ஒன்றரை வயது இளம் உலக சாதனையாளர்!! (மகளிர் பக்கம்)
ஒன்றரை வயதாகும் ஆரோஹி கிரண் குமார் ஒரே மாதத்தில் 800 படங்களை அடையாளப்படுத்தியதும் அவளது பெற்றோர்களால் நம்பவே முடியவில்லை. அவள் படிக்கும் வேகத்திற்கு ஆரோஹியின் அம்மாவால் ஈடு கொடுக்கவே முடியவில்லை. ஆரோஹியின் திறமையைக் கண்டு, நண்பர்கள் ஆரோஹியை புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்புகளை அணுக பரிந்துரைத்துள்ளனர். அப்படித்தான், ஒன்றரை வயது ஆரோஹி ஆயிரம் படங்களை அடையாளம் கண்டு உலக
சாதனையை படைத்து இளம் சாதனையாளராக மகுடம் சூட்டியுள்ளாள்.
பூக்கள், பறவைகள், விலங்குகள், பழங்கள், காய்கறிகள், வாகனங்கள், நிறங்கள், வடிவங்கள், வெவ்வேறு பொருட்கள், பல்வேறு நாடுகளின் கொடிகள், உடல் பாகங்கள் உட்பட 1000 படங்களை ஆரோஹி தொடர்ச்சியாக அடையாளப்படுத்தி சாதனைப் படைத்துள்ளார். இப்போது அதன் பெயர்களையும் தனது மழலை மொழியால் சொல்ல ஆரம்பித்திருக்கும் ஆரோஹி, மேலும் பல சாதனைகளைப் படைப்பாள் என நம்பப்படுகிறது.
ஆரோஹி பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அவளது அப்பா கிரண் குமார், மென்பொருள் பொறியாளர். அம்மா திவ்யா லட்சுமி கமலக்கண்ணன், இன்ஜினியரிங் முடித்திருந்தாலும், இசை மீதிருந்த ஆர்வத்தால் இசைப் பள்ளியைத் தொடங்கி குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைவருக்கும் இசைப் பயிற்சி அளித்து வருகிறார். “ஆரோஹி பிறந்ததிலிருந்தே அவள் வயதுக் குழந்தைகளை விட வேகமான வளர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறாள்.
ஒவ்வொரு நாளும் புதிதாக எதையாவது செய்து எங்களை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருப்பாள். பொதுவாகவே குழந்தைகள் தவழ்ந்த பின் தான் எழுந்து நிற்பார்கள். ஆனால் ஆரோஹி எட்டு மாதத்திலேயே தவழ்வதிற்கு முன்பே தாமாகவே எழுந்து நின்று விட்டாள். பத்து மாதத்தில் யாருடைய துணையும் இல்லாமல், எந்த சப்போர்ட்டும் இல்லாமல் நடக்கவே ஆரம்பித்துவிட்டாள். ஒரு வயதானதும், நன்றாக ஓடி ஆடி விளையாட ஆரம்பித்துவிட்டாள்.
நான் என்னுடைய பிரசவத்திற்கு ஒரு நாள் முன்பு வரை கூட இசைப் பள்ளிக்குச் சென்று பயிற்சி அளித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆரோஹி என் வயிற்றில் இருக்கும் வரை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி, தினமும் நல்ல இசையைக் கேட்பது, புத்தகங்கள் படிப்பது என இருந்தேன். ஒரு வேலை, அதனால்தான் ஆரோஹி இவ்வளவு திறம்பட செயல்படுகிறாளோ என சில சமயம் தோன்றும்.
எங்கள் வீட்டில், நானும் என் கணவரும் ஆரோஹியை கட்டுப்படுத்தி வளர்க்க முயன்றதே இல்லை. அவளுக்கு நாங்கள் பேசுவது புரியாவிட்டாலும், அவளுடன் தினமும் பேசுவோம். அவளை அவள் போக்கிலேயே விட்டு மிகவும் ஆபத்தான விஷயங்கள் ஏதாவது செய்ய முயன்றால் மட்டுமே அவளைத் தடுப்போம்.
ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பித்தால் அதை முழுவதுமாக முயற்சித்து பார்ப்பது ஆரோஹியின் பழக்கம். நாங்கள் செய்வதை பார்த்து, அதை அப்படியே அவளும் செய்வாள்.
நிற்பது நடப்பது என அனைத்துமே அவளாகவே முயற்சி செய்து கற்றுக்கொண்டதுதான். நாங்கள் ஒரு விஷயத்தை செய்ய சொல்லி கொடுக்கும் முன்
அதை அவளாகவே செய்துவிடுவாள். சரியாக ஆரோஹி பிறந்த சில மாதங்களிலேயே கொரோனா லாக்டவுனும் வந்துவிட்டது. இதனால் வீட்டிலேயே அனைவரும் இருந்ததால் அவளுடன் அதிக நேரம் செலவிட முடிந்தது.
