ஐ அம் சோஷியல் டிரிங்கர் !! (மகளிர் பக்கம்)
‘ஐ அம் நாட் அடிக்ட் பட் சோஷியல் டிரிங்கர்’ எனப் பெண்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். டிரிங்ஸ் மட்டும்தானா என்றால்? இல்லை அப்பப்ப தம்மும் உண்டு. அது மட்டும்தானா? இல்லை வொர்க் ப்ரஷரில் வீட்(weed) எடுக்கும் பழக்கமும் இருக்கிறது. ஆனால் நான் டிரக் அடிக்ட்(drug addict) இல்லை என்கிற வார்த்தைகளை அசால்டாக இளம் பெண்கள் உதிர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
டிரக் அடிக்ட் என்றால் குடிப் பழக்கம் தாண்டி கஞ்சா அடிக் ஷன்(weed), கானபிக்ஸ் அடிக் ஷன்(cannabis), டேப்லட் அடிக் ஷன்(tablet), மல்டி டிரக் அடிக் ஷன்(multi drug) என இதில் பல உண்டு. வொர்க் ப்ரஷர், ஃபேமலி இஸ்யூஸ், ரிலேஷன்ஷிப் இஸ்யூஸ் என பல காரணங்களை போதைப் பழக்கத்திற்கு காரணமாக சொல்கிறார்கள். மது அருந்துவது பெண்களிடையே ஃபேஷனாகி, குடிக்க மறுப்பவர்கள் பழமைவாதிகளாய் கேலிக்கு உள்ளாகிறார்கள். பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு பணி நிமித்தமாய் செல்லும் பெண்கள் குடும்பத்திற்குத் தெரியாமலே நண்பர்களோடு இத்தகைய பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். வுமன் நைட்.. லேடீஸ் ஈவ்னிங்.. கெட் டு கெதர்.. வீக் என்ட் பார்டி.. பெண்களுக்கான பப்புகள், வுமன் பார், இத்தியாதி இத்தியாதி என இதில் பல உண்டு.
பெண்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவது சரியா? என்பதைத் தாண்டி போதைப் பழக்கம் எத்தகைய பாதிப்புகளை அவர்களுக்கு கொண்டுவருகிறது என்கிற கேள்விகளோடு சென்னை அடையாரில் இயங்கி வரும் போதை மறுவாழ்வு மையத்தின் மனநல ஆலோசகர் சவுமியா சங்கர்ராமனை சந்தித்தபோது..‘‘ஸ்வீட் சாப்புடுறவன் எல்லாம் இங்கே டயாபடீஸ் நோயாளி கிடையாது. சோஷியல் டிரிங்ஸ் செய்து பேலன்ஸ் செய்கிறவர்களும் உண்டு. இதை பொதுமைப்படுத்தவும் முடியாது.
திருமணத்திற்குப்பின்பு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களும் இருக்கிறார்கள். சென்னை மாதிரியான நகரங்களில் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதால், போதைப் பழக்கங்களை அவர்கள் வெளிப்படையாகச் செய்வதில்லை. ஆனால் பெங்களுர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் வெளிப்படையாகவே பெண்களிடம் இந்தப் பழக்கத்தைப் பார்க்கலாம்.
கிரியேட்டிவான பணிகளைச் செய்பவர்களுக்கு சிகரெட், டிரிங்ஸ் போன்ற போதைப் பழக்கம் அவர்கள் சிந்தனையைத் தூண்டும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இது உண்மை இல்லை. காஃபி, டீ அருந்தும் பழக்கம்கூட அந்த மாதிரியான தூண்டல்தான். எல்லாவற்றையும் தாண்டி ஆண், பெண் இருவருமே ஆல்கஹால் எடுப்பதால் கல்லீரல் பாதிப்பு, நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள், பிற உடல் உறுப்புகள் பாதிப்படைவது, மெண்டல் இஸ்யூஸ், எமோஷனல் இஸ்யூஸ், செக்ஸுவல் இஸ்யூஸ் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரும். அதிகமான குடிப்பழக்கம் மஞ்சள்காமாலை நோயில் கொண்டுவந்தும் நிறுத்தும். அனைத்திற்கும் மேலாக பிரெயின் டேமேஜ், வேலையில் டேமேஜ், ஃபேமிலியில் டேமேஜ்கள் உருவாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதிக புகைப் பழக்கமும் ரிஸ்க் ஆஃப் கேன்சர் நோயில் கொண்டு வந்து விட வாய்ப்புகள் அதிகம் உண்டு.
போதை பழக்கம் ஒரு நோய். இதில் ஆண், பெண் இருவருக்குமே சமமான பாதிப்புகள் உண்டு என்றாலும் பெண்களுக்கு கூடுதலாக உடல் ரீதியான பாதிப்புகள் அதிகம் இருக்கும். அது குடும்பத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. நம் நாட்டைப் பொறுத்தவரை குடும்பத்தை பெண்கள் தாங்கிப் பிடிப்பவர்கள். குடும்பத்தின் சப்போர்ட் சிஸ்டமே இங்கு ஷேக் ஆனால். தன்நிலை தவறி அதிகமாக போதை பொருட்களை எடுக்கும் பெண்கள் அவர்களைச் சுற்றி நடக்கும் விசயங்களைத் தடுக்கும் சக்தியை இழக்கிறார்கள்.
