய்து வருகிறார். இதனால், பலரும் அவரின் கடையை நாடிச் செல்கின்றனர். சென்னை மயிலாப்பூரில் சித்திரக்குளம் அருகே கொலு பொம்மைகளை சரி செய்யும் கடை எங்கிருக்கிறது? என யாரிடம் கேட்டாலும் ‘ஜெயமாருதி மேனுவல்’ கடையைதான் கைகாட்டுகின்றனர். இதுதான் ஓவியர் பரமசிவனின் கடை. ஒரு காலைப் பொழுதில் அவரின் கடைக்குச் சென்றோம்.
சுற்றிலும் சாமி சிலைகள் வீற்றிருக்க, அதன் நடுவே அமர்ந்து அமைதியாக பெயின்ட் அடித்தபடி இருந்தார் ஓவியர் பரமசிவன்.இதையெல்லாம் எப்படி செய்றீங்க? என்று கேட்டபோது… ‘‘எனக்கு சொந்த ஊர் தென்காசி பக்கத்துல மடத்தூர்னு கிராமம். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே ஓவியத்தில் ஆர்வம். எட்டாம் வகுப்பு படிக்கிறப்ப புளிச்சகுளம் கிராமத்துல ஒரு ட்ராயிங் மாஸ்டர்கிட்ட ஓவியம் கத்துக்கிட்டேன். சிவகாசியில் ஓவியர் ரவி மூலமா கோவில்பட்டி ஓவியர் கொண்டையராஜூவையும், ராமலிங்கத்தையும் சந்திக்கிற பாக்கியம் கிடைச்சது. அவங்ககிட்ட என் ஆர்வத்தைச் சொன்னேன். ரெண்டு வருஷம் அங்க அவரிடம் ஓவியம் கத்துக்கிட்டேன். 1969ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்’’ என்கிறவர், கையிலிருந்த பொம்மையை கீழே வைத்தபடி தொடர்ந்தார்.
‘‘சென்னையில் 18 ஆண்டுகள் விளம்பர போர்டு வால் பெயின்டிங் வேலைகள் செய்து கொண்டிருந்தேன். 1974-ல் திருமணமாச்சு. நான்கு பெண் பிள்ளைகள், திருமணமாகி செட்டிலாயிட்டாங்க. கடந்த பதினைஞ்சு வருஷமா கொலு பொம்மைகளுக்கு பெயின்டிங் மற்றும் பழுது பார்க்கும் வேலை செய்து வர்றேன். விளம்பர போர்டு வேலை அவ்வளவு திருப்தி தரல. அதனால, ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. அப்ப ஒரு நண்பர் இந்தக் கிருஷ்ணன் பொம்மையை சரி பண்ணிக் கொடுக்க முடியுமா?னு வந்து கேட்டார். அது என் வாழ்க்கையின் போக்கை மாற்றுச்சு. அதிலிருந்து கொலு பொம்மைகளை சரி செய்யும் பணிக்குள் வந்தேன்.
இந்தக் கடையை அதற்காக திறந்தேன். இப்ப ஓரளவுக்கு போய்கிட்டு இருக்கு’’ என்கிற பரமசிவன், ‘‘நடிகர் நம்பியார் வீட்டிலிருந்து, அவருடைய மனைவி பொம்மைகளை பெயின்டிங் செய்யக் கொடுத்தாங்க. அதைச் சிறப்பாக செய்து கொடுத்தேன். பிறகு, உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டிலிருந்து பொம்மைகள் வந்தன. அதை பழுது பார்த்து தந்தேன். இப்படியா நிறைய விஐபி வீடுகள்ல இருந்து கொண்டு வந்தாங்க. பழுது பார்த்து வண்ணம் பூசிக் கொடுப்பேன்’’ என்றவர் கொலு பொம்மை உடைஞ்சிடுச்சேனு கவலைப்பட வேண்டியதில்ல, அதை ஓரளவு சரி செய்துவிடலாம் என்று உறுதி அளிக்கிறார்.
‘‘சிலர் வருஷக் கணக்கா கொலு பொம்மைகளை பத்திரப்படுத்தி வச்சிருப்பாங்க. அவங்க பாட்டி தந்ததாக் கூட இருக்கும். இப்ப திடீர்னு உடைகிறப்ப மன வருத்தப்படுவாங்க. அந்த மாதிரியான ஆட்களும் வந்து பொம்மை களைக் கொடுக்குறாங்க. பெரும்பாலும் நேரம் எடுத்து செய்து தர்றேன். எங்கிட்ட வரும் கொலு பொம்மைகளை M Seal பேஸ்ட் கொண்டு ஒட்ட வைக்கிறேன். தேவைப்பட்டால் கம்பி சப்போர்ட் கொடுத்து சரி செய்வேன். பிறகு, வண்ணம்பூசி முன்பு எப்படியிருந்ததோ அதேபோல் மாத்திக் கொடுத்திடுவேன். இதனால், பலரின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கும் போது, மனசுக்கு நிறைவா இருக்கு’’ என்று புன்னகைப் பூக்கிறார் ஓவியர் பரமசிவன்.
‘‘ஒரு முறை பக்கத்து தெருவில் இருந்து ஒருவர் பழைய கிருஷ்ணன் பொம்மையை கொண்டு வந்தார். அதன் இடது கை சேதமடைந்திருந்தது. அந்த கைப் பகுதிகுள்ளே இரும்புக் கம்பியை வைத்து சரிசெய்து, பேஸ்ட் கொண்டு பலப்படுத்தினேன். பிறகு பெயின்ட் அடிச்ச போது, கிருஷ்ணன் பொம்மை முற்றிலும் புது பொம்மை போல் காட்சியளித்தது’’ என்ற பரமசிவன் பொம்மையை புதிதாக மாற்றும் முறையைப் பற்றி விவரித்தார்.
‘‘சிலையை சரி செய்த பிறகு அதனை காகிதம் மற்றும் சிமென்ட் ப்ரைமரைப் பயன்படுத்தி மென்மையாக்க வேண்டும். பிறகு சிலைக்கு வண்ணம் தீட்ட வேண்டும். அடுத்த நகை ஆபரணங்களுக்கு கோல்டு கலர் கலந்து சிலையின் அசல் நிறங்களை கொடுத்து பொம்மைகளை நிஜ உருவத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். பொம்மை ஜோடிகளுக்கு குறைந்தபட்சம் 20-25 நாட்கள் மேல் வேலை எடுக்கும். சிலர் கொலு ஆரம்பிக்கும் முன்பு கொண்டு வருவார்கள். ஒரு சிலர் கொலு வைக்கும் போது பழுதாகி இருந்தால் பண்டிகை முடிந்த பிறகு கொண்டு வந்தது சீர் செய்து பேக் செய்து எடுத்துச்செல்வார்கள்’’ என்றார் பரமசிவன்.
Average Rating