ஆப்கானிஸ்தான்: ஒரு முடிவும் ஒரு தொடக்கமும் !! (கட்டுரை)
சில வாரங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் அரங்கேறியவை பலர் எதிர்பாராதது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானில் தொடங்கியது, ஒரு முழுச் சுழற்சியை நிறைவுசெய்து, தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆப்கானை நிறுத்தியுள்ளது. இந்த 20 ஆண்டுகளில் உலகம் மாறிவிட்டது. அரசியல்ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்த மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்தப் பின்புலத்தில், இப்போதைய நிலைவரத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? நீண்ட நெடிய போரில் இருந்தான அமெரிக்காவின் வெளியேற்றம் சொல்லுகின்ற செய்தி என்ன?
இலங்கையில் குறிப்பாகத் தமிழர்களினதும் தாராண்மைவாதிகளினதும் மிகவும் நம்பிக்கைக்குரிய ‘சர்வதேச சமூகத்தின்’ நடத்தை எதை விளக்குகிறது?
ஒடுக்கப்படும் சமூகங்களின் விடுதலைக்கான பாதையை, இந்தப் புதிய ஒழுங்கில் எவ்வாறு கட்டமைப்பது?
இக்கேள்விகள் அனைத்தினதும் அடிப்படையில் உருவாகின்ற புதிய திசைவழிகளும் உருவாகும் அரங்குகளும் அதன் அரங்காடிகளும் ஏற்படுத்தப்போகும் புதிய ஒழுங்கின் முரண்பாடுகள் கட்டமைக்கும் போரொழுங்கின் முதலாவது அத்தியாயத்தை ஆப்கானிஸ்தான் பரிசளித்திருக்கிறது.
இவை குறித்து, ஆழமான வரலாற்றுப்புலம், அரசறிவியல் கோட்பாட்டுருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நோக்கும் முயற்சியே இத்தொடர் ஆகும்.
2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல் ஏற்படுத்திய அதிர்ச்சியின் எதிர்வினையே, ஆப்கான் மீதான அமெரிக்காவின் போர்.
இந்தத் தாக்குதல் இரண்டு விடயங்களைச் சாதித்தது. முதலாவது, கெடுபிடிப்போரின் பின்னரான உலக ஒழுங்கின் தனிப்பெரும் தலைவனாகவும் பாதுகாப்பு, உளவுபார்த்தல் ஆகியவற்றின் நாயனாகவும் தன்னை உருவகப்படுத்திக் கொண்டிருந்த அமெரிக்காவின் பிம்பத்தை உடைத்தது.
இரண்டாவது, தன்னைத் தன்னிகரல்லாத தலைவனாகக் காட்டிக்கொள்ள ‘பயங்கரவாத்துக்கு எதிரான போர்’ என்ற ஒன்றைத் தொடங்கி, அச் செல்நெறியைப் பொதுமையாக்கியது. “நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்; அல்லது, பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள்” என்ற அன்றைய அமெரிக்க ஜனாதிபதியின் வார்த்தைகள், அமெரிக்காவுக்கு ஆதரவு தராதவர்கள் பயங்கரவாதிகள் என்ற கதையாடலை உருவாக்கியது.
இரட்டைக் கோபுரத் தாக்குதல்கள் குறித்த பல கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. ஆனால், எழுப்பப்பட்ட சந்தேகங்கள் நியாயமானவை. அதில், சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
இவ்வளவு நுட்பமாக ஒரு தாக்குதலை நடத்துவதற்கான திட்டமிடலும் அதை உலகின் தலைசிறந்த உளவு நிறுவனங்கள் உள்ள அமெரிக்காவில் செய்து முடிப்பதும், அமெரிக்காவுக்குள் எவருடைய உதவியும் இல்லாமல் நடந்திருக்க இயலுமா?
அத்தாக்குதல், இஸ்லாமிய தீவிரவாதிகள் எவரும் இலக்கு வைக்க விரும்பக்கூடிய யூதப் பெருவணிகர்கள், கட்டடத்துக்குள் நுழைவதற்கு முன்னரே ஏன் நடந்தது?
