இந்தியாவிற்கு கிடைத்த முதல் வெள்ளி! (மகளிர் பக்கம்)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது முதல், நாடே இந்திய வீரர்களின் ஆட்டத்தை உற்று நோக்க ஆரம்பித்தது. அந்த நேரத்தில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய 2 மணி நேரத்திலேயே, பளு தூக்குதலில் வெள்ளிக் வென்று, இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார் மீராபாய் சானு. காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கிய போது, 87 கிலோ எடையைத்தான் முதலில் தூக்கினார் மீராபாய். இதனை அடுத்து, 115 கிலோ எடையை தூக்கி நூலிழையில் தங்கத்தை தவறவிட்டவர், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியை கைப்பற்றினார். மீராவுக்கு பிரதமர் தொடங்கி பலரும் வாழ்த்து தெரிவிக்க, நாடே கொண்டாட ஆரம்பித்தது. ஆனால், இந்த மகிழ்ச்சி தருணத்தை அடைய, அவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது.
இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகேயுள்ள, நோங்போக் கச்சிங் கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பிறந்தார் சாய்கோம் மீராபாய் சானு. ஒரு வில்வித்தை வீராங்கனையாக வேண்டும் என்பது தான் மீராவின் விருப்பமாக இருந்தது. ஆனால், 8ம் வகுப்பு படிக்கும்போது மணிப்பூரின் பளுதூக்கும் வீராங்கனை குஞ்சராணி தேவி குறித்து பாடத்தை படிக்க படிக்க, தானும் ஒரு பளுதூக்கும் வீராங்கனையாக வேண்டும் என்கிற லட்சியம் அவரை ஆட்கொண்டது.மீராபாய்க்குள் ஒளிந்திருக்கும் திறமையை முதலில் கண்டறிந்தது அவரது தாய்தான். வறுமையால் பெட்டிக்கடை நடத்தி வந்தார் மீராவின் தாய்.
அப்போது தனது சகோதரர்களுடன் மீராவும் விறகுக்கட்டைகளை சுமந்து செல்வதை கண்ட மீராவின் தாய், மீராபாயின் பளு தூக்கும் கனவுக்கு உடனடியாக ஆதரவளித்தார். தன் தாயின் நம்பிக்கையை காப்பாற்றிய மீராபாய், அடுத்தடுத்து பதக்கங்களை குவிக்க ஆரம்பித்தார். “பயிற்சி கடினமாக இருந்தாலும் பயிற்சியாளர்களின் ஊக்கம்தான், 2009 ஆம் ஆண்டு நான் முதல் தேசிய பதக்கத்தை வெல்ல காரணமாக அமைந்தது” என்று மனந்திறந்த மீராபாய், “பளு தூக்குவதற்காக நான் அதிகாலை 5 மணிக்கெல்லாம் உடற்பயிற்சிக் கூடத்தில் இருக்க நேர்ந்தது. ஆனால் பயிற்சிக் கூடத்திற்கு செல்ல தினமும் 1 மணி நேரம் பேருந்தில் செல்ல வேண்டியிருந்தது” என கூறினார்.
எத்தனை கஷ்டம் என்றாலும், மீராவின் விளையாட்டு வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது 2014 ஆம் ஆண்டு க்ளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டி. 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றாலும், அவர் தூக்கிய 6 லிப்ட்களில் 5 நிராகரிக்கப்பட்டதால், மோசமான விமர்சனங்களுக்கு ஆளானார். அதிலிருந்தும் மீண்டெழுந்து 2017ல் அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டி, 2018ல் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்கங்களை குவித்தார்.
இந்த நிலையில் தான், மீராபாய்க்கு சோதனை காத்திருந்தது. 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட முதுகு வலி, அடுத்து வந்த ஆண்டில் சாதாரண எடையைக்கூட தூக்க முடியாத நிலைக்கு அவரை இட்டுச் சென்றது. கொரோனா ஊரடங்கும் வந்ததால் பயிற்சி பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட மீராபாய், இதிலிருந்தும் படிப்படியாக மீண்டு வந்தார். பயிற்சியாளர் விஜய் சர்மாவின் உதவியால் அமெரிக்காவில் மேற்கொண்ட பயிற்சி, அவரை முற்றிலும் மீட்டெடுத்தது. தனக்கு வந்த அத்தனை சோதனைகளில் இருந்தும் மீண்டெழுந்த மீராபாய், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று நாட்டுக்கே முன்மாதிரி பெண்மணியாக நிமிர்ந்து நிற்கிறார். தோழிகள் சார்பாக வாழ்த்துகள் மீராபாய்.
“வீட்டில் ஏழ்மை குடியிருந்ததால் அதை ஈடுகட்ட ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றோம். நிதிநிலையை சீரமைக்க அம்மா சிறிய அளவில் ஒரு பெட்டிக் கடையை நடத்தினார். வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளியுள்ள காட்டில் இருந்து தினமும் விறகுக் கட்டைகளை சுமந்துவரும் பொறுப்பு எனக்கும் சானுவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதே என்னைவிட 4 வயது சிறியவளான சானு, என்னைவிட அதிக கிலோ விறகுக் கட்டைகளை சுமந்து வருவாள். இன்று அவள் அதிக எடையைத் தூக்குவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்”.
Average Rating