மலை கிராமங்களில் கடத்தப்படும் குழந்தைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 19 Second

கொடுக்கற கூலிய மறுகேள்வி கேட்காமல் வாங்கிக்கொள்கிறார்கள் என்பதால் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மலை கிராமங்களில் இருந்து குழந்தைகள் திருப்பூர், ஈரோடு, பெருந்துறை பகுதிகளுக்கு கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படுகின்றனர் என நம்மை பதறவைத்தார் திருவண்ணாமலை மாவட்டத்தை ஒட்டியுள்ள ஜவ்வாது மலைப்பகுதி அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மகாலெட்சுமி. என்ன நடக்கிறது என அவரிடத்தில் கேட்டபோது…

பனியன் கம்பெனியில் வேலை செய்கிற குழந்தை ஒன்று என்னை கைபேசியில் அழைத்து, ‘‘எங்களை விடவே மாட்டேங்கிறாங்க மிஸ். எவ்ளோ கெஞ்சிக் கேட்டாலும் அனுப்பமாட்டேங்கிறாங்க ’’ என அழ ஆரம்பிச்சா. அந்த ‘‘எங்கள்ல” நம்ம பள்ளியில 10வது படிக்கிற ரெண்டு பெண்குழந்தைகளும் அடக்கம் என நம்மிடம் மேலும் பேசத் தொடங்கினார் ஆசிரியர். ‘‘எங்களுக்குப் பாடம் நடத்துறாங்களாம் நாங்க போவணும்”னு சொல்லிக் கேட்ட குழந்தைங்கக்கிட்ட ‘‘இங்கேயே வேணா ஒரு மணிநேரம் டைம் தரோம்” படிச்சுக்கோவென கம்பெனி வேலைக்கு அழைச்சிட்டுப் போன புரோக்கர் பொம்பளை சொல்ல, வழி தெரியாத குழந்தை தடுமாறிப்போயி எனக்கு ஃபோன் போட்டு பேசிச்சு. புரோக்கர் பொம்பளைக்கு ஃபோன் பண்ணுனா, ‘‘நீங்க யாரு? அவங்க அப்பா அம்மாவே கேட்கல. நீங்க ஏன் சும்மா சும்மா பேசறீங்க?” என்றாள்.

18 வயசுக்குக் கீழ இருக்கிற குழந்தைகளை வேலைக்கு அழைச்சிட்டுப் போனதே சட்டப்படி தப்பு. இதுல நான் கேட்கக்கூடாதா?” அப்படின்னு திருப்பிக்கேட்டா, கன்னாபின்னானு என்னையத் திட்றா. சரி இவக்கிட்ட பேசி ஒரு பயனுமில்லனு புரிஞ்சி, அடுத்தது என்ன பண்றதுனு யோசிச்சி குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தோழர் தேவநேயனை அழைத்து விசயத்தைச் சொன்னேன். அவர் உடனடியாக, திருப்பூர் மாநகர கமிஷனர் வனிதா ஐ.பி.எஸ் அவர்களைத் தொடர்புகொண்டு குழந்தைகள் நிலையை எடுத்துக் கூறியுள்ளார்.அடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு எண்களான சைல்டு லைனில் அழைத்து விசயத்தைச் சொல்லி, அந்த புரோக்கர் பெண்ணின் எண்ணையும் அவர்களிடம் கொடுத்துவிட்டேன்.

