ஆப்கானிஸ்தானின் தேச கட்டுமானத் தோல்வி: இலங்கை கற்கவேண்டிய பாடங்கள்!! (கட்டுரை)

Read Time:14 Minute, 18 Second

ஜனநாயகம், தாராளவாதம் என்ற பதாகைகளின் சொந்தக்காரர்களாக, மேற்குலகம் தம்மை எப்போதும் நிலைநிறுத்திக் கொள்கிறது.

உலகைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், தன்னுடைய நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியவற்றை மற்றவர் மீது திணிப்பதிலும் மேற்குலகம் என்றும் பின்னின்றதில்லை.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆக்கிரமிப்புக்களையும் கொலனித்துவத்தையும், மேற்குலக அரசுகள், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் தென்னமரிக்காவிலும் அரங்கேற்றிய போது, தம்முடைய நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியவற்றை வன்முறை கொண்டும் திணித்தன என்பது,இரத்தக்கறை படிந்த வரலாறு.

தற்போது, வன்முறை கொண்டல்லாது, தார்மீக உயர் நிலையிலிருந்து தம்முடைய சித்தாந்தங்களையும் கொள்கைகளையும் விழுமியங்களையும் ஏனைய நாடுகள் மீது திணிப்பதிலும் சர்வரோக நிவாரணிகளாக முன்வைப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த இடத்தில்தான் மேற்கு பெருஞ்சிக்கலை எதிர்கொள்கிறது.

மேற்குலகம், தான் முன்வைக்கும் விழுமியங்கள், கொள்கைகள், சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை விசுவாசமாக நேசிப்பவர்களையும், அதன் பால் உண்மையான நம்பிக்கையுடைய ஒரு தரப்பையும் மேற்கு உருவாக்கினாலும், ஆக்கிரமிப்பு, அழுத்தத்தின் மூலம் தன்னுடைய விழுமியங்கள், கொள்கைகள், சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மேற்குலகம், அவற்றுற்கு அந்நியமான இன்னொரு நாட்டில் திணிக்க முற்படும்போது, மேற்கின் ஆயுத பலம், பொருளாதார பலம், அவற்றின்பாலான அழுத்தம் ஆகியவற்றின் நிமித்தம் தற்காலிகமான வெற்றியை மேற்குலகம் அடைந்தாலும், நீண்ட காலத்தில் அந்த வெற்றி தக்கவைக்கப்படக் கடினமான ஒன்றாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

ஆப்கானிஸ்தான் மீதான, அமெரிக்காவின் தலையீடு தேசக்கட்டுமானத்துக்கானது அல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தற்போது கூறுகின்றார். 2001இல், 9/11 தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த போது, அதன் உண்மையான நோக்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான போராக இருந்ததேயன்றி, ஆப்கானிஸ்தானில் நவீன தேசம் ஒன்றைக் கட்டியெழுப்புவதாக இருக்கவில்லை.

அன்று, ஆப்கானிஸ்தானை பகுதியளவில் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தலிபான்கள், அல்-கைதா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமும் ஆதரவும் வழங்கிக்கொண்டிருந்தார்கள். அல்-கைதா அமெரிக்காவின் முதல் எதிரியாக உருவெடுத்திருந்தாலும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் தலிபான்களின் ஆட்சியை இல்லாதொழிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அமெரிக்காவுக்கு இருந்தது.

இந்த இடத்தில் தளிவுக்கான ஓர் இடையீடு அவசியமாகிறது. அமெரிக்காவின் பார்வையில் அதுவரை தலிபான்கள் பயங்கரவாதிகள் என்பதைக்காட்டிலும், சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்த ஆப்கானிஸ்தானின் விடுதலை வீரர்கள் என்ற புனைவுதான் முன்னிலை பெற்றது. ஏனெனில் அதுதான் அமெரிக்காவின் அன்றைய தேவையாக இருந்தது.

ஆனால், 9/11 அந்தத் தேவையை மாற்றியமைத்திருந்தது. அமெரிக்காவின் தலையீடு அல்-கைதாவின் தலைவர் ஒசாமா பின் லேடனை இல்லாதொழிப்பது என்றால், அது 2011லேயே நடந்துவிட்டதொன்று. அதன் பிறகு, அமெரிக்கா ஏன் ஆஃப்கானிஸ்தானில் தரிந்திருந்தது?

ஜனநாயக ரீதியிலமைந்த அரசாங்கமொன்றை ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்துவதில் ஏன் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்பட்டது?
ஆப்கானிஸ்தான் என்ற ஒற்றைத் தேச அடையாளத்தைக் கட்டியமைப்பதில் ஏன் மும்முரமாகச் செயற்பட்டது?

