இந்த மண்ணில் வாழ இவர்களுக்கு முழு உரிமையுண்டு! சுதா ஆத்மராஜ்!! (மகளிர் பக்கம்)
‘‘புயல், சுனாமி, வெள்ளம், கொரோனா போன்ற இயற்கையால் ஏற்படும் பேரிடர்களை மனித இனத்தால் அவ்வளவு எளிதாக சமாளிக்க முடியாது என்பது நிதர்சன உண்மை. ஆனால் எவ்வளவு துன்பம் மற்றும் துயரங்கள் ஏற்பட்டாலும், இந்த குறுகிய வாழ்நாளில் அன்பு, கருணை, சகிப்புத்தன்மை போன்றவற்றை மக்கள் மனதில் விதைக்க வந்தவர்கள் தான் சிறப்பு குழந்தைகள்’’ என்கிறார் அவர்களின் சிறப்பை உணர்ந்த சுதா ஆத்மராஜ். இவர் சிறப்பு குழந்தைகளுக்காக தனது மகன் பெயரில் ஒரு அமைப்பை அமைத்து அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக வாழ்ந்து வருகிறார்.
‘‘எங்களின் மூத்த மகன், பெயர் அரவிந்த். அவன் பிறக்கும் போதே சிறப்பு குழந்தையாகத்தான் பிறந்தான். மற்ற சராசரி குழந்தைகள் போல் அவனுடைய மூளை வளர்ச்சி இல்லை. அதாவது மூளை முடக்கு வாதம் பிரச்னை இருந்தது அவனுக்கு. மூளைக்கு செல்லக்கூடிய பிராணவாயு குறைபாட்டால் இந்த பிரச்னை ஏற்படும். அரவிந்த் பிறந்த சில மாதங்களிலேயே அவனுடைய பிரச்னை என்ன என்று நாங்க தெரிந்து கொண்டோம். அது மட்டுமில்லாமல், அவனை மற்ற குழந்தைகள் போல் சாதாரணமாக வளர்க்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டோம் நானும் என் கணவரும். அதே சமயம் வீட்டிலேயே அவனை முடக்கி வைத்திட முடியாது. அவனுக்கு என்று சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
சொல்லப்போனால் மற்ற குழந்தைகளை காட்டிலும் அவனுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தி வேறுமாதிரியாக வளர்க்க வேண்டும். அவனுக்கான சிறப்பு பயிற்சி பள்ளியும் தேர்வு செய்தோம். அவனை அங்கு அழைத்து சென்ற போது தான், அரவிந்தைப் போல் நிறைய குழந்தைகள் இந்தப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். பல சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் அறியாமை, வறுமை, இயலாமை என்று மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். குழந்தைகளை பயிற்சி நிறுவனங்களுக்கு அழைத்து வரக்கூட அவர்களிடம் போதிய வசதி இல்லை. சிலர் மருந்து வாங்க கூட பணம் இல்லாமல் தவித்தார்கள். எங்களுக்கு அங்குள்ள மற்ற குழந்தைகளைப் பார்க்கும் ேபாது, அரவிந்தின் மறு உருவமாகத்தான் தெரிந்தது.
அதனால் எங்களால் முடிந்த உதவியினை அந்த குழந்தைகளுக்கு செய்து வந்தோம். அந்த சமயத்தில் தான் என் கணவர்… இப்படி ஒவ்ெவாரு குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து செய்வதை விட… ஒரு அமைப்பாக ஆரம்பித்தால், பல குழந்தைகளுக்கு நம்மால் வழிகாட்ட முடியும்ன்னு யோசனை சென்னார். எனக்கும் அது சரின்னு படவே… அரவிந்தின் 7 வயதில் நானும் எனது கணவரும் இணைந்து அவன் பெயரிலேயே ‘அரவிந்த் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம்’’ என்றவர் இதன் மூலம் பல குழந்தைகளுக்கு செயல்முறை பயிற்சிகள் அளித்து வருகிறார்.
‘‘அரவிந்த் போல் பல குழந்தைகள் இருந்தாலும், அவர்களால் இது போன்ற அமைப்பினை ஆரம்பிக்க முடியுமான்னு தெரியாது. ஆனால் எனக்கும் என் கணவருக்கும் இந்த குழந்தைகளுக்கு நாங்க சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தான் கடவுள் அரவிந்தை எங்களிடம் அனுப்பியதாக நினைப்பது உண்டு. அன்று நாங்க விதைத்த ஒரு மரம் இன்று அரவிந்த் நிகேதன், அரவிந்தாலயம் என்ற பெயர்களில் சென்னை மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, கொடைக்கானல் போன்ற ஊர்களிலும் கிளைகளாக படர்ந்துள்ளது.
