திமிங்கிலங்களின் சண்டையில் சின்ன மீன்கள் !! (கட்டுரை)
சீனாவில் ஆட்சிமாற்றத்தை அமெரிக்க அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருபகுதியினர் விரும்புகிறார்கள். இன்னொரு பகுதியினர், ஆட்சிமாற்றத்தை விட, சீனா செல்வாக்குச் செலுத்தும் நாடுகளில், அமெரிக்கச் செல்வாக்கை அதிகரிப்பதன் ஊடு, சீனாவை ஓரங்கட்ட வேண்டும் என்று வாதிடுகிறார்கள்.
இந்த இரண்டு அணுகுமுறைகளுக்கும் இடையில், சீனாவை எவ்வாறு கையாளுவது என்ற வினாவுக்கான பதிலை, அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்க-சீன முரண்பாடு, அமைதியான முறையில் தீர்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இதற்கான பிரதான காரணம், நீண்டகாலமாக வகித்து வந்த முதன்மையான இடத்திலிருந்து இடம்பெயர, அமெரிக்கா தயாராக இல்லை. அடாவடியாகவேனும் அந்த இடத்தைத் தக்கவைக்க, அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.
அமெரிக்காவின் முதன்மையான அயலுறவுக் கொள்கைவகுப்பு இதழான Foreign Affairs, ஜூலை, ஓகஸ்ட் மாத இதழின் தொனிப்பொருள், ‘சீனாவால் தொடர்ந்தும் உயரவியலுமா?’ (Can China keep Rising?). இவ்விதழில் இடம்பெற்றுள்ள கட்டுரையொன்றின் தலைப்பு, ‘ஆட்சிமாற்றம் என்பது சீனா விடயத்தில் ஒரு தெரிவல்ல’. இக்கட்டுரை சில முக்கியமான விடயங்களைச் சுட்டிக் காட்டுகிறது.
முதலாவது, சீனா, சோவியத் யூனியன் அல்ல. சீனாவைக் கையாளுவது, அமெரிக்க அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களுக்கு இன்றுவரை இயலாததாகவே இருந்து வருகிறது. கெடுபிடிப்போர் உச்சத்தில் இருந்தபோது, மொஸ்கோவைக் கையாண்டது போல, பீஜிங்கைக் கையாள இயலவில்லை. இரண்டாவது, உலகெங்கும் சீனாவின் தடம், குறிப்பாக பொருளாதார வழித்தடம் எல்லா இடங்களிலும் உண்டு. இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலாகும். 100க்கு மேற்பட்ட நாடுகளுடன் பிரதான வர்த்தகப் பங்காளியாக சீனா இருக்கிறது. இந்நாடுகளில் பல அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைக் கொண்டவை.
மூன்றாவது, அமெரிக்காவும் சீனாவும் போட்டிபோட்டாலும், ஒன்றில் ஒன்று தங்கியிருக்கின்றன.
மேற்குறித்த கட்டுரை, அமெரிக்காவின் நன்கறியப்பட்ட இன்னோர் அயலுறவுக் கொள்கை இதழான Foreign Policy இல், மார்ச் மாதம் ‘சீனாவில் ஆட்சிமாற்றம் மூலமே அமெரிக்காவின் வெற்றி சாத்தியம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டதாகும். இக்கட்டுரை, சீனாவில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏதோவொரு வழியில் ஏற்படுத்துவதன் மூலமே, அமெரிக்காவின் தலையாய நிலையைத் தக்கவைக்க முடியும் என வாதிடுகிறது.
இக்கட்டுரைக்கு ஆதரவாக, முன்னாள் பிரித்தானிய இராஜதந்திரி ரொஜர் கார்சைட், ஒரு கட்டுரையை கனடாவில் இருந்து வெளிவரும் The Globe and Mail பத்திரிகைக்கு எழுதியுள்ளார். ‘சீனாவில் ஆட்சிமாற்றம் சாத்தியமானது மட்டுமல்ல தவிர்க்கவியலாதது’ என்று தலைப்பின்கீழ், சீனாவில் ஆட்சிமாற்றத்துக்கான இரண்டு சாத்தியமான வழிகளை எதிர்வுகூறுகிறது.
முதலாவது, ஒரு சதி மூலம், ஆட்சியை அகற்றுவதற்கான வாய்ப்பு. இரண்டாவது, அடுத்தாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், ஜனாதிபதி ஜீ சிங்பிங்கின் பதவிக்காலத்தை நீட்டிக்காமல் தடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.
இந்த மூன்று கட்டுரைகளும், ஒரு விடயத்தில் உடன்படுகின்றன. சீனாவைக் கையாளுவது என்பது இலகுவானதல்ல. சீனாவின் உலகளாவிய செல்வாக்கைக் குறைக்காமல், தற்போதைய களநிலைவரத்தின் அடிப்படையில், சீனாவைக் கட்டுப்படுத்த இயலாது. அவ்வகையில், சீனா செல்வாக்குச் செலுத்தும் நாடுகள்மீது, தனித்தோ அல்லது சேர்ந்தோ, அமெரிக்கா தனது மேல்நிலையை நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
எனவே, சீனாவின் கொல்லைப்புறமாக இருக்கும் ஆசிய நாடுகளில், அமெரிக்கா, தனது நட்பு நாடுகளுடன் இணைந்து, சீனாவுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொண்டாக வேண்டும். அவ்வகையில், இலங்கையும் கவனம் பெறுகிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அதற்கான புதியதொரு வாய்ப்பை அமெரிக்காவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் வழங்கியுள்ளது. ‘சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை’ என்பது, தொடர்ந்து சொல்லப்படுகின்ற ஒன்று. ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது.
