அமரர் தர்மசீலன் நினைவுகள் !! (கட்டுரை)
சமூக, கலை இலக்கியத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த அமரர் தர்மமாவின் இழப்பு இடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் அமைப்பாளர் அ.லெட்சுமணனால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது; சிறுவர் பராயம் தொடக்கம், சமூக கலை இலக்கிய விளையாட்டுத்துறை ஊசலாட்டத்துடன் வாழ்ந்த அமரர் தர்மா என அழைக்கப்படும் சுப்பரமணியம் தர்மசீலன், தனது 69 ஆவது வயதில் தனது முச்சை நிறுத்திக்கொண்டார். 01.06.0952 சுப்பிரமணியம் சிவாபக்கியம் தம்பதியினரின் மூத்த புதல்வராக பிறந்த இவருக்கு இரு சகோதர்களும் இரு சகோதரிகளும் என அனைவருடன் வாழ்ந்து வந்தார். பெற்றோர்களுடன் இணைந்து தனது சகோதரர்களை பராமரிப்பது தொடர்பிலும் முத்தவனாக தனது பொறுப்பினை ஆற்றியவராக திகழ்கின்றார்.
அமரர் தர்மா என்ற சொல் நாவலபிட்டியின் மலை முகடுகளிலெல்லாம் ரீங்காரம் செய்த சொல்லாக திகழ்கின்றது. அண்ணாரின் இழப்பு செய்தியறிந்து நாவலபிட்டி பிரதேசம் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியுள்ளது. நோய்வாய்ப்பட்டு நிலையில் 29.9.2021 நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே எம்மைவிட்டு பிரிந்துள்ளார்.
அறுபதிகளில் தனது பாடசாலை காலத்தில் இலக்கிய முயற்சிகளிலும் விளையாட்டுதுறையிலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். சிறுவயது முதலே ஓவியத்தில் அதீத ஈடுபாடு கொண்ட அன்னார் பல பிரபல எழுத்தாளர்களின் அட்டைப்படத்தை இவராலே வரையப்பட்டுள்ளது. இதன் கையெழுத்து தொடர்பாகவும் அமரர் தர்மாவின் தொடர்பிலும் மேமன் கவி சிலாகித்து கூறுவார்.
அறுபதுகளின் பிற்பகுதியில் நாவலபிட்டியிலிருந்து வெளிவந்த ‘மலைக்குருவி’ சஞ்சிகையில் இணை ஆசிரியர்களில் ஒருவராகவும் திகழ்ந்து மலையக இதழியல் துறையில் தடம் பதித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கையெழுத்து பிரதியாக வெளிவந்த இதழின் பல பக்கங்களில் இவரின் எழுத்துக்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. சாகும் வரையில் அவரின் எழுத்தின் நளினம் குறைவடையாமலே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவருடன் இணைந்து மலைதாசன், மலைக்குருவியை தந்தவர்களில் கணேசதாசன், பத்மகுமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவார். கதிரேசன் கல்லூரியின் ‘நற்றமிழ் அருவி’ இதழில் தர்மசீலன் பங்கு அளப்பரியதாகும்.
சிறந்த வாசகராகவும் வாசிப்பராகவும் திழ்ந்தமை இவரின் சிறப்பம்சமாகும். இலங்கையின் மூத்த படைப்பு ஆளுமைகளான டானியல், டொமினிக்ஜீவா, நந்தி, பிரேம்ஜி, சோமகாந்தன் ஆகியோருடன் மிக நெருங்கத்துடன் நட்பைப் பேணியதுடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நாவலபிட்டி கிளையின் மிக முக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்தார். நாவலபிட்டி இளம் எழுத்தாளர் சங்கத்தில் இவரது பங்குபற்றல் குறிப்பிடத்தக்கதாகும். ‘மல்லிகை’ இதழோடு மிக ஆர்வத்துக்குரிய வாசகராகவும் திகழ்ந்திருக்கின்றார்.
எழுத்தாளர் சடகோபனின் பால்ய நண்பனாகவும் வகுப்புத் தோழனாகவும் திகழ்ந்த தர்மசீலன், அவரது இலக்கிய செயற்பாடுகளோடும் மிக நெருக்கமாக தொடர்பை பேணியவராவார். நாவலிபிட்டியின் கலை இலக்கிய செயற்பாடுகளில் இவரின் நட்பின் ஆழம் பற்றிய சடகோபன் எப்போதும் சிலாகித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
எழுபதுகளில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதான நிகழ்ச்சிகளான ‘ஒலிமஞ்சரி’, ‘வாலிப மஞ்சரி’, ‘மங்கையர் மஞ்சரி’ போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபாடு கொண்டவராகவும் நிகழ்வுகளில் பங்குபற்றுபவராகவும் திகழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது. சிறுகதை, கவிதை என இந்நிகழ்ச்சியில் தர்மசீலன் என்ற நாமம் மிகப் பிரபல்யம் பெற்று விளங்கியது.
