தூக்கமின்மை சந்தேகங்கள்…!! (மருத்துவம்)
தூக்கமின்மை என்பது கொடுமையான விஷயம். வீட்டிலுள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ஒருவர் மட்டும் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருப்பதும், அடுத்த நாள் காலையில் உடலும் மனமும் சோர்வடைந்த நிலையில் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பதும் அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். தூக்கம் சரியில்லை என்றால் அதன் பாதிப்பு அடுத்த நாள் அனைத்து வேலைகளிலும் பிரதிபலிக்கும். கோபம், எரிச்சல், சோர்வு என எல்லாம் சேர்ந்துகொள்ளும்.
தூக்கமின்மை தொடர்பான பல சந்தேகங்களும் தவறான நம்பிக்கைகளும் மக்களிடையே உண்டு. அவற்றுக்கு மருத்துவ வல்லுநர்கள் அளிக்கும் ஆலோசனைகள் என்னவென்பதைப் பார்ப்போம்…
* தூக்க மாத்திரை பயன்படுத்தலாமா?
தூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய தினமும் இரவில் தூக்க மாத்திரைகள் விழுங்குவதோ, சிறிதளவு ஆல் கஹால் எடுத்துக்கொள்வதோ உதவுமா?
நிச்சயம் உதவாது. ஆல்கஹால் குடித்ததும் உங்களுக்கு உடனே தூக்கம் வரும், உண்மைதான். ஆனால் அது ரத்தத்தில் கலக்க ஆரம்பித்ததும் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். பாதித் தூக்கத்தில் விழித்துக்கொள்வீர்கள். மீண்டும் தூக்கத்துக்குள் செல்ல சிரமப்படுவீர்கள். தவிர நாளுக்கு நாள் நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஆல்கஹாலின் அளவும் கூடிக்கொண்டே போகும். அது உங்கள் ஆரோக்கியத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும், ஜாக்கிரதை.
* தூக்கமின்மை மனநலம் சம்பந்தப்பட்டதா?
மனதை பாதிக்கிற பிரச்னைகள் தூக்கத்தைக் கெடுக்கலாம். தூக்கமின்மைக்கான முக்கிய காரணங்களில் முதன்மையானது மன அழுத்தம். ஆனால் மனநல பாதிப்பு மட்டுமே தூக்கத்தைக் கெடுப்பவை என்று சொல்ல முடியாது. பிற காரணங்களும் உண்டு. உதாரணத்துக்கு வேறு உடல்நலக் கோளாறுகள், தூங்குதற்கு இணக்கமற்ற சூழல், மருந்துகளின் பின்விளைவுகள், உடல் வலி போன்றவை. எனவே அந்தப் பிரச்னைகளை சரி செய்தால்தான் தூக்கமின்மைக்கு தீர்வு கிடைக்கும்.
* உடற்பயிற்சி செய்தால் உறக்கம் வருமா?
நிச்சயம் வரும். தினமும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உங்கள் தூக்க சுழற்சி முறைப் படும். தூங்கச் செல்வதற்கு முன் உடற் பயிற்சிகள் செய்வதையும், அளவுக்கதிகமாக செய்வதையும் தவிர்க்க வேண்டும். அவை எதிர்மறை பலன்களையே தரும். தவிர இவை உங்கள் உடல் வெப்பநிலையையும் அதிகரித்து வெகு நேரத்துக்கு விழித்திருக்க வைக்கும். காலையில் உடற்பயிற்சிகள் செய்வது சிறந்தது. முடியாதவர்கள் தூங்கச் செல்வதற்கு 3 மணி நேரம் முன்னதாகச் செய்யலாம்.
* திரை நேரம் காரணமாகுமா?
டி.வி பார்ப்பது, கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லட், மொபைல் போன்ற எல்லாமே தூக்கம் கெடுப்பவைதான். இது போன்ற திரைகளின் ஒலியும், ஒளியும் தூக்கத்துக்கு காரணமான மெலட்டோனின் சுரப்பை பாதிக்கும். மெலட்டோனின் என்பது இரவில், இருட்டில் அதிகம் சுரக்கும். அதற்கேற்ற சூழலை உங்கள் திரை உபயோகங்கள் கெடுத்துவிடும். எனவே நல்ல தூக்கம் வேண்டுமென்றால் இவற்றிலிருந்து விலகி இருக்கவும்.
* தூக்க மாத்திரைகள் எப்போது தேவை?
