ஒலிம்பிக்கில் ஒளிர்ந்த பதக்க பதுமைகள்! (மகளிர் பக்கம்)
பெண்ணினத்தைக் குறிக்கின்ற இன்னொரு சிறப்பான பெயர் ‘சக்தி!’ இக்கட்டான சூழல்களில் உடல் மற்றும் மன வலிமையுடன் செயல்பட்டு, இலக்கை அடைவதால், இப்பெயர் அவர்களுக்கு சூட்டப்பட்டது என்பதை யாராலும் மறுப்பதற்கில்லை. இதனை நிரூபிக்கும் வகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய மகளிர் சிறப்பாக செயல்பட்டு தடம் பதித்தனர்.
குறிப்பாக, பளு தூக்கல், பாட்மிண்டன், குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் பங்கேற்ற மீராபாய் சானு சைக்கோம் (49 கிலோ எடைப்பிரிவு), பி.வி.சிந்து, லவ்லினா போர்கே ஹெய்ன் (64-69 கிலோ எடைப்பிரிவு) வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்று தாய் நாட்டிற்குப் பெருமை சேர்த்து வந்துள்ளனர்.
‘மிடுக்கு நடை’ மீராபாய் சானு : இந்தப் பதக்க பதுமைகளில் குறிப்பிடத்தகுந்தவர் மீராபாய் சானு சைக்கோம். மணிப்பூரைச் சேர்ந்த இவர் 49 கிலோ எடைப் பிரிவில் ஒட்டு மொத்தமாக 202 கிலோ தூக்கி இந்தியாவின் பதக்க வேட்டையைத் துவக்கி வைத்தார்.
சீறிப் பாய்ந்த சிந்து: மீராபாய் சானு சாக்கோமைத் தொடர்ந்து பதக்கம் வெல்வார் என்று கருதப்பட்டவர்களில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் அடங்குவார். லீக் சுற்றில் ஜே பிரிவில் இடம் பெற்றிருந்த இவர், முதல் போட்டியில் இஸ்ரேல் வீராங்கனை செனியா பொலிகர்போவாவை எளிதாக வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். அதில் ஹாங்காங் வீராங்கனை கியான்யி செயுங்குடன் மோதிய சிந்து முதல் செட்டை 21-9 என்ற புள்ளிக் கணக்கில் மிக எளிதாக கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது செட்டில் ஹாங்காங் வீராங்கனை கடும் நெருக்கடி கொடுத்தார்.
ஆனால் மனத்தளராத பி.வி.சிந்து 21-16 என்ற புள்ளி கணக்கில் அச்செட்டை கைப்பற்றி தனது பிரிவில் முதலிடம் பிடித்தார். இதன் காரணமாக, காலிறுதி போட்டிக்கு முன்னேறினார். அப்போட்டியில் உலக தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் சிந்து 12-வது இடத்திலுள்ள மியா பிளிக்பெல்ட்டுடன் (டென்மார்க்) மோதினார். வெறும் 41 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இப்போட்டியில் சிந்து 21-15, 21-13 என்ற பாயிண்ட்டில் எதிராளியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
அதில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அகானே யமாகுச்சியுடன் (ஜப்பான்) மோதிய சிந்து 21-13 என்ற பாயிண்ட்டில் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் அகானே கடுமையாகப் போராடியதால் ஒரு கட்டத்தில் 20-20 என சமநிலை நீடித்தது. ஆனால் மன உறுதியுடன் போராடிய சிந்து, தொடர்ச்சியாக 2 பாயிண்டை பெற்று வெற்றியை வசப்படுத்தினார். காலிறுதி போட்டி வரை, ஒரு செட்டையும் இழக்காத சிந்து அரையிறுதியில் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் தாய் சு யிங்கை (சீன தைபே) எதிர் கொண்டார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஒரு கட்டத்தில் 16-14 என முன்னிலை வகித்த சிந்து சிறு சிறு தவறுகளால், அச்செட்டை 18-21 என இழந்தார். வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதி செட்டில் சிந்து கடுமையாகப் போராடினாலும் சீன தைபே வீராங்கனை 21-12 என்ற பாயிண்ட்டில் வெற்றியை வசப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியா (9வது ரேங்க்)வை எதிர் கொண்டார். அதில் சீறி பாய்ந்தாடிய சிந்து 21-13, 21-15 என வென்று வெண்கலத்தைக் கைப்பற்றினார். 2016-ம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் (பிரேசில்) நடைபெற்ற ஒலிம்பிக்கில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
‘லவ்லி’ லவ்லினா போர்கோஹெய்ன்:
இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஏழாக உயர்வதற்கு இவர் (64-69 கிலோ பிரிவு) குத்துச் சண்டையில் வென்ற வெண்கலமும் முக்கிய காரணமாகும். அசாம் மாநிலத்தின் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தனது தாய் மற்றும் குடும்பத்தாரை கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்திருந்து ஒலிம்பிக்கில் தாய் நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதன் பயனாக சிரமமின்றி காலிறுதிக்கு முன்னேறிய இவர் நியென் சின் சென்னை (சீன தைபே) எதிர் கொண்டார்.
5 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். அதில் உலக சாம்பியனான பூ செனஸ்சர்மி நெலியை (துருக்கி) எதிர் கொண்டார். ஆக்ரோஷமாக குத்துக்களைவிட்ட பூ செனஸ் உடன் மோதிய லவ்லினா சளைக்காமல் போராடி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஒலிம்பிக்கில், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் வென்ற மகளிர் அணியினர் 2024ல் பிரான்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இன்னும் பல மெடல்களை வென்று சாதிப்பது உறுதி.
Average Rating