எதற்காக இந்த மாற்றம்? (கட்டுரை)
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வீடுகள் அல்லது வீதிகளில் இறக்கும் காட்சிகளை எவ்வித தணிக்கையுமின்றி, சமூக வலைத்தலங்கள் அல்லது தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக, கடந்த சில வாரங்களாக பார்க்க நேரிட்டுள்ளதென்றால், அதற்கென தனியாக மனத் தைரியமும் திடகாத்திரமும் எமக்கு கணடிப்பாக தேவையாகவுள்ளது. அல்லது மனதைக் கல்லாக்கிக்கொண்டு, உணர்வுகளை மறுத்துப்போகச் செய்த பின்னர் தான் இவற்றையெல்லாம் பார்க்கவோ, அனுபவிக்கவோ வேண்டும்.எவ்வளவு மனவலிமையுடையவராக இருந்தாலும் எமது நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் உள்ளிட்ட தகனச்சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிணக்குவியல்களைப் பார்த்தால் ஒரு கணம் இதயம் ஸ்தம்பித்து விடும்.
பல மாதங்களுக்கு முன்னர் எமது அண்டை நாடான இந்தியாவில் இவ்வாறு கொரோனா பிணக்குவியல்களைப் பார்த்து, அண்டை நாடு தானே என அலட்சியமாக இருந்த எமது கண்முன்னே இன்று, இந்தச் சம்பவங்களைப் பார்க்கும் போது, தொற்றால் இறப்பவர்களை விட, நாம் தான் பெரும் பாவம் செய்தவர்களாக உள்ளோம்.
ஒரு புறம் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் செயல்பாட்டில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், மறுபுறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, கொரோனா மரணங்கள் நிமிடத்துக்கு 3, 4 என பதிவாகி, தகனச்சாலைகள் சடலங்களை எரித்தே, செயழிலந்து, அல்லது அதற்கான எரிவாயு தேவை அதிகரித்துள்ளதால், சடலங்களை டயர்கள் வைத்து எரிப்பதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, நாளொன்றுக்கு 200 மரணங்கள் ஏற்படப் போகின்றன. ஆகவே நாட்டை முழுமையாக முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை என சுகாதார தரப்பினர் உள்ளிட்டவர்கள் பல்வேறு வகைகளில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், நாடு இன்று முடக்கப்படுமா அல்லது நாளை முடக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான், கடந்த 16ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் ஒன்று செய்யப்பட்டது.
2020 ஓகஸ்ட் மாதம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 39 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது ஆண்டு நிறைவிலேயே, முதலாவது அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலும் புதிய நிதியமைச்சர் உள்ளிட்ட சில இராஜாங்க அமைச்சுகள், அமைச்சு விடயதானங்களில் மாற்றம் என்பன முன்னெடுக்கப்பட்டாலும் கொரோனாவுக்கு மத்தியில் பொருளாதாரம், உயிர் அச்சுறுத்தல், விலையேற்றம், சம்பள முரண்பாடு என கடுமையான சவால்களுக்கு மத்தியில், சவால்களை எதிர்நோக்கியுள்ள அமைச்சுப் பதவிகளிலேயே திடீர் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டை முடக்குவார்கள் என எதிர்பார்த்த மக்களுக்கு காரணமற்ற அமைச்சரவை மாற்றம் ஏமாற்றத்தையே தந்தாலும், காரணத்துடன் தான் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதாவது, இந்த அமைச்சரவை மாற்றமானது முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சியை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதென அரசியல் மட்டம் தொடக்கம் சாதாரண மக்கள் வரை உணர்ந்துள்ளனர்.
சுகாதார அமைச்சரை இலக்காகக் கொண்டு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் அம்மாற்றம் கொரோனாவின் கோர தாண்டவத்தின் மத்தியிலா எடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய அங்கலாய்ப்பாக உள்ளது.
சுகாதார அமைச்சரை மாற்றினால் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று சிந்திருத்தால், அந்த மாற்றங்களை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம். இன்று நாட்டுக்கு தேவைப்படுவது அமைச்சரவை மாற்றமல்ல. மாறாக கொரோனாவிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்பதே இன்றைய அவசியமாகும்.
சுகாதார அமைச்சர் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டில் தோல்வியடைந்ததை காரணம்காட்டி, அவரது அமைச்சுப் பதவியை மாற்றியிருந்தாலும் கொரோனா ஒழிப்பு தொடர்பான தீர்மானங்களை எடுப்பது கொரோனா ஒழிப்பு செயலணியின் பிரதானி அல்லது தகவல்களை அறிவிக்கும் புலனாய்வு பிரிவின் பிரதானிகளின் பதவிகளையே மாற்றியிருக்க வேண்டும் என்று பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இலங்கையில் வைத்து முதலாவது தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட சீனப் பெண் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறிய போது, அப்பெண்ணை முத்தமிட்டு இலங்கையின் மருத்துவத்தின் பெருமிதத்தை உலகறியச் செய்தமை இலங்கையரான எம் அனைவருக்கும் பெருமையான விடயமாகவே காணப்பட்டது.
