இஷாலினியின் விவகாரத்தில் எழுந்த முரண்பாடு !! (கட்டுரை)
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து உயிரிழந்த, தலவாக்கலை டயகம மேற்கு பிரிவு 3யைச் சேர்ந்த ஜூட்குமார் இஷாலினி, தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஜூலை மாதம் மூன்றாம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 12 நாள்களின் பின்னர் உயிரிழந்த சம்பவம், மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதாகவும் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தபட்டதாகவும் சந்தேகிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், அரசியலாக்கப்பட்டு இனரீதியாகப் பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால், இஷாலினியின் மரணத்துக்கான சரியான காரணம் வெளியாகவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
16 வயது மலையகத்து சிறுமி, அரசியல்வாதியின் வீட்டில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீக்காயங்களுடன் மரணித்ததாகக் கூறப்படும் சம்பவத்தை மையப்படுத்தி, இரு சமூக மக்களிடையில் இன முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கான சில முயற்சிகள் இடம்பெற்றன.
இச்சம்பவத்தைப் பற்றி, அரசியல்வாதிகள் சிலர் கருத்துகளை முன்வைத்தனர். அதனூடாக அரசியல் இலாபம் பெற முயன்றதோடு, இரு இனங்களுக்கு இடையில் நல்லுறவில் முரண்பாட்டை ஏற்படுத்த எத்தனித்தனர்.
முஸ்லிம் பிரஜை வீட்டில் நடந்த வன்முறைக்கு, ஒட்டுமொத்த இனத்தவரும் தவறானவர்களெனச் சுட்டிக் காட்டியது சரியா? அதேபோன்று, குடும்ப நிலை காரணமாக, வேலைக்கு அமர்த்தப்பட்ட தமிழ் சிறுமி, காசுக்கு ஆசைப்பட்டு பாலியல் தொல்லைகளை ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படும் கருத்தால், மொத்த மலையக சமூகத்தினரும் காசுக்கு ஆசைப்பட்டவர்கள் எனக் கூறுவதும் சரியா?
பாடசாலைக்குச் செல்ல வேண்டிய சிறுமி, பணிப்பெண்ணாகச் சென்றதன் காரணம் என்ன என்பது தொடர்பில் அவருடைய குடும்பத்தாரிடம் வினவியபோது, “ வேலைக்குச் சென்றதன் முக்கிய காரணம் குடும்ப வறுமை” என தெரிவித்தனர். வேலைக்குச் சென்றதிலிருந்து ஒரு முறையேனும் வீட்டிற்கு வரவில்லை என்றும் சில மாதங்கள் மாத்திரமே வீட்டுக்கு தொலைபேசி வழியாகத் தொடர்பிலிருந்தார் எனவும் சம்பவம் இடம்பெறுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் எவ்விதமான தொடர்பும் குடும்பத்தாருடன் இருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
‘வறுமை எனப்படும் துன்பமொன்றின் உள்ளாகவே உலகத்தாரால் சொல்லப்படும் பல வகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும்’ என்ற கூற்று இஷாலினியின் கதைக்கு மிகவும் பொருத்தமாகவே உள்ளது.
அதிகமாகப் பெண்களே வீட்டு வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள், குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பதிலேயே அதிக விருப்பம் காட்டுகின்றார்கள். இதற்குக் காரணமாக அமைவது, சிறுவர்களிடம் வேலை வாங்குவது இலகு; அவர்களுக்கு மிகக் குறைந்த சம்பளத்தை வழங்கி அதிக நேரம் வேலை வாங்க முடிவதோடு அவர்கள் தப்பிச் செல்ல முயல்வதும் குறைவு என்பன எனத் தெரியவருகிறது.
