ஃபேஷன் A -Z !! (மகளிர் பக்கம்)
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா
அணிகலன்கள்… நகைகள் என்றாலே அவை பெண்களுக்கானது என்று ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தி விடுகிறோம். ஆனால் ஆண்களுக்கான நகைகள் மற்றும் அணிகலன்கள் உள்ளன என்பதை யாரும் ஏன் அவர்கள் கூட அதற்கு தனிப்பட்ட கவனம் செலத்துவதில்லை. இரு பாலர்களில் யாராக இருந்தாலும் ஒவ்வொரு ஆடைக்கு ஏற்ப அணியும் அணிகலன்கள் நாம் உடுத்தும் உடையினை மேலும் மேம்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
மேலும் ஆடைகளுக்கு ஒரு முழு உருவம் கொடுப்பதும் அணிகலன்கள்தான். ஃபேஷன் உலகில் மாற்றம் ஏற்படுவது போல், அணிகலன்களின் வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் அமைப்புகள் மாறுபடும். பொதுவாக புதிய ஒரு டிசைனை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் லேட்டஸ்ட் ஸ்டைல் நெக்லசினை பழைய டிசைன் ஆடைகளுக்கு அணியும் போது, அது ஒரு புதிய பரிணாமத்தை கொடுக்கும். அதே சமயம் நாம் வாங்கும் எந்த அணிகலன்களும் எந்த காலத்திற்கும் அணிய முடியும். இதனால் நாம் அந்தந்த காலத்திற்கு ஏற்ப நம்முடைய ஃபேஷனையும் மாற்றிக் கொள்ள முடியும். இந்த இதழில் ஆண்களுக்கான நகைகள் மற்றும் அணிகலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
பெரும்பாலான டிசைன்களில் ஆடைகளை உருவாக்க முடியும். ஆனால் அந்தந்த ஆடைக்கு ஏற்ப அணிகலன்கள் அமைப்பது என்பது சவாலான விஷயம். ஒவ்வொரு ஆடைகளுக்கு ஏற்ப அணிகலன்கள் என்பது அதை விட முக்கியம். ஆடைக்கு ஏற்ப அணிகலன்கள் அணியும் போது, தனிப்பட்ட ஒருவரின் விருப்பம், ஸ்டைல் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு அணிகலன்களும், நாம் அணியும் ஆடைக்கு பல வித தோற்றத்தினை ஏற்படுத்தி தருவது மட்டுமில்லாமல் உங்களின் தோற்றத்திற்கு எது நன்றாக இருக்கும் என்பதையும் தேர்வு செய்ய முடியும்.
உடைகள் உங்களின் கப்போர்டில் அதிக இடங்களை எடுத்துக் கொண்டாலும், அதற்கான அணிகலன்களுக்கு என தனிப்பட்ட இடங்களை ஒதுக்குவதும் அவசியம். காரணம் இவை தான் உங்களுக்கு முழு தோற்றத்தினை கொடுக்கும். சாதாரணமாக ஒரு கைப்பை, ஸ்கார்ஃப் அல்லது ஹெட் பாண்ட் தனியாக பார்க்கும் போது எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் அதையே நாம் அதற்கேற்ற உடைக்கு மாட்சிங்காக அணியும் போது ஒருவரின் தோற்றத்தினை பல மடங்கு அதிகரித்து காண்பிக்கும். தலை முதல் கால் வரை அணிகலன்கள் கொண்டு பல வித ஸ்டைல்களை உருவாக்க முடியும்.
அணிகலன்கள் உங்களின் உற்ற தோழி என்று தான் குறிப்பிட வேண்டும். கண்களை கவரும் அணிகலன்கள் ஒருவரின் ஸ்டைலினை மேலும் வலுவாக்கும். உங்களிடம் நிறைய உடைகள் இருக்கலாம். ஆனால் அந்த உடைகளை மேஜிக்காக மிளிர வைப்பது அதற்கு ஏற்ப அணிகலன்கள்தான். ஒரு பெண் அணிந்திருக்கும் அழகான உடையினை மட்டுமே நாம் பார்ப்பதில்லை, அதற்கு ஏற்ப அவள் அணியும் மேட்சிங் அணிகலன்கள் தான் நம் கண்களை முதலில் கவரும். ஒவ்வொரு அணிகலன்களில் உள்ள டிசைன்கள் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில், அணிகலன்கள் அனைத்தும் மிகவும் ஆடம்பரமாக கருதப்பட்டதால், பெரும்பாலான ஆண்கள் அதை வாங்கவே யோசித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இப்போது, அனைத்துமே அனைவரும் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கின்றன.
