அதிர்ச்சி ஆண்மைக்கு ஆபத்து !! (கட்டுரை)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, விஷேட பொது வைத்திய நிபுணர் கே.ரி.சுந்தரேசன் MBBS, MD, FRCP (Edin), அவர்களுடன், தமிழ்மிரருக்காக கடந்த வாரம் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்று கிடைத்தது. அவருடன் கலந்துரையாடியதை கேள்வி-பதிலாக தருகின்றோம்.
கேள்வி: குருதி அமுக்கம் பற்றி தெளிவுபடுத்த முடியுமா?
பதில்: சாதாரண குருதி அமுக்கம், உயர் குருதி அமுக்கம் என்று பிரித்துப் பார்ப்போமாக இருந்தால், எம்மில் உயரம் எவ்வாறு வேறுபடுகின்றதோ அவ்வாறே குருதி அமுக்கமும் வேறுபடும். இருப்பினும் சராசரி குருதி அமுக்கம் 120/80 mmHg இக்கு குறைவாக இருப்பது சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சராசரி குருதி அமுக்கம் 140/90 mmHg யை விட அதிகமாக இருப்பின், அது உயர் குருதி அமுக்கம் எனக் கொள்ளப்படுகின்றது. குருதி அமுக்கம் 130/80 mmHg இக்கு மேல் இருக்கும்போது, உயர் குருதி அமுக்கமாக கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்க இதய சங்கம், 2017 ஆம் ஆண்டில் குறிப்பிட்டிருந்ததை நான் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையுள்ளது.
குருதி அமுக்கம் 120/80 mmHg எனக் குறிப்பிடும்போது, 120 ஆனது இதய சுருக்கியக்க இரத்த அழுத்தம் (Systolic Blood Pressure) எனவும், 80 ஆனது இதய விரிவியக்க இரத்த அழுத்தம் (Diastolic Blood Pressure) எனவும் அழைக்கப்படுகிறது.
இதில், இதய சுருக்கியக்க இரத்த அழுத்தம், இதயம் சுருங்கும்போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் குருதி அமுக்கத்தைக் குறிக்கும். இதய விரிவியக்க இரத்த அழுத்தம், இதயம் விரியும்போது அல்லது ஓய்வு நிலைக்கு வரும்போது, குருதிக் குழாய்களில் ஏற்படும் குருதி அமுக்கத்தை குறிப்பிடுவதாகும்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு குருதி அமுக்கம் 150/90 mmHg இக்கு கீழ் இருப்பது போதுமானது. 60 வயதுக்குட்பட்டோருக்கு 140/90 mmHg இதற்குள் இருப்பது நன்றாகும்.
கேள்வி: உயர் குருதியமுக்கம் ஒரே குடும்பத்தில் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டா?
பதில்: ஆம்! பெற்றோரில் அல்லது சகோதரர்களிடையே இருக்குமாயின் அவர்களுக்கும் உயர் குருதியமுக்கம் வரக்கூடிய சாத்தியக்கூறுண்டு. ஆனால், அவர்களுக்கு உயர் குருதியமுக்கம் வரக்கூடிய சாத்தியக் கூறு இருந்தாலும், சரியான உணவுப் பழக்கவழக்கம், மன ஆரோக்கியம், உடற்பயிற்சி மூலம் இதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
கேள்வி: காலை, மாலை வேளைகள், நேரங்களுக்கு ஏற்ப குருதியமுக்கம் வேறுபடுமா?
பதில்: ஆம்! பொதுவாக இரவில் தூங்கும் நேரத்தைவிட பகல் வேளைகளில் குருதியமுக்கம் சற்று அதிகமாக காணப்படுவது இயல்பே. நடைப்பயிற்சி, விளையாட்டு, உடற்பயிற்சி என்பன குருதி அமுக்கத்தை அதிகரிக்கும். இது, உயர் குருதியமுக்கம் எனக் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. இதைவிட மன அழுத்தம், அதிர்ச்சி என்பனவும் குருதி அமுக்கத்தை அதிகரிக்கச் செய்யும். வைத்தியர் பரிசோதிக்கும்போது குருதியமுக்கம் அதிகரிப்பது இயல்பாகும்.
கேள்வி: உயர் குருதியமுக்கம் இருப்பதை அறிய ஏதாவது அறிகுறிகள் உண்டா?
பதில்: பொதுவாக, உயர் குருதியமுக்கம் எந்த அறிகுறிகளையும் காட்டாது. ஆகையால், உங்கள் உறவினர்களுக்கு உயர் குருதியமுக்கம் இருப்பின், அவர்களுக்கு மாரடைப்பு, பாரிசவாதம் ஏற்பட்டிருந்தால், உங்களின் குருதியமுக்கத்தைப் பார்க்கவேண்டும். அதில் உங்களுக்கு உயர் குருதியமுக்கம் காணப்படின், அதைக் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் Systolic Blood Pressure 200, தலையிடி, நெஞ்சு வருத்தம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
கேள்வி: உயர் குருதியமுக்கம் ஏற்படக் காரணம் என்ன?
பதில்: 90 சதவீதமான உயர் குருதியமுக்கம், பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. இந்தக் குருதியமுக்கம் முதன்மையான குருதியமுக்கம் (Essential Hypertension) என அழைக்கப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், சோம்பல் தன்மையான வாழ்க்கை முறை, அதிகரிக்கும் வயது, பாரம்பரியம் போன்ற காரணங்களால் ஏற்படும்.