இத்தாக்குதல், அமெரிக்கப் பொருளாதாரத்துக்குக் குறிப்பிடத்தக்க தீங்கு எதையும் செய்துள்ளதா? இதனால், உலகின் ஆயுதப் பெரு வல்லரசு என்ற அமெரிக்காவின் தகுதிக்கு, எவ்விதமான கேடும் நேர்ந் துள்ளதா? இவை நியாயமான கேள்விகளே! ஆனால், இதன் பொருள் இதை இஸ்லாமியத் தீவிரவாதிகள் செய்யவில்லை என்ற வாதமில்லை என்பதையும் அடிக்கோடிட வேண்டும்.
பல அமெரிக்க ஆய்வாளர்கள், மூன்று முக்கியமான விடயங்களைத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டிய வண்ணம் உள்ளார்கள்.
முதலாவது, இரட்டைக் கோபுரத்தின் மீது நடந்த விமானத் தாக்குதல் பற்றிய பல உண்மைகள், இன்னமும் அமெரிக்க மக்களுக்குக் கூறப்படவில்லை. தகவல்கள் மறைக்கப்படுவது, சந்தேகங்களை அதிகரிக்கின்றதேயன்றி தீர்க்கவில்லை.
இரண்டாவது, அமெரிக்க அரசின் உளவு நிறுவனம் ஒன்று, அமெரிக்க முதலாளி வர்க்கத்தில் எவருக்கும் உடல் சேதம் இல்லாமல் ஒரு பயங்கர படுகொலையை நடத்தியிருக்க இயலாதா என்பது, நாம் புறக்கணிக்கக்கூடிய வினாவல்ல.
மூன்றாவது, இத்தாக்குதல் அமெரிக்க பொருளாதாரத்துக்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பையோ, பின்னடைவையோ ஏற்படுத்தவில்லை.
இவ்விடத்தில், பேராசிரியர் மிசல் சவ்சிடொஸ்கி எழுதிய ‘America’s “War on Terrorism’ என்ற நூல் சில முக்கியமான வாதங்களை முன்வைக்கிறது. இதன்படி, அமெரிக்கா முன்னெடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமென்பது, ஆண்டொன்றுக்கு 40 பில்லியன் அமெரிக்க டொலர் செலவழிக்கின்ற அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தை, ஒசாமா பின்லாடன் என்ற ஒரு தனிமனிதன் மிஞ்சினான் என்ற மாயையில் கட்டமைக்கப்பட்டது. அமெரிக்கப் பெரு நிறுவனங்களாலும், இராணுவ-வர்த்தகக் கூட்டாளிகளாலும் முன்னெடுக்கப்பட்ட உலகைச் சுரண்டுவதற்கான ஒரு முன்னேற்பாடே இது. இந்தப் புத்தகம், ஒசாமா பின்லாடன் இருந்த பாகிஸ்தான் வீட்டின் புத்தக அலுமாரியில் இருந்த புத்தகங்களில் ஒன்றாகும்.
இதன் பின்னணியிலேயே, 9ஃ11 தாக்குதலின் எதிர்வினைகளை நோக்க வேண்டியுள்ளது. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளுக்கிடையிலான கெடுபிடிப்போர் முடிவடைந்து, ஒரு தசாப்தகாலம் நிறைவடைந்திருந்த நிலையில், அமெரிக்கா தனது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் விரிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் அதற்கான தர்க்க நியாயத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.
இந்நிலையில், இத்தாக்குதல் அமெரிக்காவின் ஆதிக்க முனைப்பை நியாயப்படுத்துவதற்கான ஒரு வலிய கருவியாகியது. இதன் வழி, அமெரிக்காவால் ஒரு புதிய உலக ஆதிக்க வேலைத் திட்டத்தைத் தொடக்கி வைக்க முடிந்துள்ளது. அத்துடன், திருப்பித் தாக்கும் வலிமையற்ற எந்த நாட்டின் மீதும், எவ்வித நியாயமுமின்றி போர் தொடுக்க அதற்கு இயலுகிறது.
