திருமணத்திற்கு முன் மேக்கப் ட்ரையல் அவசியமா? (மகளிர் பக்கம்)
“ஒருவருக்கு மேக்கப் போடும் முன் அவரது ஸ்கின் டைப் தெரியாமல் ஸ்கின் கேர் கொடுப்பது ரொம்பவே தப்பு. அதனால் தான் நிறைய பேருக்கு அலர்ஜி வருகிறது” என்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளனியும், மேக்கப் கலைஞருமான கிரிஜாஸ்ரீ . ‘‘பத்து ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளனி. ஊடகம் என்றாலே ‘வீட்டை விட்டு ஓடிப் போனு’ சொல்ற அளவுக்கு வீட்டில் கட்டுப்பாடுகள். அதை எல்லாம் தாண்டி ஊடகத்திற்குள் நுழைந்தேன். நாட்கள் நகர, வருடங்கள் கடக்க வீட்டிலிருப்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. நான் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் ஒரு சாதாரண பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்துதான் தொகுப்பாளருக்கான இன்டர்வியூக்கு போனேன்.
மீடியாவைப் பற்றி எனக்கு ெதரிந்தது அவ்வளவுதான். ஸ்கிரீன் முழுக்க தோன்றப் போகும் தொகுப்பாளர் நேர்காணலுக்கு முழுப் புகைப்படம்தான் கொடுக்கணும்னு கூட எனக்கு அப்ப தெரியல” என்கிற கிரிஜாஸ்ரீ , மேக்கப் துறைக்கு வந்ததற்கான காரணங்களை பகிர்ந்தார்.“சிறு வயதிலிருந்தே மேக்கப் என்றால் அவ்வளவு பைத்தியம். வீட்டில் அம்மாகிட்ட கூட தலை வார மாட்டேன். பக்கத்து வீட்டு காஞ்சனா அக்காதான் என்னுடைய மேக்கப் ஸ்டைலிஸ்ட்.
மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தாலும் சரி, விடுமுறை நாட்களிலும் சரி அக்கா வீட்டில்தான் இருப்பேன். அவங்களும் எனக்கு ரொம்பவே பாசமா அலங்காரம் செய்துவிடுவாங்க. அவங்க செய்யும் அலங்காரத்தை பார்த்து பார்த்து எனக்கு மேக்கப் மீது ஆர்வம் அதிகமானது. 12ம் வகுப்பு பாதியிலேயே நிறுத்தின போது, வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், அழகுக் கலைக்கான பயிற்சி படிக்க வீட்டில் அனுமதி கேட்டேன்.
‘மேக்கப்னா பலரை தொட்டு செய்யணும். அப்படிப்பட்ட படிப்பு படிச்சிட்டு நீ வேலை பார்க்க வேண்டாம்’ன்னு சொல்லி என்னுடைய விருப்பத்திற்கு முட்டுக்கட்டை போட்டாங்க. வீட்டின் ஒரே செல்லப்பிள்ளை நான். எங்க வீட்டில் ஜாதி, மதம் எல்லாம் ரொம்பவே பார்ப்பாங்க. அம்மா கிராமத்தில் வளர்ந்ததால், அங்க நிறைய கட்டுப்பாடுகள் அதிகம். அங்கு மற்ற ஜாதியினரை தொட்டு பேசக்கூடாது. அந்த சூழலில் வளர்ந்தவங்களுக்கு நகர வாழ்க்கையோ அல்லது இங்கிருக்கும் மற்ற விஷயங்கள் பற்றி தெரியல. ‘நம்ம ஜாதியில உள்ளவங்க மத்த ஜாதியினர் மேல் கை வைக்கலாமா?’ ன்னு அவங்க வளர்ந்த சூழலிலேயே என்னையும் பார்த்தாங்க.
