பெண்கள் திறமைகளின் திறவுகோல் நான்!! (மகளிர் பக்கம்)
‘‘பெண்களால் முடியாது என்கிற விஷயம் கிடையாது. அதற்கு தகுந்தாற் போல் நிறைய துறைகளில் இன்று பெண்கள் கோலோச்சி வருகிறார்கள். நானுமே என் வாழ்க்கையில் நிறைய தோல்விகள், பிரச்சினைகளை சந்தித்து இருக்கேன். ஆனால், எல்லாவற்றையும் கடந்து ஒரு ஓவிய பயிற்சி மையத்தை ஆரம்பித்தவள், இன்று வெட்டிங் டெக்கரேட்டர், ஈவென்ட் மேனஜ்மென்ட், குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி சொல்லித் தருவது, நான் கற்ற விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது…” என்று நான் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் வெங்கடலட்சுமி. இவர் தான் கடந்து வந்த பாதைகுறித்து பகிர்கிறார்…
‘‘சொந்த ஊர் சென்னை. இங்குதான் படித்து வளர்ந்தது எல்லாம். படிப்பு முடிந்து தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றினேன். சர்க்கரை ஆலை ஒன்றில் ஆய்வாளராக என் கணவர் பணியாற்றியதால், திருமணத்திற்கு பிறகு, கடலூர் பக்கம், புகழூர் என்கிற கிராமத்திற்கு இடம் பெயர்ந்தோம். அதனால் நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். எங்களுக்கு நிறுவனம் சார்பில் குவாட்ரஸ் கொடுத்திருந்தாங்க. நாங்க தங்கி இருந்த குடியிருப்பில் மொத்தம் எட்டு வீடுகள் இருக்கும்.
ஆனால் அதில் ஒரு வீட்டில் நாங்க மட்டும் தான் குடியிருந்ேதாம். மற்ற வீடுகள் எல்லாம் காலியாகத்தான் இருந்தது. வேலைக்கு சென்று வந்த எனக்கு வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. அதனால் பொழுதை போக்க என்ன செய்யலாம்ன்னு யோசித்த போது, பள்ளியில் படிக்கும் போது வீட்டில் சம்மர் கிளாஸ் என ஓவியப் பயிற்சிக்கு அனுப்பியது நினைவுக்கு வந்தது. கணவரிடம் கேட்ட போது, அவரும் பச்சைக் கொடி காட்ட உடனே பஸ்சை பிடித்து சென்னை புறப்பட்டேன்.
அங்கு ஓவியம் தீட்ட தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு கடலூருக்கு வந்தவள் முழு மூச்சாக பெயிண்டிங் செய்ய ஆரம்பித்தேன். வீட்டில் நான் பெயின்டிங் செய்வதை பார்த்த நண்பர் ஒருவர் என் திறமைக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். பேப்பர் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கு ஒர்க்ஷாப் எடுக்க சொல்லி கேட்டார். நானும் சரின்னு சொல்ல… அதுதான் என் வாழ்க்கையில் கலை துறைக்கான பயணத்தை ஆரம்பித்து வைத்தது.
நான் கற்ற விஷயங்களை, அந்த குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தேன். அப்படி பல பேருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, இதை ஏன் ஒரு நிறுவனமாக செயல்படுத்தக்கூடாதுன்னு பலர் ஆலோசனை கூறினர். தனிப்பட்ட நபராக இல்லாமல், நான் செய்வதை நிறுவனமாக அமைத்தால் அதன் மூலம் மேலும் பல விஷயங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
2001-ல் ‘ஸ்ருஷ்டி’ என்ற பெயரில் என் வேலைகளை முன்னெடுத்தேன். அதே சமயம் ஓவியம் குறித்தும் பல விஷயங்கள் மற்றும் நுணுக்கங்களை கற்றேன். இதற்கிடையில் என் கணவருக்கு கரூருக்கு மாற்றலாக அங்க வந்தோம். இங்கு என் வீட்டின் அருகே இருக்கும் இல்லத்தரசிகள் அவர்களுக்கு ஓவியம் தீட்ட கற்றுக் கொடுக்க சொல்லி கேட்டாங்க’’ என்றவர் ஓவியத்துடன் புதுமையையும் சேர்த்து செயல்பட ஆரம்பித்துள்ளார்.
