இயற்கை மூலிகை பொருள் தயாரிப்பு… இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 15 Second

நம் சரும பராமரிப்புக்கு நாம் பயன்படுத்தும் சோப்பு மிகவும் முக்கியம். தற்போது நம் சருமத்தின் தன்மைக்கு ஏற்பவும் சோப்புகள் இருப்பதால், அது என்ன என்று கண்டறிந்து பயன்படுத்துவது நல்லது. அதே சமயம் சிலருக்கு எந்த வகை சோப்பாக இருந்தாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சோப்புகள் அல்லது குளியல் பொடியினை பயன்படுத்துவார்கள். ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் மட்டுமல்ல இயற்கை முறையில் தங்களின் சருமத்தை பராமரிக்க விரும்புபவர்களுக்காகவே எந்த வித ரசாயனமும் சேர்க்காமல் சோப்பு, ஷாம்பூ மற்றும் எண்ணெய்ப் பொருட்களை தயாரித்து வருகிறார் ஹேமாராணி விஜயன்.

‘‘என்னுடைய இரண்டாவது குழந்தைக்கு சோப்பு ஒவ்வாமை இருந்தது. மார்க்கெட்டில் இருக்கும் எல்லா வகையான சோப்பு ஏன் குழந்தைகளுக்கான சோப்பும் பயன்படுத்திட்டேன். ஆனால் குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை. கைக்குழந்தை என்பதால் சொல்லவும் தெரியல. குளிச்சிட்டு வந்தா குழந்தை சதா சிணுங்கி அழுது கொண்டே இருப்பா. சருமம் எல்லாம் அலர்ஜி போல் தடித்திடும்.

இதை அப்படியே விட்டுட்டா வேற பிரச்னை ஏற்படுமோன்னு எனக்கு பயம் ஏற்பட்டது. சோப்பில் உள்ள ரசாயன பொருட்கள் குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லைன்னு புரிந்தது. வீட்டில் பெரியவர்கள் பயத்தம் பருப்பு மாவு தேய்ச்சி குளிப்பாட்ட சொன்னாங்க. எனக்கு பொடி கண் மற்றும் மூக்கில் புகுந்துவிடுமோன்னு அச்சம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இயற்கை முறையில் நாமே ஏன் சோப்பு தயாரிக்க கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது’’ என்றவர் 25 மூலிகை பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் தயாரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளார்.

‘‘நான் தயாரிக்கும் சோப்பு ரசாயனம் கலக்காத முற்றிலும் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக அது தொடர்பான அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் தேடினேன். பிறகு இயற்கை சோப்பு தயாரிப்பு குறித்து அதிகமாக படித்தறிந்தேன். அதன் பிறகே எனது தயாரிப்பு உருவானது. அந்த தயாரிப்பும் என் வீட்டு தோட்டத்தில் இருந்த பப்பாளி மரத்தின் ஒரு பழத்தில் இருந்து தான் துவங்கியது.

பழச்சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து நான் தயாரித்த பொருளை, இது ஒரு சோப்பு என ஒருவராலும் கூற முடியாது. முதல் முயற்சி அல்லவா. கட்டி பெருங்காயம் போன்ற வடிவில் தயாரான சோப்பை, அம்மாவும், நானும் முதலில் பயன்படுத்தினோம். சும்மா சொல்லக்கூடாது, ரொம்பவே அருமையாக இருந்தது. அடுத்து கணவரை உபயோகிக்க வற்புறுத்தினேன். குளித்துவிட்டு வந்து பாராட்டினார். அதன் பிறகு தான் பாப்பாவுக்கு முயற்சித்தேன். அன்று தான் முழு குளியலை பாப்பா அனுபவித்து இருக்கக்கூடும். குளிப்பாட்டலுக்கு பிறகு அவளுக்கு ஒப்பனை செய்து, உணவு அளித்த பின், சிறிய சிணுங்கல் கூட இல்லாமல் நிம்மதியாக உறங்கினாள்.

அப்பாடா, குழந்தைக்கு நான் தயாரித்த சோப்பு நன்றாக செட்டாகி விட்டதுன்னு எனக்குள் சொல்ல முடியாத சந்தோஷம். இதனிடையே என்னுடைய உற்பத்தி குறித்து பேச்சுவாக்கில் என் கணவர் அவரின் நண்பர்களிடம் சொல்ல, நாங்களும் டிரை செய்து பார்க்கிறோம்ன்னு சொல்ல… அவங்களுக்கும் கொடுத்தேன். ஃபேஷியல் முடிச்சி முகம் கழுவினால் கூட இப்படி பளிச்சின்னு இருக்காதுன்னு ஒரே புகழ் மழை தான். இப்படித்தான் நான் சாதாரணமா தயாரித்த சோப்பு ஒரு பிராண்டாக உருமாறியது’’ என்றவர் இந்த இயற்கை சோப்பு உற்பத்தி ரகசியத்தை தனக்கும் தன் அம்மாவுக்கும் இடையே மட்டும் சீக்ரெட்டாக வைத்துள்ளார்.

