பரிசுப் பொருள் தயாரிக்கலாம்…விழாக்கால சீசனில் நல்ல வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 19 Second

நவராத்திரி பண்டிகை அடுத்த மாதம் 17ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், வீட்டில் கொலு வைப்பது, பரிசுப் பொருட்கள் வாங்குவது என இப்போது இருந்தே பெண்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். இவர்களுக்காகவே தன் கைவினைப் படைப்புகளை வழங்கி வருகிறார் சென்னையை சேர்ந்த ஆண்டாள் ஆழ்வான். நவராத்திரி மட்டுமே இவரது ஸ்பெஷலா என்றால் அதுதான் கிடையாது. எல்லா சமுதாயத்தினருக்கும் எல்லா பண்டிகைகளுக்கும் பொருத்தமான பொம்மைகளை தனது கற்பனையில் அவர் வடிவமைத்து தருவது தான் ஆண்டாளின் விசேஷம். இவரின் வீடு முழுக்க எங்கு திரும்பினாலும் அவரின் கலைநயத்தை கண்கூடாக பார்க்க முடியும். ‘‘திருநெல்வேலி அருகே ஆழ்வார்திருநகர்தான் என்னுடைய சொந்த ஊர். என் கணவரின் ஊர் நாங்குநேரி என்பதால் திருமணமாகி நான் அங்கு செட்டிலாகிவிட்டேன். கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் தான் என் கணவரின் வேலை நிமித்தமாக சென்னைக்கு மாறினேன். இங்கு வந்த பின் ஏதாவது தொழில் தொடங்கலாம் என நினைத்தேன்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இருந்தபோதே ரங்கோலி டிசைன், சி.டி டிஸ்க்கில் சின்ன சின்னதாக அட்ராக்டிவ் பொருட்களை செய்வது என்பது என்னுடைய பொழுதுபோக்காக இருந்தது. எனது கலை வண்ணத்தை பார்த்த பெற்றோரும், தோழிகளும் என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினர். பிறகு அதுவே எனக்கு கைவந்த கலையாக மாறியது. நேரம் கிடைக்கும் போது பொழுதுபோக்காக இருந்த என்னுடைய கலை திறன்தான் பிற்காலத்தில் எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தரும் என்று அப்போது நான் நினைக்கவில்லை. சென்னைக்கு வந்த பிறகு மறுபடியும் என்னுடைய கலைத் திறமையை தூசி தட்டி எடுத்தேன். கையில் ஒரு 500 ரூபாயுடன் தி.நகர், பிராட்வே என சுற்றித் திரிந்து எனக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வந்தேன். அப்படி தொடங்கிய தொழில் இன்று எனக்கு மாதம் ₹20,000த்துக்கும் குறையாமல் வருமானத்தை அள்ளித் தருகிறது’’ என்றவருக்கு ஆரம்பத்தில் எதுவுமே சரியாக அமையவில்லை.

‘‘பொருட்கள் வாங்கியாச்சு, எனக்கு தெரிந்ததைக் கொண்டு நானும் கைவினைப் பொருட்களை செய்யலாம்ன்னு முடிவு செய்தேன். ஆனால் முதல் மூன்று மாதம் எதுவுமே எனக்கு சரியாக வரவில்லை. அவ்வளவு தான் நம்மால் தொழில் எல்லாம் செய்ய முடியாது என்று நினைத்தேன். மேலும் சென்னை எனக்கு புதிது. இங்கு எனக்கு என்று பெரிய அளவில் நண்பர்கள் கூட்டமும் கிடையாது. எனக்கென்று இரண்டு, மூன்று தோழிகள்தான் சென்னையில் இருந்தனர். அவர்களிடம் என்னுடைய கலைப் பொருட்களை காண்பித்த போது, பாராட்டியது மட்டுமில்லாமல், நான் செய்த பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்.

அத்தோடு நில்லாமல், அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று என்னுடைய கைவினைப் பொருட்களை அறிமுகம் செய்தனர். அவர்களும் எனக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. மேலும் சமூக வலைத்தளங்களிலும் என்னுடைய பொருட்களை நண்பர்கள் வெளியிட்டதால், அதன் மூலமாகவும் ஆர்டர்கள் வரத்துவங்கின’’ என்றவர் தன் படைப்பு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பொம்மை தயாரிப்பில் முழுமையாக இறங்கியுள்ளார். ‘‘நான் பல கைவினைப் பொருட்கள் செய்தாலும் பெரும்பாலான பெண்கள் ரசிப்பது என்னுடைய பொம்மைகளை தான். அந்த பொம்மைகளின் பெயர் ‘திங்க் டால்ஸ். அதாவது ஒரு கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு நாமே கற்பனை வடிவம் கொடுத்து அதனை துணி பொம்மையாக தைத்து, சிருங்காரம் மற்றும் அலங்காரம் செய்யும் கலையாகும். இதற்காக வீட்டில் உள்ள லைனிங் துணிகளை பயன்படுத்தி உருவம் தைக்கிறேன்.

