-கணவர் அழைத்ததும் வேலையை ராஜினாமா செய்திட்டேன்! (மகளிர் பக்கம்)
வந்தாரை வாழ வைக்கும் சென்னை… அப்படித்தான் இந்த மாநகரம் எங்களையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது என்று பேசத் துவங்கினார் மஞ்சுளா. இவர் தன் கணவர் ஸ்ரீ னிவாசனுடன் இணைந்து சென்னை கே.கே.நகரில் ‘ஸ்ரீ னிவாசா டிபன் சென்டர்’ என்ற பெயரில் உணவகம் ஒன்றை கடந்த ஐந்து வருடமாக நடத்தி வருகிறார். இந்த உணவகத்தின் சிறப்பே 50 ரூபாய்க்கு அன்லிமிடெட் உணவினை சாப்பிடலாம் என்பதுதான்.
‘‘கொரோனா எங்களுக்கு மட்டுமில்லை… பலருக்கும் வாழ்க்கைக்கான பாடத்தை கற்றுக் கொடுத்து இருக்குன்னு நினைக்கிறேன்’’ என்று பேசத் துவங்கினார் மஞ்சுளா. என்னோட சொந்த ஊர் சேலம். எனக்கு இரண்டு அக்கா. அப்பா என்னோட 11 வயசில் இறந்துட்டார். அம்மாவும் எனக்கு திருமணமானதும் இறந்துட்டாங்க. எனக்கு எல்லாமே என் அக்காக்களும், என் கணவர் மற்றும் மாமியார் மட்டும் தான். அவங்க இல்லைன்னா என்னால இவ்வளவு தூரம் இந்த உணவகத்தை வெற்றிகரமா நடத்தி இருக்க முடியுமான்னு தெரியல.
எங்க வீட்டில் நான் தான் கடைசி பொண்ணு. கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். அதன் பிறகு திருமணமாகி சென்னைக்கு வந்துட்டேன். இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் 12 வருஷமா வேலைப் பார்த்து வந்தேன். என் கணவர் ஆரம்பத்தில் மொபைல் கடை வச்சிருந்தார். அப்போது ஒரு இடத்தில் பிரியாணி வாங்கி அதை கடையில் விற்று வந்தார். அதாவது வெளியே பிரியாணி செய்யச் சொல்லி அதை பார்சலாக இங்க விற்பார். ஒரு கட்டத்தில் மொபைல் கடையும் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியல. ஏன்னா எல்லாரும் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதனால இவர் அந்த கடையை மூடிட்டார்.
பிறகு சூளைமேட்டில் ஆட்கள் வச்சு ஃபாஸ்ட்ஃபுட் கடை ஒன்றை ஆரம்பிச்சார். அப்ப நான் வேலைக்கு போயிட்டு இருந்தேன். ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ்ன்னு செய்திட்டு இருந்தோம். ஃபாஸ்ட் ஃபுட் உணவகம்ன்னா பெரும்பாலும் அசைவ உணவு தான் இருக்கும். அதுவும் சீசன் பொருத்து தான் விற்பனையாச்சு. அதாவது ஒரு சில மாதம் நல்லா விற்பனை இருக்கும். சில மாசம் பிசினஸ் டல்லாயிடும். அதனால அந்த உணவகத்தை தொடர்ந்து நடத்த முடியல. அதன் பிறகு என் கணவர் ஒரு டிபன் சென்டரில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு தான் இட்லி, தோசை முதல் பரோட்டா, மீன் குழம்பு, சிக்கன் ஃபிரை, மீன் வறுவல், சாம்பார் என எல்லாம் எப்படி செய்யணும்ன்னு கத்துக்கிட்டார்.
ஒரு வருடம் அங்கு வேலையில் இருந்தார், பிறகு அதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, வடபழனியில் ஐந்து வருடம் முன்பு இந்த டிபன் சென்டரை ஆரம்பிச்சோம். காலை, மதியம், இரவுன்னு மூன்று வேளையும் சாப்பாடு கொடுத்திட்டு இருந்தோம். பெரிய அளவில் பிசினஸ் இல்லை என்றாலும், ஓரளவுக்கு கடை நல்லா தான் போயிட்டு இருந்தது. கடை பிசினஸ் முழுக்க அவர் பார்த்துப்பார். நான் வேலைக்கு போயிடுவேன்’’ என்றவர் கடையின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதற்கான காரணத்தை விளக்கினார்.
