உக்கிரமடையும் உரப் பிரச்சினை !! (கட்டுரை)
‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் என்னவோ எமது இலங்கைக்கே எழுதியது போலுள்ளது. உண்மையில் அத்தனை வளங்கள் இருந்தும், ஒரு சட்டைப் பின்னுக்கு கூட ஏனைய நாடுகளிடம் கையேந்துவதால் தான், இன்று எமது நாடு பாரிய பொருளாதார சிக்கலில் சிக்கி சுழன்றுக்கொண்டிருக்கின்றது.
அனைத்து வளங்களையும் கொண்டிருக்கும் நாம் இன்று சேதனப் பசளையைக் கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள துர்ப்பாக்கியம் எமக்கே உரித்தாகியுள்ளது.
நாட்டின் எதிர்கால தலைவர்களான இளைஞர், யுவதிகள் இன்று நாட்டை விட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம், குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக பல கிலோமீற்றர் தூரத்திலான வரிசைகள் பறைசாற்றுகின்றன.
30 வருட உள்நாட்டு யுத்த காலத்தில் கூட தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வடக்கு, கிழக்கிலிருந்து மாத்திரம் தான் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். ஆனால் இன்று முழு இலங்கையிலிருந்தும் தப்பி பிழைத்து ஓடுவதற்கு தயாராகிவிட்டனர். இவ்வாறு இளைஞர், யுவதிகள் எமது நாட்டிலிருந்து வெளியேறுவது, எமது நாட்டுக்கு எவ்வாறானதொரு சாபக்கேடு என்பதை எதிர்வரும் காலங்களில் அறிந்துக்கொள்ளலாம்.
இன்று தினம் தினம் ஆகாயத்தை தொடும் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், கல்விக்கு அடிக்கப்பட்டுள்ள சாவுமணி, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட இன்னோரன்ன காரணங்களால், எங்காவது சென்று பிழைத்துக்கொள்வோம் என சட்டரீதியாகவும் சட்டவிரோதமாகவும் இலங்கையை விட்டு செல்லும் நிலையில், ஆண்டாண்டு காலமாக இந்த மண்ணில் விவசாயம் செய்து, முழு நாட்டுக்கும் உணவளித்த விவசாயி எங்கே போவான்? அவன் வாழ்ந்தாலும் இறந்தாலும் அவனுக்குச் சொந்தம் அவனது விவசாய நிலமே. இந்த விவசாயிகள் அண்மைய சில நாள்களாக விடும் கண்ணீர், இன்னும் எத்தனை யுகங்களுக்கு இலங்கைக்கே சாபமாக அமைய போகிறதென தெரியவில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சுற்றுச்சூழலுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பின்றி விவசாயத்தை முன்னெடுத்து வந்தாலும் 1960ஆம் ஆண்டு உலகில் ஏற்பட்ட பசுமை புரட்சியால் பாரம்பரிய விவசாயம் வர்த்தக விவசாயமாக மாறியது. அதாவது குறுகிய காலத்தில் பாரிய அறுவடையைப் பெறுவதே இந்த வர்த்தக விவசாயத்தின் நோக்கமாக அமைந்தது. கலப்பு விதைகளின் அறிமுகம், அசேதன பசளைகளின் அறிமுகம், பூச்சிக்கொல்லிகள் இந்த வர்த்தக விவசாயத்தை பராமரிப்பதற்கான காரணியாக அமைந்தது.
இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இலங்கையிலும் தேயிலை, தென்னை, இறப்பர் உள்ளிட்ட பெருந்தோட்ட பயிர்செய்கை உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்திகளும் அசேதன பசளைக்கே அடிமையாகிவிட்டன.விஷமென தெரிந்தும் எமது நாக்குகளும் இரசாயன உரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவுகளுக்கு பழகிவிட்டன.
ஆனால், ‘ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த குடிமகனை உருவாக்க, நச்சு அல்லாத உணவுக்கான மக்களின் உரிமையை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும்’ என்ற ஜனாதிபதி கோட்டாபயவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கையின் கீழ், கடந்த ஜூலை மாதத்திலிருந்து அசேதன பசளை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டது.
