மணப்பெண் ஜடை அலங்காரம்!! (மகளிர் பக்கம்)
திருமணத்திற்கு வரும் பெண்கள் பெரும்பாலும் ரசிப்பது மணப்பெண் அலங்காரத்தை. அதிலும் குறிப்பாக மணப்பெண் சிகை அலங்காரத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவம் அலாதியானது. மணமகள் கூந்தலை எந்தமாதிரியான வடிவில், அவரின் முக அமைப்பிற்கு ஏற்றவாறு அழகுபடுத்துவது, எந்த மாதிரியான ஆபரணங்கள், பூக்களை பயன்படுத்துவது. மணமக்கள் திருமண உடைக்கு இந்த சிகை அலங்காரம் பொருந்துமா என மணப்பெண் கூந்தல் அலங்காரத்திற்கு பெண்கள் ரொம்பவே மெனக்கெடுவார்கள்.
திருமணத்திற்கு முன்பெல்லாம் இயற்கையில் பூத்த மலர்களைக் கொண்டே ஜடை, வேணி போன்றவற்றை தயாரித்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, சம்பங்கி, தாமரை மலர்களே மணமகளின் கூந்தலை பெரும்பாலும் அலங்கரிக்கும். ஆனால் இப்போது டிரெண்ட் மாறிவிட்டது. உடைக்கேற்ற வண்ணத்தில், செயற்கை மலர்களால் தயாரான சிகை அலங்காரங்களைப் பெண்கள் விரும்பத் தொடங்கிவிட்டனர்.
சென்னை அம்பத்தூரில் மணப்பெண் கூந்தல் அலங்காரப் பொருட்களான “வேணி” தயார் செய்து மொத்த விற்பனை செய்யும் “சாந்தி ப்ரோச்சர்ஸ்” நிறுவன இயக்குநர் மேரி ஆன் சாந்தியை சந்தித்தபோது…‘‘அழகுபடுத்துதல் கலை எனக்கு இயல்பாக வந்தது. பத்தாம் வகுப்பு முடித்து அழகுக்கலை தொடர்பான அத்தனை விசயங்களையும் தேடித்தேடிக்கற்றேன். பூக்களின் இதழ்களைத் தனித்தனியாகப் பிரித்து மாற்றிமாற்றி அடுக்குவது, ரோல் செய்வது, அதையே வேறுவிதமாக மாற்றி எதையாவது செய்து வித்தியாசப்படுத்தி பார்த்து ரசிப்பது, கடையில் புதிதாய் பார்க்கும் ஒன்றை வாங்கி, பிரித்துப் பார்த்தே எப்படிச் செய்துள்ளார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது என என் ஆர்வம் அழகு சார்ந்த விசயங்களை அதிகம் நாடியது.
சென்னை பாரிமுனையில் உள்ள மொத்த விற்பனை அங்காடிகளுக்குச் சென்று தேவைப்படும் விதவிதமான மூலப் பொருட்களை சேகரித்து வாங்கி வந்து என் கற்பனைக்கு ஏற்ப விதவிதமான ஹேர் ப்ரோச்சர்களை தயார் செய்யத் துவங்கினேன். பலகட்ட முயற்சிக்குப் பின், மணப் பெண் தலை அலங்காரத்திற்கான பூக்களை கூந்தலில் சொருகும் வடிவில் நானே விதவிதமாய் தயாரிக்கத் தொடங்கியதில், என் தயாரிப்புகள் பார்ப்போரை அதிகம் கவர்ந்தது.
துவக்கத்தில் அழகு நிலையங்களை நடத்தும் பெண்களிடம் என் தயாரிப்பு ஹேர் ப்ரோச்சர்களை சாம்பிளாகக் கொடுக்க ஆரம்பித்தேன். அவை மணப் பெண்களுக்கு பிடித்துப்போகவே ஆர்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. சில டிசைன்கள் அதிகம் பிடித்துப்போய் ஒரே நேரத்தில் அதிகமான ஆர்டர்களும் வரத் தொடங்கியது. தனி ஒருத்தியாக மிகப் பெரிய ஆர்டர்களை தயார் செய்வது மலைப்பாக இருந்தது.