ஆனால், இதே முன்னாள் சுகாதார அமைச்சர் தனிப்பட்ட காரணங்களுக்காவோ அல்லது நாட்டு மக்கள் நலனுக்காகவோ சில மதச் சடங்குகளை செய்து, முட்டிகளை களனி கங்கையில் வீசியபோதும், ஏன் கொரோனாவுக்கு சிறந்த மருந்தென தம்மிக பாணியை அருந்தி ஊடகங்களுக்கு காட்சிகொடுத்து பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் கூட இவரது பதவி ஆட்டம் காணும் என இவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
முக்கியமாக ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்த அன்றே தனது அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அறிந்துக்கொண்டுள்ளதாக தற்போதைய கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்திருந்த அதேவேளை, தான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, எனினும் வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், தனது பதவி மாற்றத்தின் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக சுகாதார அமைச்சிலிருந்து வெளியேறும் முன், நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற உள்குத்துடன் கதையொன்றைக் கூறி அனைவரிடமும் விடைபெற்ற அவரின் கண்ணில் வேதனையைக் காணமுடிந்தது.
இன்றைய அரசாங்கத்தில் நான்குக்கு மேற்பட்டவர்கள் தொழின்முறை சார் வைத்தியர்களாக இருக்கும் நிலையில், குறிப்பாக கொரோனா ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே போன்றவர்கள் இருக்கும் போது, அவர்களை எல்லாம் விடுத்து, அண்மைக்காலமாக நாக்கில் சனி என்பது போல ஏதோ ஒன்றை யதார்த்தமாக கூறி அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும், “கடவுள் தான் இனி கொரோனாவிலிலிருந்து காப்பாற்ற வேண்டும்” என கடவுள் மேல் பொறுப்பை சுமத்திய முன்னாள் ஊடகத்துறை அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் என்பதை விட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், கொரோனா மரணங்கள் 6,000 கடந்தாலும் கொரோனா ஒழிப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் கொரோனா ஒழிப்பு செயலணியின் பிரதானி சவேந்திர சில்வா எவ்வித பிரச்சினையுமின்றி அவரது கடமைகளை முன்னெடுத்துச் செல்லும் நிலையில், சுகாதார அமைச்சு மாற்றத்தில் நியாயமில்லை என்று வாதிடுவோரும் உள்ளனர்.
அரசாங்கம் கொரோனாவின் ஒவ்வொரு அலையிலும் சிறப்பாக செயற்பட்ட வைத்தியர்களான அனில் ஜாசிங்க, பபா பலிகவடுன, சுதத் சமரவீர, ஜயருவன் பண்டார, அமல் ஹர்ஸ டி சில்வா, உள்ளிட்டோரை கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளிலிருந்து விலக்கி, இவர்கள் தமது பொறுப்புகளை நிறைவேற்ற தவறியுள்ளனர் என நாட்டு மக்களுக்கு மறைமுகமாக கூறியிருப்பதைப் போன்றே பின்னணியில் அமைச்சர் பவித்ராவின் பதவி மாற்றமும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின் விடயதானங்கள் பகிரப்பட்டுள்ள விடயமானது, அறிவியல் அடிப்படையற்றது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
‘ஆணியே பிடுங்க வேண்டாம்’ என்பது போல அமைச்சரவை மாற்றமென்பது தேவையற்ற ஒன்றெனவும் விரைவாக அறிவியல் ரீதியில் விடயதானங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியால் எந்த நேரத்திலும் எந்த அமைச்சுப் பதவியையும் மாற்றலாம் அல்லது புதிதாக உருவாக்கப்படலாம் என்ற அதிகாரம் அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டாலும் கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் இந்த அமைச்சரவை மாற்றங்களை தவிர்த்திருக்கலாம் என்பதே பலரது வாதமாக அமைந்துள்ளது.
அதாவது ‘வில்லன்’ என்ற தென்னிந்திய தமிழ்திரைப்படம் ஒன்றில் ஓட்டோ ஒன்று ஒழுங்காக ஓடாமையால், அதன் சாரதி ஓட்டோவின் கண்ணாடிகளை திருப்பிய பின் குறித்த ஓட்டோ நன்றாக ஓடியதாக எண்ணுவதைப் போலவே தற்போதைய அமைச்சரவை மாற்றமும் என்ற நகைப்புகளும் நக்கல்களும் குறைவில்லாமல் வெளிவரும் நிலையில் தான், மற்றுமொரு அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதென அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒரே மாதிரி முழு காலப்பகுதியிலும் இருக்க வேண்டியது அத்தியாவசியற்றது என்றும் அமைச்சரவையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவது சாதாரண விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பலப்படுத்தவே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதே தவிர, பலவீனத்தை மறைப்பதற்காக அல்ல என்றும் தெரிவித்துள்ள அவர், இன்று வரை அரசாங்கம் பலத்துடன் முன்னோக்கி செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்வாறான அமைச்சரவை மாற்றங்கள் இலங்கையில் பொருளாதாரத்தை பலப்படுத்த அல்லது கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாயின், கண்டிப்பாக அதனை வரவேற்கலாம். ஆனால் குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையார் ஆன கதையாகி விடாமல், அமைச்சர் ஷசிந்திர ராஜபக்ஷ கூறும் அடுத்த அமைச்சரவை மாற்றமும் அறிவியல்பூர்வமாக இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Average Rating