அன்றிரவு 9 மணி போல் அதே குழந்தையிடமிருந்து மீண்டும் எனக்கு ஃபோன். குழந்தைகள் மிகவும் பயந்துபோய் நடுநடுங்கிப் பேசினர். ‘‘மிஸ்….போலீஸ்கிட்ட சொல்லிட்டீங்களா? ஃபோன் பண்ணாங்க. அந்த புரோக்கர் பொம்பளை எங்களைப் பயங்கரமா திட்றா. எங்கூர் புள்ளைக மொத்தமும் எங்க பேர்ல கோவமா இருக்காங்க. ரொம்ப பயமா இருக்கு மிஸ். எங்களை எப்டியாவது கூப்டிட்டுப் போய்டுங்க மிஸ்” என்று கதறலும் பதட்டமும் கண்ணீருமாய் புலம்பிய குழந்தையிடம்” உங்களுக்கு ஒன்னும் ஆகாது. ஏதாவது ஆபத்துனா வாட்ஸ்அப்ல வாய்ஸ் நோட் போட்டுவிடு. போலீஸும் எப்படியும் உங்களை காப்பாத்திடுவாங்கமா”னு சொல்லித் தேத்திக்கிட்டே இருக்கும்போதே ‘‘மிஸ் யாரோ வராங்க, நான் அப்புறம் கூப்பட்றே”னு சொல்லிட்டு புள்ள ஃபோனை கட் பண்ணிட்டு ஓடிடிச்சி.

குழந்தைகளுக்கு எதுவும் ஆயிடக்கூடாதேன்னு இரவெல்லாம் தூக்கமில்லை. மறுநாள் காலை 6.30 மணிக்கே ஃபோன் ஒலிக்க குழந்தைகளிடமிருந்துதான். ‘‘மிஸ் …நாங்க ஜமுனாமரத்தூர் பஸ் ஏறிட்டோம்”னு சொன்னபோது அதிர்ச்சியா இருந்துச்சி. எப்டி என்று கேட்டதுக்கு, “நான் உங்கக்கிட்ட பேசினதுக்கு அப்புறம் அந்த புரோக்கர் பொம்பளை எங்களை ஓனர்கிட்ட கூட்டிட்டுப் போனா. அந்த ஓனர் பிரபு என்னாங்கடி உங்க பிரச்சனை?”னு திட்டிக்கிட்டே வேல செஞ்சதுக்குக் காசு கொடுத்துட்டு, பேப்பர்ல கையெழுத்து வாங்கி, நைட்டோட நைட்டா அந்த புரோக்கர் பொம்பளை கூட அனுப்பி வச்சிட்டார் என்று சொல்லி முடித்த ரெண்டு மணி நேரத்துல 13 குழந்தைகளும் ஜமுனாமரத்தூர் வந்து சேர்ந்தாங்க. போலீஸ், சைல்டு லைன் என்றதுமே இரவோடு இரவாக ஓனரிடம் பேசி, புரோக்கர் பொம்பளையும் அவள் கணவரும் அனைத்துக் குழந்தைகளையும் அவசரம் அவசரமாக அழைத்து வந்துள்ளனர்.

மூளைச் சலவை செய்து மலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகள் 12,13,14 வயது நிரம்பியவர்கள். ஜவ்வாதுமலையை நோக்கித் தினம் தினம் படையெடுத்து, குழந்தைகளை கொத்தடிமைகளாய் அழைத்துச் செல்லும் புரோக்கர்களையும்.. குழந்தைகளை பணிக்கு அமர்த்தும் நூற்பாலை, ஆயத்த ஆடை நிறுவனங்கள், பனியன் நிறுவனங்கள் மற்றும் பருத்தித் தோட்ட ஓனர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்றவர், இது ஒரு மலையின் பிரச்சனை அல்ல, ஒரு தலைமுறையின் பிரச்சனை. இந்த மாநிலத்தின் பிரச்சனை. இந்திய ஒன்றியத்தின் பிரச்சனை என முடித்தவரைத் தொடர்ந்து குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசியபோது..,குழந்தைகள் சக்தியற்றவர்கள்.

குரலற்றவர்கள் என்கிற காரணத்தால் உலகத்தில் எளிதில் சூரையாடப்படும் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் வீட்டில்கூட குழந்தைகளுக்கு எல்லாவிதமான தண்டனைகளையும் நாம் கொடுக்கிறோம். இந்த எண்ணம் எல்லோரின் பொதுபுத்தியில் இருக்கு. சாதாரண குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் நிலையே இதுவென்றால், விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிவாசி குழந்தைகளின் நிலை. அவர்களின் இயலாமை மற்றும் அறியாமையை பயன்படுத்துவதே இதில் முக்கிய விசயம்.