அருகாமையில் இருந்த பெண்களையும் என்னோடு இணைத்து, கைத் தொழிலாக இதில் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். ஒரு சில நிமிடங்களிலே என் மனதில் ஏதாவது டிசைன் வந்து நிற்கும். அது என் இயல்பிலேயே உள்ளது. நானாக மாற்றி மாற்றி யோசித்து ஒன்றை உருவாக்குவேன். நான் உருவாக்குவது எனக்கும் பிடித்து அது மற்றவர்களுக்கும் பிடித்திருந்தால், அதை தயாரிக்க ஆகும் நேரம், அதற்கான செலவு, ஒரு மணி நேரத்தில் எத்தனை செய்ய முடியும் என்பதை எல்லாம் கணக்கிட்டு அதற்கான பயிற்சி கொடுத்து தயாரிக்கும் பணியில் மற்ற பெண்களையும் ஈடுபடுத்துவேன். நாங்கள் தயார் செய்யும் சிகை அலங்காரத்திற்கான ப்ரோச்சர்கள், கண்ணைக் கவரும் வண்ணத்தில், பலவித டிசைன்களில் தயாராகத் தொடங்கியது.
என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் மூலமாகவே தெரிந்தவர்கள், எனது வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்கள் என கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிலிருந்து சம்பாதிக்க நினைக்கும் பெண்களாக என்னிடம் சேரத் தொடங்கினர். இப்போது என்னிடத்தில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் இணைந்து வேலை செய்கிறார்கள். இங்கு வந்து வேலை செய்ய முடியாத பெண்கள் தேவையான ரா மெட்டீரியலை வீட்டிற்கு எடுத்துச் சென்று செய்து எடுத்து வருகிறார்கள்.
சில வயதான பெண்கள் கூட வீட்டில் இருந்து செய்கிறார்கள். கல்லூரி பெண்கள் சிலரும் பாக்கெட் மணிக்காக இதில் பகுதிநேர வேலையாக ஈடுபடுகிறார்கள். பீட்ஸ் கோர்ப்பது. பட்ஸ் செய்வது, ஸ்டோன்களை ஒட்டுவது என இதில் நுணுக்கமான வேலைகள் நிறைய உள்ளது. பட் செய்வது சிலருக்கு அழகாக வரும். சிலர் தயாரித்த பட்ஸ்களை கோர்க்கும் வேலையில் ஆர்வம் காட்டுவார்கள். சிலர் ஸ்டோன் ஒட்டும் வேலை மட்டுமே செய்வார்கள். சுலபமாக எந்த வேலை வருகிறதோ அந்த வேலையை மட்டும் கொடுப்போம்.
வேணி, மொட்டு, டபுள் வேணி, லேயர் ரோஸ், பட்டு ஜடை, மொட்டு ஜடை, ரோல் ரிங், பீட்ஸ் வேணி என 150க்கும் அதிகமான, வெரைட்டியான அயிட்டங்கள் எங்களிடம் தயாராக உள்ளது. கலர் ரிப்பன், கோல்டன் ரிப்பன், வொயிட் பீட்ஸ், கோல்டன் பீட்ஸ் இவைகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி இவற்றைத் தயாரிக்கிறோம். கஷ்டமைஸ்டாக விரும்பும் டிசைனை செய்யச் சொல்லிக் கேட்டு சிலர் வருவார்கள்.
என்னிடம் விற்பனை பிரதிநிதிகளாக பெண்களே இருக்கிறார்கள். சாம்பிள் பேக், ஆல்பம், கலர் பேலட், விலைப்பட்டியல் என அனைத்தும் தரப்படும். சென்னை பாரிமுனை, தியாகராய நகரில் உள்ள மொத்த விற்பனை அங்காடிகள், ப்யூட்டி பார்லர்கள் என எங்கள் தயாரிப்புகள் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.
கிறிஸ்துவ மதத்தினர் திருமணம் என்றால் ஹேர் ப்ரோச்சர்ஸ் மட்டுமல்ல மணமகளின் துணையாக வரும் வெள்ளை உடை தேவதைப் பெண்களுக்கும், அவர்கள் கரங்களில் தவழும் கூடை வடிவிலான பொக்கே என அனைத்துக்கும் எங்களிடம் ஆர்டர் வருகிறது. மூங்கில் கூடைகளை விதவிதமான ஃப்ளவர் பெடல்ஸ்களால் பார்க்க ரொம்ப அழகாக அலங்கரித்து கொடுத்துவிடுவோம்.
திருமணம் என்றில்லை, வேலைக்குச் செல்லும் பெண்கள் காட்டன் சேலைகளை உடுத்தும்போது இந்த ஹேர் ப்ரோச்சர்களை உடைக்கு ஏற்ற வண்ணத்தில் கூந்தலோடு இணைக்கும்போது பார்க்கவே கொள்ளை அழகுதான் என்றவர், வேலைக்கு போகாமல், வீட்டில் இருந்தே குடும்பத்தை கவனித்துக் கொண்டு சம்பாதிக்க நினைக்கும் பெண்களா நீங்கள்…? உங்களுக்கான வருமானத்தை உருவாக்கித்தர ‘சாந்தி ப்ரோச்சர்ஸ்’ தயாராக இருக்கிறது’’ என முடித்தார்.
Average Rating