அனாதை குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பாடுபடுவேன்! (மகளிர் பக்கம்)
மேட்டூர் சௌமியாவை நினைவிருக்கிறதா? கடந்த மாதம் மேட்டூர் அணை திறப்புவிழாவிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தபோது வேலை கேட்டு மனுகொடுத்தவர். அப்படியே தன்னுடைய 2 பவுன் தங்கச் சங்கிலியை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். இந்தச் சம்பவம் அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, அவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு பிறகு இப்போது எப்படி இருக்கிறார் சௌமியா? ‘‘நான் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலுள்ள கல்லூரி ஒன்றில் கணினி துறையில் பொறியியல் படிப்பை முடிச்சிருக்கேன். அப்பா ஆவின் பால் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.
இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். என் இரண்டு சகோதரிகளையும் என்னையும் அப்பா கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். அப்பா ஓய்வு பெற்ற பின் வந்த பணத்தில் தான் என் இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். திருமணம் என்றாலே செலவு இல்லாமலா? இதற்கிடையில் அம்மாவுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களின் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு 23 நாட்கள் சிகிச்சை அளித்தும் எங்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.
அப்பாவின் ஓய்வூதிய பணம் முழுவதும் செலவானது. அந்தத் துயரத்திலிருந்து இன்றுவரை என்னால் மீண்டு வரமுடியல. இந்த சமயத்தில் தான் கொரோனா இரண்டாம் அலை உலகம் முழுதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. திரும்பும் திசையில் எல்லாம் கொரோனாவால் உயிரிழப்பு என்ற செய்தி தான் ஒலித்தது. பலர் நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டாங்க. அதில் பலர் உயிரிழந்தார்கள்.
நான் எப்படி அம்மாவை இழந்து தவிக்கிறேனோ என்னைப் போல் பலர் தங்களின் சொந்தங்கள் மற்றும் அன்பு உள்ளங்களை இழந்து தவித்தனர். என்னால் என் அம்மாவை காப்பாற்ற முடியவில்லை. அதே போல் இவர்களும் கஷ்டப்பட வேண்டாம் என்று என்னால் முடிந்த நிதி உதவியை வழங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் இருந்து வந்தது. ஆனால், அப்பாவின் ஓய்வூதியம் தவிர எங்களுக்கு வேறு வருமானம் இல்லை.
அந்த பணத்தில் வாழ்க்கை நடத்துவதே சிரமம். எனக்கும் வேலை இல்லை. நிறைய இடத்தில் தேடியும் கிடைக்கல. அதனாலதான் வேலைக் கேட்டு மனுவை முதல்வர் அவர்களிடம் வழங்கினேன். அதில், ‘நாங்கள் வருமானம் இல்லாமல் இருக்கிறோம். எனக்கு ஏதாவது வேலை வாய்ப்பு உருவாக்கித் தாருங்கள். அரசு வேலைதான் என்றில்லை. தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தாலும் நன்றியோடு இருப்பேன்’ என்று குறிப்பிட்டு இருந்தேன்.
மனுவைக் கொடுக்கும் போது கொரோனாவுக்கான நிதியாக ஏதாவது தரவேண்டும்னு நினைத்தேன். அப்ப என்னிடம் பணம் இல்லை. கழுத்தில் இரண்டு சவரன் தங்கச் சங்கிலி மட்டுமே இருந்தது. கொரோனாவில் உயிர் இழந்த குடும்பத்திற்கு இது உதவும்னு கழட்டி கொடுத்திட்டேன். ஆனா, அது சமூக வலைத்தளங்கள்ல வைரலாகும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. இதை நான் விளம்பரத்திற்காக செய்யல. கொரோனாவுக்கான நிதி நம்மால் முடிஞ்சதை கொடுக்கணும்னு என்கிற நோக்கமும், எனக்கு ஒரு வேலைவாய்ப்பு வேண்டும் என்கிற எண்ணத்திலுமே வழங்கினேன்’’ என்றவரைப் பற்றி முதல்வர் அவர்கள் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் சௌமியாவை வாழ்த்தியது மட்டுமில்லாமல் அவருக்கான வேலை குறித்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது மட்டுமில்லாமல் சௌமியாவிற்கு தனிப்பட்ட முறையில் கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார். அத்தோடு நில்லாமல் அவருக்கான ஒரு வேலையை தந்து உதவியுள்ளார். ‘‘முதல்வர்கிட்ட மனு கொடுத்த பிறகு தனிப்பிரிவு மற்றும் தாலுகா அலுவலகத்திலிருந்தும் அழைப்பு வந்தது. எல்லோரும் எனக்கு உதவி செய்ய இருப்பதாக சொன்னாங்க. அடுத்த மூன்று நாட்களில் வேலைக்கான உத்தரவை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களே என் வீட்டிற்கே நேரில் வந்து கொடுத்தார். அவர் கையால் வேலைக்கான விண்ணப்பத்தை வாங்கிய போது என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பிறகு, முதல்வரே என்னை அழைத்து பேசிய போது ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்தது. இப்ப எனக்கு சேலம் அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் ஐ.டி பிரிவில் மாதம் 17 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கொடுத்திருக்காங்க. இதைவிட எனக்கு வேறெதுவும் வேண்டாம். அன்று முதல்வர் பேசும்போது பணியை சிறப்பா செய்யணும்னு வாழ்த்தினாங்க. நிச்சயம் அவர் பெயரை காப்பாற்றுவேன். மேலும் என் சம்பளத்தில் ஒரு பகுதியினை வறுமைக்கோட்டில் வாழும் ஏழை எளிய குழந்தைகளுக்கு மற்றும் அனாதை ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவ இருக்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ பாடுபடுவேன். இதுவே என்னுடைய நீண்ட நாள் கனவு. அதை விரைவில் நிறைவேற்றுவேன்’’ என்றார் செளமியா.
Average Rating