ஒரே படம் மூலம் உயரத்துக்குச் சென்றவர் வசுந்தரா தேவி!! (மகளிர் பக்கம்)
‘இவா ஊதுவா… அவா வருவா…’ தமிழ்த் திரையுலகின் சகலகலா வல்லவராக அறியப்பட்ட நடிகர் ரஞ்சன் ‘மங்கம்மா சபதம்’ திரைப்படத்தில் கதாநாயகி மங்கம்மாவாக நடித்த பேரழகி வசுந்தரா தேவியைப் பார்த்து இந்த வசனத்தைப் பேசுவார். அப்போதெல்லாம் அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் மட்டும்தான். இந்தப் படம் திரையிட்ட பின் அதைப் பார்த்த சிறுவர்கள் எல்லாம் தெருவில் கொஞ்ச நாட்களுக்கு மேலே குறிப்பிட்ட, ‘இவா ஊதுவா…. அவா வருவா…..’ என்ற வசனத்தையே விளையாட்டாகப் பேசிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
நானும் அப்போது (1980களில்) அந்தப் படத்தைப் பார்த்தேன். அதன் பின் பல ஆண்டுகள் கழித்தே மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க வாய்த்தது. டி.வி.டி.யிலும் பலமுறை அப்படத்தைப் பார்த்து ரசிக்க முடிந்தது. வசுந்தராவின் இனிமையான குரலும் அவர் பாடிய பாடலும் ஆடிய ஆட்டமும் இன்றைக்கும் என்றைக்கும் மறக்க முடியாதவை. 1930-களின் இறுதியிலும் 40-களின் ஆரம்பக் காலங்களிலும் திரை ரசிகர்களால் வசுந்தரா ஒரு கவர்ச்சிக் கன்னியாகவே பார்க்கப்பட்டார், ரசிக்கப்பட்டார், கொண்டாடப்பட்டார். அவர் நடித்துக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் டி.ஆர்.ராஜகுமாரி கவர்ச்சிக்கன்னியாகக் கொண்டாடப்பட்டவர். பல ஆண்டுகள் வரையிலும் அந்தப் பெருமையைத் தக்க வைத்துக் கொண்டவர்.
ஆனால், அதற்காக அவர் பல படங்களில் நடித்துக் கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், வசுந்தராவோ இரண்டொரு படங்களில் நடித்ததன் மூலமே கவர்ச்சிக்கன்னி என்னும் பெயரைப் பெற்றார். ஆனால், அதற்காக அவர் கொடுத்த விலையோ மிக மிக அதிகம். கவர்ச்சிகரமான இந்தத் திரைப்பட உலகத்துக்குள் நுழைவதற்காக அவர் தன் புகுந்த வீட்டாருடன் பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது.
ரசிகர்களை ஈர்த்த வேதவல்லியின் குரலினிமை…
மைசூர் மாநிலம் மண்டயம் கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன் சென்னையில் குடியேறி சுகுண விலாஸ சபா நாடகங்களிலும், ‘மதி பரிணயம்’, ‘மைனர் ராஜாமணி’, ‘விஷ்ணு லீலா’, ‘அதிர்ஷ்டம்’, ‘பாலாமணி’ போன்ற சில படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டிக் கொண்டிருந்தார். சீனுவாசன் – யதுகிரி தம்பதியரின் ஒரே மகள் வேதவல்லி. சென்னையைச் சேர்ந்த ராமன் என்ற அரசாங்க அலுவலர் ஒருவருடன் வேதவல்லிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மிக இனிமையான குரலுக்குச் சொந்தக்காரரான வேதவல்லி, 1938 – ல் ‘மீரா’ என்ற ஒரு முழு நீள நாடகத்தை இசைத்தட்டில் பாடி நடித்திருந்தார். அரை மணி நேரம் ஒலிக்கக்கூடிய அந்த இசைத்தட்டின் மூலம் வெளிப்பட்ட இனிய குழைவான குரலையும் நடிப்பையும் கேட்டுப் பலரும் மயங்கினார்கள். இந்தக் குரலுக்குச் சொந்தக்காரப் பெண் யாரென்று அறிந்து கொண்ட பின், அவரை சினிமாவில் பாடவும் நடிக்கவும் வைத்து விட வேண்டும் என்பதில் அப்போதைய திரையுலகினர் பலரும் முனைப்புடன் இருந்தனர்.
