எங்கே செல்கிறது இலங்கையின் பொருளாதாரம்? (கட்டுரை)

Read Time:11 Minute, 50 Second

கொவிட்-19 தொற்றுப் பரவல் இலங்கையில் இனங்காணப்பட்டது முதல் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது படிப்படியாக ஆரம்பமாகி தற்போதும் நீண்ட வண்ணமுள்ளது. ஆரம்பத்தில் வாகனங்கள், குளியலறை மற்றும் கழிவறை சாதனங்கள், தரைஓடுகள், மஞ்சள், உரம் போன்ற பொருட்கள் இவ்வாறான தடைக்குட்படுத்தப்பட்டிருந்தன.

சில பொருட்களின் இறக்குமதித் தடைக்கு, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவது தொடர்பில் மாற்றுக் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. சில பொருட்கள் இறக்குமதி காரணமாக அந்நியச் செலாவணி இருப்புக்கு நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் என காரணம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரத்தின் பிற்பகுதியிலும் மேலும் 623 பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, பொருட்களை இறக்குமதி செய்கையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் மீளச் செலுத்துவது எனும் புரிந்துணர்வின் அடிப்படையில் வங்கியிடமிருந்து கடன் கடிதம் (LC) திறக்கப்பட்டு, பின்னர் அதை குறித்த இறக்குமதியாளர் மீளச் செலுத்துவார். இது பெரும்பாலும் குறித்த வாடிக்கையாளருக்கும், வங்கிக்குமிடையே காணப்படும் நல்லுறவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இதுவரை காலமும் இந்த வழமை பின்பற்றப்பட்டு வந்தது.

ஆனாலும் தற்போதைய புதிய அறிவுறுத்தலின் பிரகாரம், இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான மொத்தப் பணத்தையும் வங்கிக்கு செலுத்தி கடன் கடிதத்தை (LC) திறக்க வேண்டியிருக்கும். இதிலுள்ள இரு விதமான சிக்கல் நிலைகள் காணப்படுகின்றன. இதுவரை காலமும் தமது வங்கியுடன் நல்லுறவைக் கட்டியெழுப்பியுள்ள இறக்குமதியாளர்கள் தாம் இறக்குமதி செய்ய எதிர்பார்க்கும் பொருட்களின் மொத்தப் பெறுமதியில் 50 சதவீதத்தை, 30 சதவீதத்தை போன்ற பகுதியளவு தொகையை வைப்புச் செய்தே ஆறு மாத காலப்பகுதிக்கு (180 நாட்களுக்கு) கடன் கடிதத்தை (LC) ஆரம்பித்திருந்தன. இதனால் அவர்கள் வைப்புச் செய்திருக்கும் தொகைக்கு வங்கியிடமிருந்து வட்டியும் வழங்கப்பட்டது. அதனூடாக இறக்குமதியாளருக்கு சிறு வருமானமும் கிடைத்தது. கடந்த வாரப் பிற்பகுதியில் வெளியாகியிருந்த மத்திய வங்கியின் அறிவித்தலின் பிரகாரம் தற்போது இந்த முறைமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதால், இறக்குமதியாளர்கள் மொத்தத் தொகையையும் வேறொரு வழியில் திரட்ட வேண்டியிருக்கும். அது வெளியே வட்டிக்கு பணம் பெற்று வைப்புச் செய்வதாகக் கூட இருக்கலாம். இதனால் இறக்குமதியாளருக்கு தாம் வெளியே கடனாக பெறும் தொகைக்கும் வட்டி செலுத்த வேண்டும் என்பதுடன், ஆறு மாத காலப்பகுதிக்கு கடன் கடிதத்தில் வைப்புச் செய்திருக்கும் தொகைக்கு இதுவரை காலமும் வங்கியால் வழங்கப்பட்ட வட்டியும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இதனால், இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவும் சுயமாக குறைவடையும். அரசாங்கத்தின் எதிர்பார்ப்பும் அதுவாகவே அமைந்திருக்கின்றது. வெளிப்படையாக கூறுவதானால், நாட்டுக்கு தற்போதைய அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், எரிபொருள், உணவுப் பொருட்கள் இறக்குமதிக்குக்கூட செலுத்துவதற்கு போதியளவு அந்நியச் செலாவணி இருப்பில் இல்லை. அல்லது நெருக்கடியான நிலை காணப்படுகின்றது எனக்கூறினால் அது தவறாகாது.

இவ்வாறிருக்கையில், இறக்குமதி குறைவதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு உள்நாட்டு சந்தையில் கேள்வி அதிகரிக்கும் போது அவற்றுக்கான தட்டுப்பாடு ஏற்படும், விலை அதிகரிக்கும். தற்போது உள்நாட்டு வாகன சந்தையில் அவ்வாறானதொரு நிலைமையை அவதானிக்க முடிகின்றது.

இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் அத்தியாவசியமற்றவை என அரசாங்கத்தினால் அல்லது மத்திய வங்கியினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தொலைக்காட்சி, சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டிகள், வாயு குளிரூட்டிகள், கையடக்க தொலைபேசிகள், இனிப்புப் பண்டங்கள், வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட உள்ளாடைகள் போன்ற பல அடங்கியுள்ளன.

இந்த இலத்திரனியல் சாதனங்களை எந்நாளும் நாட்டு மக்கள் கொள்வனவு செய்யாத போதிலும், கையடக்க தொலைபேசிகள் கொள்வனவில் மக்கள் அதிகளவு ஈடுபடுகின்றனர் என்றால் அது பிழையாகாது. குறிப்பாக, நாட்டில் தற்போது பாடசாலைகள் இயங்கவில்லை, பெருமளவான தொழில் புரிவோர் தமது வீடுகளிலிருந்து பணி புரிகின்றனர். இவர்களுக்கு கையடக்க தொலைபேசி, கணனி, ஸ்மார்ட் தொலைக்காட்சி போன்றன தமது கடமைகளை நிறைவேற்ற உறுதுணையாக அமைந்துள்ளன. அத்துடன், வீடுகளில் பாதுகாப்பாக இருங்கள் என கொவிட்-19 பரவலைக் காரணம் காண்பித்து, சுமார் ஒன்றறை வருட காலமாக மக்களை தமது வீடுகளுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நிலையில், தமது அன்புக்குரியவர்களுடன் தொடர்பை பேணவும், பொழுது போக்காக தொலைக்காட்சி பார்ப்பதிலும் பலரின் நாட்கள் கழிந்த வண்ணமுள்ளன.

குறிப்பாக நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கிராமத்திலுள்ளதைப் போன்று பெரிய தோட்டங்கள், வயல் வெளிகள் காணப்படுவதில்லை. அவர்களுக்கு கையடக்க தொலைபேசியும், கணனியும், தொலைக்காட்சியுமே பணிக்கும், பொழுது போக்குக்கும் துணை. இவற்றை இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வியக்க வைக்குமளவுக்கு வளர்ந்துவிட்ட நிலையில் சொகுசு பண்டங்கள் என வரையறுப்பது முறையாகாது.

இந்நிலையில் இவ்வாறான பொருட்களை எதன் அடிப்படையில் தற்போதைய சூழலில் அத்தியாவசியமற்ற பொருட்கள் என அரசாங்கம் அல்லது மத்திய வங்கி வகைப்படுத்தியுள்ளது என்பது கேள்வியை தோற்றுவித்துள்ளது. இந்த அறிவித்தல் வெளியாகிய மறுநாளிலிருந்து சில முன்னணி ஒன்லைன் விற்பனைத் தளங்களில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள கையடக்க தொலைபேசிகளின் விலை 550,000 ரூபாயையும் தாண்டியுள்ளது. அதாவது இந்த அறிவித்தல் வரும் முன்னர் அதன் விலை 300,000 ரூபாய்க்கும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் பாதிக்கப்படுவது நுகர்வோர்களே.

கொவிட்-19 தொற்றுப் பரவல் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது கட்டுப்பாடுகளை தளர்த்தி வழமை போன்று இயங்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக மேலேத்தேய நாடுகளில் நிலைமை வழமைக்கு திரும்பிய வண்ணமுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் நாளாந்தம் உலகம் முன்னேறிய வண்ணமுள்ளது.

இலங்கையில் இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் உலக ஓட்டத்துக்கேற்ப இலங்கையில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் உலக சந்தையில் புதிய நவீன தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில வாரங்களில் இலங்கையில் கிடைக்கும் சூழல் இதுவரையில் இருந்தது. ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாறும். இந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக நாட்டின் வளர்ச்சி ஸ்தம்பிக்கும். பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்பம், இலத்திரனியல் சாதனங்களின் பங்களிப்பு இன்றியமையாதது.

எனவே, இந்த அரசாங்களின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குபவர்கள் ஏன் தூர நோக்க சிந்தனையற்றவர்களாக இருக்கின்றனர் என எண்ணத் தோன்றுகின்றது. மனவிறக்கத்தியில் தமது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர். டபிள்யு. லக்ஸ்மன் ஊடகவியலாளர்களுக்கான தமது இராஜினாமா பற்றி அறிவிக்கும் உரையில் தெரிவித்தார். அந்த உருக்கமான உரையின் பின்னணியில் மத்திய வங்கியின் தீர்மானங்களில் அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவது புலனாகின்றது.

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் பதவியேற்கவுள்ளார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், அவரும் இதே நிலைப்பாட்டைக் கைக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மொத்தத்தில் இலங்கை பொருளாதாரத்தின் பயணம் என்பது மகிழ்ச்சிகரமானதாக இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓஹோ இதுக்கு காரணம் இதுதானா? (வீடியோ)
Next post சிறுநீரக கோளாறை போக்கும் சுரைக்காய்!! (மருத்துவம்)