கொரோனா நோய் பரவல் நேரம். பள்ளிகள் இயங்காமை குழந்தைகள் நிலையை ரொம்பவே மோசமாக்கி இருக்கு. எந்த பேரிடருக்குப் பின்னும் அதிகமான பாதிப்புகளை சந்திப்பது பெண்களும் குழந்தைகளுமே. வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் வறுமை அவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக, இந்த சூழலை தோட்ட உரிமையாளர்களும், உற்பத்தி நிறுவனங்களும் குறிவைத்து பயன்படுத்திக்கொள்கின்றனர். புரோக்கர்களாக கிராமங்களுக்குள் நுழைபவர்கள் வெளியூர்காரர்களாக இருப்பதோடு, அவர்கள் பத்து பதினொன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளையே அதிகம் குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள். மூளைச் சலவை செய்து அவர்கள் மூலமாகவே மேலும் பல குழந்தைகளை இணைக்கிறார்கள்.

இதில் புரோக்கருக்கு புரோக்கர் குழந்தைகளை கை மாற்றும் உள்ளடி வேலைகளும் உண்டு. இறுதியாய் அந்தக் குழந்தை எங்கே யாரிடம் வேலைக்குச் செல்கிறது என்பதே யாருக்கும் தெரியாது. மாதம் 12 ஆயிரம் சம்பளம் தருகிறோம் என்பதெல்லாம் வறுமையில் உழல்பவர்களுக்கு மிகப் பெரும் தொகை. வறட்சியான நேரத்தில் ஆசை வார்த்தைகளை காட்டுவது. பேசும்போதே கையில் இரண்டாயிரத்தை திணிப்பது என புரோக்கர்கள் செயல்படுவதோடு, ஒரு குழந்தை மூலமாக அறிமுகமாகி வரும் குழந்தைக்கு கமிஷனாக 500 தருவது என வறுமையை பணத்தாசை காட்டி மடக்குவார்கள்.

கொரோனா பரவலில் திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களைச் சுற்றி பணியாற்றிய புலம் பெயர் தொழிலாளர்கள் ஊரைவிட்டுச் சென்றுவிட, இதைச் சரிகட்ட மலைகிராமங்களில் உள்ள குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். கள்ளக் குறிச்சி, சேலம், ஆத்தூர் போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களில் ஆடுமாடு மேய்க்க, விவசாயம் சார்ந்த வேலைகளைச் செய்யவும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

மலைப் பிரதேசத்தில் இருக்கும் பத்து பனிரெண்டு குழந்தைகளை கூட்டாகச் சேர்த்து பேருந்து, ரயில் என மாற்றி மாற்றி அழைத்துச் சென்றதை ஒருவர்கூடவா கவனிக்கவில்லை. அனைத்து ரயில் நிலையங்களிலும் சைல்ட் ஹெல்ப் லைன் இருக்கிறது. பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களோடு கண்காணிக்க குழு இருக்கிறது. சில நேரம் வேன்களிலும் அழைத்துச் செல்கிறார்கள். அதிலும் நோய் பரவல் கட்டுப்பாடு நேரத்தில் எத்தனை சுங்கச்சாவடி, செக்போஸ்டுகளை கடந்து சென்றிருப்பார்கள். இத்தனையும் தாண்டி குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர் என்றால் ஏதோ ஒரு நுட்பமான விசயத்தை கையாள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

பள்ளிக்கூடங்கள் இயங்காத காலகட்டத்தில் மலைவாழ் குழந்தைகள், கிராமப்புறங்களைச் சேர்ந்த குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்காணிக்காமல் விட்டதன் கவனக்குறைவே இது. ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் ஏழு எட்டு குழந்தைகள் புரோக்கர் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் மொபைல்களும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. காவல்துறை மற்றும் சைல்ட் ஹெல்ப் லைனை அணுகிய பிறகு, அந்தக் குழந்தைகளை புரோக்கர் பொம்பளை பஸ் ஏற்றி தனியாகவே அனுப்பி வைக்கிறாள். வரும் வழியில் அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்த்திருந்தால். தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் கடந்த பத்து ஆண்டுகளில் மிக மோசமான நிலையில் செயல்படாமலே உள்ளது. குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று நடந்தபின் சென்று பார்க்கும் நிலையிலே செயல்படுகிறது.

