கொழு கொழு கொழுக்கட்டை!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 12 Second

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். அன்று முக்கியமாக தேங்காய் மற்றும் எள்ளு பூரணம் கொண்டு கொழுக்கட்டை செய்வது வழக்கம். ஒரு சிலர் காரக் கொழுக்கட்டையும் செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள். விநாயகர் சதுர்த்தி மட்டுமில்லாமல் மற்ற நாட்களிலும் கொழுக்கட்டையை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போல் வீட்டில் செய்து கொடுக்கலாம். ஆவியில் வேக வைத்து செய்வதால் குழந்தைகளின் உடலில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் இந்த கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பாக செய்து குடும்பத்துடன் உண்டு மகிழ்வதற்காகவே தோழியருக்காக அதனை வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் சாயிநாதன்.

உப்புமா கொழுக்கட்டை

தேவையானவை :

பச்சரிசி உடைசல்- 1 கப்.

தாளிக்க:

எண்ணெய்- 4 ஸ்பூன்,
கடுகு- 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்,
கடலைப் பருப்பு- 3 ஸ்பூன்,
காயம்- 1 சிட்டிகை,
மிளகாய் வற்றல்- 2,
கறிவேப்பிலை- 6,
தேங்காய் துருவல்- 4 டீஸ்பூன்,
உப்பு- தேவைக்கு.

செய்முறை:

முதலில் வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துக் கொண்டு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், உப்பு சேர்த்து, அரிசி உடைசலை போட்டுக் கிளற வேண்டும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி ஆறவைத்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக விட்டு எடுக்க வேண்டும். இதற்கு சட்னி, சாம்பார் சுவையாக இருக்கும்.

கோதுமை மாவு கொழுக்கட்டை

தேவையானவை:

கோதுமை மாவு- 1 கப்,
உப்பு- 1 சிட்டிகை.

பூரணம் தயாரிக்க:

தேங்காய் துருவல்- ½ கப்,
வெல்லத் தூள்- ¼ கப்,
ஏலப்பொடி- 1 சிட்டிகை,
எண்ணெய்- 2 ஸ்பூன்.

செய்முறை:

முதலில் கோதுமை மாவை சிறிது நீர், சிறிது எண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெல்லத் தூள், தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்துப் பூரணம் கிளற வேண்டும். பின் கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சிறு கிண்ணங்களாகச் (செப்பு) செய்து, அதில் பூரணத்தை நிரப்பி கொழுக்கட்டைகளாகச் செய்து ஆவியில் வேகவிட வேண்டும். சுவையான கோதுமை கொழுக்கட்டையை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கும் நல்லது.

அரிசி மாவு கொழுக்கட்டை

தேவையானவை:

அரிசி மாவு- 1 கப்,
உப்பு- 1 சிட்டிகை.

பூரணம் தயாரிக்க:

தேங்காய் துருவல்- ½ கப்,
வெல்லத் தூள்- ¼ கப்,
ஏலப்பொடி- 1 சிட்டிகை.

செய் முறை:

பாத்திரத்தில் தண்ணீரை(திட்டமாக) கொதிக்கவைத்து, அதில் அரிசி மாவை போட்டு கிளற வேண்டும். மாவு வேகும்போதே சிறிது நல்லெண்ணெய் விட்டு கிளறினால் மாவு அதிகம் ஒட்டாமல் வரும். பின் மாவை ஆறவைத்து கிண்ணங்களாகச் செய்து கொண்டு, வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து கிளறிய பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி மாவால் செய்த கிண்ணத்தில் உள்ளே வைத்து கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும்.

பருப்பு பூரண கொழுக்கட்டை

தேவையானவை:

கடலைப் பருப்பு- 1 கப்,
தேங்காய் துருவல்- ¼ கப்,
வெல்லத் தூள்- ¼ கப்,
ஏலப்பொடி- 2 சிட்டிகை,
அரிசி மாவு- 2 கப்,
எண்ணெய்- 2 ஸ்பூன்.

செய்முறை:

கடலைப் பருப்பை நன்கு வேகவிட்டுக் கொண்டு ஆறியதும் தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை பாகு வைத்துக் கொண்டு, அதில் அரைத்த விழுதைப் போட்டு ஏலப்பொடி சேர்த்துக் கிளறி பூரணம் தயாரிக்க வேண்டும். பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விட்டு அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, அரிசி மாவைப் போட்டு கிளற வேண்டும். மாவு வெந்ததும், ஆறவிட்டு சிறு சிறு உருண்டைகளாக்கி அதையே கிண்ணம்போல் செப்புகளாகச் செய்து அதில் பூரணம் வைத்து மூடி ஆவியில் வேகவிட வேண்டும். இதுவே பருப்பு பூரணக் கொழுக்கட்டை.

ரவை கொழுக்கட்டை

தேவையானவை:

மைதாமாவு,
ரவை- தலா ½ கப்,
உப்பு- 1 சிட்டிகை.

பூரணம் தயாரிக்கத் தேவையானவை:

தேங்காய் துருவல்- ½ கப்,
வெல்லத் தூள்- ¼ கப்,
ஏலப்பொடி- 1 சிட்டிகை,
பொரித்தெடுக்க எண்ணெய்- ¼ லிட்டர்.

செய்முறை:

முதலில் ரவை, மைதா இரண்டையும் சிறிது நீர், சிறிது எண்ணெய் விட்டு கெட்டியாகப் பிசைந்து 1 மணி நேரம் ஊறவிட வேண்டும். தேங்காய், வெல்லத்தூள், ஏலப்பொடி சேர்த்து சிறிது நீர் தெளித்துப் பூரணம் தயாரிக்க வேண்டும். மாவை சிறு உருண்டைகளாக்கி அப்பளம் போல் இட்டு அதில் பூரணம் வைத்து மூடி கொழுக்கட்டைகளாக செய்து எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். இதுவே ரவை கொழுக்கட்டை.