ஆனால், வேதவல்லி இசைத்தட்டுக்காகப் பாடியதையே அவருடைய புகுந்த வீட்டார் யாரும் விரும்பவில்லை. அப்படி இருக்கும்போது எங்கிருந்து சினிமாவில் நடிப்பதைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியும்? ஆனால், வேதவல்லியின் தாய் யதுகிரிக்கு தன் மகள் சினிமாவில் நடிப்பதிலும் பாடுவதிலும் மிகப்பெரிய விருப்பம் இருந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின் இறுதியில் அம்மா யதுகிரியின் விருப்பத்துக்கு மகள் வேதவல்லி இணங்கினார்.
வேதவல்லியைத் தேடி வந்து வாய்ப்பளிப்பதாகக் கூறியவர்களில் ஒருவர் இயக்குநர் ஒய்.வி.ராவ். வேதவல்லியும் நடிப்பதற்குச் சம்மதம் என்றவுடன், இசைத்தட்டில் ஏற்கனவே அவர் பாடி நடித்த ‘மீரா’ வையே மீண்டும் படமாக்கலாம் என்ற முடிவுக்கு வந்து, உடனடியாக ‘வசுந்தரா தேவி’ நடிக்கும் ‘பக்த மீரா’ படம் தயாராகிறது’ என்று வேதவல்லிக்கு ஒரு புதிய பெயரைச் சூட்டி விளம்பரமும் செய்து விட்டார். இந்த விளம்பரம் பரவலாகச் சென்றடைந்ததும் வேதவல்லியின் புகுந்த வீட்டில் மிகப் பெரிய பிரளயமே வெடித்தது. அதைத் தொடர்ந்து வேதவல்லி திரைப்படத்தில் நடிக்கத் தனக்கு விருப்பமில்லை என்று இயக்குநர் ஒய்.வி.ராவுக்குத் தகவல் அனுப்பினார்.
சற்று நேரம் திகைத்த ராவ், பின்னர் சுதாரித்துக் கொண்டு முழுமூச்சாக ‘பக்த மீரா’ படத்தைத் தயாரித்து இயக்கி, அதில் நடித்த யாரோ ஒரு புதுமுக நடிகைக்கு வசுந்தரா என்று பெயர் வைத்து விட்டார். ஏற்கனவே பெயர் சூட்டிய வசுந்தரா தேவி நடிக்காமலே, அப்படம் வசுந்தராவின் பெயரால் பிரபலமாகி விட்டது. வசுந்தராவின் பெயர் பிரபலமானதே தவிர, அந்தப் படம் என்னவோ மிகச் சுமார் ரகம்தான்.
வசுந்தராவாக மாறிய வேதவல்லியின் இசைப்பயணம்…
படங்களில் நடிக்காவிட்டாலும் கூட சங்கீதக் கச்சேரிகளில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தார் வசுந்தரா. தாயார் யதுகிரி மற்றும் கணவர் ராமன் இருவரின் ஆதரவும் அவருக்கு முழுமையாக இருந்தது. அப்போதுதான் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மியூசிக் அகாதமியில் வசுந்தராவின் கச்சேரியைக் கேட்டவர்களில் மைசூர் இளவரசரும் ஒருவர். வசுந்தராவின் இனிமையான குரலால் ஈர்க்கப்பட்ட அவர், மைசூர் அரண்மனைக்கு வந்து கச்சேரி செய்யுமாறு வசுந்தராவுக்கு அழைப்பு விடுத்தார். தாயார் யதுகிரி துணையுடன் மைசூர் அரண்மனைக்குச் சென்று கச்சேரி நடத்தினார் வசுந்தரா. ஏராளமான பரிசுப்பொருட்கள் மற்றும் பேரும் புகழுடன் சென்னை திரும்பினார்.