இப்ப தான் கொஞ்சம் மாறி இருக்காங்க. நான் ஊடகத்திற்கு வந்த பிறகு அவங்க என் கூட வெளியே வரும் போது, மாறி இருக்கும் சூழலை புரிஞ்சிக்கிட்டாங்க. அவங்களும் மாற்றம் ஏற்பட்டு இருக்குன்னு சொன்னாங்க. அது என்னுடைய திருமணத்தில் பிரதிபலிப்பாகி இருக்குன்னா பாருங்க. காரணம் என்னுடையது கலப்பு திருமணம். மேலும் மேக்கப்பிற்கு உண்டான அவர்கள் பார்வை, விஷயங்கள் எல்லாம் மாறிவிட்டது. காலங்கள் மாற மாற மேக்கப் என்பதும் ஒரு புரொஃபஷ்னல் தொழில்னு புரிந்து கொண்டார்கள். படிப்பதற்கு ஏற்ற வருமானம் வீட்டில் இல்லை. அதனால் தான் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வீட்டுச் சூழலைப் புரிந்து கொண்டு தான் நான் நிகழ்ச்சி தொகுப்பாளனியாக சேர்ந்தேன். கையில் காசு வந்தது. ஆனால் அந்த சமயத்தில் படிக்கலாம் என்கிற ஆர்வம் இருந்தாலும், அதற்கான நேரம் இல்லை. அதனால் வேலையை விட்டுவிட்டு மும்பை சென்று காஸ்மெட்டாலஜி மற்றும் அழகுக் கலை குறித்து படித்தேன்.
அழகுக் கலை, பார்லர் சம்பந்தமான கோர்ஸ். காஸ்மெட்டாலஜி, சருமம் மற்றும் அதன் சார்ந்த தலைமுடி, நகம் குறித்த மருத்துவம் சார்ந்த படிப்பு. அதாவது சருமத்தில் ஏற்படும் பிரச்னைகள், அதனை மருத்துவ ரீதியாக எப்படி சீர் செய்யலாம் என்று பார்க்கணும். இன்னும் சொல்ல போனால் சரும மருத்துவர்களுக்கு எந்த அளவு இது குறித்த விவரங்கள் தெரியுமோ அதே போல் நாங்களும் தெரிந்திருக்கணும். அதே சமயம் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் ஊசிகள், மருந்து, மாத்திரைகள் எல்லாம் நாங்க கொடுக்கக்கூடாது. காஸ்மெட்டாலஜி குறித்து லண்டனில் சிறப்பு படிப்பு இருக்கு. அது தான் உலகிலேயே மிகப் பெரிய சான்றிதழ் சார்ந்த படிப்பு. அதிலும் நான் தேர்ச்சி பெற்றுவிட்டேன்” என்கிற கிரிஜாஸ்ரீ, மேக்கப் செய்வதோடு அதை மற்றவர்களுக்கும் ஆன்லைன் வழியாகவும் சொல்லிக் கொடுத்து வருகிறார். ‘REDHA’ என்கிற பெயரில் யூ டியூபிலும் மேக்கப் குறித்து சந்தேகங்களுக்கு பதிலும் அளிக்கிறார்.
‘‘திருமணங்களுக்கான மேக்கப் செய்யும் போது பலர் தங்களின் மேக்கப்பால் மணப்பெண்ணை முற்றிலும் மாற்றி இருப்பார்கள். நான் அப்படி செய்ய மாட்டேன். அதிதமாக மேக்கப் இல்லாமல் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அவர்களை அப்படியே காண்பிப்பது தான் என்னுடைய ஸ்டைல். அவர்களின் கண்களை மட்டுமே தான் ஹைலைட் செய்வேன். நிறைய பேர் மாநிறமாக இருக்கும் பெண்களை அப்படியே வெள்ளை வெளேர்ன்னு காண்பிக்க அதிகமா மேக்கப் போட்டு விடுவாங்க. என்ன தான் கருப்பாக இருக்கும் பெண்ணை வெள்ளையாக காண்பித்தாலும் அதிகபட்சம் ஒரு மணி நேரம் இருக்கலாம். நேரம் போகப் போக அவர்கள் சாம்பல் நிறத்திற்கு மாறிடுவாங்க. தனக்கு தெரியும் எல்லா டெக்னிக்கும் காட்டாமல் அந்த பெண்ணின் உண்மையான அழகை எடுத்துக் காட்டுவது தான் முழுமையான மேக்கப்.
