வெளித்தெரியா வேர்கள்!! (மகளிர் பக்கம்)
“உங்க பையனை இனி கடவுள் தான் காப்பாத்தணும்.!” என்று டாக்டர் கைவிரித்ததும் கண்கலங்கி நின்றனர் பத்து வயது சிறுவனின் ஏழைப் பெற்றோர். அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுவன், விளையாடிக் கொண்டிருந்தபோதே மயக்கமடைந்திருக்கிறான். கீழே விழுந்த நிலையில், வலிப்பும் சேர்ந்துகொள்ள ஆசிரியர்கள் அவனை மருத்துவமனை கொண்டு சென்றிருக்கின்றனர். பரிசோதனையில் சிறுவனுக்கு தலையில் கட்டி இருப்பதும், அது துரிதமாக வளரும் இளவயது புற்றுநோய்க் கட்டி என்பதும், மூளையின் உட்பகுதிக்குள் அது இருப்பதால், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள முடியாது என்பதையும் கண்டறிந்த மருத்துவர், சிறுவனின் பெற்றோரிடம் நோயின் தீவிரத்தை விளக்கிக் கூறியிருக்கிறார்.
“எங்களுக்கு ஒரே பையன். என்ன செய்யலாம் டாக்டர்?” என்ற பெற்றோரின் கண்ணீருக்கு, ‘‘பையனை சென்னைக்கு கூட்டிட்டு போங்க. அங்குள்ள டி.எஸ். கனகா டாக்டருக்கு ஒரு லெட்டர் தருகிறேன். ஸ்டீரியோ டாக்டிக் ரேடியோ சர்ஜரில அவங்க பெரிய ஆளு. அப்பாயிண்மென்ட் கிடைச்சு, பையனுக்கு அவங்க வைத்தியம் பார்த்தா நிச்சயம் பிழைக்க வாய்ப்பிருக்கு..!” எனச் சொல்லியிருக்கிறார். உறுப்புகளின் மிக ஆழத்திலும், சிக்கலான இடங்களிலும் வளரும் கட்டிகள் மற்றும் சதை வீக்கங்களுக்கு சில நேரம் அறுவை சிகிச்சை செய்ய முடியாமலே போகலாம்.
மீறி அறுவை சிகிச்சை செய்தால் அது மற்ற உறுப்புகளையும் சேதப்படுத்தும் என்ற நிலையில், கட்டியை கையில் தொடாமல், கதிரியக்கம் மூலமாக குணப்படுத்துவது தான் ஸ்டீரியோ டாக்டிக் ரேடியோ சர்ஜரி. அதை இந்தியாவில் முதன்முதலாக செய்த பெண் மருத்துவர் நமது தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.எஸ்.கனகா. ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். ‘இனி கடவுள் தான் காப்பாத்தணும்’ என மருத்துவர்கள் கைவிரித்த பல உயிர்களைக் காப்பாற்றியவர் என்பதே டாக்டர் கனகாவின் அடையாளமாகி இருக்கிறது.
செரிப்ரல் இம்ப்ளாண்ட் எனும் மூளைத் தூண்டுதல் சிகிச்சையைக் கற்றுத்தேர்ந்த முதல் பெண் மருத்துவர் என்கிற இவரின் சாதனையின் உத்வேகமே, நரம்பியல் துறையில் இன்று, பல பெண் மருத்துவர்கள் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களாக மாறக் காரணமாக இருந்தது.1932ல், சந்தான கிருஷ்ணன்-பத்மாவதி அம்மாளுக்கு மகளாகப் பிறந்தவர் கனகா. பூர்வீகம் தஞ்சை என்றாலும் வளர்ந்தது சென்னையில். இவர் தந்தை கல்வித்துறையில் உயர்பதவி வகித்ததால் முறையான கல்வியுடன், தாய் அளித்த ஆன்மீகமும் இணைந்துகொள்ள, பக்தியோடு படிப்பைத் துவங்கியிருக்கிறார். இவரின் கடைசி சகோதரர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைய, சகோதரரின் வலியையும், இழப்பையும் நேரில் பார்த்து வேதனையுற்ற கனகா, இனி இதுபோல் துயரப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று மருத்துவம் படிக்க விரும்பியிருக்கிறார். தொடர்ந்து மருத்துவப் படிப்பு நோக்கி பயணித்தவர் 1954ல் இளநிலை மருத்துவராகவும் கல்வியில் உயர்ந்திருக்கிறார்.
மருத்துவம் முடித்து திருப்பதி ஏழுமலையான் கோவில் மருத்துவமனையில் சிலகாலம் பணி புரிந்தவர், அங்கே ரத்த தானம் வழங்குவதை முதன்முதலில் தொடங்கி இருக்கிறார். 1962-63ல் சீன இந்தியப் போரில் இந்திய ராணுவத்தின் மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்று, எல்லைக்கு பயணம் மேற்கொண்டதன் மூலமாக, இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த முதல் பெண் மருத்துவர் டாக்டர் கனகா என்ற பெயரும் இவருக்கு உண்டு. எல்லையில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக, நாடு திரும்பியதும், பொது அறுவை சிகிச்சையில் மேற்படிப்பு படிப்பதற்காக தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படும் பேராசிரியர் டாக்டர்.