‘‘கலை துறை என்றால் ஓவியம் தீட்டுவது மட்டுமல்ல. அதில் பல கிளைகள் உள்ளது. மேலும் கரூரில் அதற்கான வாய்ப்புகளும் இருந்ததால், ஓவியத்துடன் அலங்காரம் செய்வதையும் சேர்த்து செயல்பட ஆரம்பித்தேன். அதாவது வீட்டில் ஒரு விசேஷம் என்றால், அதில் செய்யக் கூடிய அலங்காரம், தாம்பூலத்தில் வைக்கப்படும் பொருட்கள் கலை நயத்துடன் எப்படி வைக்கலாம் என்று எல்லாவற்றிலும் புதுமையை இணைத்தேன். ஒரு பரிசு கொடுத்தாலும் அதை எப்படி அழகாக கிஃப்ட் பேப்பர் கொண்டு அலங்கரிக்கலாம் என்பதிலும் புதுமையை காட்டினேன். இதனால் வாடிக்கையாளர்கள் வட்டம் அதிகமானது. எல்லாமே கைவேலைப்பாடுகள் என்பதால், பலருக்கு பிடித்திருந்தது’’ என்றவர் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
‘‘எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். ஓர் ஆசை இருக்கும். அதை என்னிடம் சொல்லும் போது, எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கொண்டு வர பார்ப்பேன். அது தான் என்னுடைய பிளஸ்’’ என்றவர் தன் கணவர் கொடுத்த முழு சுதந்திரம் தான் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருப்பதாக பெருமைபட கூறினார். ‘‘எனக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது. என்னுடைய தொழிலுக்கு நான் மற்றவரை நம்பி இருக்க முடியாது என்பதால், டிரைவிங் ஸ்கூல் சென்று டூ வீலர் ஓட்ட கற்றுக் கொண்டேன். காலை ஒன்பது மணிக்குள் வீட்டு வேலையை முடிச்சிடுவேன். அதன் பிறகு எனக்கான நேரம் மட்டுமே என்பதால் அந்த நேரத்தை நான் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டேன்.
என்னைப்போல் பல இல்லத்தரசிகளுக்கு நேரத்தை வீணாக்காமல் தங்களின் பயனுள்ள நேரமாக மாற்றி அமைக்கலாம் என்று ஒர்க்ஷாப் நடத்தி வருகிறேன். அதனோடு தஞ்சாவூர் பெயிண்டிங்கும் கற்றுக் கொண்டு செய்து வருகிறேன். நான் சம்பாதித்த பணத்தினை சேமித்து வைத்து, கரூரில் ஒரு ஆர்ட் கேளரியை அமைத்திருக்கேன். கடந்தாண்டு மார்ச் 8, பெண்கள் தினத்தன்றுதான் திறந்தோம். அடுத்த சில தினங்களிலேயே லாக் டவுன் என்பதால் மறுபடியும் வீட்டில் இருந்தபடியே செயல்பட ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் என்னுடைய கேளரி இயங்க ஆரம்பித்துள்ளது. ஆரம்பித்த சில நாட்களிலேயே அதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், என்னால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பொருளாதார ரீதியாக பெரிய வளர்ச்சி இல்லை என்றாலும் அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் செய்யும் வேலைகளை விட, சொல்லிக் கொடுப்பதுதான் என் பலம். பல பெண்களிடம் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கான ஒரு திறவுகோலாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு நடுவில் 11 ஆண்டுகளாக குழந்தைகளுக்காக ஒரு பள்ளியும் நடத்தி வருகிறேன். அதில் குழந்தைகளின் அடிப்படை விஷயங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறேன். ஏனெனில் எல்லாவற்றிற்கும் அடிப்படை தான் ரொம்ப முக்கியம்” என்கிறார் வெங்கடலட்சுமி.
Average Rating