கல்லீரல் புற்றுநோய் யாருக்கு வரும்? (மருத்துவம்)
கல்லீரல் நம் உடலில் இருக்கக்கூடிய மிகப்பெரிய உறுப்பாகும். சுமார் ஒன்றரை கிலோ எடையுடைய கல்லீரல் நமக்கு பல முக்கிய வேலைகளை திறம்பட செய்கிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல் என நம் உடலிலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு குறிப்பிட்ட வேலையினை செய்கின்றன. ஆனால், கல்லீரல் பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது.
கல்லீரல் புற்றுநோய் காரணிகள்
மற்ற உறுப்புகளை காட்டிலும் கல்லீரல் புற்றுநோய்க்குத்தான் காரணிகள் நிறைய உள்ளன. இன்னும் சொல்லப் போனால் கிட்டத்தட்ட 75% கல்லீரல் புற்றுநோய் கட்டிகள் கெட்டுப்போன கல்லீரலில்தான் தோன்றுகிறது. அப்படி செயல்திறன் இழந்து கெட்டுப் போவதற்கு இரு முக்கிய காரணங்கள் மதுப்பழக்கமும், வைரஸ் B & C கிருமிகளும்தான். மது உடம்பில் புகுந்து கல்லீரல் வழியேதான் வெளியேறுகிறது.
ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் காலகட்டத்தை தாண்டும்போது கல்லீரல் அதன் செய்திறன் முழுவதையும் இழந்து விடுகிறது. ரத்த மூலம் பரவும் வைரஸ் B & C கிருமிகளும் கல்லீரலில் தங்கி, அரித்து பின் அதன் செயல் திறனை இழக்க வைக்கிறது. உடல் பருமன், அதிக அளவு இரும்பு, செம்பு என தாதுப் பொருட்கள் கல்லீரலில் தங்கியும் பாதிப்புகளை ஏற்படுகின்றன. காரணங்கள் எதுவானாலும் இறுதியில் கல்லீரல் சுருங்கி தழும்பாகி பின் புற்றுநோய் கட்டிகள் உருவாகின்றன.
தடுக்கும் முறைகள்
மதுப்பழக்கம் ஒரு முக்கிய காரணமாக விளங்குவதால் அதனை அறவே தவிர்த்தல் நல்லது. பல நோய்களுக்கு மூல கர்த்தாவாக மதுப்பழக்கம் விளங்கினாலும் கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய்தான் அதில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ரத்தத்தில் பரவும் வைரஸ் B & C கிருமிகளை விரட்ட ஊசி மூலம் போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், பாதுகாப்பற்ற உடலுறவு என கெட்டவை அனைத்தையும் விட்டொழிக்க வேண்டும்.
அன்றாட உடற்பயிற்சி, கொழுப்புள்ள உணவினைத் தவிர்த்தல் என ஆரோக்கிய வாழ்வு கல்லீரலை பாதிப்படைவதிலிருந்து காக்கும். B வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பாதுகாப்பு மேலும் பலப்படும். இப்படியாக கல்லீரலை கட்டிக்காத்தால் புற்றுநோயின் பிடியிலிருந்து வெகுவாக விலகலாம்.
அறிகுறிகள்
ஏற்கனவே பாதிப்படைந்த கல்லீரலில்தான் பெரும்பான்மையான புற்றுநோய் கட்டிகள் உருவாகிறது. அதனால் கல்லீரல் நோயுள்ளவர்கள் அவ்வப்போது பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். அப்படி செய்வதால் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். ரத்தப் பரிசோதனை மற்றும் சிடி ஸ்கேன், MRI ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் உருவாகி இருப்பதை எளிதில் கண்டறியலாம். பசியின்மை, உடம்பு இளைத்தல், ரத்த வாந்தி, வயிறு வீக்கம், மஞ்சள் காமாலை என பல அறிகுறிகள் கல்லீரல் புற்று நோய் இருக்கலாம்.
அறுவை சிகிச்சை
வயிற்றில் உள்ள மற்ற புற்றுநோய் கட்டிகளைப் போல கல்லீரல் புற்றுநோய் கட்டிகளுக்கும் பிரதான நிவாரணம் அறுவை சிகிச்சைதான். பாதிக்கப்பட்ட கல்லீரலில் பகுதியினை வெட்டி எடுத்துவிட்டால் குணமடையலாம். ஒரிரு மாதங்களில் மீதமுள்ள கல்லீரல் வளர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பும். இதுதவிர Radio Frequency ablation, ரத்தக்குழாய் வழியே கீமோதெரபி மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்ற வழிகளைக் கையாளலாம்.
Average Rating