நல்ல உணவு… உடற்பயிற்சி… ஆரோக்கியத்தின் வழி! (மகளிர் பக்கம்)
இன்றைய சூழ்நிலையில் நம்மை நாம் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதுதான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஒரு பக்கம் கொரோனா தொற்று நம்மை அலற வைத்துக் கொண்டு இருக்கிறது என்றால் மறுபக்கம் அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தம் பல விதமான நோய்களின் நுழைவாயிலாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு எந்த வித டென்ஷன் இல்லாமல் நம்மை நாம் பாதுகாக்க வேண்டியது தான்’’ என்கிறார் வெல்நெஸ் நிபுணரான ஸ்ருதி. கடந்த ஒரு வருடமாக ‘அவுரா கிளினிக்’ என்ற பெயரில் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக எவ்வாறு வைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை செய்து வருகிறார்.
‘‘இது வெல்நெஸ் கிளினிக். நாங்க மருந்து மாத்திரை எல்லாம் கொடுக்க மாட்டோம். பிசியோதெரபி, யோகா, கவுன்சிலிங், மைண்ட் அண்ட் பாடி, லைஃப்ஸ்டைல், மசாஜ் மூலம் அவர்களின் வாழ்க்கையினை இயற்கை முறையில் எவ்வாறு வாழ வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகிறோம். குறிப்பாக இயற்கை முறையில் உணவுகளை சாப்பிடுவது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி மூலமாக தங்களின் எண்ணம், சிந்தனை மற்றும் உடலை ஆரோக்கியமாக பெண்கள் எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது எங்களின் முக்கிய நோக்கம்.
எங்களின் சிகிச்சை முறை வித்தியாசமானது. பெரும்பாலும் டயபெட்டிக், உடல் பருமன், கால் வலி, மூட்டு வலி, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தான் அதிகம் எங்களை நாடி வருகிறார்கள். சில சமயம் புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புடையவர்களும் எங்களின் ஆலோசனை கேட்டு வருகிறார்கள். இவர்கள் யாருக்கும் நாங்க மருந்துகள் பரிந்துரைப்பது இல்லை. மாறாக அவர்களை முழுமையாக ஆய்வு செய்து கவுன்சிலிங் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மூலமாக அவர்களின் வாழ்க்கை முறையினை மாற்றி அமைக்கிறோம். எங்களை நாடி வரும் ஒவ்வொரு நோயாளிகள் மேல் நாங்க தனி கவனம் எடுத்துக் கொள்வோம்’’ என்றவர் சிகிச்சை முறையினைப் பற்றி விவரித்தார்.
‘‘முதலில் எங்களை அணுகுபவர்களை, அவர்களின் பிரச்னை என்ன என்று கேட்டு அறிவோம். அதன் பிறகு அவர்களை முழு மாஸ்டர் செக்கப் செய்வோம். அதன் மூலம் அவர்களின் உடலில் உள்ள பாதிப்புகளை கண்டறிவோம். அடுத்தது உணவுப் பழக்கம். தினசரி அவர்களின் உணவுப் பழக்கத்தை கேட்டு அறிந்துக் கொள்வோம். பிறகு அதை அவர்களின் உடலில் உள்ள பாதிப்புக்கு ஏற்ப மாற்றி அமைப்போம். நாங்களே சில உணவுகளை பரிந்துரைப்போம்.
அடுத்தக் கட்டம் கவுன்சிலிங். இது போன்ற உணவுப்பழக்கத்தை கடைப்பிடிப்பது மூலமாக அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் குறித்து அவர்களுக்கு விளக்குவோம். சிலருக்கு உடற்பயிற்சி பரிந்துரைப்போம். ஒரு சிலருக்கு பிசியோதெரபி தேவைப்படும். அதை அவர்கள் தொடர்ந்து செய்யும் படி வலியுறுத்துவோம். இது ஒரு சைக்கிள். நாங்க சொல்வதை அவர்கள் முறையாக கடைப்பிடித்து வந்தாலே போதும். நாளடைவில் அவர்களின் உடல்நிலையில் பல வித மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எங்களின் சிகிச்சை மையத்தில் தங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலர் பத்து நாட்கள் ஆரோக்கிய உணவு சாப்பிட வேண்டும் என்று அவர்களை ஒரு இடத்தில் தங்க சொல்வார்கள். அப்படி எல்லாம் நாங்க செய்வதில்லை. எங்களை அணுகும் போது, உணவு ஆலோசகரின் அறிவுரைப்படி அவர்களுக்கு சில உணவு முறைகளை பரிந்துரைப்போம். மேலும் அந்த உணவினையே எப்படி ஆரோக்கியமாகவும் சுவையாகவும் சமைக்கலாம் என்று ஆலோசனை வழங்குகிேறாம். பெரும்பாலும் நாம் அரிசி மற்றும் கோதுமை சார்ந்த உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறோம்.
அதிலேயே என்ன வித்தியாசமாக சமைக்கலாம் என்று அவர்களுக்கு ரெசிபியும் வழங்குகிறோம். ஒரு முறை அவர்களுக்கு அதில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம் என்று புரிந்து கொண்டால் போதும். நாம் டயட் உணவு மற்றும் சுவையற்ற உணவு சாப்பிடுகிறோம் என்ற எண்ணமே ஏற்படாது. காரணம் அவர்களே அந்த உணவையும் சுவையாக சமைக்க முடியும் என்பதை புரிந்து கொள்வார்கள். மேலும் அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் அதை அவர்கள் வாட்சப் மூலம் எங்களை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்’’ என்றவர் புறநோயாளிகளுக்கு கவுன்சிலிங் மட்டும் தருகிறாராம்.
