நடிப்புதான் எனக்கு தெரியும்… அதனால் குதித்துவிட்டேன்!! (மகளிர் பக்கம்)
‘‘சின்ன வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த சன் டி.வியில் இப்போது என் முகமும் ஒளிபரப்பாகிறது எனும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் நடிகை, மாடல், செய்தி வாசிப்பாளர் என பன்முகம் கொண்ட மலர்.
‘‘அம்மா இல்லத்தரசி, அப்பா ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர். அண்ணா கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று, கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுகிறார். சொந்த ஊர் கோவை. அங்குள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் தான் என் படிப்பை முடித்தேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மலர், மீடியா துறைக்கு வந்ததற்கான காரணத்தை கூறினார்.
“சின்ன வயதிலிருந்தே பெரிய திரையில் வர வேண்டும் என்கிற ஆசை இருந்தது. பள்ளி படிக்கும் போது காலை பிரேயரில் கடவுள் வாழ்த்து, செய்து வாசிப்பது, திருக்குறள் சொல்வது என அத்தனையிலும் பங்கெடுப்பேன். அதோடு வகுப்பிலும் தமிழில் ஏதாவது வாசிக்க சொன்னால் முதல் ஆளாக எழுந்து வாசிப்பேன். தமிழ் மீது ஆர்வம் அதிகம். எ
னக்கு எப்படியும் மீடியாவில் வந்துவிட வேண்டும் என்று ஆசையும், ஆர்வமும் இருந்தாலும் இந்த துறைக்கு வருவதில் அப்பா, அம்மாக்கு பிடிக்கவில்லை. அவர்களிடம் எடுத்து சொல்லி, நம்பிக்கையை ஏற்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைத்து வந்தேன். இந்த துறையும் எனக்கு பிடித்திருக்கு. பிடித்த தொழிலை செய்து கொண்டிருக்கும் போது யாருக்காகவும் விட்டு கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.
கண்ணிற்கு காஜல் போட்டால் கூட அம்மா திட்டுவாங்க. அவங்க முன்னாடி மேக்கப் கூட பண்ணக் கூடாது. ஆனால், இப்போது என் வேலை மேக்கப்பில் தான் இருக்கிறது. எனக்கு எப்போதும் சுயமாக நிற்க வேண்டும். கல்லூரியில் பி.காம் படிக்கும் போதே, மாலை நேரங்களில் அருகில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பேன். அதில் வரும் வருமானத்தை என் செலவுகளுக்கு வைத்துக் கொள்வேன்.
அப்படி இருந்தாலும் மாலை ஆறு மணிக்கு மேல் இருட்டு என்றால் ரொம்ப பயம். அந்த பயத்தை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக போக்கியது நான் வெளி உலகிற்கு வந்த பின் தான். இப்போதெல்லாம் செய்தி வாசித்துவிட்டு இரவு காரில் தனியாகத்தான் பயணிக்கிறேன்” என்கிற மலர், செய்தி வாசிக்க கற்றுக் கொண்ட விஷயம் பற்றி கூறுகையில்…
‘‘மீடியா வேலைக்காக சென்னையும் வந்தாச்சு. அடுத்து என்ன செய்ய வேண்டும், யாரை பார்க்க வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை. அந்த சமயத்தில் தான் நான் இருந்த ஹவுஸ் ஓனர் ஆன்டியின் கணவர் எஸ்.ஐ-யாக இருந்தார். அவரிடம் செய்திக்கு கீழ் வரும் ஸ்கார்லிங்கை பார்த்தும், செய்தி தாள்களையும் சத்தமாக வாசித்தும் காட்டுவேன். நான் வாசிப்பது செய்தி வாசிப்பது போல் இருக்கிறதா என்று அவரிடம் தான் கேட்பேன்.