மிகவும் விலைஉயர்ந்த வாட்ச் அல்லது வைரக்கற்கள் பதித்த தங்க வளையல்கள் இருந்தாலும் அதற்கு ஈடாக அதே போன்ற வாட்ச் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட வளையல்களும் இப்போது விற்பனையில் உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் நீங்கள் விலைஉயர்ந்த நகைகள் அணிவது பெரியதல்ல… மாறாக மக்கள் தங்களை தனித்துவமாக எடுத்துக்காட்ட மற்றவர்களிடம் இல்லாத டிசைன் கொண்ட அணிகலன்களையே அணிய விரும்புகிறார்கள். இதன் மூலம் கூட்டத்தில் அவர்கள் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று விரும்புகிறார்கள். தரமான பொருட்கள் குறைந்த விலையில் அதே சமயம் ஃபேஷனாகவும் இருக்க வேண்டும் என்று தான் இன்றைய தலைமுறையினர் விரும்புகின்றனர்.
பெண்களைப் போலவே ஆண்களுக்கு பல்வேறு ஆடை அணிகலன்கள் உள்ளன. அவர்கள் அணியும் சாதாரண சட்டை மற்றும் பேன்டுக்கு இணையாக அணியக்கூடிய எதுவாக இருந்தாலும் அது அணிகலன்கள் தான். அதற்காக சட்டைக்கு மேல் அணியக்கூடிய ஜாக்கெட் அணிகலனா என்று கேட்டால் அது அணிகலன் கிடையாது. அது உங்கள் சட்டைப் போன்று அணியக்கூடிய ஒரு வித ஆடை. அணிகலன்கள் என்பது உங்கள் ஆடையுடன் சேர்ந்து அணியக்கூடிய தனித்துவமான பொருட்கள். இவை ஒருவரின் ஸ்டைல் மற்றும் உணர்வினை வெளிப்படுத்தக்கூடியவை.
மேலும் ஒருவரின் அணுகுமுறையும் பிரதிபலிக்கும். அதே சமயம் உடைக்கு ஏற்ப அணிகலன்கள் அணியாமல் அதை தவறாக அணியும் போது, அது உங்களின் தோற்றத்தினை முற்றிலும் தவறாக எடுத்துக்காட்டும். இது போன்ற தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால், ஒவ்வொரு உடை அணியும் போது அதற்கான அணிகலன்கள் மீதும் கவனம் செலுத்துவது அவசியம்.
நகை… தனிநபரின் விருப்பத்திற்கு ஏற்ப அணியக்கூடியவை. இது விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் உலோகங்களால் செய்யப்பட்டவை. நகை அணிந்திருந்தால், அவரின் தனிப்பட்ட சமூக அந்தஸ்தினை உணர்த்தும். இவை பல டிசைன்கள் மற்றும் வடிவங்களில் வருவதால் இதை மூன்று பாகமாக பிரித்துள்ளனர். பிரேஸ்லெட், மோதிரம் மற்றும் செயின். இவை மூன்றுமே சேர்ந்தும் அணியலாம் அல்லது தனியாகவும் அணியலாம்.
ஆண்கள் மிகவும் விரும்பி அணியக்கூடிய அணிகலன் பிரேஸ்லெட். எல்லாவிதமான நிகழ்வுகளுக்கும் அணியக்கூடிய அழகான மற்றும் கவர்ச்சிகரமான அணிகலன். இது ஒருவரின் ஸ்டைலை மேம்படுத்தும். மேலும் அவர்களுக்கு நிறைவான தோற்றத்தினை அளிக்கும். இதனை தனியாக அணியலாம் அல்லது மற்ற நகையான செயின், மோதிரத்தோடு சேர்த்தும் அணியலாம். பிரேஸ்லெட்டில் பல வகைகள் உள்ளன. சின்னச் சின்ன மணிகள் கொண்டு அமைக்கப்பட்ட பிரேஸ்லெட் மிகவும் பொதுவானவை. அதே சமயம் வளையம் மற்றும் செயின் வடிவில் உள்ள பிரேஸ்லெட்டினை தான் ஆண்கள் அணிய விரும்புகிறார்கள்.