இஷாலினி தொடர்பில், டயகம பிரதேச பொது மக்கள் சிலரிடம் வினவிய போது அவர்கள் பின்வருமாறு கருத்து தெரிவித்தனர். “இஷாலினியை வேலைக்கு அனுப்பியதற்கு முக்கிய காரணமாக வறுமையை மாத்திரம் கூற முடியாது. ஏனெனில் மலையகத்தவர்கள் பெருந்தோட்டத் தொழில்களை மாத்திரம் நம்பி இருந்ததெல்லாம் 15 வருடங்களுக்கு முற்பட்ட காலம். தற்காலத்தில் சுயதொழில் பலவற்றையும் செய்து வாழ்வாதாரத்தை பூர்த்திசெய்து வருகின்றனர். ஆகவே வறுமைக் காரணமாகவே 16 வயது சிறுமியை வேலைக்கு அனுப்பியதாகக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது” என பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, 16 வயதுடைய சிறுமியை வேலைக்கு அனுப்பியது, பெற்றோரின் தவறு. வேலைக்கு அழைத்து சென்ற தரகர், சிறுமியை வேலைக்கு அமர்த்திய உரிமையாளர் மீதும் தவறுண்டு. இது போன்று இன்னுமோர் இஷாலினி உருவாகாமல் இருக்க வேண்டுமானால் சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் தரகர்களுக்கும் வேலைக்கு அமர்த்தும் உரிமையாளர்களுக்கும் தண்டணை வழங்கப்பட்டாலே பல சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க முடியும் என இன்னுமொரு பிரதேசவாசியொருவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் எண்ணக்கருத்து இவ்வாறு இருக்க, சட்டரீதியில் நோக்குவோமானால் இவ்வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய சட்டத்தரணி ருஷ்டி ஹபிட்டைத் தொடர்புக்கொண்டு கேட்டபோது, பின்வருமாறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
“ஆரம்ப கட்டத்தில், இந்த விடயம் பொரளை பொலிஸாரால் விசாரிக்கப்பட்டது. பின்பு மேல் மாகாண பொலிஸ்மா அதிபரால் கிருலப்பனை பெண்கள் மற்றும் சிறார்கள் சம்பந்தப்பட்ட பொலிஸ் குழுவாலும் விசாரிக்கப்பட்டு, தற்போது இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறுகிறது. அதன் பிரகாரம் ரிஷாட் பதியுதீன் உட்பட 5 பேர், சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட வைத்திய அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட ஆவணங்களின்படி இது கொலை என முடிவு பெறவில்லை. உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், இதுவொரு தற்கொலையாக இருந்திருக்கலாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது சிகிச்சையளித்த வைத்தியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளமுடியாது எனக் கூறியதற்கமைவாக, இரண்டாவது பிரேத பரிசோதனை நடந்தது. இது முதலாவது பரிசோதனைக்கு பாரிய மாற்றமாக அமையவில்லை எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்தும் நீண்ட நாள்களாக பாலியல் உறவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் இச்செயற்பாட்டை இந்த வீட்டில் யாராவது செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இஷாலினி, தனது குடும்பத்தாரிடம் இது தொடர்பான எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. ஒரு சில சம்பவங்கள் மட்டுமே கூறியுள்ளார் என்பது அவர்களின் பொலிஸ் முறைப்பாட்டின் மூலம் அறியமுடிவதோடு அது தொடர்பாக எவரையும் கைது செய்யவில்லை” எனவும் கூறியுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் பிள்ளையின் பெற்றோர், இவ்வாறாக முறைப்பாடுகள் எதுவும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. பின்பு ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை அவர்கள் சிலரால் திசைதிருப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இச்சிறுமியின் இறப்பு, கொலையாக இருக்குமா என்ற வகையிலும் பொலிஸாரால் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. ரிஷாட் பதியுதீன் வீட்டுக்கு வேலைக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் அழைத்து சென்ற தருணத்தில், இப்பிள்ளை 16 வயது பூர்த்தி செய்யப்பட்டிருந்ததாகவும் அச்சமயத்தில் 14 வயது பூர்த்தி செய்யப்பட்டவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்த முடியும் என்று சட்டம் இருந்தாகவும் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 16 வயதிற்கு குறைந்த யாரும் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட முடியாது என திருத்தி அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதோடு இச்சிறுமிக்கு நடந்தது கொலையா, அசம்பாவிதமா, தற்கொலையா என்பதற்கான விசாரணைகள் தற்போது நடைபெறுவதாகவும் இரு தரப்பினருக்கும் நியாயமான தீர்ப்பு அமைய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போது முழுமையான வழக்கு விசாரணை சாட்சியங்களுடனான குற்றத்தீர்ப்பளிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை எனவும் புலன் விசாரணைக்காக மேலதிக அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபரூடாக அவசியப்படின் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் அல்லது நீதவான் நீதிமன்றத்தில் முழுமையாக விசாரிக்கப்பட்டு முடிவு பெறவும் வாய்ப்புகளுண்டு. நீதவான் அவர்களின் முடிவைத் தொடர்ந்து குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். சந்தேக நபர்கள் அனைவரும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்காக நீதவான் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டிருக்கின்றனர். அந்தவகையில் இவ்வழக்கு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது எனவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.
மலையகத்தில் வறுமைதான் கல்விக்குத் தடையாக உள்ளது என்றால் மலையகத்திலிருந்து வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், பொறியியலாளர்கள் உருவாகவில்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பெரும்பாலும், சாதாரண தரத்தை பூர்த்தி செய்து, பெறுபேற்றுக்காகக் காத்திருக்கும், பின் தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்களே நகர்புறங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவ்வாறான மாணவர்களுக்கு கைத்தொழில், தொழில்நுட்பம் தொடர்பான கற்கைநெறிகளை வழங்குவதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கலாம்.
Average Rating