எட்டு வயதில் எழுத்துருக்களை அடையாளப்படுத்தி உலக சாதனை! (மகளிர் பக்கம்)
எட்டு வயதாகும் மாணவி சனாஸ்ரீ ஆங்கில எழுத்துருக்களை (Word Fonts) அதிகமுறை அடையாளம் கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் 68 எழுத்துருக்களை (Word Fonts) அடையாளம் கண்டு சனா புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார். இது தவிர, உலக நாடுகளின் தேசியக் கொடியையும் தேசிய விலங்கையும் 4 நிமிடங்கள் 25 வினாடிகளில் அதி வேகத்தில் அடையாளப்படுத்திய குழந்தை என ஆசிய புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் வசித்து வரும் சனா, நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை சமயமுரளி கூடுதல் ஆணையராக (சுங்கத்துறை) பணியாற்றி வருகிறார். இவரது தாய் பிரவீணா சமயமுரளி, சனாவின் சாதனை குறித்து பகிர்கிறார் “சனா ஒரு வயதிற்குள் எழுத்துக்களை கண்டுபிடித்துவிடுவாள். ஆனால் அப்போது அதை நாங்கள் சரியாக ஆவணப்படுத்தாமல் விட்டு விட்டோம். மேலும் எங்களுக்கு இது எல்லாம் சாதனை பட்டியலில் இடம் பெறும் என்றும் தெரியவில்லை.
அவள் அடையாளம் காணும் போது, நம்ம குழந்தை திறமைசாலி என்று நாங்க எங்களுக்குள் சந்தோஷப்பட்டுக் கொள்வோமே தவிர அதை சாதனைக்காக செய்யலாம் என்று அப்போது தெரியாது. ஆனால் இன்று தொலைக்காட்சியிலும் பத்திரி கைகளிலும் எட்டு மாதக் குழந்தைகள்
கூட உலக சாதனை படைப்பது குறித்து செய்தியினைப் படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
அப்போது தான் சனாவின் திறமையையும் ஏன் உலகிற்கு காட்டக் கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. 2020ம் ஆண்டு முதலில் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸை அணுகினோம். அப்போது சனா மிக வேகமாக உலக நாடுகளின் அனைத்து தேசியக் கொடிகளையும் விலங்குகளையும் அடையாளப்படுத்தி சாதனை படைத்தாள். அந்த சின்ன வயசில் இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைச்ச போது சனாவின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
அன்று முதல் சனாவிற்கு மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. எனவே ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையை அடுத்து வேறு என்ன இருக்கிறது என ஆராய்ந்த போது, சனா கின்னஸ் உலக சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதை உணர்ந்தோம்” என்கிறார். ‘‘நாங்கள் சனாவை என்றுமே பயிற்சி செய்யச் சொல்லி வற்புறுத்தியது கிடையாது.
குழந்தையாகவே விரும்பித்தான் இதையெல்லாம் செய்து வருகிறாள். அவளுக்கு பெற்றோர்களாக நாங்கள் ஆதரவு மட்டுமே கொடுக்கிறோம். கின்னஸ் உலக சாதனைக்கு அடுத்து இன்னும் டென்னிஸ் விளையாடுவதில் ஆர்வம் அதிகம். மூன்று வயதிலிருந்து டென்னிஸ் ரெக்கடெட்டுடன் தான் இருப்பாள். அவள் இப்போது டென்னிஸ் பயிற்சியில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறாள்.
இது தவிர படிப்பிலும் செம சுட்டி. இசையிலும் ஆர்வம் இருக்கிறது. எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று கேட்டால், ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஆசையைக் கூறுகிறாள். அவள் பார்த்ததில் படித்ததிலிருந்து ஒரு நாள் ஆசிரியர் என்பாள், அடுத்து டாக்டர் என்பாள், அடுத்த நாள் அன்னை தெரசா
போல சேவையில் ஈடுபடவேண்டும் என்பாள். துறுதுறுவென இருப்பதால் பார்ப்பது அனைத்துமே அவளை ஈர்க்கிறது” என்கிறார் சனாவின் தாய் பிரவீணா.
சனாவைப் போலவே அவரது தங்கை சரா யும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளார். நான்கு வயதில், ஐம்பது விளையாட்டுகளை ஒரே நிமிடத்தில் அடையாளப்படுத்தி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை சகோதரிகள் மேலும் பல சாதனைகள் படைத்து பெருமைச் சேர்க்க வாழ்த்துகிறோம்.
Average Rating