இதயத்தை வலிமையாக்கும் நடைபயிற்சி!! (மருத்துவம்)
நோய் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கிய சாதனம் நடைபயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்கு கொண்டாட்டமாக போய்விடுகிறது. உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, பிட்டான உடல்வாகு பெற ஆரம்பத்தில் இருந்தே நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைபயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகிவிட்டது.
நடைபயிற்சி, உள் உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயு செறிவையும் ஏற்படுத்தி, சிறப்பாக செயல்பட வைக்கும். நடைபயிற்சி, உயர் ரத்தஅழுத்தத்தை குறைக்கவும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்பு திட்டுகளை நீக்க பயன்படும். சிறு வயது முதலே விளையாட்டுடன்கூடிய நடைபயிற்சி, முதுமையை தள்ளிப்போடும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைபயிற்சி செய்யவேண்டியது அவசியம். ரெகுலர் நடைபயிற்சி செய்வதால் நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் வலிமையை கொடுக்கும். உடல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படும்.
வாரத்துக்கு குறைந்தது மூன்று மணி நேரமாவது நடைபயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான சாத்தியம் குறைவு. இளம் வயதில் இருந்தே நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் இதயம், முதிர்ந்த வயதிலும் ஆரோக்கியமாக தடங்கல் இன்றி இயங்க உதவும். இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையும் இயல்பாக இருக்கும்.
பெரும்பாலான நாடுகளில், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வியல் பயிற்சிகளில் நடைபழக்கமும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தொடர்ந்து நடைபயிற்சி செய்யும்போது, மூளையில் உள்ள ’ஹிப்போகாம்பஸ்’ பகுதி சிறப்பாக செயல்படுவதாக சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. பல உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளுக்கு காரணமான ஹிப்போகாம்பஸ் பகுதி, முக்கியமாக ஞாபக சக்தியுடன் தொடர்புடையது. நடப்பதால், மூளையின் அனைத்து செயல்பாடுகளும் மேம்படுகிறது.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டால் போதும், இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து நாள் தவறாமல் நடைபயிற்சி செய்துவிட்டு, உங்கள் மனநிலையை ஆராய்ந்து பாருங்கள், உற்சாகம் கரைப்புரண்டு ஓடும்.
“ட்ரெட்மில்’’ இருக்கிறது என வீட்டுக்குள்ளேயே நடைபயிற்சி செய்வதைவிட, சூரிய ஒளி உடலில் படும்படி நடப்பது நல்லது. தேவையான அளவு `வைட்டமின் டி’ கிடைக்கும். நடைபயிற்சி செய்யும்போது, அதற்கு தோதான காலுறை, காலணி அணிய வேண்டும். நடைபயிற்சிக்கு உகந்த உடைகளை அணிந்துகொள்வது நலம். நாலைந்து பேர் சேர்ந்து ஒரு குழுவாக நடைபயிற்சி செய்வது, பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல. உலக அரசியல் அனைத்தையும் `வாக்கிங்’ செல்லும்போது பேசிக்கொண்டே இருந்தால், முழுப்பலன் தராது.பேசிக்கொண்டே நடப்பதால், நடைபயிற்சியின் மூலம் நுரையீரலுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறையும். வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி, செல்போனை தடவிக்கொண்டே நடப்பதும் ஆபத்து. முதியவர்கள் சம தரையில், வாகன போக்குவரத்து இல்லாத இடங்களில் நடைபயிற்சி செய்வது நல்லது. பறவைகளின் குரல் ஒலிகளும், தாவரங்களின் வாசனையும் துணை நிற்க, நடைபயிற்சி செய்வது கூடுதல் பலன் தரும்.
புதிதாக நடைபயிற்சி செய்ய துவங்குகிறவர்கள், சிறிது, சிறிதாக நடக்கும் தூரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். முதல் நாளே பல கி.மீ தூரம் நடக்கிறேன் என்று ஆர்வக் கோளாறில் தொடங்கினால், இரண்டாம் நாளுக்கு நடை தாண்டாது. நடைபயிற்சி செய்வதற்கு முன்னர், எளிய ஸ்ரெட்சிங் பயிற்சிகள் செய்துகொள்வது நல்லது. பழகிவிட்டால், அதன் பலன்களை உணர்ந்து, தவறாமல் நடைபயிற்சி செய்ய துவங்கி விடுவீர்கள். புகை, மது போன்ற தீய பழக்கங்களை தவிர்த்து, நடைபயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.
காலையில் தூங்கி வழிந்து, விருப்பமில்லாமல் நடக்ககூடாது. உடலை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், உற்சாகமாக தினமும் நடக்க வேண்டும். அதுவே, உண்மையான நடைபயிற்சி. இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் வீசி, நிமிர்ந்த உடலுடன் வேகமாக நடைபோட வேண்டும். முன்பெல்லாம், ஒவ்வொரு செயலுடன் ’நடை’ என்னும் பயிற்சி ஒன்றிணைந்திருந்தது. ஆனால் இப்போதோ, நடைக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. வாய்ப்புகளை உண்டாக்குவது முக்கியம். சூரியனின் பார்வையில் உற்சாகமாக நடந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
Average Rating