மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்… !! (கட்டுரை)
இலங்கையின் பலத்தில் ஒன்றாக இருப்பது, பரந்து விரிந்து இருக்கும் வயல் நிலங்களாகும். சரியான பொறிமுறைகளுடன் விவசாயம் செய்தால், அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவடைந்த தேசமாக மாறும் என்பதெல்லாம், இப்போது யாரும் அரசியல் காரணிகளுக்காக ஏற்றுக்கொள்வதில்லை என்பதெல்லாம் வேறுகதை.
அப்படி, விவசாய நிலங்களில் நடக்கும் அத்துமீறல்களும் அடாவடிகளும் முறுகல்களும் நாடு பூராகவும் பரந்து விரிந்து இருக்கின்றன. அதில் ஒன்று தான் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில், அம்பாறை பிரதேச செயலகம்- சம்மாந்துறை பிரதேச செயலக எல்லையில் அமைந்துள்ள கரங்கா வட்டை ஆகும்.
கரங்கா வட்டை பிரச்சினையானது, முற்றிலும் வித்தியாசமானது. இங்கு மோதியவர்கள் முஸ்லிங்களும் சிங்களவர்களும் ஆவர். இங்கு, சிங்கள மக்களால் அதிகமாகப் பேசப்பட்ட விடயம் ‘தேச பக்தி’. ‘தேச பக்தி என்பது, அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்றார் சாமுவேல் ஜோன்ஸன். தேச பக்திக்குச் சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம். அப்படியான இனவாத குரலில் முளைத்த பிரச்சினைதான் கரங்கா வட்டை பிரச்சினை.
அம்பாறை – சம்மாந்துறை பிரதேச எல்லையில் அமைந்துள்ள வளத்தாப்பிட்டியில் உள்ள முஸ்லிங்களின் பூர்வீகக் காணியான கரங்க வட்டை, தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வெள்ளையர்களின் காலம் முதல், இந்தக் காணிகளில் முஸ்லிம்கள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர். இப்போது இந்த வயலில், முஸ்லிங்கள் கால்வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
2013 ஆம் ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற ‘தேசத்துக்கு மகுடம்’ கண்காட்சியின் பின்னர் இந்தக் காணிகள் முஸ்லிம்களிடமிருந்து கைநழுவச் செய்யப்பட்டன. தற்போது, இந்தக் காணிக்குள் சிங்கள மக்கள் அத்துமீறி, வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம்களின் காணி என்பதற்கான முழு ஆதாரமும் உறுதிப்பத்திரங்களும் வரைபடங்களும் உரிமையாளர்களிடம் உள்ளன. காணி விடயம் தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும், அவர்கள் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்தப் பாரதூரமான விடயம் தொடர்பில், அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் எவரும் உரிய முறையில் கவனத்தைச் செலுத்தாமையே காணிகள் பறிபோவதற்கான பிரதான காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் கருதுகின்றார்கள்.
கடந்த ஆட்சிகளில் அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டிருந்தவர்கள், அவர்களின் அமைச்சின் ஊடாகவும் அவர்கள் ஆதரவு வழங்கிய அரசாங்கத்தின் ஊடாகவும் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய எவ்வளவோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டிருக்க முடியும். ஆனால், அவர்கள் அவற்றைச் செய்யவில்லை; அதற்கான காரணங்கள் பல உள்ளன.
இந்தக் கரங்காவட்டை பிரச்சினை, அண்மைய நாள்களில் கடுமையாக சூடுபிடித்துள்ளது. இதனை தீர்க்க வேண்டும் என்ற கனவுடன் விவசாயிகளும் விவாசாய அமைப்புகளும் போராடி வருகின்றன.
கரங்கா விவசாயிகள், தமது காணிகளில் விவசாய நடவடிக்கை செய்ய முடியாதவாறு, பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிலரால் தாக்கப்பட்டு, வயலிலிருந்து துரத்தியிருந்த போது, விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குத் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடனடியாக அம்பாறை மாவட்ட செயலாளரைத் தொடர்புகொண்ட ஹரீஸ் எம்.பி, சம்மாந்துறை பிரதேச விவசாயிகளின் பக்கமுள்ள நியாயங்களை விளக்கிய போது அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட செயலாளர், இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் உறுதியளித்தார்.
இதன் பின்னர், இந்தப் பிரச்சினையை ஆரம்பம் முதல் கையாண்டு வரும் சிரேஷ்ட சட்டத்தரணி நஸீல், அம்பாறையிலிருந்து அத்துமீறல்களை செய்துவரும் அந்தக் குழுவுக்கு பின்னால், சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் இருப்பதாகவும் இதனால் பொலிஸ் நடவடிக்கைகளில் தொய்வு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், எனவே அம்பாறையிலுள்ள அரசியல்வாதிகளை சந்தித்து, விவசாயிகளின் நிலையைத் தெளிவுபடுத்தி, ஆக்கிரமிப்பாளர்களை கட்டுப்படுத்த பணிக்குமாறு ஹரீஸ் எம்.பிக்கு ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து, செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி, அம்பாறையில் பலம்பொருந்திய ஒருவராக உள்ள இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவை, ஹரீஸ் எம்.பி சந்தித்து, விவசாயிகளின் பக்க நியாயத்தை எடுத்துக்கூறி தீர்வை பெற்றுத்தர உதவுமாறு கோரினார்.