இத்தகைய கேள்விகளுக்கு, அமெரிக்கா, மேற்கின் ‘தேசிய அரசு’ மாதிரியிலான ஓர் ஆப்கானிஸ்தான் ‘தேசிய-அரசை’ உருவாக்க விளைந்தது தான் காரணம் என்பது, அனைவரும் இலகுவில் ஊகித்துவிடக்கூடியதொன்றே! அப்படியானால் அது ஏன் தோல்வி கண்டது?

தன்னுடைய விழுமியங்கள், கொள்கைகள், சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் ஆகியவை பற்றி, மேற்குலம் மிக அதீத தார்மீக உயர்நிலைச் சிந்தனையைக் கொண்டுள்ளது. அதாவது, தன்னுடைய சித்தாந்தங்கள், மனித குலத்துக்குப் பொதுவாகப் பொருந்திப் போகத்தக்க, மனித குலத்துக்கு அதியுயர் நன்மையை விளைவிக்கத்தக்கவைகள் என்ற சிந்தனையை மேற்குலகம், குறிப்பாக அமெரிக்கா கொண்டுள்ளது. அதன் விளைவாகத்தான், ஜனநாயகம், தாராளவாதம் ஆகியவற்றை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்வதில் அவை மும்முரமாகச் செயற்படுகின்றன. தம்மைப் போன்ற ‘தேசிய அரசு’களை ஏனைய நாடுகளில் கட்டியெழுப்பிவிட முடியும் என்றும் அவை உறுதியாக நம்புகின்றன; அந்த நம்பிக்கையில் முதலிடுகின்றன.

இவற்றின் மூலம், குறித்த நாடுகளில் மிகச் சொற்ப மக்கள் கூட்டத்தைத் தமது சித்தாந்தங்களை நோக்கிக் கவர்ந்திழுப்பதில் வெற்றி கண்டாலும், அந்நாட்டின பெரும்பான்மை மக்களைக் கவர்ந்திழுப்பதில் அவை தொடர்ந்து தோல்வி காண்கின்றன. இதற்குக் காரணம், அந்தந்த நாடுகளுக்கே உரிய தனித்துவமான தன்மைகளை மேற்குலகு புரிந்துகொள்ளாது போனமையாகும்.

ஆப்கானிஸ்தான் என்பது வேறுபட்ட பல்வேறு இனக்கூட்டங்களையும், மக்கள் கூட்டங்களையும் கொண்ட நிலப்பரப்பு. 2004இல் மேற்கின் ஆதரவுடன் உருவான ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு 14 இனக்கூட்டங்களை அடையாளப்படுத்துகிறது.

2001இற்கு முன்னர், தலிபான்களால் முழு ஆப்கானிஸ்தானையும் கைப்பற்ற முடியாது இருந்தமைக்குக் காரணமும், இந்த இன அடையாள வேறுபாடுகள்தான். தலிபான்கள் பஷ்தூன்கள். பஷ்தூன் மக்களிடையேதான் அவர்களுக்கு ஆதரவுண்டு. பஷ்தூன்கள் ஆஃப்கானிஸ்தானின் நிலப்பரப்புக்கு மட்டும் உரியவர்கள் அல்ல; அத்தோடு இணைந்த பாகிஸ்தானிலும் அவர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். பாகிஸ்தானின் இன்றைய பிரதமர் இம்ரான் கானும், பஷ்தூன் இனத்தவரே ஆவார்.

ஆப்கானிஸ்தானின் ஏனைய பல இனத்தவர்கள், தலிபான்களை ஏற்கத்தயாராக இருக்கவில்லை. தலிபான்களுக்கு எதிரான போரை அவர்கள் செய்தார்கள். இதில், ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷீர் மலைப்பகுதியில் எழுந்த தஜிக் இனத்தை சார்ந்த அஹமட் ஷா மசூத் தலைமையிலான முஜாஹிதீன்களின் எதிர்ப்பு முக்கியத்துவம் மிக்கது. இவர்களும், ஏனைய தலிபான் எதிர்ப்பாளர்களும் சேர்ந்து தலிபான்களுக்கு எதிராக எதிர்ப்பு எதிரணியாக இயங்கினர்.

9/11இற்கு சில மாதங்கள் முன்பு, ‘பஞ்ச்ஷிரின் சிங்கம்’ என்றறியப்பட்ட மசூத் அல்-கைதா பங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். ஆகவே, இவ்வாறு அடிப்படையிலேயே இனக்கூட்டங்களால் பிரிவடைந்த நிலப்பரப்பொன்றில், ‘ஆப்கானிஸ்தான்’ என்று, ஒன்றுபட்ட தேசிய-அரசொன்றைக் கட்டியெழுப்புவது ஒரு தசாப்தத்திலோ, இரண்டு தசாப்தத்திலோ அமெரிகாவின் ஆயுத பலம், பண உதவி ஆகியவற்றைக்கொண்டு செய்துவிடக்கூடியதொன்றல்ல.