மைசூர் அரண்மனையிலிருந்து மீண்டும் அழைப்பு; இம்முறை வேறு மாதிரியான கோரிக்கைகளுடன் அவர் அழைக்கப்பட்டிருந்தார். மைசூர் இளவரசர் வெளிநாடுகளுக்குக் கப்பலில் பயணம் செய்யவிருப்பதாகவும், பயணத்தின்போது உடன் இசைக் கச்சேரியும் இருந்தால் நலமென்று அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். வசுந்தராவின் தந்தை சீனுவாசனுக்கோ கணவர் ராமனுக்கோ இதில் கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனால், வழக்கம் போல யதுகிரி அம்மாளின் ஆதிக்க குணமும் பிடிவாதமுமே இங்கும் வெற்றி பெற்றது. ‘அன்னிய நாடுகளுக்குக் குடும்பத்துடன் பயணம் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமா? இது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!’ என எதிர்க்கேள்வி கேட்டு எல்லோரது வாயையும் அடைத்து விட்டார்.
1939-ல் வசுந்தராவுடன் தாயார் யதுகிரி, 6 வயது மகள் வைஜயந்தி, மைசூர் இளவரசர் குழுவினர் உடன் பயணிக்க கப்பல் பயணம் தொடங்கியது. இத்தாலி, வாடிகன், ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து என பல நாடுகளிலும் இசைக்கச்சேரிகள் தொடர்ந்தன. இரண்டாம் உலகப்போர் வடிவில் அந்தப் பயணத்துக்கும் தடை வந்து சேர்ந்ததால், பயணம் ரத்தாகி மொத்தக் குழுவும் மீண்டும் தாயகம் திரும்ப நேர்ந்தது. சென்று வந்த பயணம், இசைக் கச்சேரிகள் குறித்து பத்திரிகைகளிலும் அப்போது கட்டுரைகள் எழுதினார் வசுந்தரா.
ரிஷ்யசிருங்கரை மயக்கிய மாயா…
வசுந்தராவின் இனிமையாகப் பாடும் திறன், அழகு அனைத்தும் சேர்ந்து மீண்டும் திரையுலகினரை அணுக வைத்தன. வசுந்தராவும் குடும்பத்தாரைச் சமாளித்து நடிப்பதென்று ஒரு முடிவுக்கு வந்தார். 1941 -ல் முதல் படமாக வெளிவந்தது ‘ரிஷ்ய சிருங்கர்’. போகுமிடமெங்கும் மழைப்பொழிவை உண்டாக்கும் ரிஷ்ய சிருங்கராக நடித்தவர் ரஞ்சன்; பெண் வாசனையே படாமல், காதல், காமம் எதைப் பற்றியும் அறியாமல் தந்தை விபாண்டக முனிவரால் காட்டுக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கப்படுகிறார் ரிஷ்ய சிருங்கர். அவரை மயக்கிக் காதல் வசப்படுத்தி, வறண்டு கிடக்கும் நாட்டுக்குள் மழையை வரவழைக்கும் ஒரு கருவியாக அவரை அழைத்து வர மன்னனால் அனுப்பி வைக்கப்படும் அழகிய தாசிப் பெண் மாயாவாக நடித்தவர் வசுந்தரா.
தாசிப் பெண்ணாக நடித்த வசுந்தராவைக் கண்டு ரிஷ்ய சிருங்கர் மட்டும் மயங்கவில்லை. சென்னை ராஜதானியிலுள்ள ரசிகர்கள் பட்டாளமே அவரின் ஆடல், பாடல், நடிப்பில் மயங்கிக் கிறங்கியது. மாஸ்டர் எஸ். பாலச்சந்தர் (வீணை பாலச்சந்தரேதான்), குமாரி ருக்மணி, தயாரிப்பாளர் சௌந்தரராஜன், எழுதி இயக்கிய ஆச்சார்யா, இசையமைத்த சர்மா சகோதரர்கள் & சித்தூர் வி.நாகையா, பாடல்கள் புனைந்த பாபநாசம் ராஜகோபாலய்யர் என பல திறமைசாலிகள் ஒருங்கிணைந்து இப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கினார்கள். ‘ரிஷ்ய சிருங்கர்’ அடைந்த வெற்றி மீண்டும் அடுத்த படத்தை நோக்கி வசுந்தராவை உந்தித் தள்ளியது. இந்த ஒரே படத்தின் மூலம் எங்கோ உயரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் வசுந்தரா.
திரையுலகையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த மங்கம்மா
ஜெமினி நிறுவனம் தங்கள் தயாரிப்பான ‘மங்கம்மா சபதம்’ படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்தது. கதாநாயகன் ரஞ்சன்; பெண் பித்தன், பெண்களைத் தன் அரண்மனைக்கு வரவழைத்து ஓடிவந்து அவர்கள் நெற்றியில் முட்டி விளையாடுவதும் பின் அவர்களைத் தன் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதுமாக இருப்பவன்; அப்படி அழைத்து வரப்படும் பெண்களில் ஒருத்திதான் மங்கம்மா, வசதியற்ற ஏழைப்பெண். வழக்கம் போல நெற்றியில் முட்ட ஓடி வரும்போது மங்கம்மா சடாரென விலகிக் கொள்ள, தடுமாறிக் கீழே விழுகிறான். சுற்றிலும் நிற்கும் மற்ற பெண்கள் கைகொட்டிச் சிரிக்க அவமானமாகப் போய் விடுகிறது அவனுக்கு.
அதற்குப் பழி வாங்க எண்ணி தன்னை விரும்பாத மங்கம்மாவைப் பண பலம் மற்றும் அதிகாரத்தின் மூலம் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொள்கிறான். திருமணத்துக்குப் பின்னும் தன்னைப் புறக்கணிக்கும் மங்கம்மாவைப் பழி வாங்கும் நோக்கத்துடன், ‘உன்னை வாழாவெட்டியாகவே அரண்மனையில் வைத்திருப்பேன்’ என்று திமிராகப் பேசுகிறான். ‘அப்படியானால், உனக்குத் தெரியாமல் உனக்கே நான் பிள்ளை பெற்று அவனைக்கொண்டே உன்னைச் சாட்டையால் அடிக்க வைப்பேன்’ என மங்கம்மாவும் பதிலுக்கு சபதம் செய்கிறாள்.
அரண்மனையில் அவளை வீட்டுச்சிறை வைக்கிறான். அப்போது காவலுக்கென்று சில பெண்களை ஊதுகுழலுடன் நிற்க வைக்கிறான்; அப்போது பேசும் வசனம்தான் மேலே குறிப்பிட்டது. “ஏதாவது குரங்காட்டம் காட்டினியோ இவா ஊதுவா, அவா வருவா….’’ என்று வாளேந்திய காவலர்களைக் குறிப்பிடுவான். சுரங்கம் வழியாக அரண்மனையை விட்டுத் தப்பிச் செல்லும் மங்கம்மாவுக்கு என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம் ஜோடி உற்ற துணையாக இருந்து உதவுகிறது. ஜிப்ஸி பெண்ணாக மாறுவேடத்தில் மீண்டும் வந்து கதாநாயகனை மயக்கி வீழ்த்தி, சொன்னபடியே சாதித்துக் காட்டுகிறாள்.
மிகுந்த சாமர்த்தியசாலியான பெண் மங்கம்மாவாக வசுந்தரா நடித்திருந்தார். ஆடல், பாடலுடன் மயக்கும் மொழி பேசி கதாநாயகன் ரஞ்சனை ஏமாற்றி, ஒரு பிள்ளையையும் பெற்று, அந்தப் பிள்ளையைக் கொண்டு கதாநாயகன் ரஞ்சனின் கொட்டத்தை அடக்குவதே மங்கம்மாவின் சபதம். மகனும் தாய் சொல் தட்டாத தனயன். அவரும் ரஞ்சனே…. இரட்டை வேடம் ரஞ்சனுக்கு. அந்தக் காலகட்டத்திலேயே இப்படம் 40 லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்றால் பாருங்கள்.
இந்தப் படத்திலும் நாயகன் ரஞ்சனை மயக்குவதும் ஆடுவதும் பாடுவதுமாக நடிப்பதற்கும் வாய்ப்புள்ள பாத்திரம் அமைந்து திரையுலகில் வெற்றிக்கொடியைப் பறக்க விட்டார் வசுந்தரா. அதுவரை தமிழ்த் திரையுலகம் கண்டிராத வகையில் மேற்கத்திய இசையில் அமைந்த இரண்டு வரிகள் மட்டுமே கொண்ட ‘அய்யய்யய்யோ சொல்ல வெட்கமாகுதே’ என்ற பாடலுக்குப் பம்பரம் போல் சுழன்றாடி ரசிகர்களையும் சுழல வைத்தார். திரையில் இந்த நடனம் மூன்று நிமிடங்களுக்கு மேல் இடம் பெற்றது.
