ஃபேஷன் A – Z!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 59 Second

மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா

ஆடைகள் உங்கள் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் என்றாலும், அதை விட மிகவும் முக்கியமானது ஆடைக்கு ஏற்ப அணியும் அணிகலன்கள். ஃபேஷன் உலகம் பொறுத்தவரை ஆடைகளை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ளக்கூடாது. உடைக்கு ஏற்ப அணிகலன்கள் அணியும் போது அது மேலும் ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்தும். இது உங்களுக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். ஸ்டைலாக இருக்க விரும்பினால், உங்கள் ஆடையுடன் மேலும் சில ஃபேஷன் அணிகலன்களை சேர்ப்பது அவசியம்.

நாம் என்ன ஃபேஷனாக உடை அணிந்தாலும், அதற்கு பொருந்தும் வகையில் ஆபரணங்கள் பங்களிக்க வேண்டும். அப்போதுதான் நாம் அணிந்திருக்கும் உடைக்கு முழு நிறைவினை ஏற்படுத்தும். ஒருவர் அணியும் அணிகலன்களை பொருத்து அவரின் தனிப்பட்ட விருப்பம், ஆளுமை மற்றும் அடையாளத்தை கொடுக்கும். இவை பல வித டிசைன்கள், வடிவங்கள், நிறங்கள், உலோகங்களில் வருகின்றன. பெண்களுக்கு மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் அவரவர் விருப்பம் மற்றும் உடைகளுக்கு ஏற்ற எண்ணில் அடங்கா அணிகலன்கள் பயன்பாட்டில் உள்ளன.

ஒவ்வொரு பெண்களின் அலமாரிகளை திறந்தால் போதும் அங்கு துணிகள் அடுக்குமாடி குடியிருப்பு போல் அடுக்கப்பட்டு இருக்கும். எவ்வளவு ஆடைகள் வைத்திருந்தாலும் அதற்கு ஏற்ப அணியும் ஒரு சின்ன குண்டுமணி அணிகலன்தான் அந்த ஆடைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு வேறு ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்தும். சாதாரண எளிமையான உடைக்கு மேட்சாக அணியும் ஒரு சின்ன கம்மல், செயின் உங்களை ஒரு மில்லியன் டாலர் தோற்றத்திற்கு மாற்றிவிடும்.

இதற்கு உங்களுக்குத் தேவையானது ஒரு சிறிய திட்டமிடல் மட்டுமே. ஆடை உங்கள் பாணி மற்றும் விருப்பங்களைப் பற்றிக் கூறும்… ஆனால் அணிகலன்கள் கண் இமைக்கும் நேரத்தில் உங்களின் தோற்றத்திற்கு வேறு ஒரு தோற்றத்தை கொடுக்கும். இதில் ெகாஞ்சம் தவறினாலும் முழு தோற்றமும் சிதைந்துவிடும். இந்த இதழில் பெண்கள் பண்டைய காலம் முதல் இன்று வரை அணிந்த அணிகலன்கள் மற்றும் எந்த உடைக்கு என்ன நகைகளை அணியலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

அணிகலன்கள் என்று சொன்னால், எகிப்தியர்கள் பயன்படுத்திய நகைகளை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிப்பிகள், எலும்பு மற்றும் மிருகங்களின் தோல்களில் இருந்து எளிமையான நகையினை வடிவமைத்தார்கள். இவைதான் முதன் முதலில் உருவாக்கப்பட்ட அணிகலன்கள். பண்டைய எகிப்தியர்கள் தோற்றத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தனர். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள நகைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தினார்கள். நம் முன்னோர்கள் ஆப்பிரிக்க கண்டத்தை விட்டு வெளியேறிய பிறகு, எகிப்து ஒரு மேலாதிக்க நாகரீக நகரமாக மாறியது.

தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், ரத்தினங்கள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் ஆகியவற்றில் அவர்கள் மற்ற நாடுகளை விட முன்னேறி இருந்தனர். ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அரச குடும்பத்தினரின் கலாச்சாரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டனர். அதனாலேயே நகைகள் உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல் அவர்களின் ஒவ்வொரு அணிகலனும் இன்றும் பாரம்பரியம் மாறாமல் ஃபேஷன் உலகில் முன்னிலை இடத்தை பிடித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு எகிப்தியர்களின் நகைகளுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. காரணம், அவர்கள் எண்ணில் அடங்கா தங்கங்களை சேர்த்து அதனைக் கொண்டு அழகான நகைகளை
வடிவமைத்தது மட்டுமில்லாமல், ஆண்-பெண் இருவரும் தங்களை அலங்காரம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் வழிபடும் தெய்வங்கள் மற்றும் அரசர்களின் சிலைகளையும் தங்கத்தால் அலங்கரித்து அழகு பார்த்தனர். அதுமட்டுமில்லாமல், இறந்த பிறகு அவர்களை தங்கத்தால் அழகுப்படுத்திய பிறகே புதைத்தனர். எகிப்தியர்களின் அனைத்து நகைகளான வளையல்கள், காதணிகள், கொலுசு, பிரேஸ்லெட், மோதிரங்கள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை.

நகைகள் மட்டுமில்லாமல் எகிப்தியர்கள் காலணிகளுக்கும் முக்கயத்துவம் அளித்து வந்தனர். ஆண்-பெண் இருவருமே பாப்பிரஸ் என்ற கோரையின் நாணற்புல், காய்கறி இழைகள் மற்றும் தோலால் செய்யப்பட்ட செருப்புகளை அணிந்து வந்தனர். உடை மற்றும் அணிகலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எகிப்தியர்கள் தங்களின் சிகை அலங்காரத்திற்கும் அதிக கவனம் செலுத்தி வந்தனர். இதற்கென சிறப்பு சிகையலங்கார நிபுணர்களை நியமித்து தங்களின் தலைமுடியினை பராமரித்து வந்தனர்.

தலைமுடியினை சுத்தம் செய்து, வாசனை திரவம் தெளித்து, மருதாணி கொண்டும் தங்களின் முடியினை பராமரித்தனர். குழந்தைகளுக்கு தலையின் பக்கவாட்டில் ஒன்றிரண்டு முடிகள் சுருலாகவோ அல்லது பக்கவாட்டில் பின்னலிட்டு தலை முழுதும் மொட்டை அடிப்பது வழக்கமாக இருந்தது. காரணம், அவர்களின் கடவுளான ஹோரஸ் குழந்தையாக இருந்தபோது இந்த ஹேர்ஸ்டைலில் இருந்ததால் எகிப்தியர்கள் தங்களின் குழந்தைகள் அனைவருக்கும் அதே சிகை அலங்காரத்தை கடைப்பிடித்தனர். சில நேரங்களில் ஆண்-பெண் இருவரும் முழுமையாக மொட்டை அடித்துக் கொண்டு விக் அணிவதும் வழக்கமாக இருந்தது. மனித முடியிலிருந்து தயாரிக்கப்பட்டது, உள்புறம் காய்கறி நார்கள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும். கனமாக இருக்கும் இந்த விக்குகள் நீளமாகவும் அதே சமயம் ஜடை போல் பின்னலிடப்பட்டு இருக்கும். 18ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் விழாக்காலம் மற்றும் விசேஷ நாட்களில் இந்த விக்குகளை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

பூசாரிகள் தங்கள் தலை மற்றும் உடல் முழுதும் ஒரு முடி இல்லாமல் ஷேவ் செய்வது வழக்கம். தெய்வங்கள் மேல் இருக்கும் தங்களின் பக்தியை உறுதிப்படுத்தவும், தூய்மையின் அடையாளமாக இந்த பழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர். வசதிப் படைத்த ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை மேலும் அழகாக எடுத்துக்காட்ட எண்ணெய், வாசனை திரவியங்கள், கண்மை மற்றும் முகச் சாயங்கள் என பல்வேறு அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தினர். புருவங்கள், இமைகளில் மற்றும் கண்களுக்கு கண்மைக் கொண்டு அடர்த்தியாக தீட்டிக் கொண்டனர். எகிப்தியர்கள் கண்களை அழகாக எடுத்துக் காட்டுவது மட்டுமில்லாமல் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க கலேனா, மலாக்கிட் என்ற கனிம நிறமிகளையே பெரும்பாலும் அலங்காரம் செய்ய பயன்படுத்தினர்.

ஆரம்ப காலத்திலிருந்தே, நகைகள் உயர்தட்டு மக்களின் சுய அலங்காரத்திற்காகவும், சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் அணியப்பட்டன. வளையல்கள், மோதிரங்கள், காதணிகள், நெக்லெஸ், பெல்ட் கொக்கிகள் மற்றும் தாயத்து அனைத்தும் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டன. அதில் மேலும் அழகு சேர்க்க வைடூரியம், நீல ரத்தினக்கல், பவளம், மாணிக்கம், செவ்வந்திக்கல் போன்ற விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டன. பீங்கான் மற்றும் கண்ணாடிகளும் நகைகளை கொண்டு அலங்கரிக்கவும் பயன்படுத்தப்பட்டன.

