செல்லப்பிராணி வளர்க்க ஆசையா? (மருத்துவம்)
செல்லப்பிராணி வளர்ப்பு என்பது ஒரு நீண்ட கால பொறுப்பு. நாய்கள் மற்றும் பூனைகள் சராசரியாக 10 முதல் 15 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. இவ்வளவு வருடங்கள் உங்களால் அவற்றை பார்த்துக் கொள்ள முடியுமா? நாய், பூனை இரண்டுக்குமே அதிக கவனிப்பு தேவை. உங்கள் செல்லப்பிராணிக்காக உங்கள் நேரத்தை ஒதுக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் நாய், பூனை வளர்ப்பு உங்களுக்கு ஒத்து வராது.
அதற்கு பதில் குறுகிய ஆயுட்காலம் கொண்ட மீன்கள், பறவைகள் வளர்ப்பில் உங்கள் கவனத்தை செலுத்தலாம். அவற்றைப் பராமரிக்க குறைந்தநேரம் செலவழித்தாலே போதும் என்பதால் சுலபம். பொருளாதார நிலையை யோசிக்க வேண்டும். ஏனெனில் நாய், பூனை வளர்ப்பு செலவு மிகுந்தது. பிரத்யேக உணவு கொடுக்க வேண்டும்.
சில உயர்ரக ஊட்டச்சத்து உணவுகள் கொடுக்கும் செலவு, சீராக பராமரிக்கும் செலவு(Grooming), குழந்தைகளைப் போலவே அவ்வப்போது அட்டவணைப்படி தடுப்பூசிகள் போடும் செலவு, ஏதேனும் உடல்நிலை சரியில்லையென்றால் அடிக்கடி கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டிய செலவு என பல விஷயங்கள் உண்டு. இன்னும் மருத்துவரிடம் கூட்டிச் செல்ல போக்குவரத்து செலவு, மருந்து மாத்திரை செலவு என நிறைய பணம் செலவாகும்.
இந்த செலவுகளையெல்லாம் சந்திக்கத் தயார் என்றால் மட்டுமே செல்லப்பிராணி வளர்ப்பைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். உங்கள் வேலை கூட செல்லப்பிராணி வளர்ப்புக்கு ஒரு வகையில் தடையாக இருக்கலாம். நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்துவிட்டு, இரவு தாமதமாக வீட்டிற்கு வருபவராகவோ, அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் செய்பவராகவோ அல்லது சமூக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவராகவோ இருந்தால் உங்களால் உங்கள் செல்லப்பிராணியோடு நேரம் செலவழிக்க முடியாமல் போகும்.
நாய்கள், பூனைகளுடன் விளையாடுவது அவற்றை கொஞ்சுவது அவற்றோடு நிறைய நேரம் செலவிடுவது அவசியம். ஏனெனில், உரிமையாளரால் கவனிக்கப்படாமல் தனிமையில் விடப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, மூர்க்கத்தனமான நடத்தை சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என கால்நடை மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதனால் உங்களின் வாழ்க்கைமுறை செல்லப்பிராணிகள் வளர்ப்பிற்கு ஏற்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நாய்களிலும், பூனைகளிலும் ஏராளமான இனங்கள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த இனமாக இருந்தால் மட்டும் போதாது. சில வகை இனங்களின் குணநலன்கள் உங்களுக்கு ஒத்து வரக்கூடியதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, மிகப்பெரியதாகவும், மிகவும் மூர்க்கத்தனமாகவும் இருக்கும் அல்சேஷன் போன்ற நாய்களைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினம். இவற்றை திடகாத்திரமானவர்கள் அல்லது நாய் வளர்ப்பிற்கென்றே பிரத்யேகமாக வேலையாட்கள் வைத்திருக்கும் பணக்காரர்கள் மட்டுமே வளர்க்க முடியும்.
தத்தெடுக்கும் பிராணிகள் என்றால் அதன் வயது, அதன் முந்தைய உடல்நிலை மருத்துவ வரலாறு, தடுப்பூசிகள் போடப்பட்ட விவரம் போன்றவற்றை முந்தைய உரிமையாளரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு சான்றிதழ் ஒன்று கொடுப்பார்கள். அதை கேட்டுப் பெற வேண்டும். ஒரு நல்ல கால்நடை மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்ற பிறகே வாங்க வேண்டும். குறிப்பிட்ட இன நாயோ, பூனையோ அவற்றின் உணவுப் பழக்கம், தேவைப்படும் ஊட்டச்சத்து, பராமரிப்பு முறைகள் ஆகியவற்றைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
Average Rating