9/11 தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. ஆனால், அதுகுறித்துப் பேசப்படவில்லை. ஆப்கானிஸ்தான் மீதே ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கப்பட்டது.
“தாக்குதலுக்குக் காரணமான ஒசாமா பின்லாடனும் அல்கைடாவும் ஆப்கானில் இருக்கிறார்கள். எனவே, அவர்களை அழித்து, அவர்களுக்கு ஆதரவான தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றவே போர்” என்று அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கூறினார்கள். ஒரு தசாப்தற்கு முன்னர், ஆப்கானில் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்ட ஓர் ஆட்சியைக் கவிழ்க்க, அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஊட்டி வளர்த்த தலிபான்களையே, அமெரிக்கா எதிரியாக்கியது என்பது முரண்நகை.
இன்று, 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மேற்குலகில் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்த பயங்கரவாத்துக்கு எதிரான யுத்தமும், அதைச் சூழந்து கட்டமைக்கப்பட்ட கதையாடல்களும் அமெரிக்க – ஐரோப்பிய சமூகங்களில் இரண்டு விடயங்களைச் சாதித்துள்ளன.
முதலாவது, பொதுமையாக்கப்பட்டுள்ள ‘இஸ்லாமியப் பகைமை’. இரண்டாவது, முனைப்படைந்து முன்னிலைபெற்றுள்ள வெள்ளை நிறவாத அரசியலின் எழுச்சி.
கடந்த இரண்டு தசாப்தகாலத்தில், இஸ்லாமியப் பகைமை மேற்குலகையும் தாண்டி உலகின் பலநாடுகளில் முக்கிய போக்காக உள்ளது. மறுபுறம், வெள்ளை நிறவாதம், அரசியலின் மைய நீரோட்டத்தின் பகுதியாகி உள்ளது. மேற்குலகம் கொண்டாடிய ‘பன்மைத்துவ சமூகத்துக்கு’ வேட்டு வைத்துள்ளது.
கவனிப்புக்குரியது யாதெனில், இவ்விரண்டும் பாசிசத் தன்மைகளைக் கொண்டவை. அதனோடு சேர்ந்து, ஜனநாயக மறுப்பும் புதிய வடிவங்களில் நிறுவனமயமாகிறது. ஐரோப்பாவில், நவ பாசிசம் புதிய உத்வேகம் பெற்றுள்ளது. நிறவாதமும் அந்நிய குரோதமும் பொருளாதார நெருக்கடியாலும் பெருந்தொற்றாலும் வலுப்பெற்றுள்ளன.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பங்காளியாவதன் மூலம், அரசுகள் தாம் எதிர்நோக்கும் நெருக்கடிகளை, சவால்களை பயங்கரவாதம் என முத்திரை குத்துவது நடந்துள்ளது. இது, பல விடுதலைப் போராட்டங்களுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பல விடுதலைப் போராட்ட அமைப்புகள், இயக்கங்கள் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கு உவப்பற்ற நாடுகள், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டன. ஆப்கானில் தொடங்கிய பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம், மிகக்குறைவான காலத்தில், ‘பயங்கரவாத்துக்கு எதிரான உலகளாவிய போர்’ என்ற சொல்லாடலால் அழைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி, போர்களும் தாக்குதல்களும் ஆப்கானைத் தாண்டி அரங்கேறத் தொடங்கின.
ஒருபுறம் ஈராக், லிபியா, சிரியா என்று ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. மறுபுறம், பல நாடுகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு நல்ல உதாரணம், சூடானில் ஒரு மருந்துப் பொருள் உற்பத்தி தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலும் தென் சூடானில் பிரிவினைவாத ஊக்குவிப்பும் அங்கும் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை நோக்காக் கொண்டிருந்தன.
Average Rating