தூளியில் கொஞ்சம் ஜாலி!! (மகளிர் பக்கம்)
ஜன்னலோர இருக்கை பயணத்தில் அம்மா வயலுக்குள் வேலை செய்ய, மரக்கிளையில் தொங்கும் தூளிக்குள் தூங்கும் குழந்தை பார்க்க அழகுதான்.சற்றே வளர்ந்த பின்னும்… தம்பி, தங்கை தூங்கும் தூளியில் அழுது அடம் பிடித்து ஏறி விளையாடி அம்மாவிடம் அடிவாங்கிய அனுபவம் பலருக்கும் உண்டு. அதுவே, குழந்தைகள் படுத்துறங்கும் தூளியை வைத்தே யோகா செய்யலாம் என்றால்..!? வாவ். ஒரே ஜாலிதானே. இதற்குப் பெயர்தான் ஏரியல் யோகா. சுருக்கமாய் ஆன்டி கிராவிட்டி பிட்னெஸ்.
ஆர்வத்துடன் ஒரு செயலைச் செய்தால், அதில் கிடைக்கும் பலன் எப்பவுமே அலாதிதான். அப்படியான உற்சாக மனநிலையோடு உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தருவதற்காக உருவானதே ஏரியல் யோகா எனப் பேச ஆரம்பித்தனர், சென்னை கே.கே. நகரில் ‘ஏரியல் யோகாவிற்கென’ பிரத்யேகமான ‘யோகா வொர்க்ஸ்’ ஸ்டுடியோவை நிறுவி இயக்கி வரும் சுஜாதா-சேகர்பாபு தம்பதியினர்.
மேட் விரித்து தரையில் உட்கார்ந்து தயங்கித் தயங்கி மேட் யோகா செய்யும்போது முதுகுப் பகுதி அதிகமாக சிரமத்தை(strain) சந்திக்கும். அதுவே தூளி என்றால்? எவ்வளவு கடினமான யோகாசனங்களையும் (yoga poses) தூளியில் அந்தரத்தில் சுலபமாகச் செய்துவிடலாம். இதில் நமது கழுத்து மற்றும் முதுகுப் பகுதி நன்றாகவே ஒத்துழைப்புக் கொடுக்கும். மொத்தத்தில் சர்க்கஸ் கூடாரத்தில் அந்தரத்தில் பல்டி அடிப்பது மாதிரி உத்தரத்தில் இருந்து தொங்கும் தூளி யோகா செய்ய உதவுவதால் சிரசாசனம், மயூராசனம், விருட்சிகாசனம் போன்ற கடினமான ஆசனங்களையும் தூளியில் சுலபமாய் செய்துவிடலாம். அதே நேரம் மனதுக்கும் உற்சாகம் கிடைக்கும். மேட் யோகாவை ஒரு மணி நேரம் செய்தால் கிடைக்கக்கூடிய பலன் ஏரியல் யோகாவில் 20 நிமிடத்தில் கிடைத்துவிடும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என யார் வேண்டுமானாலும் எந்த வயதிலும் ஏரியல் யோகாவைச் செய்யலாம் என்கிறார் இவர்.
இதில் உடலுக்கு நெகிழ்ச்சித் தன்மையும்(flexibility), முதுகுத் தண்டுவடத்திற்கு ஸ்பைன் ஸ்ட்ரெச்சும் கிடைக்கிறது. மேலும் ரத்த ஓட்டம் சீரடைவதுடன், கை, கால்கள், தோள்பட்டை உறுதியாகும். உடலில் உள்ள தசை மற்றும் தசை நார்கள்(muscles and ligaments) நீளும். குடலிறக்க பாதிப்பு(herniation) உள்ளவர்கள் செய்வது உடலுக்கு நல்லது. குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் தூளி யோகாவை ரொம்பவே மகிழ்ச்சியுடன் விரும்பிச் செய்வதால் அவர்களின் உடல் வளர்ச்சியில் உயரம் அதிகரிக்கும்.
நினைவாற்றல் கூடும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். வியர்வை சுரப்பிகள் அதிகமாய் சுரக்கும். செரிமானம் அதிகமாகும். ரத்த ஓட்டம் சீராகி புத்துணர்ச்சி கிடைக்கும். சருமம் பொலிவு பெறுவதுடன், இருபாலருக்குமே தன்னம்பிக்கை கூடும். எமோஷனல் உணர்வுகள் கட்டுக்குள் வருவதுடன், மன நலனும் சிறப்பாக இருக்கும் என்கிறார் யோகா ஸ்பெஷலிஸ்ட் சுஜாதா. குறிப்பாக குண்டாக இருப்பவர்கள் ஏரியல் யோகா செய்ய முடியாது என்கிற எண்ணம் பலருக்கும் உள்ளது. இது தவறான எண்ணம். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு ஏரியல் யோகா. ஏரியல் யோகாவை செய்வதால் உடலில் அதிகப்படியாகச் சேரும் கொழுப்பு கட்டுக்குள் வருவதுடன், எடை குறையத் தொடங்கும். உடலை வருத்திக் கொள்ளாமல் சுலபமாய் யோகாவினை முடித்து வீட்டுக்கு செல்லும் போது உடலுக்கு தளர்ச்சி(relaxation) கிடைக்கும். லோ இம்பாக்ட், ஆன்டி கிராவிட்டி மெத்தெட் என்பதால் ஜீரோ இம்பேக்டுடன் உடலுக்கு கூடுதல் நீட்சித்தன்மை (extra stretching) இதில் கிடைக்கிறது.