பிரேஸ்லெட் அணியும் போது இருக்கும் தன்னம்பிக்கை விரல்களில் மோதிரம் அணியும் போது ஆண்களுக்கு இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்கள் திருமணத்திற்காக அணியும் மோதிரத்தை மட்டுமே தங்களின் விரலில் அணிய விரும்பினார்கள். விரல்களில் மோதிரம் அணிவதும் ஃபேஷன் என்று புரிந்து கொண்டு அதற்கேற்ப ஸ்டைலான மோதிரங்களை அணிய ஆரம்பித்துள்ளனர். வரும் காலத்தில் ஆண்கள் விரல்களில் மோதிரம் அணிவதும் ஒரு வித ஃபேஷனா மாறும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் பலர் மோதிரங்களை அணிய ஆரம்பித்தவுடன் அதைப் பார்த்து மற்றவர்களுக்கும் அணிய வேண்டும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும்.
கழுத்தில் செயில் அணிவது சாதாரணமாகிவிட்டது. ஆண்கள் செயினை அவர்களின் பிறந்தநாள் அல்லது திருமண பரிசாகவோ பெறுவது வழக்கம். சில சமயம் அவர்களின் அன்புக்குரியவர்கள் பரிசாக வழங்குவார்கள். கழுத்தில் தங்கம் அல்லது வெள்ளியில் செயின் அதில் ஒரு சின்ன டாலர் கொண்டு அணிவது வழக்கம். ஆனால் இப்போதுள்ள பெரும்பாலான ஆண்கள் டாலர் இல்லாத செயினை அணியவே விரும்புகிறார்கள்.அடுத்து மிகவும் முக்கியமான மற்றும் ஆண்கள் அனைவரும் விரும்புவது, வாட்ச். இது நேரம் பார்க்க உதவினாலும், மணிக்கட்டில் அணியும் போது, சரியாக பொருந்த வேண்டும். மெட்டல், லெதர் ஸ்ட்ராப் என இரண்டு வடிவங்களில், பல அம்சங்கள் கொண்ட வாட்ச்கள் உள்ளன. நேரம் மட்டுமில்லாமல் ஒருவரின் ஃபிட்னெஸ் குறித்த அப்டேட் அளிக்கவும் வாட்ச்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வெயில் காலத்தில் பெரும்பாலான ஆண்கள் கண்களில் கண்ணாடி அணிந்திருப்பதை பார்க்கலாம். டுவீலர் மற்றும் கார் ஓட்டுபவர்கள் கண்களில் கூலர்ஸ் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது ஒருவரின் தோற்றத்தையே மாற்றிவிடும். அணியாதவர்கள் கூட ஒருமுறை அணிந்துவிட்டால் அவர்களால் அதனை அணியாமல் இருக்க முடியாது. கைப்பை… இது இல்லாமல் ஆண்களால் இருக்க முடியாது. பத்து வருடங்களுக்கு முன்பு பணம் மட்டுமே வைக்க பயன்படுத்தி வந்தனர். தற்போது எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், பணத்தை விட அதிகமா ஏடிஎம் கார்டுகள் மற்றும் இதர அடையாள அட்டைகளை வைக்க மிகவும் பயனுள்ளதாக கைப்பை உள்ளது.
பேன்டுடன் இணைந்து அணிவதுதான் பெல்ட். வேலைக்கு செல்லும் அனைத்து ஆண்களும் இதனை கண்டிப்பாக அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது பேன்ட் இடுப்பில் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்கும் அதைத்தாங்கி பிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆண்களின் ஃபேஷன் வரிசையில் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பது பெல்ட்.
கழுத்தில் அணியக்கூடிய டை மற்றும் போ வகைகள். அலுவலகம் செல்லும் ஆண்கள் அணிவது டை. மாலை மற்றும் இரவு நேர பார்ட்டிகளுக்கு சென்றால் போ அணியலாம். டை கிளிப் மற்றும் கப்லிங்ஸ் எல்லாரும் அணிவதில்லை. ஜென்டில்மேன் தோற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே இதனை அணிய விரும்புவார்கள். பாக்கெட் ஸ்கொயர்… அதாவது சூட் பாக்கெட்டில் வைக்கக்கூடிய கர்ச்சீப் வகைகள். இது சூட் உடைக்கும் ஒரு முழுமையான தோற்றத்தினை அளிக்கும்.
