சிறு தொழில்- ஹவுஸ் கிளீனிங் பொருட்கள் தயாரிக்கலாம்…கை நிறைய சம்பாதிக்கலாம்! ( மகளிர் பக்கம்)
பொதுவாக நாம் வெளியே கிளம்பும் போது நேர்த்தியாக அலங்காரம் செய்து கொள்கிறோம், வாசனை திரவியங்கள் உபயோகிக்கிறோம். இதேபோல நாம் நமது வீட்டிலும் கழிவறையிலேயும் கவனம் செலுத்துகிறோமா என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இது மிகவும் தவறு.
காரணம் வெளியே இருந்து வரும் கிருமிகளைவிட நமது வீட்டின் கழிவறையிலிருந்து வரும் கிருமிகளே அதிகம். உறவினர்கள் நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கே கழிவறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று எப்படி நாம் எதிர்பார்க்கிறோமோ அப்படி தான் நமது வீட்டிற்கு வருவோரும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
தொலைக்காட்சியில் கழிவறை மட்டுமில்லாமல் வீடுகளை சுத்தம் செய்வது குறித்து பல விளம்பரங்கள் வெளியாகின்றன. ஆனால் அவை நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு சுத்தம் தருவதில்லை என்று நினைப்பவர்களுக்காகவே தான் தயாரிக்கும் ஹோம் கிளீனிங் பொருட்களை பற்றி எடுத்துரைக்கிறார் மீனாட்சி வெங்கடேஷ்.
“கோவையில் வசிக்கிறேன். முதுகலை பட்டம் முடித்துவிட்டு, தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தேன். வேலைக்கு சென்றாலும், சிறிய அளவில் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. அப்படித்தான் பகுதி நேரமாக சிறிய அளவில் இந்த பிஸினசை தொடங்கினேன். தற்போது ‘ராஜலட்சுமி எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் இல்லங்கள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு நான் தயாரிக்கும் ஹவுஸ் கிளீனிங் பொருட்களை சப்ளை செய்து வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொதுவாக வீட்டில் கழிவறையிலிருந்து தான் கிருமிகள் வெளிவருகிறது. நாம் எவ்வளவு தான் நம் வீடுகள் மற்றும் கழிவறையினை சுத்தமாக வைத்திருந்தாலும், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் இருக்கத்தான் செய்கின்றன. இது பெரும்பாலும் குழந்தைகளையும் பெரியவர்களையுமே அதிகம் தாக்குகிறது. இந்த கொரோனா வந்த பின்னர் இளம் வயதினரையும் விட்டு வைக்கவில்லை. அதற்காகவே பிரத்யேகமாக நான் என்னுடைய கிளீனிங் பொருட்களை தயாரிக்கிறேன்.
ஆரம்பத்தில் இதனை தொடங்கும் போது நம்மால் செய்ய முடியுமா என்று யோசனை இருந்தது. என் கணவர் மற்றும் நண்பர்கள் கொடுத்த ஊக்கம் தான் என்னை இன்று இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது. 2013ல் எங்கள் குடும்ப நண்பர் ஆலோசனைபடி சிறிய அளவில் இந்த தொழிலை தொடங்கினேன். தற்போது ஃப்ளோர் கிளீனர், வாஷிங் ஜெல், டிஷ் வாஷ், கிளாஸ் கிளீனர், ரூம் ஃப்ரஷ்னர், பினாயில், லிக்விட் சோப் அனைத்தும் தயாரிக்கிறோம்.
ஆரம்பித்த போது, எங்க வீட்டு அருகே இருக்கும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நானே என்னுடைய பொருளை மார்க்கெட்டிங் செய்தேன். சாம்பிள் கொடுத்து உபயோகப்படுத்தி பார்க்க சொன்னேன். அதில் திருப்தி அடைந்தால் மட்டுமே வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். உபயோகப்படுத்திய பலர் நன்றாக இருக்கிறது என்று தொடர்ந்து வாங்க அதுவே எனக்கு பெரிய ஊக்கத்தை ஏற்படுத்தியது. பிசினசும் நல்லபடியாக முன்னேற ஆரம்பித்தது. அதன் பிறகு நான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரமாக இந்த தொழிலில் ஈடுபட ஆரம்பிச்சேன்’’ என்றவர் கிளீனிங் பொருட்கள் பற்றி விவரித்தார்.
‘‘இதற்கான மூலப்பொருட்களை எல்லாம் வடமாநிலங்களில் இருந்து வாங்குகிறேன். 1 லிட்டர் முதல் 50 லிட்டர் கேன் வரை சப்ளை செய்கிறோம். எங்க ஃப்ளோர் கிளீனர் வீட்டை நன்றாக சுத்தம் செய்வதுடன் நீண்ட நேரம் வரை அதன் நறுமணம் இருக்கும். டாய்லெட்டில் படிந்திருக்கும் நாள்பட்ட கறைகள் மற்றும் வாஷ்பேசின் கோப்பைகள் போன்றவற்றில் தங்கியிருக்கும் கறைகளை அடியோடு போக்கி கழிவறையை நன்கு மணமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அதற்கேற்ப டாய்லெட் கிளீனரை தயாரிக்கிறோம்.
ஒரு முறை உபயோகிப்பவர்கள் வேறு பொருட்களை உபயோகிப்பதில்லை, என்பதால், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம். மேலும் இல்லத்தரசிகள் மொத்த விற்பனைக்கு வாங்கிச் சென்று அதை அவர்கள் விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானத்தை ஏற்படுத்தி தருகிறோம்’’ என்றவர் தென்னிந்தியா முழுதும் தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
‘‘குடும்பத்தில் ஒருவரது ஊதியத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துவது சிரமமாகும். அதனால் பெண்கள் ஏதாவது ஒரு சிறுதொழிலை கற்றுக்கொண்டு பணம் சம்பாதிக்கும் போது அவர்களின் வருமானம் குடும்பத்திற்கு ஒரு சப்போர்ட்டாக இருக்கும். இந்த எண்ணத்தில் தான் நான் சிறிய அளவில் தொடங்கினேன். தற்போது எனது பொருட்களை மாவட்டங்கள் முழுக்க விற்பனை செய்து வருகிறேன்.
மேலும் கொரோனா காலத்தில் பலர் வேலையின்றி வருமானம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளானர். இதுபோன்ற தருணங்களில் வருமானம் தரும் மாற்றுத் தொழில் ஒன்றை கற்றுக்கொண்டால் உதவியாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் வீட்டில் ஓய்வு நேரத்தில் ஏதாவது ஒரு கைத்தொழில் கற்றுக்கொண்டு சுயமாக சம்பாதிக்க வேண்டும்’’ என்று கூறி விடைப் பெற்றார் மீனாட்சி வெங்கடேஷ்.
Average Rating