‘‘இதில் ரசாயனம் எக்காரணம் கொண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் நான் ரொம்பவே உறுதியா இருந்தேன். அந்த சமயத்தில் தான் என் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கு தோல் அரிப்பு பிரச்னை இருந்தது. அவர் ஏதாவது சோப்பு தயாரித்து கொடுங்களேன்னு கேட்டார். எங்க குடும்பத்திற்கு மட்டுமே சோப்பு தயாரித்து வந்த நான் அடுத்த கட்டமாக மற்றவரின் தேவைக்கு ஏற்ப தயாரிக்க ஆரம்பித்தேன்.

இது என்னுடைய தொழில் விரிவாக்கத்தின் அடுத்த கட்டமாக அமைந்தது. தோல் அரிப்பு குறித்து தகவல் திரட்டினேன். குப்பைமேனி போன்ற அருமருந்து வேறில்லை என தெரிய வந்தது. வீட்டு காம்பவுண்டு சுவர் ஓரமாகவும், புதர்களிலும் மண்டிக் கிடக்கும் குப்பைமேனி, இவ்வளவு சிறப்பானதா என வியந்து, அதன் சாறு எடுத்து சோப்பு உருவாக்கி, கேட்டவருக்கு கொடுத்தேன். முதலில் என்ன சோப்பில் எந்த வாசனையும் இல்லை… பச்சை கீரை மாதிரி இருக்குன்னு… முனகலோடு சென்றார். மூன்று நாட்களில் திரும்ப வந்தவர் என்னிடம், ‘‘மேடம்.. அரிப்பு கொஞ்சம் குறைந்து இருக்கு… குளித்த பின் ஒரு புத்துணர்ச்சியாவும் இருக்கு… எவ்வளவு மருந்து மாத்திரை சாப்பிட்டு இருப்பேன்.

எதுக்குமே அசராத இந்த அரிப்பு உங்க சோப்பு நுரையோட கரைந்து ஓடி போயிடுச்சு…’’ன்னு நெஞ்சார வாழ்த்தினார். அவருக்கு தயாரித்த சோப்பு கொஞ்சம் இருந்தது. அதை எனக்கு அப்படியே விட்டு வைக்க மனமில்லை. அதனால் நான் தேங்காய் எண்ணெய் வாங்குபவரின் கடையில் டிஸ்பிளேக்காக வைக்க சொல்லி கேட்டேன். அவரும் எனக்காக அவரின் கடையில் அந்த சோப்பினை விற்பனைக்காக வைத்தார். முதல் நாளிலேயே அரை டஜன் விற்றுத் தீர்ந்ததாக என்னிடம் கூறினார்.

அதன் பின் அவர் என்னுடைய தொழில் குருவாகவே மாறிட்டார். பொருளை தயாரித்தால் மட்டும் போதாது, அதை எப்படி மார்க்ெகட்டிங் செய்யணும்ன்னு சொல்லிக் கொடுத்தார். அதாவது அதை பேக் செய்வது முதல், வாடிக்கையாளரை எப்படி அட்ராக்ட் செய்யணும் என பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்’’ என்றவர் அதற்கான தர சான்றையும் பெற்று ‘ஸ்ரீ புராடக்ட்ஸ்’ என்ற பெயரில் தனக்கான ஒரு பிராண்டினை அமைத்தார்.

‘‘தற்போது 25 பொருட்கள் உற்பத்தி செய்கிறோம். எக்காரணம் கொண்டும் என்னுடைய பொருளில் துளி அளவுக்கூட செயற்கை நறுமணம் மற்றும் ரசாயனப் பொருட்கள் சேர்க்கக்கூடாது, தரமும் குறையக்கூடாது மற்றும் விலையும் நியாயமாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். என்னுடைய ஆரம்ப முதலீட்டிற்கு என் கணவரும் அப்பாவும் தான் உதவி செய்தாங்க. இப்ப நல்ல வருமானம் கிடைக்குது. இங்கும் நான் ஒரு விஷயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

என்னுடைய பொருளுக்கு நான் இதுவரை பெரிய அளவில் விளம்பரம் செய்ததில்லை. நண்பர்கள் மற்றும் என் கணவரின் நண்பர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் என் பொருட்களை பற்றி சொல்லி உதவினாங்கன்னு சொல்லணும். கோவையில் மட்டுமே ஒரு சிறிய அளவில் தெரிந்த என் பொருள் இப்போது பொள்ளாச்சி, ஆனைகட்டி, காரமடை, ஈரோடு, சேலம், பாண்டிச்சேரி, கேரளா என விரிவடைந்துள்ளது’’ என்றவர் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்தார்.

