பாராலிம்பிக்கில் தடம் பதித்த வீல்சேர் வீராங்கனைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 56 Second

பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார் 19 வயது இந்திய வீராங்கனை அவானிலெகாரா. பெண்களுக்கான R-2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் மொத்தமாக 249.6 புள்ளிகளைப் பெற்று டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற சாதனையுடன் உலக சாதனையை சமன் செய்தவர், மீண்டும் 50 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவுக்கான இறுதிப் போட்டியிலும், 445.9 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்றுள்ளார்.

அவானியின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர். ஒன்பது வயதுவரை இயல்பாய் இருந்தவர் வாழ்வில் நேர்ந்த கார் விபத்தில் முதுகுத் தண்டுவடம் பலமாக அடிபட, அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சக்கர நாற்காலியில் முடங்கியது. தன் மகள் வாழ்க்கை வீல்சேரில் முடங்குவதை விரும்பாத அவரின் தந்தை படிப்புடன் விளையாட்டிலும் அவரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி இருக்கிறார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் சுயசரிதை அவானியின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த, துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டார்.

தன்னுடைய தொடர் முயற்சி மற்றும் பயிற்சியின் காரணமாய், 2017ல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். இதுதான் அவானி லெகாரா கலந்து கொண்ட முதல் சர்வதேச போட்டி. 2019 குரோஷியாவில் நடைபெற்ற பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியிலும் வெள்ளி வென்று அசத்தியுள்ளார். 2021 மார்ச் மாதம் துவக்கத்தில் நடந்த தேசிய பாரா ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான R-2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியிலும் தங்கத்தைத் தட்டியிருக்கிறார்.

விளையாட்டில் சாதனை செய்துகொண்டே சட்டக்கல்வி பயிலும் அவானி, பாராலிம்பிக் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில், ஏதாவது ஒரு பதக்கம் வெல்வார் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரலாற்று சாதனையே நிகழ்த்திவிட்டார்.

பாவினாபென் படேல்

மகளிருக்கான பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் அரையிறுதி போட்டியை இந்தியாவின் பாவினாபென் படேல் வென்றுள்ளார். டேபிள் டென்னிஸில் பதக்கம் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாவினாபென் படேல் தன்னுடைய 12 வயதில் போலியோ பாதிப்பால் நடக்கும் சக்தியை இழந்தார். வறுமை காரணமாக சரியான மருத்துவத்தை பெற்றோரால் இவருக்குக் கொடுக்க முடியவில்லை.

கால்கள் செயலிழந்த நிலையில் பாவினாவின் வாழ்க்கை வீல்சேரில் நிரந்தரமானது. +2 முடித்து அகமதாபாத் கல்லூரி ஒன்றில் படிப்பைத் தொடங்கிய பாவினா, தன்னுடைய பிட்னஸ்க்காக டேபிள் டென்னிஸ் விளையாட்டின் பக்கமாகக் தன் கவனத்தை திருப்ப, அதுவே அவருக்கு பிடித்தமானதாய் மாறிப்போனது. பாவினாவின் திறமையை பார்த்து, அவர் படித்த கல்லூரியில் செயல்படும் ப்ளைன்ட் பியூப்பிள் அசோசியேஷன் உதவி கரம் நீட்ட, 4 ஆண்டு பயிற்சிக்குப் பின் பெங்களூருவில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் பாவினா படேல்.

அதன் பிறகு தொடர்ச்சியாக பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று அடுத்தடுத்து தங்கம், வெள்ளி, வெண்கலம் என 26மெடல்களை வென்றிருக்கிறார். எந்தவொரு சூழலிலும் நான் ஒரு மாற்றுத் திறனாளி என்ற எண்ணம் எனக்கு கொஞ்சமும் வந்ததே இல்லை. என்னால் எதையும் சாதிக்க முடியும் எனத் தன்னம்பிக்கை மிளிர கூறியுள்ள பாவினா, உலகத் தரவரிசையில் 3ம்நிலையில் இருந்த விளையாட்டு வீராங்கனையிடம் தன்னுடைய மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவரைப் பின்னுக்குத்தள்ளி இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

இதற்கு முன் அதே போட்டியாளரிடம் 13 போட்டிகளில் பாவினா தோற்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்கள்… பிரபலங்கள்… அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரின் வாழ்த்து மழையில் நனைந்த பாவினாபென் படேல் அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம்வெல்ல வாழ்த்துவோம்..!!

மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக மாடல் SUV சொகுசு கார்களை தயாரிக்க வேண்டுமென தீபா மாலிக் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், முதல் பிரத்யேக மாடல் SUV சொகுசு காரை அவானி லெகாராவுக்கு பரிசளிக்க விரும்புவதாக” தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் பொறுத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். இவர்களின் உடல் பாதிப்பு ஒவ்வொருவரிடமிருந்தும் வித்தியாசப்பட்டிருக்கும். எனவே விளையாட்டில் இவர்களை ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்காமல், பாதிப்புகளைப் பொருத்தே பிரிவுகள் பிரிக்கப்படும். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். அந்தக் குறியீட்டு பிரிவின்கீழ் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர்.

16வது பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ல் தொடங்கி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று நிறைவடைந்தது. இதில் தடகளம், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், சைக்கிளிங், வீல்சேர் டேபிள் டென்னிஸ், வீல்சேர் ரக்ஃபி, வீல்சேர் பேஸ்கெட்பால், வில்வித்தை உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் மொத்தம் 540 போட்டிகள் நடைபெற்றன. இதில் 165 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், இந்தியாவில் இருந்து மட்டும் 54 போட்டியாளர்கள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றனர். இதில் 19 பதக்கங்களை இந்தியா பெற்றிருக்கிறது. இது இந்தியாவுக்கு கிடைத்த அபாரப் பாய்ச்சல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எட்டு வயதில் எழுத்துருக்களை அடையாளப்படுத்தி உலக சாதனை!!! (மகளிர் பக்கம்)
Next post சொந்த நாட்டின் ஏதிலிகள்!! (கட்டுரை)