சுருக்கமாய் தங்கள் பாதுகாப்புக்கான கண்ட்ரோல் அவர்களிடம் இருக்காது. அந்த நேரத்தில் பாலியல் வக்கிரங்களுக்கு அவர்கள் ஆளாகலாம். தன் எதிரில் இருக்கும் குற்றவாளியைத் தடுக்கவோ தள்ளிவிடவோகூட அவர்களால் முடியாது. இந்த ரிஸ்க் ஆண்கள் பெண்கள் குழுவாக இணைந்து போதைப் பழக்கத்தில் இறங்கும் போது அதிகமாக நடைபெறும் வாய்ப்புகள் உள்ளது.
நான் சோஷியல் டிரிங்கர் எனக்கு கட்டுப்பாடுகள் இருக்கென யாரும் அழுத்தமாகச் சொல்லிவிட முடியாது. எனக்கு எதுவும் நடக்கலை, நடக்காது எனவும் நினைக்கக்கூடாது. பொழுது போக்காய் பழகத் தொடங்கும் பெண்கள், பிறகு ஆண் நண்பர்களோடும் இணைந்து ஈடுபடுகின்றனர். அப்போது சூழ்நிலையால் போதைக்கான டிரிக்கர் பாயிண்ட் அதிகமாகலாம். போதை தலைக்கேற எந்த நிலையிலும் தங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்.
இதில் உருவாவதே டேப் ரேப்(tape rape), குரூப் ரேப்(group rape), தவறாக வீடியோ, புகைப்படங்கள் எடுப்பதெல்லாம். இதைத்தாண்டி கல்லீரல் நோய், மூளை செயலிழப்பு என உடல் ரீதியாகவும் பெண்களுக்குப் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். வலிநிவாரணிக்காக மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு அதையே அடிக்ஷனாக மாற்றிய பெண்களும் நிறைய இருக்கிறார்கள். இவர்களும் போதைக்கு அடிக்ட் ஆனவர்கள்தான்.
நாங்கள் எங்கள் மறுவாழ்வு மையங்களில் செய்வது பார்ட் ஆஃப் த ரெக்கவரிதான். சரியாகி போனவர்கள் திரும்ப அந்தப் பழக்கத்திற்குள் வர மாட்டார்கள் என உறுதி கொடுக்க முடியாது. எதாவது ஒரு சூழலில் திரும்பவும் எடுக்க ஆரம்பிக்கலாம். அடிக் ஷனுக்காக நாங்கள் டிசைன் செய்திருக்கும் வகுப்புகள் அவர்களை சிந்திக்க வைக்கும். எதனால் நான் இந்தப் பழக்கத்திற்கு அடிமையானேன். எதனால் இந்த பழக்கத்திற்குள் வந்தேன்.
எதனால் எனக்கு இதை எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது. இந்த பழக்கம் இல்லாமல் நான் எப்படி வாழலாம். இந்தப் பழக்கம் இல்லாமலே பிரச்சனைகளை எப்படி சமாளிக்கலாம் என அவர்களின் பிரச்சனைகள், அவர்களின் சூழ்நிலைகள் என அனைத்தையும் மனம்விட்டு பேசி, அவர்கள் நம்பிக்கையை உயர்த்தி வெளியே கொண்டு வருவோம். குடும்ப உறுப்பினர்களும் இதில் பாதிக்கப்படுவதால் ஃபேமலி கவுன்சிலிங்கும் உண்டு.
சப்போர்ட்டுக்காக நாங்கள் கொடுக்கும் மருந்துகள் போதை பொருட்களை எடுக்க வேண்டும் என்கிற அவர்களின் எண்ணத்தை கொஞ்சமாகக் கட்டுப்படுத்தும்.தமிழ்நாட்டில் போதைப் பழக்கத்திற்கு உள்ளான பெண்கள் மறுவாழ்வு மையங்களைத் தேடி அவ்வளவாக வருவதில்லை. நேரடியாக மனநல மருத்துவரை(psychiatrist doctor) நாடிச் சென்று விடுகிறார்கள்.
போதைப் பழக்கத்தால்…
*ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு பாதிப்படைகிறார்கள்
*ஆணுடலில் நீர் சத்து அதிகம். பெண்ணுடலில் நீர் சத்தைவிட கொழுப்பு திசுகள் அதிகம். இந்த திசு மதுவை அவர்களின் உடலில் அப்படியே தக்கவைத்து ரத்தத்தில் விரைவாய் கலக்கிறது.
*பெண்ணுடலில் இருக்கும் இரு ‘என்சைம்’களின் அளவு குறைவு என்பதால், ஆல்கஹால் ரத்தத்தில் அதிகமாகக் கலந்து, உடல் போதையை சமன்படுத்த முடியாமல் தவிக்கும்.
*போதைக்கு உள்ளான பெண்களால் தெளிவு நிலைக்கு விரைவில் வர முடியாது.
*மலட்டுத்தன்மை, கருச் சிதைவு பிரச்சனைகள் பெண்ணுக்கு உருவாகும்.
*கருவுற்ற பெண் எனில் தொப்புள் கொடி வழியே குழந்தையை சென்றடைந்து, சிசுவின் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும்.
*மாதவிடாய் நாட்களில் ஹார்மோன்கள் சுரப்பில் மாற்றம் நிகழ்வதால் போதையின் தாக்கம் அந்த நேரத்தில் அதிகமாகவே இருக்கும்.
*மது அருந்தும் பெண்களின் உடலில் வைட்டமின் பி12 சத்து குறைந்து மயக்கம், தலைசுற்றல், ஞாபக மறதியினை ஏற்படுத்தும்.
Average Rating