வீட்டில் இருந்தபடியே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பெண்கள்! (மகளிர் பக்கம்)
பெண்கள் என்றாலே போட்டி, பொறாமை, ஈ.கோ. பிரச்சனை அதிகமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்பது பொதுவான விதி. அதை தகர்த்துவிட்டு 17,000 பெண்கள் ஒற்றுமையாக தொழில் செய்கிறார்கள் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மை. இல்லத்தரசி என்றாலே அவர்களுக்கு வீட்டில் என்ன வேலை இருக்கப்போகிறது என்று தான் பெரும்பாலானவர்களின் குறிப்பாக ஆண்களின் எண்ணமாக இருந்து வருகிறது.
இவர்கள் அலுவலகம் சென்றதும், வீட்டில் உள்ளவர்களுக்கான மூன்று வேளை உணவு, குழந்தைகளை பராமரிப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது, பாத்திரம் கழுவுவது, துணிகளை துவைத்து அவரவர் இடத்தில் அழகாக எடுத்து வைப்பது… என அவர்களின் வேலைகளை அடுக்கிக் கொண்டே ேபாகலாம். இவர்களால் எந்த வித லாபங்களையும் ஈட்ட முடியாது என்ற எண்ணத்தை மாற்றி திறமை மற்றும் ஆர்வம் இருந்தால் அவர்களாலும் சம்பாதிக்க முடியும் என்கிறார் அனிதா ராஜ்.
‘‘தென்காசி அருகில் உள்ள சுரண்டை என்ற கிராமத்தில் பிறந்தேன். நாங்கள் விவசாய குடும்பம். சிறுவயதில் இருந்தே விவசாய நிலத்தில் களை எடுத்தல், கதிர் அறுத்தல் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்வேன். மேலும் எங்கள் ஊரில் பெண்களுக்கான முக்கிய தொழிலாகக் கருதப்பட்டது பீடி சுற்றுவது. பள்ளிக்கு சென்று வந்த பிறகு அம்மாவிற்கு துணையாக பீடியும் சுற்றித் தருவேன். அடுத்ததாக தையல், எம்பிராய்டரி, கூடை பின்னுதல், கோலம் என சின்னச் சின்ன கலைகளை சிறுவயதிலேயே கற்றுக் கொண்டேன். பள்ளிப்படிப்பை முடிச்சி ட்டு சிவகாசியில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து அங்கு ஹாஸ்டலில்தான் படிச்சேன். எங்க கல்லூரி ஹாஸ்டல் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.
பெண்களை காரணம் இல்லாமல் வெளியே அனுப்ப மாட்டாங்க. சக தோழிகளுக்கு பிறந்தநாள் வரும். அப்போது எப்படி பிறந்தநாளை கொண்டாடலாம் என்று ஆலோசனை செய்வோம். ஹாஸ்டலில் கிடைக்கும் நியூஸ் பேப்பர், கேக்கிற்காக வைக்கப்படும் அட்டைகள், உடைந்த வளையல்கள் என எந்தெந்த பொருட்கள் எங்களுக்கு கிடைக்கிறதோ அதைக் கொண்டு பரிசுப் பொருட்களை அலங்காரம் செய்தும் கிஃப்ட் தயார் செய்தும் சக தோழிகளின் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்வோம். இப்படி நான் செய்யும் பரிசுப் பொருட்கள் மற்றும் கலைப் பொருட்கள் என்னுடன் படிக்கும் சக தோழிகளை மிகவும் கவர்ந்தது. ஆச்சரியமாக ரசித்ததுடன் மட்டுமில்லாமல் என்னை வெகுவாக பாராட்டினார்கள். சில தோழிகள் இன்னும் அதை பத்திரமாக வைத்திருக்கிறார்களாம்’’ என்றவர் எல்லாரையும் ேபால் படிப்பை முடிச்ச கையோட திருமணம், வேலை என்று தன் வாழ்க்கையை நகர்த்தியுள்ளார்.
‘‘எல்லாருடைய பெற்றோருக்கும் பெண்கள் படித்தவுடன் திருமணம் செய்யணும் என்ற உந்துதல் இருக்கும். எங்க வீட்டிலும் அப்படித்தான். படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்திற்கு பிறகுதான் நான் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கே சேர்ந்தேன். எட்டு மணிநேரம் வேலை, வீடு, குடும்பம் என நாட்கள் நகர்ந்தது. இப்படியே வாழ்க்கை சென்று விடுமோ ரசிக்கும்படி இருக்காதோ என்று ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. அப்பதான் என் வாழ்க்கையில் நான் எதிர்பார்க்க முடியாத மாற்றம் ஏற்பட்டது.
எங்க உறவினர் வீட்டு விசேஷத்திற்காக நான் ஊருக்கு சென்று இருந்தேன். அங்கு ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டேன். அந்த சமயத்தில் நான் கருவுற்று வேறு இருந்தேன். விபத்தில் ஏற்பட்ட காயம் பலமாக இருந்ததாலும், குழந்தைக்கு பாதிப்பு உள்ளதா என்று தெரிந்து கொள்வதற்காக என்னை ஐ.சி.யுவில் அட்மிட் செய்திருந்தார்கள். கடுமையான உடல்வலி மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டேன். நான் இருந்த ஐ.சி.யு வார்டில் என்னுடன் சேர்ந்து ஆறு பேர் இருந்தனர். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனை இருந்தது. அதில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞன் ஒருவன் அட்மிட்டாகி இருந்தான்.
