முதலுதவி முக்கியம்!! (மருத்துவம்)
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சைகள் உடனடித்தேவை. இதை டாக்டர்கள் தான் செய்யவேண்டும் என்றில்லை. நீங்களே கற்றுக்கொண்டால் முதலுதவி சிகிச்சைகளை சுலபமாகச் செய்யலாம். இந்த உதவி, பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடையப் பேருதவியாக இருக்கும். காயம் அடைந்தவருக்கு என்ன பிரச்சனை என்பது தெரியாவிட்டால் உதவ முடியாது. எனவே முதலில் பாதிக்கப்பட்டவரிடம் என்ன நடந்தது. அவருக்கு என்ன செய்கிறது எனபதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் அவரால் பதில் சொல்ல முடியவில்லை என்றால் உங்கள் கண்களையும் கைகளையும் பயன்படுத்தி காயத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.
கன்றிப்போகுதல், சுளுக்கு
தோல் கன்றிப் போவதாலும் சுளுக்கு பிடிப்பதாலும் ஆபத்தில்லை என்றாலும் வலி தாங்க முடியாத அளவு இருக்கும். வீக்கமும் உண்டாகும்.
என்னசெய்ய வேண்டும்.
ஒரு பாலிதீன் பையில் ஐஸ் கட்டிகளை நிரப்பி அதில் கொஞ்சம் உப்பையும் கலந்து பையைக் கட்டிவிடவும் இதை ஒரு துணியில் பொதிந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வைத்து நீவி விடவும். இது வீக்கத்தைக் குறைப்பதோடு வலியையும் போக்கும்.
உடையில் தீ
கவனக் குறைவால் சில சமயங்களில் உடைகளில் தீப்பிடிக்க நேரும். இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
என்னசெய்ய வேண்டும்
பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தரையில் படுக்கவையுங்கள். ஆடை எரிந்துகொண்டும் இருக்கும் இடத்தில் தண்ணீரை ஊற்றுங்கள். தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் ஒரு கனமான போர்வையால் பாதிக்கப்பட்டவரைப் போர்த்தி நெருப்பை அணைக்கவும். உடனடியாக டாக்டரிம் அழைத்துச் செல்லவும்.
சிறிய வெட்டு காயம் மற்றும் சிராய்ப்பு
சிறிய வெட்டுக் காயத்தாலோ சிராய்ப்பிலோ உண்டாகும் ரத்தக்கசிவு தானாகவே நின்றுவிடும்.
என்னசெய்ய வேண்டும்
ஆன்டிபயாடிக் கரைசலில் பஞ்சை நனைத்து வெட்டுக்காயத்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு கட்டுப்போடவும்.
ஆழமான பெரிய வெட்டு, பெரிய காயம்
ஆழமான வெட்டாக இருந்தால் வினாடி தாமதமும் இல்லாமல் உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.
என்னசெய்ய வேண்டும்
சுத்தமான துணியை மடித்து காயத்தின் மேல் வைத்து அழுத்தவும் ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை என்றால் இன்னொரு துணி எடுத்து மடித்து முதல் துணியின் மேலேயே வைத்து அழுத்தவும் ரத்தம் வருவது நின்றதும் அங்கே பேண்டேஜ் போட்டு டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
எலும்பு முறிவு
எலும்பு முறிந்துவிட்டால் கடுமையான வலி இருக்கும். பாதிக்கப்பட்ட உறுப்பு அசையாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.
என்னசெய்ய வேண்டும்
எலும்பு உடைந்த கை காலை நிமிர்த்தி வைத்து கட்டுப்போடுங்கள். அவருக்கு குளிராமல் இருப்பதற்காக ஒரு போர்வையால் அவரைப் போர்த்தி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
முதலுதவி கொடுக்கும் போது பரபரப்பு அடையாமல் நிதானமாக இருங்கள். நிலைமையை உங்களால் கையாள முடியாது என்று தோன்றினால் டாக்டரையோ ஆம்புலன்ஸையோ அழைக்கத் தயங்காதீர்கள்.
Average Rating