உடனடியாக, அம்பாறை மாவட்ட செயலாளரைத் தொடர்புகொண்ட இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, இவ்விடயம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும், பொலிஸாரை கொண்டு அத்துமீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டதுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை தொடர்புகொண்டு அத்துமீறுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
அதேபோன்று சம்மாந்துறை விவசாய சங்க பிரதிநிதிகள், வட்டானைமார்கள், சட்டத்தரணி நஸீல், சட்டத்தரணி யூ.கே. சலீம் போன்றோர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரைச் சந்தித்து, விவசாயிகளின் நியாயத்தை எடுத்துரைத்து அநியாயங்களுக்கு எதிரான முறைப்பாடுகளை பதிவுசெய்ய நடவடிக்கை எடுத்தனர்.
ஆக்கிரமிப்பு செய்த குழுவினர், மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை கொண்டு, பொலிஸ் நடவடிக்கைகளை தடுத்துநிறுத்த முற்படுவதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அறியவந்ததை அடுத்து, 20ஆம் திருத்தத்தை ஆதரித்த 07 முஸ்லிம் எம்.பிக்களும் ஹரீஸ், பைசால் காசிம், முஸாரப் எம்.பிக்கள் தலவத்கொடையில் உள்ள அமைச்சரின் வீட்டில் அமைச்சரை சந்தித்து, கரங்கா வட்டை விடயம் அடங்கலாக முக்கிய பல விடயங்களை கலந்துரையாடினர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை தொடர்புகொண்ட அமைச்சர் சரத் வீரசேகர, அத்துமீறிய குழுவினருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுத்து சட்டவிரோத குழுவை அகற்றி, நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.
அதன் பின்னர் எம்.பிக்களான ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர் இதுவிடயமாக கலந்துரையாடி, சம்மாந்துறை தவிசாளர் ஏ.எம். நௌஸாதின் ஆலோசனைகள் தொடர்பிலும் கலந்துரையாடி, மாவட்டச் செயலாளருடனான கலந்துரையாடல் இடம்பெற வேண்டும் என்று தீர்மானித்தனர்.
இந்தப் பிரச்சினையை இன்னும் காலம் தாமதிக்காமல், விவசாயிகளின் விதைப்பு காலம் ஆரம்பிக்கவுள்ளதால் இதுதொடர்பில் ஆராய்ந்து தீர்வைப்பெறும் உயர்மட்ட கலந்துரையாடலை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதன் பேரில், சம்மாந்துறை தவிசாளர் ஏ.எம்.நௌசாத், ஹரீஸ் எம்.பி, பைசால் எம்.பி, முஷாரப் எம்.பி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சட்டத்தரணிகளான நஸீல், யூ.கே. சலீம், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நடந்த கூட்டத்தில், எல்லோரும் சிறப்பாகத் தமது பணியை செய்தனர். சம்மாந்துறை தவிசாளர் நௌசாத், கரங்கா வட்டை வரலாற்றை தெளிவாக விளக்கினார். இதில் உள்ள நியாயங்கள், முஸ்லிம் – சிங்கள மக்களின் ஒற்றுமை; சகவாழ்வின் அவசியம் தொடர்பில் இங்கு பேசினர்.
இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர், அத்துமீறியவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாவும் இனிமேல் நிம்மதியாக விவசாயம் செய்ய விவசாயிகள் காணிக்கு செல்ல முடியும் என்று உறுதியளித்தார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் விவசாயத்தை செய்ய கரங்காவட்டைக்கு செல்லுமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டதுடன் பாதுகாப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
ஆனாலும், பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. அடுத்த நாள், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் களவிஜயம் செய்து நிலைமையை கண்காணித்து கொண்டிருந்த போது, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, பௌத்த தேரர் தலைமையிலான சிங்களவர்கள், கரங்கா வட்டை காணிக்குள் வந்து பிரச்சினையை ஆரம்பித்தனர். பொலிஸில் முறைப்பாடானது. மீண்டும் பிரச்சினை தொடக்கப்புள்ளியை வந்தடைந்துள்ளது.
கரங்கா வட்டையில் இனமோதல்கள் உருவானது எனும் வரலாற்றுத் துயரை, எதிர்காலம் பேசாமல் காக்க, ஒற்றுமை எனும் கயிறு பலமாக இங்கு பிடிக்கப்பட வேண்டும்.
Average Rating