அவனுக்கு என்னைப் பார்த்ததும் என்ன தோணுச்சோ தெரியல. பார்க்கும் போது எல்லாம் சத்தமாக ‘உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்று கண்களை உருட்டி மிரட்டுவான். அது மேலும் என் மனநிலையை பாதித்ததால், உடல்நிலையும் மோசமானது. நான் பிழைப்பேனா பிழைக்க மாட்டேனா? இதுதான் நான் உலகை பார்க்கும் கடைசி நாளாக இருக்குமா? என்றெல்லாம் எனக்குள் சிந்தனை ஓட ஆரம்பித்தது. ெகாஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேறியது.
ஐ.சி.யுவில் இருந்த நான் அதன் பின் சில நாட்கள் நார்மல் வார்டில் தங்கி இருந்தேன். பிறகு என் உடல் நிலை நன்றாகி விட்டதால் என்னை டிஸ்சார்ஜ் செய்திட்டாங்க. உடல் நிலை தேறி நான் வீட்டுக்கு வந்தாலும் என்னுடைய மன உளைச்சல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. நான் மருத்துவமனையில் குறிப்பாக ஐ.சி.யுவில் இருந்த நாட்களின் நினைவு என்னை விட்டு விலகாமல் விரட்டிக் கொண்டே இருந்தது. மனம் வேதனையால் மிகவும் அவதிப்பட்டேன். அதை மறக்கவும் அதில் இருந்து விலகவும் நான் எனக்குள்ளே ஒரு ெபரிய போர் நடத்திக் கொண்டு இருந்தேன். எந்த வேலையிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்கிடையில் எனக்கு குழந்தையும் பிறந்துவிட்டதால், குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு என்று வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது’’ என்றவர் தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்தபடியே என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.
‘‘விபத்து ஏற்பட்டு மிகப்பெரிய சிக்கலில் இருந்து மீண்டாகிவிட்டது. இனிமேலும் அதைப் பற்றியே சிந்திக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். என் மனதை திசை திருப்ப பட்டு நூல் கொண்டு அணிகலன்களை செய்ய ஆரம்பிச்சேன். ஏற்கனவே எம்பிராய்டரி செய்ய தெரியும் என்பதால், அதில் ஆரி எம்பிராய்டரி குறித்து படிச்சேன். அதனைத் தொடர்ந்து மணப்பெண் ஒருவருக்கு தேவையான கைவேலைப்பாடுகள் அனைத்தையும் தயார் செய்து கொடுத்தேன்.
இந்த வேலையை நான் ஒருவர் மட்டும் செய்ய முடியாததால் என் சகதோழிகள் உதவியுடன் என் பணியை தொடர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எனது வேலைகள் விரிவடைந்து எம்பிராய்டரி, சாக்லெட், களிமண் நகைகள், மணப் பெண்ணிற்கான பூ அலங்காரம், குஷன் கவர் தயார் செய்வது என 200க்கும் மேற்பட்ட பணிகளை செய்ய ஆரம்பித்தேன். அதன் விளைவு தான் ‘திவிஷ் அகாடமி’ உருவாக காரணம். இங்கு 36க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பிற்கான பயிற்சிகளை அளிக்கிறேன். மேலும் 200க்கும் மேற்பட்ட சொந்த தயாரிப்புகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொருள்களை மொத்த விலையில் வாங்கி சில்லரை விலைக்கு விற்பனை செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆர்டர்களுக்கு ஏற்ப அனைத்து வேலையும் நான் மட்டுமே செய்ய முடியாது என்பதால் பல பெண்களை இணைத்து ஒரு குழுவாக ஒருங்கிணைத்தேன். இந்த பெண்கள் சென்னையில் மட்டுமில்லாமல் மதுரை, கோவை, திருநெல்வேலி, பெங்களூரு போன்ற ஊர்களில் இருந்து எனக்காக வேலைப் பார்க்கிறார்கள். வரும் ஆர்டர்களை பிரித்து கொடுப்பேன். அவர்கள் செய்து எனக்கு அனுப்பிடுவார்கள். வரும் லாபத்தில் அவர்களுக்கு ஒரு தொகையை கொடுத்திடுவேன். இவர்கள் அனைவரும் இல்லத்தரசிகள் என்பதால், அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஒரு வருமானம் ஏற்பட ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது’’ என்று கூறும் அனிதா ராஜிற்கு தமிழகம் முழுவதும் அவரின் அகாடமியை விரிவடைய செய்ய வேண்டும் என்பதுதான் அடுத்த இலக்காம்.
‘‘பெண்களுக்கு கைத்தொழில் மிகவும் அவசியம். அதனாலேயே வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு சலுகைகளுடன் பயிற்சி அளிக்கிறேன். பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, டெரக்கோட்டா போன்ற தொழிலில் ஆர்வமாக உள்ளவர்களுக்காகவே ‘மகளிர் சுயதொழில்’ முகநூல் குழுவினை ஆரம்பித்தேன். வீட்டில் இருந்தபடியே வருமானத்தை ஈட்ட முடியும் என்பதே இந்த குழுவின் நோக்கம். ஆரம்பத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. அதன் பின் நானும் என் தோழிகள் நான்கு பேரும் இணைந்து வலிமைமிக்க குழுவாக மாற்றினோம். தற்போது 20,000 பெண்கள் உள்ளனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை செய்பவர்கள். கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலமாக இலவசமாக வகுப்பும் எடுக்கிறோம். இதுவரை 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளித்தது மட்டுமில்லாமல் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித் தருகிறோம். தொழில் துறையில் சாதித்த பெண்களுக்கு குழு சார்பாக ‘சாதனைப் பெண்கள்’ என்ற விருதும் வழங்கி வருகிறோம். ஆண்டு தோறும் 100க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும்’’ என்று கூறும் அனிதா ராஜ் சுயசக்தி விருது, சாதனைப்பெண் விருது, அப்துல்கலாம் விருது, கலை ரத்னா விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
Average Rating