பி.ராமமூர்த்தியின் மாணவியாக கல்வி பயின்ற டாக்டர் கனகா, அவரது கற்பிக்கும் முறைகளில் ஈர்க்கப்பட்டு, நரம்பியல் துறையினை தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறார். 1968ல் எம்சிஹெச் மேற்படிப்பை அவர் முடித்தபோது, ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் என்ற பெயரோடு, உலக அளவிலும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். தான் பயின்ற மருத்துவக் கல்லூரியிலேயே நரம்பியல் துறையின் உதவிப் பேராசிரியராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்.
மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில், அப்போதைய தொழில்நுட்பமான ‘ஸ்டீரியோ டாக்டிக் ரேடியோ சர்ஜரி’ அறிமுகமானபோது, மக்களுக்கான மருத்துவ சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்து அதனை முறையாக கற்றுத் தேர்ந்துள்ளார். ‘வலிப்பு நோயால் என் சகோதரியின் கணவர் படும் சிரமத்தை நேரில் பார்த்திருக்கிறேன். மூளையில் ஏற்படும் பெருமூளை வாத நோயால் (cerebral palsy) குழந்தைகள் அவதிப்படுவதையும் பார்த்து மனம் வருந்தியிருக்கிறேன். இதற்கான தீர்வாவே ‘ஸ்டீரியோ டாக்டிக் ரேடியோசர்ஜரி’யைக் கற்றுக்கொள்ள விரும்பினேன்” என்று தெரிவித்ததுடன், அதே துறையில் மேலும் பல ஆய்வுகள் செய்து, முனைவர் பட்டமும் பெற்றார்.
டோக்கியோவில் நடைபெற்ற ஸ்டீரியோ டாக்டிக் சிகிச்சை மற்றும் நரம்புத் தூண்டுதல் சிகிச்சையில் ஃபெல்லோஷிப் பெற்று, எம்எம்சியில் அதற்கான சிறப்பு துறையையும் துவங்கியிருக்கிறார். மேற்கத்திய நாடுகளிலும், உலகின் பிற பகுதிகளிலும் சிகிச்சை செயல்பாட்டிற்கு வரும் முன்னரே, துணிச்சலாக நம்நாட்டில் துவங்கி கிட்டத்தட்ட 1700 பேர்வரை இதில் பயனும் அடைந்திருக்கிறார்கள். இதில் துவக்கத்தில் நாம் வாசித்த பத்து வயது சிறுவனும் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறான். டாக்டர் கனகாவின் செயல்பாட்டால், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி உலக அளவில் கவனம் பெற்று,‘ஸ்டீரியோ டாக்சியின் மெக்கா’ என்றே அழைக்கப்பட்டது.
இது தவிர இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரேசில் என பற்பல சர்வதேச கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து உலகெங்கும் உள்ள மருத்துவர்களால் வியந்து பார்க்கப்பட்டவர் டாக்டர் கனகா. ஆசிய நரம்பியல் அறுவை சிகிச்சையின் பெண்கள் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனக்குப் பின் பல பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் உருவாகத் தூண்டுகோலாகவும் இருந்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தானத்தின் மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் ஆகியவற்றுடனும் தன்னை இணைத்துக் கொண்டு மருத்துவ சேவைகளை வழங்கியதோடு, தொடர்ந்து ரத்த தானம் அளிப்பதையும் தனது வாழ்க்கை முழுவதும் குறிக்கோளோடு செய்து வந்திருக்கிறார். ஏறத்தாழ 139 முறை ரத்த தானம் அளித்த நிலையில், இவர் பெயர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் முதலாவதாக இடம் பிடித்திருக்கிறது.
வசதியான வாழ்க்கையை விரும்பாத டாக்டர் கனகா, அரசு மருத்துவமனையிலேயே தங்கி மக்களுக்கு பணியாற்றி இருக்கிறார். தனது பணி ஓய்வுக்குப் பின்னும், சென்னை குரோம்பேட்டையில் தனது பெற்றோர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, இலவச மருத்துவ சேவையைத் தொடர்ந்திருக்கிறார். தனது வாழ்நாள் முழுவதும், நோயால் அவதிப்படும் மக்களுக்கு உதவிய டாக்டர் கனகா, மக்கள் சேவையாற்ற திருமணம் தடையாக இருந்துவிடக்கூடாது என நினைத்து, மண வாழ்க்கைக்குள் நுழையவில்லை எனவும் தெரிவித்துள்ளார். வாழ்க்கை முழுவதுமாக பல்வேறு விருதுகளை தொடர்ந்து பெற்றவர், 2018ல் இறப்பதற்கு முன்பாக வாழ்நாள் சாதனையாளர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
Average Rating