மேக்கப் பாக்ஸ் ஐலைனர்!! (மகளிர் பக்கம்)
மேக்கப் செய்துகொள்ள விரும்பாத பெண்கள் கிடையாது. சிலர் எளிமையாக செய்து கொள்ள விரும்புவார்கள். சிலர் காலை முதல் மாலை வரை எப்போதும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக தங்களின் மேக்கப் கலையாமல் பார்த்துக் கொள்வார்கள். மேக்கப்பை பொறுத்தவரை பல வகைகள் உள்ளன. திருமணம், அலுவலகம், பார்ட்டி, கேஷ்வல் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்திற்கும் மேக்கப் போடும் முறை முதல் அதற்கு பயன்படும் மேக்கப் சாதனங்கள் எல்லாம் மாறுபடும். சிம்பிளான மேக்கப் என்றால் ஃபவுண்டேஷன், கண் மை, ஐலனர், லிப்ஸ்டிக்… அவ்வளவுதான். இதில் ஒவ்வொன்றும் அணிவது என்பது தனிப்பட்ட கலை.
அது மட்டுமில்லாமல் மேக்கப் சாதனங்களில் நாளுக்கு ஒரு வண்ணம் புதுப்புது பிராண்டுகள் மற்றும் அப்டேட்டுகள் மாறிக்கொண்டு இருக்கின்றன. இதில் எந்த மேக்கப் எப்படி போடலாம் அதில் உள்ள நுணுக்கங்கள் என்ன என்பதை தோழியர் உங்களுக்காகவே விளக்க வருகிறது ‘மேக்கப் பாக்ஸ்’ பகுதி. ஒவ்வொரு இதழிலும் குறிப்பிட்ட மேக்கப் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். மேக்கப்பில் மிகவும் முக்கியமானது கண் இமைகளுக்கு மேல் தீட்டப்படும் ஐலைனர். இது கண்களை எடுப்பாகவும், பளிச்சென்றும் எடுத்துக்காட்டும். கருப்பு மட்டுமில்லாமல் பல வண்ணங்களில் வரும் ஐலைனரை எவ்வாறு பயன்படுத்துவது, டிப்ஸ் பற்றி விளக்குகிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் நவ்ஷின்னிசா.
‘‘ஐலைனரில் மட்டுமல்ல ஐலைனர் வரைவதிலும் ஏகப்பட்ட வகைகள் உண்டு. ஐலைனர்கள் ஆரம்பத்தில் வந்தது கண்மை அல்லது காஜல். தொடர்ந்து இதில் லிக்விட் ஐலைனர், வாட்டர் புரூஃப் ஐலைனர், புரபஷனல் மேட் லிக்விட், புரபஷனல் மேட் இன்க், ஜெல் ஐலைனர், ஜெல் கிரையான், டாட்டு லைனர், ஐலைனர் பென்சில், ஆல் டே லிக்விட், ஐலைனர் பேனா, ஸ்மோக்கி லைனர், ஃபிளை லைனர், கலர் ஐலைனர்கள், ஹெச்.டி லைனர் இப்படி நிறைய லைனர்கள் உண்டு. ஒவ்வொரு வகைகளும் ஒவ்வொரு விதமான லுக் மட்டுமல்ல சீரான ஸ்டைலும் கொடுக்கும். உதாரணத்திற்கு சிலருக்கு ஐலைனர் போட்டு அது காயும் வரை பொறுமையே இல்லாமல் டக்கென இமைகளை திறந்து விடுவார்கள்.
அவர்களுக்கென பிரத்யேகமாக வந்தவைதான் டாட்டூ ஐலைனர். வரைந்த விநாடிப் பொழுதில் டக்கென காய்ந்துவிடும். அதேபோல் ஃபிளை லைனர்கள், ஐலைன் வரையவே தெரியாது. எப்படி முயற்சி செய்தாலும் இஷ்டத்துக்கு இழுத்துட்டு போயிடுது என்னும் பேர்வழிகள் பயன்படுத்தலாம். ஒரு ஸ்ட்ரோக் கஷ்டப்பட்டு இழுக்கக்கூட வேண்டியதில்லை, கண்களின் மேலும் எப்படி வரைந்தாலும் அதன் முனையின் அமைப்பு வடிவம் கொடுத்து விடும். கைநடுக்கம் உள்ள பெண்களும் இந்த ஃபிளை லைனர், ஜெல் லைனர்களை பயன்படுத்தலாம். நாம வரையறதுதான் லைனர். ஒரே ரூல் உங்க கண்களுக்கு எது சரியோ அதை வரைவது நல்லது.
இந்தியாவைப் பொறுத்தவரை கண்கள் மூன்று வடிவங்கள்தான். பாதாம் வடிவம், உருண்டையான கண்கள், சின்னக் கண்கள். பாதாம் வடிவ கண்களுக்கு என்ன ஸ்டைலும் எப்படி வேணும்னாலும் ஐலைனர்கள்ல விளையாடலாம். மத்த கண்களுக்குதான் சில ஸ்டைல் பயன்படுத்த முடியாது” என்னும் நவ் ஷின்னிசா என்னென்ன வடிவங்களில் ஐலைனர்கள் வரையலாம் என பகிர்ந்தார்.
* கிராபிக் ஆரோ ஐலைனர்
அப்படியே கண்கள் மேல் பக்கத்தில் ஒரு புறாவின் அலகு போல் வரைவது. இதை பெரும்பாலும் பெரிய கண்கள், இமைகள் உள்ளோர் முயற்சி செய்யலாம்.