எள்ளுப் பூரண கொழுக்கட்டை

தேவையானவை :

கருப்பு எள்- 1 கப்,
வெல்லம்- ¼ கப்,
ஏலப்பொடி- 2 சிட்டிகை,
அரிசி மாவு- 1 கப்,
உப்பு- 1 சிட்டிகை,
எண்ணெய்- 2 ஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் எள்ளைப் பட படவென்று பொரியுமாறு வறுத்துக் கொண்டு, எள்ளைப் பொடித்துக் கொண்டு பின் அத்துடன் வெல்லப் பொடி, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து பாத்திரத்தில் மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து மாவு வெந்ததும் இறக்கி ஆறவிட்டு சிறு உருண்டைகள் செய்து, அதைக் கிண்ணங்களாகச் செய்து கொள்ள வேண்டும். அந்தக் கிண்ணங்களில் (கொழுக்கட்டை செப்பு) எள் பூரணத்தை வைத்து நீளவாக்கில் மூடி ஆவியில் வேக விட்டு எடுக்க வேண்டும். இதுவே எள்ளுக் கொழுக்கட்டை

இனிப்புப் பிடிக் கொழுக்கட்டை

தேவையானவை:

அரிசி மாவு- 1 கப்,
வெல்லத் தூள்- ¼ கப்,
ஏலப்பொடி- 2 சிட்டிகை,
தேங்காய் பல்- 2 ஸ்பூன்.

செய்முறை:

பாத்திரத்தில் வெல்லத்தூள் ¼ கப்பில் ¼ கப் நீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அதில் மாவு, தேங்காய் பல், ஏலப்பொடி சேர்த்து கெட்டியாகக் கிளறவும். நீர் போதவில்லையெனில் சிறிது தெளித்துக் கொள்ளலாம். ஆறியதும் கைகளில் எடுத்துப் பிடித்துப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து வேக விட்டு எடுக்க வேண்டும். இதுவே இனிப்புப் பிடிக் கொழுக்கட்டை.

அம்மணி கொழுக்கட்டை

தேவையானவை:

அரிசிமாவு- 1 கப்,
உப்பு- 1 சிட்டிகை.

தாளிக்க:

எண்ணெய்- திட்டமாக,
கடுகு- 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு- 2 ஸ்பூன்,
பெருங்காயம்- 1 சிட்டிகை,
கறிவேப்பிலை- 4 இலைகள்,
காரப்பொடி- தேவைக்கேற்ப.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நீரூற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் மாவைப் போட்டுக் கிளற வேண்டும். ஆறியதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக சீடைபோல் உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்க வேண்டும். பிறகு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, உருண்டைகளை போட்டு காரப் பொடி சேர்த்துப் பிரட்டி எடுக்க வேண்டும். இதுவே அம்மணிக் கொழுக்கட்டை.

உளுந்து பூரண கொழுக்கட்டை

தேவையானவை :

உளுத்தம் பருப்பு- 1 கப்,
பச்சைமிளகாய்- 4,
உப்பு- தேவையான அளவு ,
பெருங்காயத்தூள்- 2 சிட்டிகை,
அரிசி மாவு- 2 கப்.

தாளிக்க:

எண்ணெய்- 2 ஸ்பூன்,
கடுகு- 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை- 4 இலைகள்.

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக வடைக்கு அரைப்பது போல் அரைத்துக் கொண்டு, அதை ஆவியில் வேகவிட்டு உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை கிள்ளி தாளிக்க வேண்டும். பாத்திரத்தில் மாவை நீர்விட்டு 1 சிட்டிகை உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு, அரிசி மாவை போட்டு கட்டிதட்டாமல் நன்கு கிளற வேண்டும். மாவு வெந்ததும் ஆற வைத்து சிறு ஊருண்டைகளாக எலுமிச்சை சைஸில் உருட்டி கிண்ணம் செய்து அதில் செப்பு கொள்ளுமளவிற்கு பூரணம் வைத்து மூடி (நீள ஷேப்பில்) ஆவியில் வேகவிட வேண்டும். அதுவே உளுந்து பூரண கொழுக்கட்டை.

பால் கொழுக்கட்டை

தேவையானவை:

பச்சரிசி- 1 கப்,
தேங்காய் துருவியது- ½ கப்,
ஏலப்பொடி- 1 சிட்டிகை,
தூள் வெல்லம்- 1 கப்.

செய்முறை:

பச்சரிசியை நன்கு ஊறவைத்து களைந்து வடிகட்டி அதோடு தேங்காய்த் துருவலையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெல்லத் தூளை திட்டமாக நீர் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். அதில் ஏலப்பொடி சேர்க்க வேண்டும். கொதிக்கும் போதே அதில் நைசாகவும், கெட்டியாகவும் அரைத்து இருக்கும் விழுதை சிறு சிறு சீடைகளாக கொஞ்சம் உருட்டிப் போட்டுக் கிளறி மீண்டும் சிறிதளவு உருட்டிப் போட்டுக் கிளற வேண்டும். அதாவது முதலில் உருட்டிப் போட்டவை சிறிது வெந்ததும் மீண்டும் ஒரு முறை போட்டுக் கிளற வேண்டும். இதுபோல் செய்தால் கூழ்போல் ஆகாமல் தனித்தனி உருண்டைகளாகவும், வெல்லத் தண்ணீர் சுவையுடனும் பால் கொழுக்கட்டை சூப்பராக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பாரம்பரியத்தின் அடுக்குகள்!! (மகளிர் பக்கம்)