தற்போது எங்கள் மகனுக்கு 23 வயது ஆகிறது. அவனுடைய குறைப்பாட்டினை குணப்படுத்த முடியாது. அவனுடைய வாழ் நாள் முழுதும் இந்த நிலை தொடரும் என்றாலும், அவனால் மற்றவர்களின் உதவி இல்லாமல் சில விஷயங்களை செய்து கொள்ள முடியுமளவிற்கு அவனை நாங்க தயார் படுத்தி இருக்கிறோம்’’ என்றவர் தங்களின் அமைப்பு மூலம் இந்த குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி பற்றி விவரித்தார்.
‘‘சிறப்பு குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையான பல் துலக்குவது, சட்டை போடுவது, தலை சீவுவது என அவர்கள் அன்றாடம் செய்யக்கூடிய பணிகளை அவர்களே செய்ய கற்றுத் தருகிறோம். இதை செயல்பாட்டு கல்வி எனலாம். இவர்களுக்கு உணர்ச்சி சார்ந்த பயிற்சியும் அளிக்க வேண்டும். காரணம் இதுபோன்ற குழந்தைகளுக்கு மற்றவர்கள் சாதாரணமாக தொட்டால் கூட அவர்கள் கூச்சமாக உணர்வார்கள். காரணம் பொதுவாக சிறப்பு குழந்தைகளுக்கு கண், காது, மூக்கு போன்ற ஐம்புலன்களில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டிருக்கும். அதை நாம் புரிந்து கொண்டு பயிற்சி தரவேண்டும்.
அதற்கு பின்பு உடல், மனம் ஒன்றாக செயல்பட யோகாசன பயிற்சிகள் அவர்களுக்கு அவசியம். அடுத்த கட்டமாக படிப்படியாக அவர்களின் திறமைக்கு ஏற்ப தொழில் பயிற்சி அளிக்கிறோம். இந்த குழந்தைகள் வாழ்க்கை முழுவதும் பெற்றோர்களை சார்ந்து வாழ முடியாது. அவர்களின் திறமைக்கு ஏற்ற தொழில் கற்றுக் கொண்டால் அதனால் கிடைக்கக்கூடிய வருமானம் கொண்டு அவர்கள் எதிர்காலத்தில் யாருடைய உதவி இல்லாமல் வாழ முடியும்.
மெழுகுவர்த்தி தயார் செய்வது, அலங்கார நகைகள் செய்வது, பேப்பர் பேக், அலுவலக பராமரிப்பு, டெய்லரிங், தோட்டத்தை பராமரித்தல், பாக்குமட்டையில் இருந்து பொருட்கள் செய்வது, மசாலாப் பொடிகள் செய்வது என அவரவர் ஆர்வம் மற்றும் திறமைக்கு ஏற்ப கற்றுத்தருவோம். எங்களிடம் பயிற்சி பெற்ற சில குழந்தைகள் தற்போது மாவு அரைத்து வீடு வீடாக கொடுத்து தொழில் செய்து வருகிறார்கள். ஒரு சில குழந்தைகள் கடைகளில் வேலை செய்கிறார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து தருவது மற்றும் அதற்கான பணத்தை சரியாக பெற்றுக் கொண்டு, மீதி சில்லறைகளை சரியாக கொடுக்கிறார்கள். அதற்கான பயிற்சியும் நாங்க சொல்லித் தருகிறோம். மேலும் எங்கள் குழந்தைகள் தயார் செய்யும் பொருட்களை அரவிந்த் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து அவர்களுக்கு ஒரு வருமானம் ஏற்படுத்தி வருகிறோம்.
எங்களைப் பொறுத்தவரை சிறப்பு குழந்தைகளுக்கு உடல் பயிற்சி, மனப் பயிற்சி, தொழில் பயிற்சி என்று அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்தால் சாதாரண மக்களைப்போல் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்பது அனுபவப்பூர்வ உண்மை. அவர்களுக்கும் இந்த மண்ணில் வாழ முழு உரிமையுண்டு. நான் சொல்வது ஒன்று தான் நமக்கு இவர்கள் பிறந்துவிட்டார்கள் என்று பெற்றோர்கள் மனம் உடைந்துவிடாமல், அவர்களை ஒரு மூளையில் முடக்கிவிடாமல் பராமரித்து வழிகாட்டுவது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும்.
சிறப்பு குழந்தைகளுக்கு தாய் மட்டுமல்லாமல் தந்தை, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற அனைத்து உறவுகளின் அன்பும் அரவணைப்பும் மிகவும் அவசியம். நங்கள் எதிர்காலத்தில் அரவிந்த் வில்லேஜ் என்று ஒரு அமைப்பை தொடங்க உள்ளோம். அங்கு சிறப்பு குழந்தைகள் பெற்றோருடன் இருந்து கொண்டே தேவையான பயிற்சியை பெற முடியும்’’ என்ற சுதா ஆத்மராஜ் பெண் சாதனையாளர் விருது, பரிவு கலாம் விருது, ஸ்பிரிட் ஆப் ஹியுமானிட்டி விருது, துருவா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
Average Rating