* ஃபிஷ்டெயில் லைனர் (மீன் வால் லைனர்)
மேல் இமை கீழ் இமை இரண்டும் கண்களுக்கு வெளியே ஒட்டாமல் மீன் வால் போல் விரியும். எகிப்தியப் பெண்கள் குறிப்பாக கிளியோபாட்ரா கால ஸ்டைல் லைனிங்
* நேச்சுரல் லைனர்
எல்லோருக்குமான சாதாரண ஐலைனிங், யாரும் எப்படியும் போட்டுக்கொள்ளலாம்.
* திக் விங்
60களின் ஹாலிவுட் அல்லது பாலிவுட் ஸ்டார் நடிகைகளின் கண்கள் போல் மாற்றிவிடும். ஜெல் ஐலைனர்கள்ல இந்த லுக் சீராக கிடைக்கும்.
* ஆல் அரௌண்ட் விங்
முழு கண்களையும் கவர் செய்து வெளியே றெக்கை போல் இழுக்கும் முறை. கண்கள் பெரிசா பளிச்சென தெரியும். இதில் டபுள் விங், மேல்-கீழ் என றெக்கை வடிவங்கள் கொடுக்கலாம்.
* ஃபிளோட்டிங் லைனர்
கண்களின் ஓரத்தில் சின்னதாக மட்டும் இழுத்து கண்களின் லைனுக்கு மேலே ஒரு லைன் தனியாக வரைந்து கொள்வது.
* லாங் லைன்
பழங்கால முறை அல்லது வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு கண்களின் ஓரத்தில் கண்மை இழுத்து விடுவது போல் நீளமாக கோடு போட்டுக்கொள்வது.
* ரிவர்ஸ் விங்
கண்களுக்கு அடியில் மட்டும் லைனரை றெக்கை போல் இழுத்துவிட்டு மேல் இமையை அப்படியே விட்டு விடுவது.
* ஸ்மோக்கி லைனர்
கண்கள் மேல் பகுதி முழுக்க பரவியது போல் லைனர் போட்டுக்கொள்வது. இந்த லுக்கில் கருப்பு அல்லது கிரே நிற ஐஷேடோக்களும் பயன்படுத்துவதுண்டு.
இவை மட்டுமின்றி ப்ளூ லைன், கிரீன் லைன், பிளாக் & ஒயிட் லைன், டபுள் கலர் லைன், டிரிபிள் ஷேட் லைன் இப்படி நிறைய லைன் லுக்குகள் உள்ளன. இதில் கண்களைச் சுற்றி கருவளையம் அதிகமாக இருப்போர் அல்லது கண்களே குழிக் கண்களாக இருப்போர் முடிந்தவரை ஸ்மோக்கி ஐலைனர்கள் அல்லது ஸ்மட்ஜ் எனப்படும் பரவும் தன்மையுடைய ஐலைனர்களை பயன்படுத்த கூடாது. இது அவர்களின் கண்களை மேலும் கருப்பாக காட்டிவிடும்.
கண்கள் சின்னதாக இருப்போர் ஐலைனர்களில் நிறைய வகைகளை முயற்சிக்கலாம். பெரிய கண்கள் உள்ளவர்களுக்கு நேச்சுரல் லுக் லைனர் ஸ்டைலே கச்சிதமாக பொருந்தும். பெரிய கண்களில் மேற்கொண்டு லைனர் வேலை அதிகம் செய்தால் பரதம் ஆடுவோர் அல்லது டான்ஸர் லுக் கொடுத்து ரொம்ப டிராமா ஸ்டைல் போலாகிவிடும். இதனால் இவர்கள் தங்களின் கண்களை எடுத்துக்காட்ட மெல்லிய இழையை இமை மேல் வரைந்தாலே அழகாக இருக்கும்.
எந்த மேக்கப் லைனர்கள் பயன்படுத்தினாலும் இரவு படுக்கும் முன் மேக்கப்பினை கலைப்பது போல் இதனையும் கலைத்திடவேண்டும். இதை நீக்க தகுந்த மேக்கப் ரிமூவர் பயன்பாடு அவசியம். சோப், ஃபேஸ் வாஷ் கொண்டு கண்களை அழுத்தி தேய்க்கக்கூடாது. முதலில் மேக்கப் ரிமூவர் கொண்டு நீக்கிவிட்டு பிறகு சோப் அல்லது ஃபேஸ்வாஷ் கொண்டு முகத்தை
கழுவலாம். இரவில் எந்த நேரமாக இருந்தாலும், முதலில் மேக்கப் ரிமூவர் கொண்டு ஐலைனர்கள் மற்றும் மேக்கப்பை நீக்கிவிட வேண்டும் என்பதை கவனத்தில் வைத்திருப்பது அவசியம்.
ஐலைனர்களில் சாதாரண பிராண்டுகள் முதல் அமெரிக்க, லண்டன் என வெளிநாட்டு பிராண்டுகள் வரை பல வகைகள் மார்க்கெட்டில் உள்ளன. பிராண்டுகளுக்கு ஏற்ப இதன் விலையும் ரூ.30 முதல் ரூ.30,000 வரை மாறுபடும். சமீப காலமாக பெண்கள் மத்தியில் சுருமா பயன்பாடும் அதிகம் காண முடிகிறது. முன்பெல்லாம் இஸ்லாமிய ஆண்கள் அல்லது பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இவை இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால், இளம் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் விரும்பி இதனை போட்டுக் கொள்கிறார்கள்.
Average Rating