2000ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் கிராம அளவில் குழந்தைகள் கண்காணிக்கப்படுகிற அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்கிறது. அது இன்றுவரை நடக்கவில்லை. 2011ல் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் நிதி ஒதுக்கி, கிராமக் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் (village level child protection committee) உருவாக்கி அதில் அந்தந்த கிராமப் பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அலுவலர், அந்தப் பகுதி ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர், சுகாதாரப் பணியாளர், காவல் நிலைய அலுவலர், அதே பகுதியில் இயங்கும் சமூகப் பணியாளர், சுய உதவிக் குழுக்கள், அந்தப் பகுதி வழக்கறிஞர்கள் இடம்பெறுவார்கள்.

இவர்கள் ஆண்டுக்கு 3 முறை கூடி, குழந்தைகள் நலன், அவர்களின் பாதுகாப்பு, அவர்களின் கல்வி, குழந்தைத் திருமணத் தடுப்பு, குழந்தை தொழிலாளர் இல்லாமல் இருப்பது குறித்து பேசி விவாதித்து சரியான தகவலை அறிக்கையாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு வழியாக (district child production unit) மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இந்தத் திட்டங்கள் பேப்பர் அளவின் மட்டுமே இருக்கிறது. செயல்பாட்டில் இல்லை. கடந்த பத்தாண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட விஷயங்களில் குழந்தைகள் பாதுகாப்பும் ஒன்று.

பொறுப்பேற்று இருக்கும் புது அரசாங்கம் விரைந்து செயல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பை மீள்பார்வை செய்து மீட்டெடுக்க வேண்டும்.இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் நூற்பாலைகளில் பணியில் இருப்பதாக வும் தகவல்கள் உள்ளது. இப்போதும் பள்ளிகள் 9ம் வகுப்புக்கு மேல்தான் திறக்கப்பட்டுள்ளன. திருப்பூர், ஈரோடு, பெருந்துறை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கும் வேண்டுகோளாகவே வைக்கிறேன். உங்கள் மாவட்டங்களின் கிராம நிர்வாக அலுவலர் மூலம் கிராமக் கூட்டங்களை நடத்தி குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்’’ என முடித்தார்.

குழந்தைகளிடம் விசாரித்ததில்…

புரோக்கர் பொம்பள வீட்ல வந்து கூப்பிடும்போது மாசம் 12000/-னு சொன்னா, அப்புறம் 10000/-னு சொன்னா. சாப்பாடு தங்க இடம் ஃப்ரினு சொன்னா. ஆனா அங்க போனதுக்கு அப்புறம் தங்க, சாப்பாட்டுக்குன்னு பணத்தை எடுத்துக்கிட்டா. போக்குவரத்து செலவுக்குன்னு 130 எல்லோருக்கிட்டையும் கேட்டு வாங்கிக்கிட்டாள். ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் சில நேரம் நைட் ஷிஃப்ட் பார்த்தும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட கூலி 4850/-மட்டுமே.

காலையில 9 மணிக்கு வேலைத் தொடங்கினா இரவு 9 மணி வரை வேலை இருக்கும். மதிய உணவுக்கு ஒருமணி நேரம் தருவாங்க. நைட் ஷிஃப்ட் என்றால் இரவு உணவு அங்கேயே கொடுத்து அப்படியே 9 மணியிலிருந்து சாமம் 2.30 வரைக்கும் சில நேரம் அதிகாலை 4.30 மணி வரை தொடரும். வாரம் ஏழுநாட்களும் வேலைதான். லீவே கிடையாது. 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் நின்னுகிட்டே வேலை செய்யணும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா? (அவ்வப்போது கிளாமர்)
Next post நான் அவனில்லை அருண் & அரவிந்த் ட்வின்ஸ்!! (மகளிர் பக்கம்)