ஜெமினி தயாரிப்பில் முதல் முறையாக என்.எஸ்.கிருஷ்ணன் – மதுரம் இணை நடித்த படமும் இதுதான். நகைச்சுவைக் காட்சிகளும் மிகச் சிறப்பாக அமைந்த படம். மகன் ரஞ்சன், செட்டியார் வேடமிட்டு, காட்டுக்குள் பலசரக்குக் கடை வைத்து, ‘உப்பு உந்தி, பப்பு உந்தி..’ எனத் தெலுங்கில் பேசி தகப்பன் ரஞ்சனை ஏமாற்றி வெற்றுச் சாக்கில் உட்கார வைத்து மூட்டை கட்டி விடும் காட்சிகள் நகைச்சுவையின் உச்சம்.
பாகவதரைக் கவர்ந்த வசுந்தரா…
வசுந்தராவின் கவர்ச்சியும் அழகும் பலரையும் ஈர்த்ததைப் போலவே தியாகராஜ பாகவதரையும் ஈர்த்தது. தன்னுடன் வசுந்தரா இணைந்து நடிக்க வேண்டுமென விரும்பிய பாகவதர் ‘உதயணன் வாசவதத்தா’ படத்தில் அவருடன் இணைந்து நடித்தார். கேமரா மேதை என புகழப்பட்ட டி.ஆர்.ரகுநாத் இயக்கத்தில் படம் வளர்ந்து வந்த நிலையில் லட்சுமிகாந்தன் கொலை தொடர்பாக பாகவதர் கைது செய்யப்பட்டதால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் இசைக்கலைஞர் ஜி.என்.பாலசுப்பிரமணியம் பாகவதருக்கு மாற்றாக நடிக்க வைக்கப்பட்டார். படமும் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இப்படம் பெறவில்லை. இதற்குப் பின் பாகவதருடன் நடிப்பதாக இருந்த ‘ராஜமுக்தி’ படம் தொடங்காமலே முடிந்து போனது.
திரையுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாட்டிய ராணி
வசுந்தராவின் கோலாகலமான திரையுலக வாழ்க்கையும் இந்த மூன்று படங்களுடன் ஏறக்குறைய முடிந்து போனது என்றே சொல்லலாம். வசுந்தராவுக்கு அவருடைய கலையுலக வாழ்க்கையில் எந்த அளவு ஆதரவாகவும் உறுதுணையாகவும் அவருடைய தாயார் யதுகிரி இருந்தாரோ, அவரே பின்னர் அதற்கு நேர்மாறாகவும் மாறிப் போனார். பேத்தி வைஜெயந்தியின் முன்னேற்றத்துக்காக வசுந்தராவைக் கழற்றி விடவும் தயங்காததுடன் மருமகன் ராமன், பேத்தி வைஜெயந்தி மாலா இருவரையும் வசுந்தராவிடமிருந்து பிரித்து வைக்கவும் அவர் சற்றும் தயங்கவில்லை.
தாயாரின் இந்த நடவடிக்கைகளால் வசுந்தரா நிலை தடுமாறிப் போனார். அடுத்து ‘நாட்டிய ராணி’ படத்தில் எளிய குடியானவக் குடும்பத்துப் பெண்ணாக கதாநாயகியாக நடித்தார். தாயார் யதுகிரியின் செயல்பாடுகளால் சரியான நேரத்துக்குப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாததால், அனைத்தும் தாமதமானது. எல்லாமும் குழப்பமானது. கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டு, அந்த ஒப்பந்தத்தின்படி வசுந்தரா நடந்து கொள்ளவில்லை என்று படத்தயாரிப்பு நிறுவனம் 5 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு வசுந்தரா மீது வழக்குத் தொடர்ந்தது. அதனால் வசுந்தரா திரையுலகை விட்டே விலக நேர்ந்தது.
