வேட்டி பற்றிய கனவு !! (கட்டுரை)
வேட்டி பற்றிய கனவில் மூழ்கியிருந்த போது, கட்டியிருந்த கோவணமும் பறிபோனது’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, தற்போது அரசியல், சமூக, பொருளாதார பரப்புகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவும் அதனால், மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அவதிகளும், அச்சொட்டாக பொருந்திப்போவதுபோன்ற போக்குகளே காணப்படுகின்றன.
கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலானது, அநேக நாடுகளில் சுகாதார நெருக்கடிக்கும் அப்பாலான, பலவிதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்னும் சில காலத்துக்கு கொரோனா வைரஸ் சார்ந்த நுண்ணுயிரிகளைச் சுற்றியே, உலகம் தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.
இந்த ஒழுங்குக்கு இலங்கை விதிவிலக்காக இருக்க முடியாது. அந்த வகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள சில நெருக்கடிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், கடந்த காலத்தில் சிறுபான்மையினரின் பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகளைக் கையாண்டது போல, இன்றைய சூழலிலும் சில பிரச்சினைகளை, வினைத்திறனற்ற முறையில் கையாள்வதாக அவதனிகள் கருதுகின்றனர்.
நெருக்கடிகளைத் தணிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், அவை நடைமுறைப்படுத்தப்படும் பாங்கு ஆகியவை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதாகத் தெரியவில்லை. மாறாக, நெருக்கடிகளை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.
குறிப்பாக, சில அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், “மக்கள் மூன்றுவேளை உணவில் ஒருவேளையைத் தவிர்க்க வேண்டும்” என்று, ஓர் ஆளும்கட்சி எம்.பி கூறியுள்ளார். அதுபோல, உள்ளாடைகள் உள்ளடங்கலாக 600 இற்கு மேற்பட்ட பொருட்கள் இறக்குமதிக்கான பண வைப்புத் தொகையை, நூறுவீதமாக அரசாங்கம் அதிகரித்ததால் ஏற்பட்டுள்ள விமர்சனங்களைச் சமாளிப்பதற்கு, பொருளியல் அடிப்படையற்ற அரசியல் கதைகள் ஆளும் தரப்பால் கூறப்படுகின்றன.
அத்துடன், இந்த நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் வகையிலான அணுகுமுறைகளும், மக்களின் அதிருப்தியை நையாண்டி செய்யும் வகையிலான பொறுப்பற்ற கருத்துகளும் விமர்சனத்திற்கு உரியனவாக இருக்கின்றன.
இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்தது. சில தீர்மானங்களை எடுப்பதற்கு ‘நல்லநேரம்’ பார்த்தாலும், அமல்படுத்தப்பட்ட சுகாதாரக் கட்டுப்பாடுகள், ஓரளவுக்கேனும் நிலைமையை இழுத்துப் பிடிப்பதற்கு உதவின என்பதை மறுக்க முடியாது. அத்துடன் அரசாங்கம் பெருமளவானோருக்கு தடுப்பூசிகளையும் ஏற்றியுள்ளது.
சமகாலத்தில், அரசாங்கம் தனது அரசியல் நலன்களை அடைந்து கொள்வதையும் எவ்விதத்திலும் தாமதப்படுத்தவில்லை. அந்த வரிசையில், கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியிலும், அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.
முன்னதாக, பெரும்பான்மை ஆணையை வழங்கினால் சாதிப்போம் என்ற பாணியில் பிரசாரம் செய்த ஆளும் கட்சிக்கு, 69 இலட்சம் வாக்குகளை மக்கள் அளித்த போதும், நிலைமைகள் நினைத்தது போல சாதமாக அமையவில்லை.
அதுபோலவே, நாட்டின் அரசியல், பொருளாதாரம் உட்பட இன்னோரன்ன விவகாரங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 20ஆவது திருத்தம் அவசியம் என்று கூறி, அதனை நிறைவேற்றிய போதிலும், அத்திருத்தம் நாட்டின் நிகழ்கால பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு மந்திரக் கோலாக இருக்கவில்லை.
பசில் ராஜபக்ஷவை பிரநிதித்துவ அரசியலுக்குள் கொண்டு வந்தது பிரச்சினையில்லை. ஏனெனில், அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி. ஆனால், அதையும் தாண்டி, அவரை எம்.பியாக்கி, அமைச்சராக்கினால் நாட்டின் பொருளாதாரத்தை அவர் தூக்கி நிறுத்துவதுடன் அரசியல் நெருக்கடிகளை தணிவடையச் செய்வார் என்றும் கூறினார்கள்.
அவர் வந்த பிறகு, அரசியல் முரண்பாடுகள் வெளிப்படவில்லை என்பதென்னவோ உண்மைதான். ஆயினும், நாட்டின் பொருளாதாரத்தை குறுகிய காலத்துக்குள் தூக்கி நிறுத்த முடியவில்லை. எரிபொருள் விலையைக் குறைப்பார் என்ற எதிர்பார்ப்புக் கூட நிறைவேறவில்லை என்பதே யதார்த்தமாகும்.
கடந்த ஆட்சிக்காலத்திலும் இன்றைய ஆட்சியிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அரசியல் குழப்பங்கள், இனவாத மற்றும் பயங்கரவாத நெருக்கடிகள், சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் ஆதிக்க அரசியல், வினைதிறனற்ற பொருளாதாரக் கொள்கைகள், பிற்போக்குத்தனமான மக்கள் பிரதிநிதிகள் ஆகியவை, நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைக்கு வித்திட்ட காரணங்களாகும். இப் பட்டியலில் கடைசி இடத்திலேயே கொரோனா இருக்கின்றது எனலாம்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இதய சுத்தியான முயற்சிகளை எடுக்காமல் அரசியல் இலாபம், இனம், மதம் சார்ந்த தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டமையாலும், நெருக்கடிகள் குறைவடைவதற்கான கதவுகள் அடைபட்டுப் போயின எனலாம்.
உதாரணமாக, கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தபோது, அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஏனோ, சுகாதார அமைச்சரை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற பாங்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதுபோலவே, இன்று மத்திய வங்கி ஆளுநரை மாற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சில தினங்களுக்கு முன்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, தொடர் முடக்கமொன்றை மேற்கொள்ள நேரிட்டால், மக்கள் தியாகங்களைச் செய்வதற்கு தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இக்கூற்று விமர்சனத்துக்கு உள்ளானது. இருந்தபோதிலும், யதார்த்தமான கருத்து என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். நெருக்கடிச் சூழலில் அர்ப்பணிப்புகளை மேற்கொள்வதும் சிலவற்றை தியாகம் செய்வதும் அவசியமாகலாம்.
ஆனால், அரசாங்கம் எதிர்பார்த்ததை விட, அளவுக்கதிகமான தியாகங்களை இன்று மக்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மரணப் பயம் காட்டிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் ,அத்தியாவசியப் பொருட்கள் சார்ந்த நெருக்கடியும் வாழ்வாதாரப் பிரச்சினையும் மக்களைக் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கின்றது.
அரசாங்கம் என்னதான் சொன்னாலும், கொரோனா நெருக்கடி, முடக்கம், தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஆகியவற்றின் பின்னணியில், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உணவுக்கே கஷ்டப்படுகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில பொருட்களை எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து கொண்டு, “பால்மாக்களுக்குத் தட்டுப்பாடு இல்லை; போதுமானளவு சீனியும் அத்தியாவசியப் பொருட்களும் கையிருப்பில் உள்ளன” என்று அமைச்சர்கள் கூறலாம். பெரும் விமர்சனங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட உணவு விநியோகம் தொடர்பிலான அவசரகாலச் சட்டத்தின் மூலம், தடையில்லாத உணவு விநியோகத்தை உறுதிப்படுத்துவோம் என்று அறிக்கை விடலாம். ஆனால், நிஜம் என்பது வேறு விதமாகவே உள்ளது.
சாதாரண மக்கள் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற சில்லறைக் கடைகளில், பல அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்நிலைமை இன்னும் மோசமடையுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
இப்பின்னணியிலேயே, 600 இற்கு மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 100 சதவீத வைப்புத் தொகையை வங்கிகளில் பேணுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இதனால், கையில் திரவப் பணமாக பெருந்தொகையாக வைத்திருக்கின்ற ஏற்றுமதியாளர்கள் மாத்திரமே, இவ்வகைப் பொருட்களை இறக்குமதி செய்வார்கள். எனவே, இது பொருள் தட்டுப்பாட்டின் ஊடாக, விலையேற்றத்திற்கு வித்திடும்.
அந்தவகையில், உள்ளாடைகள் பற்றியே கிண்டலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், உள்ளாடைக்கு இப்படிக் கட்டுப்பாடு விதிப்பது, ஒரு விவகாரமே இல்லை. உண்மையில், ஆடம்பரப் பொருட்களைப் போல, இதுவெல்லாம் கருதப்பட்டிருக்கின்றதே என்று விமர்சிப்பதற்கான ஒரு குறியீடாகவே உள்ளாடை பயன்படுத்தப்படுகின்றது.
ஏனெனில், அதைவிட முக்கியமான பொருட்கள், அடிக்கடி கொள்வனவு செய்யப்படுகின்ற உற்பத்திகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. எனவே, இவற்றின் விலை உயர்வென்பது ஏற்கெனவே, எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே இருக்கும்.
ஆனால், இந்த நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பக்குவமாகத் தெளிவுபடுத்தும் உபாயத்தை அரசாங்கம் கையாளலாம். அதைவிடுத்து, சில அரசியல்வாதிகளின் நையாண்டித் தனமான விளக்கங்கள், மக்களது உணர்வுகளை கேலிக்குள்ளாக்குகின்றன. அத்துடன், பொறுப்பற்ற விதத்தில் அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற வலுவான சந்தேகத்தையும் உண்டுபண்ணுகின்றன.
இன்றைய நெருக்கடிக்கு காரணம் அரசாங்கம் மட்டுமல்ல, எதிர்க்கட்சி தொடக்கம் சாதாரண மக்கள் வரை எல்லோருக்கும் சிறியதும் பெரியதுமான பங்கிருக்கின்றது. ஆயினும், மிகப் பெரும் பொறுப்பை அரசாங்கமே கொண்டுள்ளது.
எனவே, முன்னைய அரசாங்கங்கள், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், காலத்தை இழுத்தடித்தது போலவோ அல்லது விவகாரங்களை மேலும் சிக்கலாக்கியது போலவோ இன்றைய நெருக்கடிகளைக் கையாளக் கூடாது.
அரசாங்கம் பற்றி மக்கள் அதீத எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். அதில் இன்னும் மீதமிருக்கின்றது. அவர்கள், ‘வேட்டி பற்றிய கனவு’டன் இருக்கின்றார்கள். ‘கோவணம் பறிபோய்விடுமோ’ என்ற அவர்களது அச்சத்தைப் போக்க வேண்டும்.
Average Rating