அமெரிக்காவும் மேற்குலகும், எப்படியாவது இலங்கையின் மோசமான பொருளாதார நிலைவரத்தை வாய்ப்பாக்கி, இலங்கையை சர்வதேச நாணய நிதியத்தின் கடன்வலைக்குள் சிக்க வைக்க முயல்கின்றன. இதன்மூலம்,இலங்கையில் செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்பைப் பெறவியலும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உண்டு. ஆனால், இன்றுவரை இலங்கை அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை.
சீனாவின் ‘ஒருபட்டி; ஒரு வழி’ திட்டத்தில், இலங்கையின் வகிபாகம் பல வழிகளில் வாய்ப்பாக உள்ளது. இலங்கை வங்குரோத்தை அறிவித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவின் உதவி இலங்கையைத் தற்காலிகமாகப் பாதுகாத்துள்ளது.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனா காரணமல்ல. இலங்கையின் தவறான கொள்கை முடிவுகளும் செயற்பாடுகளுமே, இலங்கையை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளன.
அண்மையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துகள் கவனிக்கத் தக்கவை. மேற்குலகின் ‘நம்பகரமான ஆள்’ என்று இவர் அறியப்பட்டவர். இவர், சீனாவின் ‘ஒருபட்டி; ஒரு வழி’ திட்டத்தில் இலங்கை இணைந்தது, பயன் விளைவிக்க வல்லது என்றும் சீனாவுடனான இலங்கையின் உறவு, வரலாற்று ரீதியானதும் தவிர்க்கவியலாததும் என்றார். அவரது கருத்துகளில், அடிக்கோடிடப்படுகின்ற விடயம் ஒன்றாக, இலங்கையில் சீனாவின் செல்வாக்கை, இலகுவில் இல்லாமலாக்கி விட முடியாது என்பதாகும்.
மேற்குலகக் கொள்கைவகுப்பாளர்கள், இலங்கையில் சீனாவின் செல்வாக்கை மிகுந்த அச்சத்தோடு நோக்குகிறார்கள். சீனாவின் ‘ஒருபட்டி;ஒரு வழி’ திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு நாடு இலங்கை. பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற தென்னாசிய நாடுகளுடன் இன்னும் பல நாடுகளும் இத்திட்டத்தில் உள்ளன.
இலங்கையின் பூகோள அமைவிடம், ஏனைய தென்னாசிய நாடுகளை விட, இலங்கையை முக்கியத்துவமாக்கி உள்ளது. சீனாவின் ‘ஒருபட்டி; ஒரு வழி’ திட்டத்தை மேற்குலகு எவ்வாறு நோக்குகிறது என்பதை அறிய, கடந்தாண்டு வெளியான The Emperor’s New Road: China and the Project of the Century (சக்கரவர்த்தியின் புதிய பாதை: சீனாவும் இந்த நூற்றாண்டுக்கான திட்டமும்) என்ற புத்தகத்தை வாசிக்க வேண்டும்.
இந்த நூலின் ஆசிரியர் ஜொனதன் ஹில்மான், இலங்கை குறித்து வெளியிடுகின்ற அச்சம் யாதெனில், இலங்கையின் ஊடாக தென்னாசியாவில் செல்வாக்குச் செலுத்த சீனா முனையும். அவ்வகையில், இலங்கை மேலும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லாமல் காப்பாற்றுவது முக்கியமானது என்பதாகும்.
சீனாவின் இத்திட்டமானது, பல வழிகளில் புதிய உலக ஒழுங்கைக் கட்டமைக்கும் பணியை முன்னெடுக்கிறது. இந்தத் திட்டம், மேற்குலகுக்கு ஏற்படுத்தியுள்ள பிரதான சவால் யாதெனில், எந்தத் திறந்த சந்தைப் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை மேற்குலகு முன்தள்ளுகிறதோ, அதையே பயன்படுத்தி சீனா தனது வலுவை நிறுவியுள்ளது.
கட்டற்ற வர்த்தகத்தையும் உலகமயமாக்கலையும் அனைவருக்கும் உரியதாக சீனா சாத்தியமாக்கி உள்ளது. இது மேற்குலகுக்குப் பெருத்த அச்சுறுத்தலாக உள்ளது. எந்தச் சட்டகத்தின் உதவியுடன், கடந்த சில தசாப்தங்களாக உலகக் கட்டுப்பாட்டை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பேணி வந்தார்களோ, இன்று அதே சட்டகத்தின் உதவியோடு, தனது அதிகாரத்தை சீனா முன்னிறுத்தும் போது முரண்பாடுகள் தவிர்க்கவியலாதவை.
பாகிஸ்தானில் சீனப் பணியாளர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில், ஒன்பது சீனப் பணியாளர்கள் இறந்துள்ளார்கள். இந்நிகழ்வுகள், பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை சீனாவுக்கு எழுப்பியுள்ளன. தென்னாசியப் பிராந்தியத்தில், புதியதொரு சவாலை சீனா எதிர்கொள்கிறது. ஒருபுறம் இது பிராந்தியத்தின் அமைதி சார்ந்தது; சீனாவின் இருப்புச் சார்ந்தது.
மற்றையது, தொடக்கத்தில் சொன்னதுபோல, சீனாவின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையா என்ற கேள்வியாகும்.
ஒருவகையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்தை அடுத்து ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மையின் விளைவு என்று ஒருசாரார் சொல்கிறார்கள். இன்னொரு சாரார் இது, சீனாவுக்கு எதிரான புதிய மேற்குலக எதிர்வினையின் ஒரு பகுதி என்கிறார்கள். மொத்தத்தில், இது பிராந்தியப் பாதுகாப்பு குறித்த அடிப்படையிலானதாகும். இந்த மோதலில் இலங்கையும் சிக்கிச் சீரழியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Average Rating