இந்த அசேதன பசளை இறக்குமதியும் முன்னேற்பாடான திட்டங்கள் எதுவுமின்றி தடைசெய்யப்பட்டதால், விவசாயிகள் வீதிக்கு இறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 15 இலட்சம் ஹெக்டயர் விவசாய நிலங்கள் காணப்படுவதுடன், தற்போது பயன்படுத்தப்படும் இரசாயன உரத்தில் 95 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவதுடன், இதற்காக கடந்தாண்டு இலங்கைக்கு உர இறக்குமதிக்காக 259 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த இறக்குமதி செலவு அதிகம் தான், எண்ணெய் விலை அதிகரிப்புடன், உர இறக்குமதி செலவானது, 300-400 மில்லியன் டொலர் வரை அதிகரிக்கும். இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றிற்கு பெரும் செலவு செய்த போதிலும், விவசாய உற்பத்தியில் தரமான அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை. அத்துடன், இலங்கையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகரிக்க காரணமும் இந்த இரசாயன உரமே என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, இலங்கையில் சேதன பசளையை மாத்திரம் முழுமையாகப் பயன்படுத்தி விவசாயத்தை முன்னெடுக்கவும் அசேதன பசளை பயன்பாட்டை குறுகிய காலத்துக்குள் முற்றாக தடைசெய்யவுள்ளதாகவும் அறிவித்தார்.
இதனையடுத்து உலக நாடுகளின் கழிவுத்தொட்டியாக அண்மைய சில நாள்களாக மாறிவரும் இலங்கைக்கு, சீனாவின் நகர கழிவுகள், சேதனப் பசளை எனும் பெயரில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டன.
இதற்கான மாதிரிகள் சீனாவிலிருந்து பெறப்பட்ட நிலையில், அந்தப் பசளை மாதிரிகளில் இலங்கையின் மண்வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அர்வீனியா எனப்படும் நுண்ணுயிர்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, அதனை அப்படியே நிறுத்தி விட்டு, நேற்று முன்தினம் லிதுவேனியாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்யப்பட்டு, நேற்று அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேதனப் பசளையை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயத்தில் தன்னிறைவை காணுதல் வாக்குறுதியை நிறைவேற்றுவது தனது, பொறுப்பு என்றும் சேதன பசளையைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், உத்தரவாத விலையை விட அதிகமான விலைக்கு வாங்க அரசாங்கம் தயாராகவுள்ளதென ஜனாதிபதி தெரிவித்தாலும், அது தொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அத்துடன், இந்த அசேதனப் பசளை தடையானது பெருந்தோட்ட பயிர்செய்கையான தேயிலை, இறப்பருக்கும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதுடன், இதனால் தோட்டத் தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகங்களும் மோதிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் விவசாயிகளில் உரப்பிரச்சினை உக்கிரடமடைந்தாலும் சேதன பசளை பயன்பாடு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை. தேயிலை உள்ளிட்ட விசேட வர்த்தகப் பயிர்செய்கைக்கு மாத்திரம் இரசாயன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கினாலும் டொலர் பிரச்சினையானது, அசேதன உர இறக்குமதியையும் பாதித்துள்ளது.
இந்த நிலையில், இந்த மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர், தமது உரப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு முழுவதிலுமுள்ள விவசாயிகள் கொழும்புக்கு படையெடுப்பர் என விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ள நிலையில், அரசாங்கம் அதற்கு முன்னர் விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்போது சற்றே தணிந்துள்ள கொரோனா, விவசாயிகளின் கொத்தணியாக மாறும் என்பதில் ஐயமில்லை.
விவசாயிகளின் சேதன பசளை தொடர்பான பாரிய எதிர்ப்புக்கு மத்தியில், முதற் தடவையாக லிதுவேனியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன பசளையைப் பயன்படுத்தி, பெரும்போகத்துக்கான பயிர் செய்கை நேற்று (15) 8 இலட்சம் ஹெக்டேயரில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அசேதனப் பசளைக்கு பழகிவிட்ட எமது விவசாய நிலங்களில் உரிய முறைகைளைப் பின்பற்றி சேதன பசளை பயிர்செய்கை முன்னெடுக்கப்படாவிடின் அது பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் என, இலங்கை மணல் சார் ஆய்வு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதை கவனத்திற்கொண்டு, செயற்பட்டால், விவசாயிகளின் சாபத்துக்கு ஆளாக வேண்டிய நிலை எவருக்கும் ஏற்படாது.
Average Rating