திருமணங்களுக்கு மணப்பெண் மட்டுமில்லாமல் மணமகனுக்கும் மேக்கப் செய்கிறோம். ஆனால் மணப்பெண்ணைதான் எல்லாரும் பார்ப்பார்கள் என்பதால் அவர்கள் அந்த நாள் முழுக்க அழகாக இருக்க முன்கூட்டியே ட்ரையல் மேக்கப் செய்து பார்க்கலாம். அப்படி செய்யும் போது, அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் கிரீம்கள் நம்முடைய சருமத்திற்கு சரியா இருக்கிறதா இல்லை அலர்ஜி ஏற்படுத்துகிறதான்னு தெரிந்து கொள்ளலாம். காரணம் ஒரு சில பிராண்ட்களில் உள்ள மூலப்பொருட்கள் நம்முடைய சருமத்தை பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் திருமணத்திற்கு பத்து நாட்கள் முன் ஒரு முறை மேக்கப் செய்து பார்த்துக் கொள்வது நல்லது.
இது ஒரு மணப்பெண்ணை தாண்டி மேக்கப் ஆர்டிஸ்ட்டுக்கு தெரிந்திருக்க வேண்டும். எந்த ஸ்கின் டோனுக்கு என்ன ஷேட் சரியா இருக்கும் என்று தெரிய வேண்டும். முகம் கழுவி இருந்தாலும் மேக்கப் உட்காரும் போது அவங்க சருமத்தினை ஆய்வு செய்து சருமத்திற்கு ஏற்ற அழகுக்கலைப் பொருட்களை பயன்படுத்தணும். க்ளன்சிங், மாய்ஸ்ரேசிங், சீரம், சன்பிளாக் என இது எல்லாம் ப்ரைமராக போட்டுதான் மேக்கப் ஆரம்பிக்கணும். எந்த வித சரும பாதுகாப்பு கொடுக்காமல் நேரடியாக மேக்கப்போடக் கூடாது.
இந்த கொரோனா நேரத்தில்தான் சானிடைசர் பண்றாங்க. மேக்கப் துறையில் இருப்பவர்கள் எப்போதுமே அவர்கள் பயன்படுத்துகிற எல்லா பொருட்களுமே சானிடைஸ் பண்ணுவது ரொம்ப ரொம்ப முக்கியம். இது அடிப்படை. இது யாரும் செய்வது கிடையாது. மக்களுக்கு அந்த விழிப்புணர்வு நாம் தான் கொடுக்க வேண்டும். அதே போல் மாஸ்க் கூட நாங்கள் படிக்கும் போதே போடச் சொல்லி கொடுத்தார்கள்.
என்னதான் நாம் சுத்தமாக இருந்தாலும் ஒரு சிலர் நம் மூச்சுக்காற்று அவர்கள் மேல் படுவதை விரும்ப மாட்டார்கள். அதற்காக கொஞ்சம் தள்ளி நின்று போட வேண்டும். சிலர் பவுடர்கள், ஐ ஷேடோ எல்லாம் எடுக்கும் போது, அதிகமாக இருந்தால் வாயால் ஊதுவார்கள். இதெல்லாம் பண்ணவே பண்ணக் கூடாது. பிரஷால்தான் செய்ய வேண்டும். சின்ன அழகு நிலையத்தில் பொதுவாக ஒரிஜினல் பிராண்ட் போட மாட்டார்கள். இதனால் பின் விளைவுகளும் ஏற்படும் என்பதை யோசிக்கணும். பிராண்டில் எப்போதும் காம்ப்ரமைஸ் பண்ணவே கூடாது” என்கிறார் மேக்கப் கலைஞர் கிரிஜாஸ்ரீ .
Average Rating