அணிகலன் அணியும் போது மூன்று முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்
* எளிமையை கடைபிடியுங்கள்: அணிகலன்கள் இருக்கிறது என்று எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு விரல்களிலும் நான்கு மோதிரம், தொப்பி, வாட்ச் மற்றும் நான்கு பிரேஸ்லெட்கள் இரண்டு கைகளில் போட்டுக் கொண்டால் மற்றவர்கள் உங்களைப் பார்க்கும் போது முகம் சுளிக்க தோன்றும்.
* மூன்று முக்கிய நிறங்களை கவனத்தில் கொள்ளுங்கள்: எந்த உடையாக இருந்தாலும் அதில் மூன்று நிறங்கள் மட்டுமே பிரதானமாக இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான நிறங்கள் கொண்ட உடைகள் மற்றும் அணிகலன்கள் பார்ப்பவர் கண்களை கூசச் செய்யும்.
* ஆடைக்கு ஏற்ற ஆபரணங்கள்: உடற்பயிற்சி செய்யும் போது அணியும் பேன்ட் டீஷர்ட்டுக்கு பெல்ட் மற்றும் டை அணிந்தால் எப்படி பொருந்தாதோ, அதே போல் தான் நீங்கள் அணியும் ஒவ்வொரு உடை மற்றும் ஆபரணங்கள் மேல் கவனம் கொள்வது அவசியம். பொது அறிவு மற்றும் கண்ணாடி முன் உங்களின் தோற்றத்தை ஒரு முறை பாருங்கள். ஆடை மற்றும் அதற்கு ஏற்ற ஆபரணங்கள் சரியாக உள்ளதா என்று உங்களுக்கே புரியும்.
* பல ஆண்களுக்கு தாங்கள் பார்க்க ஸ்டைலாகவும் அதே சமயம் கிளாசியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதில் எந்த தவறும் இல்லை. சாதாரண மற்றும் அலுவலக ஆடைகளுக்கு ஏற்ற அணிகலன்கள் அணிவது சரி. ஆனால் பலருக்கு அணிகலன்கள் தான் ஒரு உடையினை மேலும் எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவதில்லை. நம்முடைய தனித்துவம் என்ன என்பதை வெளிப்படுத்துவது அணிகலன்கள். நீங்கள் தினமும் அணியக்கூடிய அணிகலன்கள் எந்த வகை மற்றும் என்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை மிகவும் கவனமாக தேர்வு செய்வது அவசியம். உடைக்கு ஏற்ப அணிகலன்களை அணியும் போது கிடைக்கும் நன்மைகள்
* உங்களின் தன்னம்பிக்கை அதிகமாகும்: அழகான அணிகலன்கள் அணிந்து அலுவலகமோ அல்லது கல்லூரிக்கோ செல்லும் போது, உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும்.
* உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் யார் என்பதை உணர்த்தும்: எல்லாரும் எல்லாமுமே அணிய விரும்ப மாட்டார்கள். சிலர் கையில் பிரேஸ்லெட் மட்டுமே அணிவார்கள். சிலர் அணியும் ஒவ்வொரு அணிகலனும் அவரின் அடையாளமாக மாறும். நீங்கள் அணியும் ஆபரணங்கள் உங்களை மற்றவர்களிடம் இருந்து தனித்து எடுத்துக்காட்டும்.
* தொழிலில் வெற்றி: நீங்கள் அணியும் அணிகலன்கள் உங்களை மற்றவர்கள் என்றும் நினைவில் கொள்ளும்படி வைத்துக் கொள்ளும். இதன் மூலம் உங்கள் தொழில் முன்னேறவும், நேர்மறை எண்ணங்கள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம்.
* மேம்பட்ட வாழ்க்கை: நீங்கள் எப்போதும் உயர்வாக கருதப்படும் போது அந்த எண்ணம் உங்களின் வாழ்க்கை தரத்தை மேன்மேலும் உயர்த்தும்.
* பாராட்டுகள்: பாராட்டுகளை யார் தான் விரும்ப மாட்டார்கள். ஒருவர் உங்களின் தோற்றத்தை பாராட்டும் போது அது அவர்களின் மனதில் சந்தோஷத்தையும் மேலும் பாராட்டுகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டும்.
Average Rating