ஆண்களையும் அச்சுறுத்தும் பரம்பரைக் கோளாறுகள்! (மருத்துவம்)
குழந்தையின்மைக்குக் காரணமான மரபணுக் கோளாறுகளில் பெண்களைத் தாக்கும் பிரச்னைகளைப்பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். தொடர்ச்சியாக இந்த இதழில் ஆண்களைப் பாதிக்கிற மரபணுப்பிரச்னைகளையும் அலசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. பரம்பரையாக ஆண்களை பாதிக்கிற குழந்தையின்மைக் காரணங்களில் முக்கியமானது ஆலிகோஸ்பெர்மியா. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு உயிரணுக்களின் உற்பத்தி மிகக் குறைவாக இருக்கும். அதாவது, ஒரு மில்லிமீட்டர் விந்து திரவத்தில் 20 மில்லியனுக்கும் குறைவான உயிரணுக்கள் இருக்கும் நிலையை ஆலிகோஸ்பெர்மியா என்கிறோம்.
தவிர, உயிரணுக்களின் நகரும் தன்மையும் மிகக் குறைவாக இருக்கும். இந்தப் பிரச்னையை 3 நிலைகளாகப்பிரிக்கலாம். அதாவது, 20 மில்லியனுக்கும் குறைவான உயிரணுக்கள் எண்ணிக்கை என்றால் அதை ஆரம்பக்கட்ட ஆலிகோஸ்பெர்மியா என்றும், 10 மில்லியனுக்கும் குறைவான உயிரணுக்களின் எண்ணிக்கையை மிதமான ஆலிகோஸ்பெர்மியா என்றும், 5 மில்லியனுக்கும் குறைவான எண்ணிக்கையை தீவிரமான ஆலிகோஸ்பெர்மியா என்றும் வகைப்படுத்தலாம். ஒய் குரோமோசோம்களில் ஏற்படக் கூடிய கோளாறுகள் பரம்பரையாக ஆண்களைத் தாக்கும். அதன் பெயர் Klinefelter syndrome.
அதாவது, இந்தப் பிரச்னை உள்ள ஆண்களுக்கு 47 XXY குரோமோசோம்கள் இருக்கும். எக்ஸ் குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரணுக்கள் உற்பத்தியே இருக்காது. மருத்துவரின் ஆலோசனைப்படி செமன் அனாலிசிஸ் பரிசோதனையின் மூலம் இதை உறுதிப்படுத்திக் கொண்டு சிகிச்சைகளைத் தொடங்கலாம். அடுத்தது சிஸ்டிக் ஃபைப்ராசிஸ் என்கிற பிரச்னை. இதுவும் ஒருவகையான மரபணுக் கோளாறுதான். இதிலும் உயிரணுக்கள் நகர முடியாத நிலை இருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். சுவாசக் கோளாறுகள் இருக்கும்.
உயிரணுக்களின் எண்ணிக்கை சாதாரணமாக இருந்தாலும், அவற்றின் நகர முடியாத தன்மையின் காரணமாக குழந்தையின்மைப் பிரச்னையை சந்திப்பார்கள். ஆன்டாக்சிடென்ட்ஸ், ஆன்ட்டிபயாடிக் மற்றும் மல்ட்டி வைட்டமின் இவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். மூன்றாவதாக அஸுஸ்பெர்மியா. ஆண்மலட்டுத்தன்மையில் 10 முதல் 15 சதவிகிதத்துக்கு இதுவே காரணம். இதனால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விந்து திரவத்தில் போதுமான அளவு உயிரணுக்களே இருக்காது. ஒய் குரோமோசோம்களில் ஏற்படுகிற பிரச்னையே இதற்குக் காரணம். டெஸ்ட்டிஸ் எனப்படுகிற விந்தகத்தின் செயல்பாடு மோசமாக இருக்கும் அல்லது விதைப்பை செயலிழப்பு காரணமாகலாம்.
இவர்களுக்கு இக்ஸி சிகிச்சை அளித்து கரு உருவாக்கினாலும் அது பதிந்து வளராத நிலையே ஏற்படும். ஆண்களுக்கும் எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் ஹார்மோன்கள் அவசியம். அப்போதுதான் உயிரணுக்களின் வளர்ச்சி இருக்கும். இவற்றில் பிரச்னை ஏற்படும்போது திசுக்கள் இருந்தாலும் அவை வளர்ச்சி அடையாமல் போகும். இக்ஸி சிகிச்சை அளிக்கிறபோது ஆண் குழந்தையாக இருந்தால் அப்பாவின் அதே குரோமோசோம் அந்தக் குழந்தைக்கும் செல்லும். அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு குழந்தையின்மை பிரச்னை தொடரும். இதைத் தவிர்க்க ப்ரீஜெனிட்டிக் டயக்னாசிஸ் என்கிற தொழில்நுட்பம் பயன்படுகிறது.
இதன் மூலம் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரிந்து, ஆண் கருவாக இருந்தால் அதன் எதிர்காலம் கருதி, அதை வைக்க மாட்டார்கள். ஆனால், இந்த தொழில்நுட்பம் மிக மிக காஸ்ட்லியானது என்பதால் எல்லோராலும் செய்ய முடியாதது. விந்தணுப் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனையின் மூலம் ஆண்களை பாதிக்கிற பரம்பரை பிரச்னைகளை ஓரளவு உறுதிப்படுத்தலாம். தேவைப்பட்டால் குரோமோசோமல் ஸ்டடி என்கிற மரபணு ஆய்வும் செய்யப்படும். மரபணுக் கோளாறுகள் இருப்பது உறுதி செய்யப்படுகிற பட்சத்தில் சம்பந்தப்பட்ட தம்பதியருக்கு ஜெனிட்டிக் கவுன்சலிங் கொடுத்து நிலைமையைப் புரிய வைப்போம்.
Average Rating