அவள் கையில் மொபைல் போன் மட்டும் கொடுக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். செல்போனில் வீடியோ பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது என அவளது ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களை செய்வதற்கு பதிலாக அவளுடன் கதை பேசி விளையாடி நேரம் செலவழித்தோம்.
ஆரோஹிக்கு ஒரு வயதாகும் போது, நான் அவளுக்கு ஒரு வரி கதை புத்தகங்கள் வாங்கி, படித்துக் காட்டுவேன்.
அப்போது ஒவ்வொரு வரிக்குமான கடைசி சொல்லை அவள் சொல்ல ஆரம்பித்தாள். லாக் டவுனில் குழந்தைக்கு ஏதாவது கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம் அப்போது யூட்யூபில் ரைட் ப்ரெயின் கல்வி (Right Brain Education) பற்றிய வீடியோக்களை பார்க்க முடிந்தது. இந்த வலது பக்க மூளையை ஆக்டிவேட் செய்யும் பயிற்சியாகும். இந்த கல்வியை ஒரு வயதுக் குழந்தைகளுக்கு கூட கொடுக்க ஆரம்பிக்கலாம்.
சிறு வயதிலிருந்தே வலதுப்பக்க மூளையை வலுவேற்றுவதன் மூலம் குழந்தையின் ஒட்டுமொத்த கற்றல் திறனையும் ஆற்றலையும் அதிகரிக்க முடியும்.
இதைப் பற்றி முழுவதுமாக படித்து தெரிந்துகொண்டதும், இப்பயிற்சிக்கு தேவையான பொருட்களை வாங்கி ஆரோஹிக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். ஆரோஹியும் இதை மிகவும் ஆர்வமாக கற்றுக்கொண்டாள்.
பொதுவாக ரைட் ப்ரெயின் பயிற்சியாளர்கள், ஒரு குழந்தையால் ஒரு நாளைக்கு 15 வார்த்தைகள் தான் கற்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால் ஆரோஹி ஒரே நாளில் 25 முதல் 30 வார்த்தைகளை ஞாபகப்படுத்தி விடுவாள். ஒரே மாதத்தில் 800 வார்த்தைகளை அவளால் அடையாளப்படுத்த முடிந்தது. ஐந்து நாட்கள் தேவைப்படும் பாடங்களை இரண்டே நாட்களில் படித்துவிடுவாள். அவளுடைய வேகத்திற்கு ஏற்ப புத்தகங்களை வாங்குவதே பெரும் சவாலாக இருந்தது. அவ்வளவு வேகமாக இவள் கற்க ஆரம்பித்தாள்.
ஆரோஹி பிறப்பதற்கு முன், குழந்தையை படிக்கச் சொல்லி பாடங்களை திணிக்காமல், அவள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்தால் போதும் என்று தான் நினைத்தோம். ஆனால் அவளே இவ்வளவு ஆர்வமாக படிக்கும் போது, அதற்கேற்ற வாய்ப்புகளையும், தரமான கல்வியையும் கொடுக்க வேண்டும் என்பதில் இப்போது உறுதியாக இருக்கிறோம். அதற்கு ஆரோஹியின் திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என்று நினைத்தோம்.
அப்போது என் இசைப் பள்ளியில் பயிற்சி பெறும் ஒரு குழந்தையின் பெற்றோர், இந்த லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆரோஹியின் சாதனைகளை அனுப்பலாமே என்றனர். நண்பர்களின் வழிகாட்டுதல்படி இந்த அமைப்புகளை அணுகினோம். அவர்கள், ஆரோஹி மிகவும் சிறிய குழந்தையாக இருக்கிறாளே அவளால் இதை ஒரே நேரத்தில் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை.
அதனால் அவளுக்கு ரெக்கார்டாக இல்லாமல், பாராட்டு பத்திரம் மட்டும் வழங்கலாம் என்றனர். நாங்களும் அதுவும் சரிதான் என குழந்தையின் வீடியோவை அனுப்பி வைத்தோம். ஆனால் அவர்கள் ஆரோஹியின் திறமையைப் பார்த்து, அவளுக்கு சாதனையாளர் ரெக்கார்டையே வழங்கிவிட்டனர். ஒன்றரை வயதில் இதுவரைக்கும் எந்த குழந்தையுமே இந்த சாதனைகளில் பங்கெடுத்தது கிடையாது என பின்னர்தான் தெரிய வந்தது.
பல குழந்தைகள் ஒன்றரை வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். அவர்களும் அதிகபட்சமாக 300 முதல் 500 படங்களையே அடையாளப்படுத்தியுள்ளனர். எனவே அந்த அமைப்புகள் ஆரோஹிக்காக ஒரு தனி கேட்டகிரியே உருவாக்கி அவளை சாதனையாளராக அறிவித்தனர்” என்கிறார் ஆரோஹியின் அம்மா பெருமை பொங்க. அடுத்ததாக கின்னஸ் சாதனைக்கும் ஆரோஹியின் பெற்றோர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதன் முடிவுகளுக்காக காத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
Average Rating