குடலிறக்கம் யாருக்கு ஏற்படும்?! (மருத்துவம்)
நம் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் தசைகளானது இணைப்பு திசுக்களின் சுவரால் சூழப்பட்டுள்ளன. இதனால் அந்தந்த உறுப்புகளை அவற்றின் இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன. சிலருக்கு இந்த திசுக்களின் சுவரில் கிழிசலோ அல்லது துளையோ உருவாகலாம். மேலும் அதன் வழியாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள் உறுப்புகளின் ஒரு பகுதி துளைக்கு வெளியே நீண்டும் வெளியேறுகிறது. இந்த நிலையினையே குடலிறக்கம் என்றும் அதனால் ஏற்படும் வீக்கம் குடலிறக்கப்பை (Hernial sac) என்றும் சொல்கிறோம். குடலிறக்கத்திற்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, அறிகுறிகள் ஏற்பட்டவுடன் சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
குடலிறக்கத்தில் சில வகைகள்
குடலிறக்கம் ஏற்படும் இடத்தின் அடிப்படையிலும் அதன் காரணம் மற்றும் சம்பந்தப்பட்ட உறுப்புகளின் அடிப்படையிலும் குடலிறக்கத்தில் பல வகைகள் மற்றும் துணை வகைகள் உள்ளன. குறிப்பாக மிகவும் பொதுவான ஒரு குடலிறக்க வகையாக கவட்டைக் குடலிறக்கம், தொப்புள் குடலிறக்கம், கீறல் குடலிறக்கம் என பல வகைகள் உள்ளன.
காரணிகள் என்ன?
அடைப்புச்சுவரில் உள்ள தசைகள் பிறந்ததிலிருந்தே சிலருக்கு பலவீனமாக இருக்கலாம். ஊட்டச்சத்து குறைவு காரணமாக பிற்காலத்திலும்
பலவீனமடையலாம். இதேபோல் கனமான பொருட்களை தவறான முறையில் தூக்குதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தொடர்ச்சியான வாந்தி, இருமல், புரோஸ்டேட் வீக்கம், மோசமான உணவுப் பழக்கம், புகைப்பழக்கம், உடல் பருமன், நுரையீரல் நோய், டயாலிசிஸ், கர்ப்பம், பல பிரசவங்கள், வயிற்று அறுவை சிகிச்சைகள், முதுமை போன்ற காரணிகளால் குடலிறக்க இடர்பாடு அதிகரிக்கும்.
அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்
குடலிறக்கத்தின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து கீழ்காணும் அறிகுறிகள் தோன்றும்.
* பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு புடைப்பு அல்லது வீக்கம். இந்த வீக்கம் படுத்திருக்கும்போது அவ்வீக்கம் மறைந்துவிடும்.
* நிற்கும்போது, குனியும்போது, தும்மும்போது அல்லது இருமும்போது தொடும்போது உணரத்தக்க குடலிறக்கம்.
* நெஞ்செரிச்சல், மார்பு வலி மற்றும் விழுங்குவதில் சிரமம்.
* நிற்கும்போதோ, குனியும்போதோ, சற்று சிரமப்படும் போதோ அல்லது கனமான எடைகளைத் தூக்கும்போதோ ஏற்படும் வலி மற்றும் அசௌகரியம்.
* வலித்தாலும் தொடும்போது மென்மையாக இல்லாத குடலிறக்கம்.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
குடலிறக்கம் ஏற்பட்டதாக சந்தேகம் வந்தவுடன் அறுவைசிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும். நிலை தீவிரமடையும் முன்பு அதைச் சரிசெய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகும். சிக்கலற்ற குடலிறக்கங்களை திட்டமிடப்பட்ட முறையில் பாதுகாப்பாக குணப்படுத்தலாம்.
நோயறிதல் மற்றும் சிகிச்சை
மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு தெரிந்தால் இரைப்பைக் குடலியல் துறையை அணுகவும். உடல் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், பேரியம் எக்ஸ்ரே, எண்டோஸ்கோபி பரிசோதனைகளின் மூலம் குடலிறக்கம் உறுதியாகும்.நோயின் தீவிரத்தைப் பொறுத்து திறந்த நிலை குடலிறக்க அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை முறையில் குணமடையலாம்.
Average Rating