கழுத்து வலி, முதுகு வலியுடன் சிரமப்படுபவர்களுக்கு ஏரியல் யோகா நல்ல தீர்வு. அதேபோல் தூளியில் ஏறி உட்கார படுக்கக்கூடிய நிலையில் உள்ள வயதானவர்களும் சுலபமான யோகா போஸ்களை தூளியில் செய்யலாம். விளையாட்டு வீரர்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் செய்பவர்கள், நடனம் சார்ந்து இயங்குபவர்களுக்கு உடலுக்கு நெகிழ்வுத் தன்மை கிடைப்பதால்(flexibility) ஏரியல் யோகா பயனுள்ள ஒன்றாக உள்ளது.
குறிப்பாக சிரசாசனம் அப்படியே தலைகீழாக நிற்பது. இதில் கழுத்து எலும்பு பாதிப்படையும் என்பதால் பெரும்பாலும் தரையில் செய்வதற்கு கற்றுத் தருவதில்லை. ஏரியலில் இதை பண்ணும்போது கழுத்து பாதிப்படையாது. உடலின் முழு எடையையும் தூளி எடுத்துக் கொள்ளும் என்பதால், சிரசாசனத்தை தூளியில் செய்வது ரொம்பவும் சுலபம். தலைகீழாய் செய்யும்போது ரத்தம் தலைக்குப் போவதால், சிலருக்கு மட்டும் ஒத்துக்கொள்ளாமல் ஆரம்பத்தில் தலைசுற்றும். சிலருக்கு வாந்தி வரலாம். ஓரிரு நாட்களில் அதுவும் சரியாகும். உயர் ரத்த அழுத்தம், இதய நோயுள்ளவர்கள், வெர்டிகோ(vertigo) பிரச்சனை உள்ளவர்கள், முழங்கால் வலி உள்ளவர்கள் ஏரியல் யோகா செய்வதைத் தவிர்த்தல் நல்லது.
யோகா செய்யும்போது தூளி சிதையும் என்பதால் கை மற்றும் கால் விரல்களில் நகங்கள் இருக்கக்கூடாது. ஆபரணங்களை அணிந்தும், முகம் மற்றும் கை கால்களில் லோஷன்களை பூசியும் தூளியில் யோகா செய்தல் கூடாது. உணவு, தண்ணீரைத் தவிர்த்து வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும். தளர்வான உடைகள் அணிந்து செய்வதையும் தவிர்க்க வேண்டும். முழுமையாகப் பயிற்சி எடுக்கும்வரை, பயிற்சியாளர் இல்லாமல் வீட்டில் இதை முயற்சிக்கக் கூடாது.
ஆன்டிகிராவிட்டி யோகா
1991-ல் கிறிஸ்டோபர் ஹாரின்சன் என்பவர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் மற்றும் டான்ஸ் கம்பெனியில், ஆன்டிகிராவிட்டி யோகா என்ற பெயரில் ஏரியல் யோகாவை அறிமுகப்படுத்தினார். ஹம்மாக் எனப்படும் பிரத்யேகத் துணியை உத்திரத்தில் கட்டி, இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 200 கிலோ எடை வரை தாங்கும் என்பதால் குண்டாக இருப்பவர்கள் தூளி அறுந்துவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை.
சுஜாதா, நிறுவனர், யோகா வொர்க்ஸ்
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் யோகாவில் எம்ஃபில் முடித்து தற்போது பிஎச்டி படித்து வருகிறேன். மீனாட்சி கல்லூரியில் யோகாவில் விரிவுரையாளர். அத்துடன் 2013ல் இருந்தே சொந்தமாக இந்த யோகா சென்டரை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். என் கணவரும் யோகாவில் எம்ஃபில் முடித்துள்ளார். ப்ராப்ஸ் வைத்து யோகா செய்வதில் எனக்கு ஈடுபாடு அதிகம் உண்டு என்பதால் ஏரியல் யோகா, ப்ரிக்ஸ் யோகா, ஸ்ட்ராப் யோகா, பால் யோகா(ball), ஸ்டிக் யோகா, வால் ரோப் யோகா, வீல் யோகா(wheel), டிரயாங்கில் யோகா(triangle), சேர் யோகா(chair), டம்பிள்ஸ் யோகா, குஷன் யோகா என 20 வகையான ப்ராப்ஸ் வைத்து யோகா கற்றுக் கொடுக்கிறோம்.
குழந்தைகளையும் இளைஞர்களையும் அதிகம் யோகாவில் ஈடுபடுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த ஏரியல் யோகா ஸ்டுடியோ செட்டப்பினை உருவாக்கினோம். இப்போது இளைஞர்கள் பட்டாளம் நிறையவே விரும்பி வந்து ஏரியல் யோகாவை செய்கிறார்கள். குழந்தைகளுக்குத் தனி வகுப்புகளும், தாய்மையுற்ற பெண்கள், போஸ்ட் மெட்டர்னிட்டி பெண்களுக்குத் தனித்தனி யோகா வகுப்புகள் எங்களிடத்தில் உண்டு. விஐபி மற்றும் செலிபிரேட்டி கஷ்டமர்களும் என்னிடத்தில் ஏரியல் யோகா செய்வதற்கு வருகிறார்கள். அத்துடன் யோகா ஆசிரியர்கள் அதிகமாக வந்து ஏரியல் யோகா பயிற்சி முடித்து எங்களிடம் சான்றிதழ் பெற்றுச் செல்கிறார்கள். சென்னையைச் சுற்றி புதுச்சேரி, திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், கொளத்தூர், காஞ்சியுரம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் இருந்தும் வந்து ஏரியல் யோகாவைக் கற்றுச் செல்கிறார்கள்.
Average Rating