பிறகு அதனுள் பழைய நைலான், காட்டன் துணிகள் அடைத்து அந்த உருவம் நிஜத்தில் எப்படி இருக்குமோ அப்படி வடிவமைக்கிறேன். உருவத்துக்கு சட்டை, வேட்டி, புடவை என ஆடைகள் டிசைனிங் முதல் மேக்கப், அணிகலன்கள் எல்லாமே செய்கிறேன். பொம்மைகளுக்கான முகங்கள் மட்டும் கொல்கத்தாவில் இருந்து மோல்டுகளை வரவழைத்து அதன் மூலம் அமைக்கிறேன். காரணம், என்னதான் ஆடை அலங்காரம் நன்றாக இருந்தாலும் முகலட்சணமாக இருக்கவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இந்த பொம்மை வடிவமைப்புக்கு பொறுமை மிகவும் அவசியம். அதையும் தாண்டி கைத்திறன் மற்றும் கற்பனை கலந்திருக்க வேண்டும்’’ என்றவர் இது பெண்களுக்கு ஏற்ற நல்ல தொழில் என்றார்.

‘‘நவராத்திரி மற்றும் பண்டிகை நாட்கள் மட்டுமில்லாமல் கல்யாணம் மற்றும் காதுகுத்து போன்ற விசேஷ நாட்களுக்கும் இந்த பொம்மைகளை வரவேற்பறையில்அலங்கார பொருட்களாக வைக்கலாம். அப்படித்தான் ஒருவர் கல்யாண செட் பொம்மைகள் ஆர்டர் கொடுத்து இருந்தார். கல்யாணத்திற்கு வந்தவர்கள் எல்லாரும் அதைப் பார்த்து பாராட்டியதாக கூறினார். அதுபோல குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் கூம்பு வடிவ பருப்பு கூடு செய்வது கல்யாண சம்பிரதாயம். அந்த கூம்பு கூடு தகரத்தில் இருக்கும். அந்த தகரத்தையும் நான் விட்டு வைக்கவில்லை.

தகரத்தை துணி கொண்டு மறைத்து சுற்றி ஜிகினா மற்றும் கண்ணாடி மணிகள் மற்றும் ஓரத்தில் பட்டுத்துணி பார்டர் என அழகுபடுத்தி தருகிறேன். அதுமட்டுமில்லை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஏசு குடில், தேவாலயம், மேரி மாதா பொம்மைகளும் வடிவமைத்து கொடுக்கிறேன். என்னைக் கேட்டால், உங்களது கற்பனை திறன் எப்படி எல்லாம் உருவாகிறதோ அதற்கு தொழில் வடிவம் கொடுத்து சம்பாதிக்க பாருங்க என்பது எனது அட்வைஸ்.

சாமர்த்தியம் உங்கள் வசம் இருந்தால், சாதாரண துணியை வைத்தே பணம் பார்க்க முடியும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. இதையே குடும்ப பெண்கள் பின்பற்றினால், இப்போதுள்ள கொரோனா கொடுமையிலும் வருவாய்க்கு வழியில்லாமல் இருப்பதில் இருந்து எளிதாக தப்பிக்கலாம்’’ என்றவர் தனக்கு தெரிந்த கலையை மற்றவருக்கும் சொல்லித் தருகிறார். ‘‘என்னைப் பொறுத்தவரை நல்ல கலை ஒருவரோடு நின்றுவிடக்கூடாது. அதனால் தான் எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். தற்போது கொரோனா காலம் என்பதால் நேரடி பயிற்சியை தவிர்த்து ஆன்லைன் பயிற்சி அளித்து வந்தேன். தற்போது நிலைமை எல்லாம் சீராகி வருவதால் நேரடி பயிற்சியினை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது’’ என்றார் ஆண்டாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்… தெரியாததும்…!! (அவ்வப்போது கிளாமர்)