தொடர்ச்சியாக பல நாட்கள் அல்லது மாதங்களுக்கு தூக்கமின்மையால் அவதிப்படும்போது மருத்துவ ஆலோசனையும், சிகிச்சைகளும் அவசியம். அது போன்ற சூழ்நிலையில் மருத்துவர் பரிந்துரைக்கிற தூக்க மாத்திரைகளை குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்துக்கொள்ளலாம், தவறில்லை. ஆனால் மருத்து
வரின் ஆலோசனையின்றி நீங்களாகவே தூக்கத்துக்கு மருந்துகள் எடுத்துக்கொள்வது ஆபத்தானது. மருத்துவர் பரிந்துரைத்தாலுமே அந்த நாட்களுக்கு மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். காலத்தையோ, மருந்துகளின் அளவையோ அதிகரிப்பது பாதுகாப்பானதல்ல.
* தூக்க சுழற்சியை எப்படி சரி செய்வது?
தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கம் வராததால் கண்ட கண்ட நேரத்தில் குட்டித் தூக்கம் போட வேண்டாம். சிரமப்பட்டாவது தூங்கும் நேரத்தை முறைப்படுத்தப் பழகுங்கள். இரவில் தினமும் இந்த நேரத்தில் தூங்குவது என வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தூங்கும் நேரத்தை மாற்றிக்கொண்டே இருந்தால் தூக்கமின்மை பிரச்னை சரியாகாது.
* பகலில் தூங்குவது சமநிலைப்படுத்துமா?
இரவில்தான் தூக்கமில்லையே என்று பகலில் தூங்க வேண்டாம். அது தூக்கமின்மை பிரச்னையை இன்னும் தீவிரப்படுத்தும். சிலருக்கு பகலில் 10,20 நிமிடங்கள் தூங்குவது புத்துணர்வைத் தரலாம். ஆனால் தூக்கமின்மையால் அவதிப்படுகிறவர்களுக்கு இது அதே பலனைத் தராது. பகலில் தூக்கத்தைத் தவிர்த்து இரவில் சரியான நேரத்துக்குத் தூங்கும் முறைக்குப் பழகுவதுதான் சரி.
* எவ்வளவு நேரம் ஆரோக்கியமானது?
பெரிய தலைவர்களும் பெரும்புள்ளிகளும் தினமும் 4 மணி நேரம்தான் தூங்குகிறார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியானால் 7 மணி நேரம் தூக்கம் அவசியம் என்றெல்லாம் சொல்லப்படுவது தேவையற்றதா என்கிற கேள்வி வரலாம். அப்படியல்ல. ஒவ்வொருவரின் உடலுக்கும் குறிப்பிட்ட மணி நேரத் தூக்கம் தேவைப்படும். போதுமான அளவு தூங்காதபோது கவனச்சிதறல் ஏற்படும். நினைவாற்றலில் பிரச்னை ஏற்படும். எப்போதும் சோர்வாக உணர்வார்கள். எந்த வேலையையும் முழுமையாக, திருப்தியாக செய்ய முடியாமல் தவிப்பார்கள். தூக்கமின்மையால் வேறு உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம், ஜாக்கிரதை.
* படுக்கையைவிட்டு எழுந்திருக்கலாமா?
பல மணி நேரமாக தூக்கமே வரவில்லை என்றாலும் புரண்டு, புரண்டு படுத்துக்கொண்டே இருப்பதில் என்ன நன்மை? தூக்கம்வராவிட்டால் படுக்கையைவிட்டு எழுந்திருந்து போய் இசை கேட்கலாம், புத்தகங்கள் படிக்கலாம். தூக்கமே வரலையே என்கிற கவலையுடன் படுக்கையிலேயே கடிகாரத்தைப் பார்த்தபடி படுத்துக்கொண்டிருப்பது மன உளைச்சலை அதிகரிக்கும். தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கும்.
* தூக்கத்துக்கு உதவும் விஷயங்கள் என்னென்ன?
இரவு தூங்கச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான பால் குடிக்கலாம். இளம்சூடான வெந்நீரில் குளிக்கலாம். தியானம் செய்யலாம். உங்களுக்குப் பிடித்த விஷயங்களை மனதில் ஓடவிடலாம். உங்கள் மனதுக்கினிய சம்பவங்களை அசைபோடலாம். இவையெல்லாம் தூக்கத்தை வரவழைக்கும்.
* தூக்கமின்மை தானாக சரியாகுமா?
பலரும் இப்படித்தான் நினைத்துக்கொள்கிறார்கள். தூக்கமின்மை என்பது அப்படி அலட்சியப்படுத்துகிற விஷயமல்ல. மாதக்கணக்கில் தூக்கமில்லாதவர்கள் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தொடர் தூக்கமின்மை உடல், மன ஆரோக்கியத்தைக் குலைத்துவிடும்.
Average Rating