அவரும் சில விஷயங்களை சுட்டிக் காட்டுவார். இப்படியே வாசித்து ஓரளவு எனக்கு நம்பிக்கை வந்த பிறகு ஒவ்வொரு செய்தி சேனல்களிலும் என்னுடைய பயோடேட்டாவைக் கொடுத்து காத்திருந்தேன். ஏனெனில் அனுபவம் மற்றும் இதற்கான பிரத்யேக பயிற்சி ஏதும் எடுக்காததால் என்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு தேவைப்பட்டது. அதை பூர்த்தி செய்யும் வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அழைத்தார்கள்.
அங்கு ஆரம்பித்த பயணம் இப்போது சன் செய்தியில் வாசிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது’’ என்கிற மலர், நடிப்பு துறைக்கு வாய்ப்பு வந்த காரணத்தை கூறினார். “நான் முதன் முதலில் சேர்ந்த தனியார் தொலைக்காட்சியில்… செய்தி வாசிக்கும் போது, ‘உங்களுக்கு நடிக்கவும் விருப்பம் இருக்கா’ன்னு கேட்டாங்க. என் கனவே அதுதானே! எப்படி இல்லை என்று சொல்வேன்! நிறைய விளம்பரப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமைந்தது.
அதை பார்த்து திரைப்படங்களிலும், சீரியல்களிலும் வாய்ப்புகள் வந்தது. ஆனால் வீட்டில் விட வில்லை. அவர்களிடம் சொல்லி புரிய வைக்க கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. அதற்காக நான் செலவிட்ட நேரம் வீண் போகவில்லை. சன் டி.வியில் இருந்து புதிதாக ஒரு சீரியலுக்கு ஆடிஷன் அழைத்தார்கள். நானும் கலந்து கொண்டேன். ‘ரேகா கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பீங்க’னு சொன்னாங்க. அதன் பின் அந்த கதாபாத்திரத்தை பற்றி சொல்லும் போது ரொம்பவே பிடித்துவிட்டது.
இப்போது ‘தாலாட்டு’ சீரியலில் மெயின் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது செய்தி வாசிப்பு, விளம்பர படங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. வீட்டில் கொஞ்சம் சப்போர்ட் எல்லாம் இருந்திருந்தால் இன்னும் நல்லா வந்திருப்பேன். பெற்றவர்களாக இருந்தாலும் சரி, நமக்கு ஒரு விஷயம் பிடித்திருக்கு அதற்கான திறமையும் இருக்கும் போது என்னால் அதை விட்டுக் கொடுக்க முடியவில்லை.
எனக்கு தெரிந்த தொழில் நடிப்பு. அதனால் அதற்குள் குதித்துவிட்டேன். அதற்கு ஏற்றார் போலவே சென்னையில் எனக்கான வழிகாட்டியாக இங்கு ஒருவர் இருக்கிறார். அவரை சென்னை அப்பானு தான் சொல்வேன். அவர் வயிற்றில் பிறக்கவில்லையே என்கிற தவிப்பு இருக்கிறது. ‘நீ உன்னுடைய வேலையில் கவனம் செலுத்து. யார் எது சொன்னாலும், நீ சரியா இருந்தால் போதும்’ என எப்போது நான் சோர்வடைந்தாலும் மோட்டிவேட் பண்ணுவார். இந்த துறைக்குள் நான் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையில்லாத பொய்யான பல விமர்சனங்களை தாண்டி கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறேன்.
முன்பெல்லாம் யாராவது ஏதும் சொன்னால் ரூமில் போய் உட்கார்ந்து அழுவேன். எல்லாத்தையும் இப்படிதான் பேசிட்டு இருப்பாங்க, அதற்கெல்லாம் ரியாக்ட் பண்ணிட்டு இருந்தா நாம் அடுத்த கட்டத்துக்கு போக முடியாது என்பதை போகப் போக தெரிந்து கொண்டேன். நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அது அவர்களது உரிமை. அது நம்மை பாதித்தாலும் அவர்கள் அப்படித்தான் என்று, ஒதுக்கி வைத்துவிட்டு எனக்கான லட்சியத்தை நோக்கி நகர்கிறேன்” என்கிறார் நடிகை மலர்.
Average Rating