பிரான்ஸ் தமிழ்பெண்ணை போலீசார் மீட்டனர் `செல்போன்’ காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்தது

Read Time:7 Minute, 11 Second

FR.TamilLovers.jpgசெல்போன் காதல் திருமணத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. காரைக்காலில் சிறை வைக்கப்பட்டு இருந்த பிரான்ஸ் தமிழ் பெண்ணை போலீசார் மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர். சென்னை நுங்கம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற வாலிபரின் செல்போன் காணாமல் போய், பிரான்சை சேர்ந்த காரைக்கால் தமிழ் பெண் தவுலித்துன்னிசாவின் கைக்கு போனது. செல்போன் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர பிரான்சில் இருந்த தவுலின்னிசா, பெற்றோருக்கு தெரியாமல் சென்னைக்கு பறந்து வந்து சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் குடும்ப வாழ்க்கையை தொடங்கிய நேரத்தில், தவுலித்துன்னிசாவை அவரது பெற்றோர் கடத்திச்சென்று விட்டனர். காரைக்காலில் உள்ள அவரது வீட்டில் சிறை வைத்து விட்டனர். தனது செல்போன் காதல் மனைவியை மீட்டுத்தரும்படி போலீசில் சீனிவாசன் புகார் கொடுத்தார்.

மரணப் போராட்டம்

இதற்கிடையில் கடத்தி சிறை வைக்கப்பட்ட தவுலித்துன்னிசா, தனது கணவருடன் மீண்டும் சேர்த்து வைக்கும்படி மரணப் போராட்டம் நடத்தினார். சாப்பிடாமல் பட்டினி கிடந்தார். தற்கொலைக்கு முயன்றார். இறுதியில் சென்னை போலீசாரை போனில் தொடர்பு கொண்டு பேசி “என்னை மீட்காவிட்டால் உயிரை விட்டு விடுவேன்” என்று உருக்கமாக பேசினார். தனது காதல் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் சீனிவாசனும் பட்டினிப்போராட்டம் நடத்தினார்.

காதல் திருமண ஜோடிகளின் மன உறுதியைப்பார்த்த போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். நுங்கம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் முரளி காரைக்கால் போலீஸ் சூப்பிரெண்டுடன் பேசி சிறை வைக்கப்பட்ட தவுலித்துன்னிசாவை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனே காரைக்கால் போலீசார் தவுலித்துன்னிசாவின் வீட்டுக்கு சென்று அவரை மீட்டனர். அவரது தாயாரிடம் சமாதானமாக பேசினார்கள்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு தவுலித்துன்னிசாவை காரைக்கால் போலீசார் சென்னை அழைத்து வந்து அவரது கணவர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர். அவருடன் அவரது தாயாரும் உடன் வந்து மகளை வாழ்த்திச் சென்றார்.

போலீசாரிடம் ஆசி

நேற்று காலையில் சீனிவாசனும், தவுலித்துன்னிசாவும் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்கள் காதல் திருமணத்தை வெற்றி பெற வைத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததோடு ஆசியும் பெற்றார்கள்.பின்னர் இருவரும் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தனர். முதலில் தவுலித்துன்னிசா கூறியதாவது:-

எனது கணவரிடம் எனக்கு பிடித்தது அவரது அன்பான பேச்சுதான். நாங்கள் செல்போனில் பேசும் போது அவரது கனிவான பேச்சில்தான் எனது மனதை அவரிடம் தொலைத்தேன்.

ஆனால் அவர் என்னை காதலிக்கிறாரா? என்பது எனக்கு தெரியாது.நான் அவரை காதலிக்க ஆரம்பிக்கும் போது அவரது முகத்தை நான் பார்க்கவில்லை. அவரது செல்போன் பேச்சின் மூலம் அவரது மனதைத்தான் நான் பார்த்தேன். என்ன சாதி,என்ன மதம், என்ன வயது ,எப்படி இருப்பார், என்ன வேலை பார்க்கிறார், என்றெல்லாம் நான் பார்க்கவில்லை.

பிறந்த நாளில்

நாங்கள் ஜனவரியிலிருந்து செல்போனில் பேசி பழக ஆரம்பித்தோம். மே மாதம் அவருக்கு 25-வது பிறந்த நாள். இந்த தகவலை அவர் செல் போனில் என்னிடம் தெரிவித்தார்.அப்போது அவரது பிறந்த நாள் பரிசாக எனது காதலை அவரிடம் தெரிவித்தேன்.உடனே அவர் எனது காதலை ஏற்றுக் கொண்டார். அவரும் என்னை விரும்பி வந்ததாக கூறினார்.

எங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது.நான் என்ன நினைக்கிறேனோ அதையே அவரும் நினைப்பார். எங்களின் எண்ணம், செயல் எல்லாம் ஒன்றாக இருந்தது. அது தான் எங்கள் காதலின் வெற்றியின் ரகசியம்.

போராடி வெற்றி

என்னை சிறை வைத்த போது எனது கணவரின் முகம் மட்டுமே என் கண்முன்னே தெரிந்தது. அவரை அடையும் வரை எனக்கு தூக்கம், சாப்பாடு பிடிக்க வில்லை. என்னை பல வகையிலும் மிரட்டினார்கள். சாபம் கூட போட்டார்கள். இரவு முழுவதும் தெருவில் நிற்க வைத்து சித்ரவதை செய்தார்கள்.

நான் சவால் விட்டு, என் கணவரை அடைவேன், என்று உறுதியுடன் நின்று வெற்றி பெற்றுள்ளேன். என் கணவர் எம்மதமோ அது எனக்கு சம்மதம். நான் இந்துப்பெண் போல தாலி அணிந்துள்ளேன். எங்கள் குழந்தைகளை சாதி, மத, பேதம் இல்லாமல் வளர்ப்போம். இவ்வாறு தவுலித்துன்னிசா கூறினார்.

மனைவி சொல்லே மந்திரம்

சீனிவாசன் கூறும் போது, “எனது மனைவி சொல்லே, எனக்கு மந்திரம்” என்று குறிப்பிட்டார். போலீஸ் நிலையத்துக்கு வரும் முன்பு கணவன்-மனைவி இருவரும் நுங்கம்பாக்கம் பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வந்தனர். போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறும் போது இருவரும் கைகோர்த்தபடி காதல் சிட்டுகளாக சந்தோசத்தில் மிதந்தபடி சென்றனர்.

FR.TamilLovers.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விமானம் விழுந்து நொறுங்கி 15 ராணுவ வீரர்கள் பலி
Next post இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம்