நீதிமன்ற கதவுகளை தட்டிய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை! (மகளிர் பக்கம்)
போலந்தில் நடைபெறும் செவித்திறன் குன்றியோர் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதிச் சுற்றுக்கு தேர்வாகியும், பெண் என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்டேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தியிருக்கிறார் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை சமீஹா பர்வீன்.
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சமீஹா. சிறுவயது முதலே மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்று வந்தார். இந்நிலையில் சமீஹா செவித்திறன் குன்றியோருக்கான தேசிய தடகளப் போட்டிகளில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பங்கேற்று இதுவரை 11 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 23ல் தொடங்கி போலந்து நாட்டில் நடைபெறவுள்ள 4வது சர்வதேச செவித்திறன் குன்றியோருக்கான தடகளப் போட்டியில் பங்கேற்க, டெல்லியில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் சமீஹாவும் பங்கேற்றார். இதில் அவருக்கு அதிக புள்ளிகள் கிடைத்தும், இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் என்கிற காரணத்தைச் சொல்லி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் போலந்து செல்ல இவரை நிராகரித்தது.
தன்னையும் போலந்து தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நீதி வேண்டி மனு தாக்கல் செய்திருந்தார் சமீஹா. அவரின் இந்த வழக்கு அவசர வழக்காக உயர்நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பை வழங்கிய உயர்நீதி மன்ற நீதிபதி மகாதேவன், 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற சமீஹா பர்வீனுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
“தகுதிச் சுற்றில் பெண்கள் வரிசையில் சமீஹா பர்வீன் முதலிடத்தில் உள்ளதால் அவரை சர்வதேச போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இப்போட்டியில் அவரை பங்கேற்க வைத்தால் தங்கப் பதக்கம் பெற்று நாடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. 5 வீரர்கள் மட்டும்தான் அனுமதி என்றால் ஒரு ஆணை எடுத்துவிட்டு பெண்ணை இணையுங்கள்” என்றும் உத்தரவிட்டார். இது தொடர்பாக நீதி மன்றத்தின் உத்தரவு நகலை சமீஹா பர்வீன் டெல்லியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் கையளித்து அனுமதி வாங்குவதற்கான இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தார்.
இந்நிலையில், சமீஹா பர்வீன் வழக்கை அவசர வழக்காக எடுத்து நடத்தி வாதங்களை முன் வைத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரனிடம் பேசியபோது… “நீளம் தாண்டுதலில் பெண்கள் பிரிவுக்கான உச்சபட்ச வரம்பு 4.25 மீட்டர் மட்டுமே. சமீஹா பர்வீன் தாண்டியது 5 மீ. பெண்கள் பிரிவில் 5 மீட்டர் நீளம் தாண்டுதல் அபூர்வம். இவரால் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.காது கேளாதோறுக்கான அனைத்திந்திய விளையாட்டு ஆணையம்(All India sports council for the deaf) 10 விளையாட்டு வீர்ர்களுடன் 2 பயிற்சியாளர்களுக்கு அனுமதி கேட்டு இருந்த நிலையில், நிதி பற்றாக்குறையால் போலந்து செல்ல 5 விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளருக்கு மட்டுமே இந்திய விளையாட்டு ஆணையம் அனுமதி வழங்கியதாக அரசாங்கம் தரப்பில் சொல்லப்பட்டது. சஹானா பர்வீன் தரவரிசையில் 8வது இடத்தில் இருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது.
பெண்கள் பிரிவில் ஒன்று கூட சேர்க்கப்படவில்லையே என்ற எங்கள் தரப்புக் கேள்விக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை. பெண்கள் வரிசையில் சமீஹா பர்வீன் முதலிடத்தில் இருக்கிறார். ஆண், பெண் தரவரிசையை பொதுமைப்படுத்தி அவர்கள் அந்த உரிமையை தர மறுக்கிறார்கள்(discrimination). இது மிகவும் தவறான முன்னுதாரணம். பெண்கள் வளர்ச்சிக்கு எதிரான செயல். ஆண்கள் பெண்களுக்கு இது தனித்தனி தகுதி தேர்வாக இருக்க வேண்டும். இது தொடர்ந்தால் எந்த பெண்களாலும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை வரும்.
கடந்த மாதம் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வீரர் வழக்கை அவசர வழக்காக எடுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. அதையும் வழக்கில் கோடிட்டுக் காட்டியிருந்தோம். நீதியரசர் மகாதேவன், இந்த வழக்கின் அவசரத் தீர்ப்பாக மினிஸ்ட்ரி ஆஃப் ஸ்டேட் யூத் அஃபயர்ஸ் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக அணுகி சமீஹா பர்வீன் பெயரையும் இணைத்து அனுப்பச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் இந்தியாவில் எந்த ஒரு சலுகையும் உரிமையும் இன்றியே தங்கள் திறமையால் போராடி மேலே வந்து கொண்டிருக்கிறார்கள். விளையாட்டு வீராங்கனையாக ஒரு மாற்றுத்திறனாளிப் பெண் வருவதே மிகப் பெரிய ஒரு போராட்டம். அதையும் தாண்டி தன்னுடைய தகுதிக்காக சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை இந்த நாட்டில் மட்டும்தான் உள்ளது. மற்ற நாடுகளில் உரிமைகளை அரசே வழங்கிவிடுகிறது. உரிமைக்காக நீதிமன்றத்தை யாரும் நாடுவதில்லை” என முடித்தார்.
சமீஹாவின் தாயார்
இது என் மகளின் கனவு, ஆசை. இது போல வேறு எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது. சர்வதேச போட்டியில் பங்குபெற அனைத்து தகுதி இருந்தும், நீதிமன்றத்தை நாடி தான் நியாயமாக கிடைக்க வேண்டிய விஷயங்களை பெற வேண்டியுள்ளது. நீதி அரசரின் இந்த தீர்ப்பால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை பெற்ற சமீஹா பர்வீன் போன்ற விளையாட்டு வீராங்கனைகளை புறக்கணிப்பதெல்லாம் இந்த நாட்டில் மட்டும்தான் நடக்கிறது.
Average Rating