தன் மகளைத் தன்னிடம் தர வேண்டுமென்று கோர்ட் படியேறி வழக்குத் தொடர்ந்தும் அவருக்கு வெற்றி கிட்டவில்லை. மகள் வைஜெயந்தி பாட்டி யதுகிரியின் கைப்பாவையானார். வாழ்க்கையில் தனியராகிப் போனார் வசுந்தரா. துன்பமும் துயரமும் துரோகமும் அவரைச் சுற்றிச் சூழ்ந்தன. ஆரம்ப காலத்தில் வசுந்தராவின் அபார வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டவர்கள், அதன் பிறகு அவ்விதம் நினைக்கவே வழியில்லாமல் வசுந்தராவின் வாழ்க்கை ஆட்டம் கண்டது. மகள் மூலமாகச் சாதிக்க முடியாததைப் பேத்தியின் வழியாகச் சாதித்துக் கொண்டார் பாட்டி யதுகிரி.
‘தாய் எட்டடி பாய்ந்தால்…’ என்ற பழமொழி வசுந்தரா, அவர் மகள் வைஜெயந்தி மாலா இருவருக்குமே சரியாகப் பொருந்தும். 1949 -ல் வைஜெயந்திமாலா நடிகையாகி ‘வாழ்க்கை’ படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்டினார். தாய் விட்ட இடத்தை மகள் ஆக்கிரமித்ததுடன் இந்தித் திரையுலகிலும் நுழைந்து தன் புகழை நிலை நிறுத்திக்கொண்டார். தென்னிந்தியாவிலிருந்து சென்று வெற்றி பெற்ற முதல் நடிகையும் அவர்தான்.
தாய், மகளை இணைத்து வைத்த வாசன்
நீண்ட வருடங்களுக்குப் பின் ஜெமினி நிறுவனம் 1959ல் தயாரித்த ‘பைகாம்’ இந்திப் படத்தில் மகள் வைஜெயந்தியின் தாயாகவே நடிக்கும் வாய்ப்பை வசுந்தராவுக்கு வழங்கியவர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். அந்தக் கதாபாத்திரமும் கணவரால் கைவிடப்பட்டு சோகத்தின் பிடியில் அகப்பட்டு நொந்து நூலாகிப் போன தாய் பாத்திரம்தான். சோகம் கப்பிய கண்களுடன் வசுந்தரா அந்தப் படத்தில் நடித்தார். இதுவே 1960-ல் தமிழில் ‘இரும்புத்திரை’ ஆனது. இப்படத்திலும் தாயும் மகளும் இணைந்தே நடித்தனர். ஒரு காலத்தில் தன் இனிய குரலால் அனைவரையும் மயங்கிக் கிறங்க வைத்தவர், தன் சொந்தக் குரலில் பாடி நடித்தவருக்கு ஒரு இரவல் குரல் பாடலும் அப்படத்தில் இடம் பெற்றது.
‘என்ன செய்தாலும்
எந்தன் துணை நீயே…
என் அன்னையே… உமையே….’
என்ற அப்பாடல் இப்போது கேட்டாலும் செவிகளை நிறைக்கும்; பாடியவர் (ராதா) ஜெயலட்சுமி.இரண்டு படங்களிலேயே உச்சத்துக்குச் சென்ற வசுந்தராதேவி தொடர்ந்து ஜொலிக்க முடியாமல் போனது அவருக்கு ஏற்பட்ட பெரும் இழப்புதான். கலையே வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஒருவருக்கு இப்படி இரண்டு படங்களுடன் திரை வாழ்வு முடிவுக்கு வந்தது பெரும் துயரம். ஒருவேளை, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் சிறைக்குச் செல்லாமல் திட்டமிட்டபடி ‘உதயணன் வாசவதத்தா’ படத்தில் அவருடன் நடித்திருந்தால் அப்படம் வெற்றி பெற்றிருக்கலாம்.
அது வசுந்தரா தேவிக்கும் மேலும் பல படங்களைக் கொடுத்து இன்னும் பெரிய உச்சத்துக்குக் கொண்டு போயிருக்கலாம்! ஆறு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் 500 படங்களில் நடித்ததற்கு இணையான பெயரையும் புகழையும் குறைந்த காலத்தில் அவர் பெற்றிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. 1988 ஆம் ஆண்டு செப்டம்பரில் உடல் நலக் குறைவால் மகள் வைஜெயந்தி வீட்டில் காலமானார் வசுந்தரா தேவி என்ற வேதவல்லி.
Average Rating