எகிப்தியர்களின் காலத்தில் இருந்தே ஃபேஷன் ஆபரணங்களில் ஒரு பெரிய பரிணாமம் ஏற்பட்டது. தற்போது ஒருவரின் விருப்பம் மற்றும் தேவைக்கு ஏற்ப பல வகையா ஆபரணங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆபரணங்களும் அழகியல் அடிப்படையில் வித்தியாசமாகவும் பாரம்பரியத்தோடும் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றை கையில் எடுத்து செல்வது மற்றும் அணிந்து கொள்வது என இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தலாம். பாரம்பரியமாக எடுத்துச் செல்லப்படும் அணிகலன்கள் என்றால் பர்ஸ் மற்றும் கைப்பைகள், கை விசிறிகள், குடை, பணப்பைகள், கைத்தடிகள் மற்றும் அரசர்கள் பயன்படுத்தும் வாள்கள் ஆகியவை அடங்கும். அணியும் அணிகலன்கள் என்று குறிப்பிட்டால் ஜாக்கெட்டுகள், பூட்ஸ் மற்றும் காலணிகள், கழுத்தை சுற்றி அணியும் ஸ்கார்ப்ஸ் மற்றும் டை வகைகள், தொப்பிகள், கையுறைகள், நெக்லெஸ், வளையல், பிரேஸ்லெட்ஸ், கைகடிகாரம், சாக்ஸ், மூக்குத்திகள், மோதிரங்கள், கண் கண்ணாடிகள்… என நாம் உடலில் அணியும் அனைத்தும் அடங்கும்.

ஒரு தனிநபர் செல்லும் இடம் மற்றும் சூழல் குறித்து அவர் அணியும் உடை மற்றும் அணிகலன்கள் மாறுபடும். உதாரணத்திற்கு ஒருவர் வேலைக்கு செல்லும் போது அணியும் உடைகளும் அவர் நண்பர்களுடன் ஜாலியாக வெளியே செல்லும் போது அணியும் உடை மற்றும் அணிகலன்களில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதே போல் அவரின் மதம், வாழும் சூழல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை அனைத்தும் சார்ந்துதான் ஒருவர் தங்களின் உடையினை தேர்வு செய்வர். அவ்வாறு அணியும் அணிகலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம். கைப்பைகளை அமெரிக்கர்கள் பர்ஸ் என்றும் அழைக்கிறார்கள்.

இது சிறியது முதல் பெரிய பை வரை பல டிசைன்கள், அளவுகளில் வருகிறது. தனிப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல மட்டுமே பயன்படுத்தப்படும். ஆரம்பத்தில் பணம் எடுத்துச் செல்ல பர்சினை பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்வதற்காக கைப்பையா உருமாறியது. 1900ம் ஆண்டு முற்பகுதியில், ஆண்கள் தங்களின் பொருட்களை எடுத்துச் செல்ல கைப்பையை பயன்படுத்தி வந்தனர்.

கண்களில் அணியப்படும் கண்ணாடிகள் கண்பார்வை பிரச்னைக்கு மட்டுமில்லாமல் ஃபேஷனுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சன்கிளாஸ்கள் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கண்களைப் பாதுகாக்கும். ஏவியேட்டர், பக்-ஐட், காகில்ஸ், கேட்-ஐ, ஹார்ன் ரிம்ட், லென்ஸ் லெஸ், ரிம்லெஸ்… பிழை-கண், கண்ணாடிகள், பூனை-கண், கொம்பு-விளிம்பு, லென்ஸ்-லெஸ், ரிம்-லெஸ்… என அவரவர் முக அமைப்பிற்கு ஏற்ப வட்டம், சதுரம், செவ்வகம், ஓவல், நட்சத்திரம், இதயம் என பல டிசைன்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன.

