சருமத்தில் முகம் பார்க்கலாம்! ! (மகளிர் பக்கம்)
சருமம்தான் ஒருவரின் வயதைக் காட்டும் கண்ணாடி என்பார்கள். சிலருக்கு சிறிய வயதிலேயே முகம் முதிர்ச்சியாகத் தெரியும். ஒரு சிலர் வயதானாலும் பார்க்க இளமையாக இருப்பார்கள். சிலரின் முகத்தில் ஒரு விதமான பளபளப்பு இருக்கும். சிலருக்கு முகம் முழுக்கப் பருவாக இருக்கும். ஒரு சிலருக்கோ எண்ணெய் வழியும். இப்படி பலவகைப்பட்டவர்களும் தங்களின் சருமத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை அளிக்கிறார் அழகுக்கலை நிபுணர் மீனா.
“சருமத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணெய் பசை சருமம், வறண்ட சருமம். ஒருவரின் சருமம் எந்த வகை என்று எளிதாகக் கண்டுபிடிக்கலாம். முகத்தில் நெற்றி, மூக்கு இரண்டையும் இணைக்கும் பகுதியை டி-ஜோன் என்பார்கள். காலை எழுந்தவுடன், ஒரு டிஸ்யூ பேப்பரால் அந்தப் பகுதியை அழுத்தி ஒற்றி எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள எண்ணெய் பசையைக் கொண்டு தான் ஒருவரின் சருமம் என்ன வகை என்று கண்டறியலாம். இந்தப் பகுதியில் அதிகமாக எண்ணெய் படிந்து இருந்தால் அது எண்ணெய் பசை நிறைந்த சருமம்.
வறண்டிருந்தால் வறண்ட சருமம்.
இரண்டும் சமமாக இருந்தால் சாதாரண சருமம்.ஒருவரின் சருமத்துக்கு ஏற்றவாறு அதன் பராமரிப்பும் மாறுபடும். எந்த சருமமாக இருந்தாலும் வெளியே சென்று வந்ததும் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். வெளியே சுற்றுப்புறத்தில் உள்ள அழுக்கு சருமத்தில் படிந்து சருமத்தில் உள்ள நுண்துவாரங்களை அடைத்துவிடும். இதை சுத்தம் செய்ய காய்ச்சாத பச்சைப் பாலை பஞ்சில் நனைத்து முகத்தை நன்கு துடைக்க வேண்டும். பிறகு, 10 நிமிடங்கள் கழித்துத் தண்ணீர் கொண்டு லேசாக மசாஜ் செய்து, கழுவ வேண்டும். இப்படி செய்தால் சருமம் பளபளப்பாகும். எலாஸ்டிசிட்டி மேம்படும்.
வெயிலில் செல்வதால் சருமம் கறுத்துப்போகும் வாய்ப்பு உள்ளது. இதற்கு, கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, கிளிசரின் மற்றும் தேன் மூன்றையும் நன்றாக கலந்துகொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் மசாஜ் செய்து கழுவ வேண்டும். சாதாரண சருமத்தினர் இதைப் பின்பற்றலாம். சாதாரண சருமத்தினர் கை, கழுத்து மற்றும் உடலில் சூரியனால் ஏற்படும் கறுமையைப் போக்க முல்தாணிமெட்டி, டீ டிகாக்ஷன் கலந்து 10 நிமிடங்கள் வைத்துவிட்டுக் கழுவினால், வெயிலினால் ஏற்படும் கறுமை நீங்கும்.
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கடலை மாவுடன், சிறிது தயிர், தேன் சேர்த்து பேக்காக போட்டு, 15 நிமிடங்கள் கழித்தபின், தண்ணீரில் லேசாக மசாஜ் செய்து கழுவலாம். இதனை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், தினமும் குளிக்கும்போது கடலை மாவைத் தேய்த்துக் குளிக்கலாம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை முதலில் நன்கு சுத்தம் செய்து கழுவ வேண்டும். பிறகு, முல்தானி மெட்டியுடன், சிறிது பன்னீர் கலந்து பேக் போல் முகத்தில் அப்ளை செய்யவும். நன்கு காய்ந்ததும், தண்ணீர் தொட்டு மசாஜ் செய்து கழுவலாம். இதனை வாரம் ஒரு முறைதான் செய்ய வேண்டும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் காய்ச்சாத பாலைக் கொண்டு முகத்தைச் சுத்தம் செய்யலாம். அதன் பிறகு பாதாம், கொஞ்சம் காய்ச்சிய பால் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட் மாதிரி அரைக்கவும். இதை பேக்காக முகத்தில் போட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். சருமம் வறண்டு போகாமலும், சுருக்கம் ஏற்படாமலும் இருக்க இது உதவும்.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்குப் பெரும்பாலும் முகத்தில் பருக்கள் அதிகமாகத் தோன்றும். வேப்பிலை, துளசி, புதினா சமமாக எடுத்து அதை மிக்ஸியில் அரைத்துச் சாறு பிழிய வேண்டும். இதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தடவவும். ஐந்து நிமிடங்கள் கழித்து மறுபடியும் தடவ வேண்டும். மீண்டும் ஐந்து நிமிடங்கள் கழித்து, மீதம் உள்ள சாறில் கொஞ்சம் கடலை மாவு, தயிர் சேர்த்து முகத்தில் பேக் போல் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் அல்லது பன்னீர் கொண்டு லேசாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். பரு இருப்பதால், அதிகமாக அழுத்தி மசாஜ் செய்யக் கூடாது. புதினா சருமத்துக்குப் பளபளப்பைக் கொடுக்கும். வேப்பிலை பருவை நீக்கும். துளசி பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளியைச் சீர்செய்யும்.
பாலுக்குப் பதில் பால் பவுடரும் பயன்படுத்தலாம். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், பன்னீர் சேர்த்துக் கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட்டு வந்தால் முகம் பொலிவடையும். அதே போல் காய்ச்சாத பாலில் சிறிது தேன் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். இது முகத்தில் உள்ள கறுமையை நீக்கிப் பளிச்சிடச் செய்யும்.
வெயில் காலத்தில் அதிகமான பழங்களைச் சாப்பிட வேண்டும். அதே போல் பழங்களைச் சருமத்திலும் பூசலாம். குளிர்ச்சியான பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, கிரீன் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, செவ்வாழை, தேவைப்பட்டால் தர்பூசணியை மிக்ஸியில் அரைத்து பேக் மாதிரி போடலாம். ஸ்ட்ராபெர்ரி நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
சிலருக்கு சருமம் தொங்கிப்போனது போல் இருக்கும். அவர்கள் வாரம் ஒருமுறை முகத்தில் முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி பிறகு கழுவலாம். இதனால், சருமம் இறுக்கமாகும். பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, கடலை மாவு, பச்சைப் பயிறு சிறிது கஸ்தூரி மஞ்சள், பன்னீரில் குழைத்து முகத்தைக் கழுவி வந்தால் சுருக்கம் நீங்கும்.
சிலர் சருமம் சிவப்பாக வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு ஸ்ட்ராபெர்ரி 10 துண்டுகள் நறுக்கி, கல் உப்பு சேர்த்து, 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு, இதனை பேஸ்ட் போல் அரைக்கவும். தேவைப்பட்டால் காய்ச்சாத பால் சேர்த்துக்கொள்ளலாம். இதனை முகம், கை, கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீர் கொண்டு லேசாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமம் பளபளப்பாகும். இதனை அனைத்துச் சருமத்தினரும் செய்யலாம்.
Average Rating