இதை அமெரிக்கா புரிந்துகொள்ளாததன் விளைவுதான் 2001இற்கு முன்னர் தலிபான்கள் பகுதியளவில் மட்டும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆப்கானிஸ்தானை, இன்று ஏறத்தாழ முழுமையான தலிபான் ஆக்கிரமிப்பில் கையளித்துவிட்டு வௌியேறி இருக்கிறது அமெரிக்கா. ஆனால், இது முடிவல்ல. அஹ்மட் ஷா மசூத்தின் மகன் அஹமட் மசூத் தனது தந்தையின் வழியில் தலிபான்களுக்கு எதிரான எதிர்ப்புப் போரைத் தொடங்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் இந்த நிலையிலிருந்து, இலங்கை கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்கள் என்ன என்ற கேள்விக்கான பதிலை நாம் சுருக்கமான அணுகினால், இலங்கை என்ற ஒற்றைத் தேசிய-அரசைக் கட்டியெழுப்புவதில், 74 வருடங்காக இலங்கை அடைந்துள்ள தோல்விக்கான காரணத்தை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

அத்தகைய தேசிய-அரசைக் கட்டியெழுப்பும் வாய்ப்பு, சுதந்திர காலத்தில் இலங்கையிடம் இருந்தாலும், இலங்கையின் அரசியல், இலங்கையை இன ரீதியில் பிளவடைந்த மக்கள் கூட்டங்களைக் கொண்ட நாடாகவே 74 வருடங்களாக கட்டமைத்துவிட்டது. ஆகவே ஒற்றைத் ‘தேசிய-அரசு’ என்ற முகமூடிக்குக் கீழ், இன ரீதியில் பிளவடைந்த மக்கள் கூட்டங்களைக் கொண்ட நாடாகவே இலங்கை விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு மிகச் சொற்ப உயர்குழாம், தாராளவாத இலங்கை தேசிய-அரசில் நம்பிக்கை கொண்டு, அதனை மீளுரைத்துக் கொண்டிருப்பதால் மட்டும், இலங்கை மேற்குலகம் வரையறுப்பதன்படியான ஒற்றைத் தேசிய-அரசாகக் கட்டமைந்துவிடும் என்று நம்புவது அர்த்தமற்றதே.

இலங்கை ஒற்றை அரசாக இருந்தாலும், அந்த அரசுக்குள் ஒற்றைத் தேசம் கொண்ட தேசிய-அரசு என்பது யதார்த்தத்திலிருந்து விலகிய தார்மீக உயர்நிலைக் கற்பிதம் என்பதுதான் கசப்பான உண்மை. அப்படியானால் இதற்குத் தீர்வுதான் என்ன?

மேற்குலகம் தன்னுடைய நாட்டில் சாத்தியமான ஒன்று, அதேவகையில் தம்மிலிருந்து மிக அந்நியமான வேறொரு நாட்டில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை கைவிட வேண்டும். மாறாக, மனித குலத்துக்கு நன்மை பயக்கும் சிந்தனைகளை அந்த மக்களிடமிருந்து வளர்ப்பதற்கான உதவிகளையும் ஆதரவினையும் வழங்கவேண்டும்.

மனித உரிமைகள் என்பது உலகின் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், ஆட்சிமுறை, அரச கட்டமைப்புகள் என்பன அப்படி அல்ல. பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்குமே ஜனநாயகம், ஆட்சிக் கட்டமைப்புக்கள் ஒன்றாக இல்லாத போது, உலகுக்கே பொதுவான ஆட்சிமுறையை, அரச கட்டமைப்பை சர்வ ரோக நிவாரணியாக மேற்குலகம் ஏனைய நாடுகளிடம் திணிப்பதை கைவிட வேண்டும்.

மாறாக, அந்தந்த நாடுகளில் தனித்துவத் தன்மைகளைக் கருத்திற்கு கொண்டு, அதற்கேற்றாற் போன்ற தீர்வுகள் வடிவமைக்கப்பட்டால் மட்டுமே, அவை நீடித்து நிலைக்கக் கூடியவையாக அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேகம் மினுமினுக்க…குப்பைமேனி!! (மருத்துவம்)
Next post மொபைல், கணினித் திரையை தொடர்ந்து பார்ப்பதன் அபாயம்!! (மகளிர் பக்கம்)