வாலெட்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய பர்ஸ் நம்முடைய தனிப்பட்ட பொருட்களான கிரெடிட் கார்ட், புகைப்படங்கள், பணம், அடையாள ஆவணங்கள், வண்டி லைசென்ஸ், விசிட்டிங் அட்டைகள் போன்றவைகள் வைத்துக் கொள்ள பயன்படும். இவை பெரும்பாலும் தோல் பொருட்களில் அமைக்கப்படுவதால், அதிக நாட்கள் நீடித்து உழைக்கும். உடைக்கு மேலே அணியப்படுவது தான் ஜாக்கெட்டு. பாதி வயிறு வரை நீளமிருக்கும் இதனை குளிர் நாட்களில் அணிவது வழக்கம். தோல் பொருட்களில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த ஜாக்கெட்டுகள், உடலை இறுக்கமாக பிடிக்கும் நாகரீகமான உடைகளில் ஒன்று. பிளேஸர், பாம்பர், பொலெரோ, ஃப்ளீஸ், டெனிம், ரிவர்சிபிள் என பல டிசைன்களில் வருகிறது.

எந்த உடை அணிந்தாலும் அதற்கேற்ப காலணிகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். கலாச்சாரத்திற்கு ஏற்ப காலணிகளும் அந்தந்த காலக்கட்டத்தில் நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்திற்கு காலணிகள் அதன் டிசைன்களுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. விளையாட்டு, சாதாரண உடை, புடவை, பார்ட்டி உடை என ஒவ்வொரு உடைக்கும் தனிப்பட்ட காலணிகள் வடிவமைக்கப் படுகிறது.

தொப்பி, பெரும்பாலும் வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கவும், ஃபேஷனுக்காகவும் அணிகிறார்கள். முன்பு, தொப்பிகள் அணிவது ஒருவரின் அந்தஸ்தை குறிப்பதாக இருந்தது, உதாரணத்திற்கு ராணுவ வீரர்கள் அனைவரும் தொப்பி அணிந்திருப்பார்கள். அவர்களை அந்த தொப்பியுடன் பார்க்கும் போது நம்மை அறியாமல் ஒரு மரியாதை ஏற்படும். பேஸ்பால், பியனீஸ், பெரெட்ஸ், ஃபெடோரா, பனாமா என தொப்பிகளில் பலவித ஸ்டைல்கள் உள்ளன.

பேன்டுகள் கீழே விழாமல் இருக்க பிடித்துக் கொள்ள அணிவது தான் பெல்ட். இவை சஸ்பெண்டாசின் மாற்று. கனமான துணி அல்லது ேதால் பொருட்களில் தயாரிக்கப்படுகிறது. மணிக்கட்டில் அணியப்படும் கைகடிகாரங்கள் தோல் பொருட்கள், மெட்டல் என பல வித ஸ்ட்ராப்களில் உள்ளன. கையில் எடுத்துச் செல்லும் பாக்கெட் கடிகாரங்கள் இருந்தாலும், கைகடிகாரம் வந்த பிறகு மக்கள் அதை விரும்புவதில்லை.

கையுறைகள், கைகளை மறைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடை. சீதோஷ்ண நிலை, வேலை செய்யும் இடங்கள் மற்றும் நம் சூழ்நிலைக்கு ஏற்ப அணியலாம். சால்வை, உடலின் மேல் மூடப்படும் துணி. ஸ்கார்வ்ஸ், கழுத்தை சுற்றி அணியும் ஒரு வகை துணி. பருத்தி, கைத்தறி மற்றும் கம்பளி உட்பட அனைத்து வகையான துணிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. சாக்ஸ், கால்களை பாதுகாக்க அணிவது. பெரும்பாலும் கணுக்கால் அல்லது முட்டி வரை நீளமுடையது. பாதங்களில் இருந்து வெளியேறும் வியர்வை உறிஞ்சவே பயன்படும் சாஸ்களில் சில வகை ஷூ அல்லது பூட்ஸ்களுக்கு அணிய பயன்படுத்தப்படுகிறது.

பாராசோல்ஸ் என்பது நாம் அன்றாடம் கையில் எடுத்து செல்லும் குடை. இது மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க உதவும். அதே போல் தலைமுடியில் அணியக்கூடிய ஹேர்பாண்ட், கிளிப், ஹேர் செயின், சின்ன கிரீடம் விசேஷங்களுக்கு ஏற்ப அணியலாம். இவை எல்லாம் பெண்கள் விரும்பும் அணிகலன்கள். பெண்களைப் போல் ஆண்களுக்கும் இவை உள்ளன. அவை என்ன என்று அடுத்த இதழில் தெரிந்து கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 22 வருசத்துக்கு முன்னாடி ரிலீஸ் பண்ணாலும் இப்பையும் பார்க்கலாம்!! (வீடியோ)
Next post குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)