‘‘புற்றுநோய் பொறுத்தவரை அதன் தீவிரம் பொருத்து தான் சிகிச்சை அளிக்கப்படும். அவர்களுக்கு நாங்க பரிந்துரைப்பது கவுன்சிலிங் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம். காரணம் உயிர்கொல்லி நோயான புற்றுநோய் ஒருவருக்கு பாதித்தால், அவர்கள் மிகவும் மனமுடைந்து போய்விடுவார்கள். தங்களின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டாலும், அவர்களால் வாழ முடியும் என்று ஆறுதல் அளிக்கிறோம். மேலும் அவர்கள் மனதில் உள்ள விரக்தியினை போக்கி தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறோம். இந்த நோய் பொறுத்தவரை அதன் தன்மையைப் பொறுத்து தான் அவர்கள் குணமடைவார்கள்.
இந்த நோயின் பாதிப்பினை ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால் அதை குணப்படுத்த வாய்ப்புள்ளது. கடைசி கட்டத்தில் கண்டறியும் போது, நோயின் பாதிப்பினை மருந்து மாத்திரை கொண்டு தள்ளிப்போடலாம். அந்த நேரத்தில் எங்களால் முடிந்த உதவியினை செய்து தருகிறோம்.
இதன் பிறகு உடல் எடை குறைப்புக்கான சிகிச்சையும் அளிக்கிறோம். இதில் அவர்கள் உணவு ஆலோசகரின் அறிவுரைப்படி உணவில் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். சில சமயம் இவர்கள் எங்களின் ஆலோசனையினை பின்பற்ற தவறினால், லைஃப்ஸ்டைல் எக்ஸ்பர்ட் மூலம் உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதால் ஏற்படும் முக்கியத்துவம் பற்றியும் புரிய வைப்போம். நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் மட்டுமல்ல எந்த பிரச்னை இருந்தாலும் அவர்கள் முதலில் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து சாப்பிட வேண்டும். நாங்க அவர்களுக்கு உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வர உதவுகிறோம். இதன் மூலம் அவர்களின் உடல் நிலை சார்ந்த பிரச்னையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்’’ என்றவர் தான் இந்த துறையை தேர்வு செய்த காரணத்தை பற்றி விளக்கினார்.
‘‘என் அம்மா டாக்டர். அவங்களப் பார்த்து தான் நான் வளர்ந்தேன். அவங்க புற்றுநோய் நிபுணரும் கூட. அவங்களிடம் வரும் நோயாளிகள் நோயின் பாதிப்பால் ரொம்பவே அவதிப்படுவதை நான் பார்த்திருக்கேன். நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் எல்லாம் கொடுப்பாங்க. அந்த சமயத்தில் ரொம்பவே கஷ்டப்படுவாங்க. அப்ப முடிவு செய்தேன். டாக்டர் துறை வேண்டாம்ன்னு. அதற்கு பதில் இவ்வாறு உடல் ரீதியாக கஷ்டப்படுகிறவர்களுக்கு அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு சிகிச்சை அளிக்க விரும்பினேன். நல்ல சாப்பாடு சாப்பிட்டு மனதை ரிலாக்சா வைத்துக் கொண்டு, உடற்பயிற்சி செய்து வந்தால் பாதி பிரச்னை தீரும்.
இப்ப கொரோனா காலம் என்பதால், சுவாசப்பயிற்சி எல்லாருக்கும் மிகவும் அவசியம். நுரையீரல் நல்ல முறையில் வேலை செய்யவும், தொற்று பரவாமல் இருக்க மூச்சுப்பயிற்சி தினமும் செய்வது முக்கியம். அதற்கான பயிற்சியும் அளிக்கிறோம். வரும் காலத்தில் வைரசுடன் தான் வாழப்போகிறோம். நம்முடைய இயற்கை உணவிலேயே எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கு. உலகம் நவீனமயமாக்கப்பட்ட நாள் முதல் நாம் அதை எல்லாம் மறந்துவிட்டோம். இப்போது அதை மீண்டும் கடைப்பிடிக்க ஆரம்பிச்சிருக்கோம். அதனால் எங்க கிளினிக்கில் இப்போது ஆரோக்கிய உணவுப் பண்டங்களையும் அறிமுகம் செய்து இருக்கிறோம். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி திறந்தவுடன் உடல் ஆரோக்கியம் குறித்து வர்க் ஷாப் நடத்த இருக்கிறோம்.
இது ஒரு முழுமையான சிகிச்சை மையம். முதலில் ஆரம்பிச்ச போது யாருக்கும் புரியல. உடற்பயிற்சி கூடம்ன்னு நினைச்சிட்டாங்க. விளக்கிய பிறகு தான் அவர்களுக்கு எங்க சேவையின் முக்கியத்துவம் பற்றி புரிந்தது. சிலர் கண்கூடாக பலனையும் பெற்று இருக்காங்க. தலை முதல் பாதம் வரை உள்ள பிரச்னைக்கான வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தால் கண்டிப்பாக ஆரோக்கியமாக வாழலாம்’’ என்றார் ஸ்ருதி.
Average Rating