மேலும், 5 – 10 சதவீதமான உயர் குருதியமுக்கம் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்த குழாய்களில் ஏற்படும் சில பாதிப்புகள், ஹோர்மோனின் அதிகரிப்பு (கோர்ட்டிசோல், வளர்ச்சி ஹோர்மோன்), சில மாத்திரைகள் பாவிப்பது போன்ற காரணங்களாலும் ஏற்படலாம்.
கேள்வி: சில மருந்துகளும் உயர் குருதி அமுக்கத்தை உண்டாக்கும் என்கின்றனரே; அது உண்மையா?
பதில்: ஆம்! சில நோய்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகளின் பக்கவிளைவாக, உயர் குருதி அமுக்கத்தை உண்டாக்கும். அதாவது, உடம்பில் ஏற்படுகின்ற வலிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளும், அழற்சி, சளியை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்ற மருந்துகளும், குழந்தை உண்டாவதை தடுக்கும் மருந்துகள் போன்றவைகளும் உயர் குருதி அமுக்கத்தை உண்டாக்குபவைகளாக உள்ளன.
கேள்வி: உயர் குருதியமுக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால், உடலில் எவ்வகையான பிரச்சினைகள் உண்டாகும்?
பதில்: பாரிசவாதம் வந்த 77 சதவீதமானோருக்கு உயர் குருதியமுக்கம் காணப்படுகிறது. உயர் குருதியமுக்கம், பாரிசவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகும்.
இதயம் பலமிழத்தல்; 75 சதவீதமான இதயப்பலம் இழந்த நோயாளிகளுக்கு உயர் குருதியமுக்கம் காணப்படுகிறது. இந்தநிலையில், இதயம், குறித்த அங்கத்துக்கு, போதியளவு குருதியை விநியோகிக்க முடியாத நிலையில் இருக்கும்.
இதனால், கண்பார்வை இழத்தல் ஏற்படுகின்றது. இது, விழித்திரையில் இருக்கும் நுண்ணிய நாடிகளின் பாதிப்பால் நிகழ்கின்றது.
மேலும், சிறுநீரகம் செயலிழத்தல்: சிறுநீரகங்களில் உள்ள நுண்ணிய நாடிகளின் பாதிப்பால், சிறுநீரகங்கள் செயலிழக்கின்றன. நீரிழிவுக்கு அடுத்ததாக, உயர் குருதியமுக்கமே சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணியாக அமைகின்றது.
ஆண்மைத்தன்மை இழத்தல் போன்ற பிரச்சினைகளும் உயர் குருதியமுக்கத்தால் உடலில் வரக்கூடிய சாத்தியமுள்ளது.
கேள்வி: உயர் குருதி அமுக்கம் உடையவர்கள் எவ்வளவு காலம் மருந்து பாவிக்க வேண்டும்?
துரதிர்ஷ்டவசமாக, வாழ்நாள் பூராகவும் மருந்து எடுக்கவேண்டிய நிலைவரும். குருதி அமுக்கத்தை முற்றாக நீக்குவதற்கு, இன்றைய நவீன உலகிலும் கூட, இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், உயர் குருதி அமுக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கத்தான் முடியும்.
கேள்வி: குருதி அமுக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் மாத்திரைகளை நிறுத்தலாமா?
பதில்: இல்லை! மாத்திரைகளைப் பாவித்து வருவதன் மூலம், உயர் குருதி அமுக்கத்தை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மாத்திரைகளைப் பாவிப்பதை நிறுத்த முயற்சி செய்யின், அமுக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. திடீர் குருதி அமுக்க உயர்வு ஆபத்தாகவும் முடியலாம்.
கேள்வி: குருதியமுக்கம் கணிப்பிடப்படும்போது, நோயாளிகள் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?
பதில்: கோப்பி அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகிய செயற்பாடுகள் குருதியமுக்கத்தை கணிப்பிட ஆரம்பிக்கும் 30 நிமிடத்துக்கு முன்பே தவிர்த்திருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்த உடனே, குருதியமுக்கத்தை பரிசோதிக்கும்போது, சரியான குருதியமுக்க அளவீடு கிடைக்கப்பெறாது. கதிரையில் அமர்ந்து, ஐந்து நிமிடம் அமைதியாக இருந்து, ஓய்வுக்கு வந்த பின்னரே குருதியமுக்கத்தை பரிசோதிக்க வேண்டும்.
மேலும், கால்கள் தரையில் தொட்ட வகையில் இருக்கவேண்டும். உடலை நேரான நிலையில் வைத்து, நிமிர்ந்து அமர்ந்து இருக்கவேண்டும். கால்கள் பின்னிய முறையிலோ, காலுக்கு மேல் கால் போட்டவாறோ இருக்கும்போது அளவிடக் கூடாது. குறைந்தது இரண்டு தடவை, குறைந்த பட்சம் ஒரு நிமிட இடைவெளியில், குருதியமுக்கத்தை பரிசோதித்து, சராசரி குருதியமுக்கத்தை கணிப்பிட வேண்டும். இந்த விடயங்களை நோயாளிகள் கவனத்திற்கொண்டு செயற்படவேண்டும்.
Average Rating