‘‘எல்லாம் நல்ல படியாக சென்றுக் கொண்டு இருந்த நேரத்தில்தான் கொரோனா எங்களை போல் சிறிய அளவில் தொழில் செய்தவர்களை பாதித்தது. எனக்கும் பாதி சம்பளம் தான் கொடுத்தாங்க. கடையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இங்கு கடையில் வேலைப் பார்த்து வந்த பசங்க மற்றும் மாஸ்டருக்கு எல்லாம் கடைக்கு மேலேயே தங்குவதற்கு அறையை ஏற்பாடு செய்திருந்தோம். வருமானமே இல்லாத போது கடைக்கான வாடகை மற்றும் இவர்களின் சம்பளம் எல்லாவற்றையும் சமாளிக்க முடியாது என்பதால் கடையில் வேலை பார்த்து இருந்தவர்களை ஊருக்கு அனுப்பிட்டோம். கடை வாடகையை நாங்க கொடுத்த அட்வான்சில் இருந்து கழிச்சுக்க ெசால்லிட்டோம். எட்டு மாசம் என்ன செய்றதுன்னே தெரியல.
என் கணவர் இந்த கடையையும் மூடிடலாம்ன்னு சொல்ல ஆரம்பித்தார். எனக்கு தான் மனமில்லை. ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்பதே அவ்வளவு சுலபமில்லை. அதனால் கொஞ்ச காலம் பொருத்திருப்போம். காலம் இப்படியே இருக்காதுன்னு அவருக்கு தைரியம் சொன்னேன். என்னுடைய சம்பாத்தியத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்தோம். அந்த சமயம் எனக்கும் சம்பளம் குறைச்சிட்டதால் ரொம்பவே கஷ்டப்பட்டோம். நமக்கே இந்த பிரச்னை இருந்தா, ஆட்டோ ஓட்டுபவர், பூக்கடை வைத்திருப்பவர் போன்ற தினசரி வேலை செய்பவர்களின் நிலை என்னவாக இருக்கும்ன்னு சிந்திக்க ஆரம்பித்தேன்.
இந்த நிலை கொஞ்சம் மாறியதும் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் என் கணவர் மாற்றம் வேண்டி மந்திராலயம் போயிட்டு வந்தார். அங்கு 60 ரூபாய்க்கு அன்லிமிடெட் மீல்ஸ் ஒரு கடையில் கொடுப்பதாகவும், அதே போல் நாமும் செய்யலாம்ன்னு சொன்னார். எனக்கும் அது நல்ல ஐடியாவா தோணுச்சு. இந்த லாக்டவுன் காலத்தில் என்னென்ன கொடுக்கலாம்ன்னு நானும் அவரும் திட்டமிட்டோம். மீண்டும் கடையை திறக்கலாம்ன்னு சொன்ன பிறகு நாங்க முழு மூச்சா இறங்க ஆரம்பிச்சோம். திட்டமிட்டபடி முழு மீல்ஸ் மற்றும் கலவை உணவுகள் எல்லாம் ரூ.50க்கு கொடுக்க ஆரம்பித்தோம்.
அப்பதான் லாக்டவுன் முடிந்து கடையினை திறந்ததால், மக்கள் கடைக்கு வந்து சாப்பிட யோசித்தார்கள். பெரிய அளவில் விற்பனை போகவில்லை. மேலும் நாங்க நிறைய வெரைட்டி வேற கொடுத்ததால், அதற்கான செலவு கொஞ்சம் கையை கடிச்சது. கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்க முடியல. இதுவே எங்களுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. ஒரு நாள் கடையில் வேலை செய்பவர்கள் எல்லாரும், சம்பளம் கொடுக்காமல் வேலை செய்ய மாட்டோம்ன்னு தர்ணா செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இவருக்கு என்ன செய்றதுன்னு தெரியல. அவங்களுக்கு எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.
இவர் எனக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல… நான் எதுவுமே யோசிக்காமல், என்னுடைய வேலையை ராஜினாமா செய்திட்டு, இவருக்கு துணையா கடையை பார்த்துக் கொள்ள வந்துட்டேன்’’ என்றவர் அதன் பிறகு பல பிரச்னைகளை தாண்டித்தான் வெற்றியை சுவைத்துள்ளார்.‘‘இவர் அழைத்தாருன்னு வேலையை ராஜினாமா செய்திட்டேன். கடையில் வேலை செய்யவும் யாரும் இல்லை. எனக்கும் பெரிய அளவில் சமைக்க தெரியாது. வீட்டில் நான்கு பேருக்கு சமைச்சிடுவேன்.