என் நண்பர்கள் தான் என்னுடைய முதன்மை வாடிக்கையாளர்கள். அதில் ஒருவர் வேலை நிமித்தமாக ஊருக்கு செல்ல, திரும்பி வந்து பார்த்த போது எறும்புகள் சோப்புகளை மொய்த்துக் கொண்டு இருந்தது. எறும்பு சோப்பு திங்குது என எங்காவது கேள்விப்பட்டு இருப்பீர்களா? அவர் கூறிய தகவல் எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. காரணம் சல்பேட், பாரபின் போன்ற கெமிக்கல் கலக்காத இயற்கை சோப்பு என்பதால், எறும்புகளுக்கும் தீனியாக மாறியுள்ளது என பின்னர் தான் புரிந்து கொண்டேன்.

குழந்தைக்காக நான் மேற்கொண்ட முயற்சி, இப்போது தொழில்முனைவர் எனும் சிறப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. எனது வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் வாடிக்கையாளர்கள் அளிக்கும் பரிந்துரைகள் தான். அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து உற்பத்தியில் கவனம் செலுத்துகிறோம். சோப்பு நல்ல அட்ராக்டிவ் கலரா இருக்கணும், வாசனையாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு. அதை கருத்தில் கொண்டு தான் சோப்பு நிறுவனங்கள் போட்டா போட்டியுடன் நறுமணத்துக்காக ரசாயனங்களை சேர்க்கிறார்கள். பிரிசர்வேட்டிவ் என்பதை நான் இங்கு சொல்லியே ஆக வேண்டும். இயற்கைப் பொருள் நாள்கணக்கில் தாக்கு பிடிக்காது.

அதனால் பச்சை கற்பூரம், எடிபிள் விட்டமின் இ ஆயில் போன்றவை பிரிசர்வேட்டிவ் என்பதால் அதை ஒரு சதவீதம் சேர்க்கிறேன். அதனால் சருமத்துக்கு எந்த பிரச்னையும் வராது. அதே போல் எனது சோப்பில் இயற்கை பொருளில் என்ன நிறம் உள்ளதோ அதுவே தான் இருக்கும். இதை கஸ்டமருக்கு புரிய வைக்க வேண்டும். புரிந்து கொண்டால் அவர்களே உங்களை உச்சத்துக்கு கொண்டு செல்வார்கள். அதே சமயம் தரத்திலும் நாம காம்பிரமைஸ் ஆகக்கூடாது’’ என்றவர் தன் தயாரிப்பு பொருட்களை பற்றி விவரித்தார்.

‘‘பதினாறு வகை மூலிகைகளை சரியான சதவீதத்தில் கலந்து, உரிய பக்குவத்தில் காய்ச்சி ஹேர் ஆயில் தயாரிக்கிறோம். ஷாம்பூ போட்டால் கூந்தல் உதிர்கிறது என பெண்களிடம் இருந்து ஒரு குறை வந்தது. அதையடுத்து முடி உதிராத வகையில் மூலிகை ஷாம்பூ உற்பத்தி செய்தோம். இப்படித்தான் படிப்படியா ஒவ்வொரு பொருட்களும் உற்பத்தி செய்ய ஆரம்பித்தோம்.

என்னைப் பொறுத்தவரை உண்மையாக, நேர்மையாக, தரமான பொருளை கொடுத்தால், கண்டிப்பாக நம்முடைய வளர்ச்சி உயரும் என்பதை நான் உறுதியாக நம்புறேன்.இயற்கை வரம் குறித்த மூலிகைகள் குறித்து இளைஞர்கள் அதிகம் படித்து, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்’’ என்ற ஹேமாராணி வசதியற்ற பெண்களுக்கு குறைந்த முதலீட்டில் தங்களின் பொருட்களை கொடுத்து விற்பனை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானத்தை ஏற்படுத்தித் தருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிர் உருவாகும் அற்புதம்!! (மருத்துவம்)
Next post ஹார்மோன்கள்… கோளாறுகள்…. !! (மருத்துவம்)