ஒட்டுசுட்டான் மண்ணை எடுத்து !! (கட்டுரை)
நவீன உலக மாற்றத்தின் புதிய புதிய வருகையால், மட்பாண்டங்களின் உற்பத்தியும் பயன்பாடுகளும் அருகி வந்தாலும் தற்போதும் பல இடங்களில் இத்தொழில்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்பாண்டப் பொருட்ளை இன்றும் பலர் விருப்பத்துடன் பயன் படுத்தி வருகின்றனர். காரணம், இவை மருத்துவ குணம் நிறைந்தவையாகக் கானப்படுகின்றன. இதனால், இன்றைய சூழலில் மட்பாண்டப் பொருட்களின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதன் மூலம் பல நோய்த் தாக்கங்கள் ஏற்படுகின்றது என்பதால் தற்பொழுது இப்பொருட்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது
இந்த தொழிலை தெடர்ந்து முன்னெடுத்து வருகின்ற மட்பான்ட உற்பத்தியாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான உற்பத்திகளை பிரதான வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வரும் நிலையில் மண்பாண்ட உற்பத்திகளை செய்ய முடியாத நிலையும், உரிய விலைக்கு விற்பனை செய்யமுடியாத நிலையும் அதற்கான மூலப் பொருளான களிமண் பெற முடியாத நிலையும் தற்பொழுது ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உற்பத்திக்கான மூலப் பொருளான களி மண் பெற்றுக் கொள்ளுதல், சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், நவீன முறையிலான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலை என பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடுகின்ற பலரை சந்தித்தபோது, அவர்கள் முன் வைத்திருக்கின்ற கோரிக்கையானது மட்பாண்ட உற்பத்திக்கு தேவையான களிமண் பெற்றுக் கொள்வதென்பது பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும் இந்த பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்றும் பேச்சளவிலேயே அவர்களுடைய கருத்துகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்
மனித இனம் தோன்றிய மிகப் பழங்காலத்திலேயே மட்பாண்டங்களைச் செய்யும் நுட்பங்கள் கண்டறியப்பட்டன. மட்பாண்ட உற்பத்தியானது உலகின் பல பகுதிகளிலும் மிகவும் பழைமை வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
களி மண்ணை வேண்டிய உருவத்தில் செய்து, அதனை சூளையில் அடுக்கி, உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி மட்பாண்டங்கள் உருவாக்கப் படுகின்றன.
உலகில் மனித நாகரீகம் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வந்த மட்பாண்ட ஓடுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொல் பொருள் எச்சங்களாக இன்றும் மீட்கப்பட்டு வருகின்றன.
பிளாஸ்ரிக், அலுமினியம் என்பவற்றின் வருகையால் மட்பான்ட பயன்பாடு அருகியுள்ள போதும் இதன் வருகையால் நோய்களையும் சூழல் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் இப்போது மட்பான்ட பயன்பாடு மீன்டும் முளைவிடத் தொடங்கியுள்ளது.
முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்ற கந்தசாமி சந்திபோஸ் தெரிவிக்கையில், “மட்பாண்டங்களை உற்பத்தி செய்வதற்கான களிமன் என்பது, எல்லா இடங்களிலும் கிடைக்காது அதற்குரிய மண் குறிப்பிட்ட சில இடங்களில் தான் இருக்கும். அதனை எடுத்து வருவதற்கான அனுமதிகள் கிடைப்பதில்லை. அனுமதிகளைப் பெற்றுக் கொள்வது இலகுவான விடயமும் அல்ல; இதற்காக அலைந்து திரிய வேண்டும். இதனால் உற்பத்தி செய்யும் மட்பாண்டப் பொருட்களுக்கு அதிக செலவாகின்றது. ஆனால் அதிக விலைகளில் விற்க முடியாது” என்று தனது மனப்பாரத்தை இறக்கிவைத்தார்.
இதேவேளை, இவரது தந்தையான தங்கவேலு கந்தசாமி என்பவரும் முன்னர் ஒரு பெயர் போன மட்பான்ட உற்பத்தியாளர். இவர், இறுதி யுத்தத்தின்போது காயமடைந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் தொழிலை செய்ய முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
அது போன்று சொந்த முதலீடுகள் இல்லாதும் மூலப் பொருளான களிமண் பெறமுடியாத நிலையிலும் தொழிலைக் கைவிட்டு கூலித் தொழிலாளியாக கடமையாற்றும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கைலன் இராமு (வயது-58) என்பவர் கூறுகையில், “பரம்பரையான இத்தொழிலை 11 வயதிலேயே கற்றுத் தொடர்ந்து செய்து வருகிறேன். ஆனால் எதிர்காலத்தில் இத் தொழில் என்னுடன் நின்றுவிடும் என்ற ஒரு நிலை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.
அதாவது, மட்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்த தான் மீள் குடியேற்றத்தின் பின்னர் உரிய முதலீடுகள் இன்மை, களிமண் எடுக்க முடியாமை என்பவற்றால் தொழிலை கைவிட்டு இப்போது சம்பாளத்துக்கு வேலை செய்வதாகவும் தன்னுடைய பிள்ளைகள் வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் இத்தொழில் தன்னுடன் நின்றுவிடும் என்ற ஐயப்பாடும் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
வீட்டுப் பாவனைப் பொருட்களில் மட்பாண்டங்கள் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். உடல் ஆரோக்கியத்தை பேணுகின்றவையாகவும் தமிழர்களின் ககலாசாரம், பாரம்பரியம், வரலாற்று விழுமியங்களுடன் பின்னிப்பிணைந்தவையாகவும் கானப்படுகின்றது.
எனவே இந்த மட்பாண்ட உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு அவர்களுக்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள் அல்லது,பெற்றுக் கொள்வதை இலகு படுத்தல் நவீன முறைகளுக்கு அவர்களை மேம் படுத்துதல் போன்ற செயற்பாடுகளை, துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது யாவரினதும் எதிர்பார்ப்பாகும்.
Average Rating