ஆனா இங்கு பெரிய அளவில் சமைக்கணும். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. அப்போது என் கணவர் தான் என் கையைப்பிடித்து ஆறுதல் சொன்னார். அவர் எப்படி சமைக்கணும் எந்த உணவு எப்படி தயாரிக்கணும்ன்னு சொல்லிக் கொடுத்தார். கண் பார்க்க கை சமைக்கணும்ன்னு சொல்வாங்க. அவர் சமைப்பதைப் பார்த்து நான் சமைக்க ஆரம்பித்தேன். நானும் என் கணவர் மட்டுமே தான் எல்லா உணவுகளையும் சமைத்தோம். கடைக்கு வருபவரிடம் 50 ரூபாய்க்கு அன்லிமிடெட் மீல்ஸ் இருக்குன்னு சொன்னோம். எல்லாவற்றையும் விட கடைக்கு வருபவர்களை நன்கு உபசரிக்க ஆரம்பிச்சோம். அதுவே எங்களுக்கு பிளசானது.
அடுத்து கடைக்கு வருபவர்களுக்கு வெறும் சாப்பாடு மட்டுமே கொடுத்தால் விரும்ப மாட்டாங்க. அதனால் வெரைட்டி கொடுக்க ஆரம்பிச்சோம். சாதம் சாம்பார் ரசம் ெபாரியல் மட்டுமில்லாமல் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பும் சேர்த்தோம். உடன் மட்டன் மசாலா, மீன் வறுவல், காடை ஃபிரை, சிக்கன் 65, சிக்கன் கிரேவி, சுராப்புட்டுன்னு அசைவத்தில் பல வகை சைட்டிஷ் கொடுத்து வருகிறோம். இவை மட்டும் ரூ.30 முதல் ரூ.80க்கு தருகிறோம்.
சில சமயம் கையில் குறைந்த பணம் வைத்துக் கொண்டு இது எவ்ளோன்னு கேட்பாங்க. அவங்க கேட்கும் போதே புரிஞ்சிடும். அவங்க கையில் காசு இல்லைன்னு. நாங்க கையில் தட்டைக் கொடுத்து, எவ்வளவு வேணுமோ சாப்பிடுங்கன்னு சொல்லிடுவோம். இப்போது மதிய உணவும் இரவு நேர டிபன் மட்டும் தான் தருகிறோம். இரவு நேரம் பரோட்டா, சப்பாத்தி மட்டும் ஒன்று தருவோம். இட்லி, தோசை அன்லிமிடெட். அதுவும் ரூ.50 தான். ஒரு மாஸ்டர் அப்புறம் உதவிக்கு ஒரு பையன் இருக்கான். இவன் என் கணவருக்கு கூட பிறக்காத தம்பி போல. நாங்க கஷ்டப்பட்ட நேரத்தில் கூட எங்களுக்கு உறுதுணையா இருந்தான். அவன் எல்லாமே செய்வான். மாஸ்டருடன் சேர்ந்து நானும் என் கணவரும் சமையல் வேலை பார்த்துக்கிறோம்.
அடுப்பு சூட்டில் வியர்வை சிந்தி வேலைப் பார்த்து, வாடிக்கையாளர்கள் என் சாப்பாட்டை ருசித்து சாப்பிடும் போது ஏற்படும் சந்தோஷம், ஏ.சி அறையில் உட்கார்ந்து வேலைப் பார்த்த போது கூட கிடைக்கல. அதற்கு முக்கிய காரணம் என் கணவர் மற்றும் மாமியார் தான். அவர் என்னை கூப்பிடலைன்னா நான் கடைக்கு வந்திருக்க மாட்டேன். மாமியார் வீட்டையும் எங்க மகளையும் பார்த்துக்கலைன்னா என்னால இங்க ஈடுபாட்டோட வேலை செய்ய முடியாது.
காலையில் பத்து மணிக்கு நானும் என் கணவரும் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்திடுவோம். இரவு போக பதினோரு மணியாயிடும். அப்ப எங்களுக்காக உணவு தயார் செய்து வச்சிருப்பாங்க. அவங்க தான் எங்களின் முதுகெலும்புன்னு சொல்லணும்’’ என்றவர் மேலும் பல வெரைட்டியினை அறிமுகம் செய்யும் எண்ணத்தில் உள்ளார்.
‘‘மக்களுக்கு ஒரே உணவைக் கொடுத்தா போர் அடிச்சிடும். அதனால ரவா தோசை, கார பணியாரம், இனிப்பு பணியாரம்ன்னு டிபன் வகையிலும், மதிய உணவில் பல விதமான கலவை சாதங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்’’ என்றார் மஞ்சுளா.
Average Rating