சிறுகதை செயற்பாட்டாளாராக திகழ்ந்து, 1971ஆம் ஆண்டு லண்டனில் இருந்து வெளிவந்த ‘லண்டன் முரசு’ இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப்பெற்று, ‘மகிழ்வேந்தன்’ சின்னத்துடன் தங்கப்பதக்கத்தையும் பெற்றார். அண்மையில் இவரது கவிதையொன்றும் சர்வதேச இதழிலொன்றில் பிரசுரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவரது கலை இலக்கிய செயற்பாடுகளை ஆதரித்த ஒரு வாசகியாக தி.சர்மிளா திகழ்ந்தார். சர்மிளா என்ற வாசகியை காதலித்து 1992ஆம் ஆண்டு இவரை கரம் பிடித்தார். மிகப் புரிந்துணர்வான காதல் வாழ்க்கையை இவர் இறக்கும் வரை வாழ்ந்தார். தர்மசீலன் – சர்மிளா தம்பதிகளின் புதல்வனாக ஆதர்சன், அம்சத்வன், அபினவன் ஆகியோர் திகழ்கின்றார்கள். தர்மசீலனைப் போன்றே நல்லதொரு வாசகியான திருமதி சர்மிளா தர்மசீலன், 2010ஆம் ஆண்டு, நாவலப்பிட்டி தமிழ்ச் சங்கத்தை ஆரம்பித்த போது, ஸ்தாபக உறுப்பினர்களின் ஒருவராகவும் திகழ்ந்தார்.
நாவலபிட்டி தமிழ்ச் சங்க செயற்பாடுகளில் எனக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்குவதில் இவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது.
இது போன்று, நாவலப்பிட்டி இந்து மன்றம், ஆத்மஜோதி நல ஒன்றியம் போன்ற அமைப்பு சார்த்த செயற்பாட்டாளர் என்பதும் மிக நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தார்.
நாவலபிட்டி பிரதேசத்தின் மூவின மக்களின் நேசத்தோடு நெருங்கிய உறவையும் பேணி வந்த இவர், அமரர் இரா. சிவலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வு நாவலபிட்டியில் இடம்பெற்ற போது, மிகவும் காத்திரமான் வகையில் நிகழ்வை ஒழுங்கு செய்தமையும் பற்றி இரா.சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின் செயற்பாட்டாளாரான எம்.வாமதேவன், பேராசிரியர் தை.தனராஜ் ஆகியோர் விதந்து கூறினார்கள்.
நாவலபிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எஸ்.தர்மசீலன், கதிரேசன் என்ற மூல நாமத்தின் கூறுகளை கதிரேசன் மத்திய கல்லூரி, கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயம், கதிரேசன் ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளின் அபிவிருத்தி சங்கங்களில் அங்கம் வகித்துள்ளார்.ஒரு தசாப்த காலமாகப் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராக கடமையாற்றிய பங்களிப்பு குறித்து, கதிரேசன் மத்திய கல்லூரி அதிபர் டி.நாகராஜ் விதந்து கூறுவார்.
இவ்வாறே கதிரேசன் கல்லூரியில் கடமையாற்றிய அதிபர்களின் புகைப்படங்களை ஆவணப்படுத்தும் பணியில் இவரது பங்கு பற்றல் மிக முக்கியமானதாகும். பாடசாலை பௌதிக வளங்களை சீரமைப்பதிலும் கல்லூரியின் வளர்ச்சியிலும் இவரது முன்மாதிரி, காலத்தால் போற்ற வேண்டியதாகும்.இவ்வாறே, கதிரேசன் பழைய மாணவர் சங்க செயற்பாடுகளிலும் இவரது பங்களிப்பு சிறப்புக்குரியதாகும்.
அமரர் தர்மசீலன் அவர்களது முன்மாதிரி, நாவலபிட்டி சூழ்ந்த மலை முகடுகளில் தொடர்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும். முன்மாதிரியாக வாழ்ந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அமரர் எஸ். தர்மசீலன் அவர்களது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்பதோடு, எமது நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகள்.
Average Rating